பத்திரிகைப் புகைப்படக் கலைஞரின் சாதனையைச் சொல்லும் கதை. ஹீரோவுக்காக ஓவர் பில்டப் செய்யாமல், கதைக்குத் தேவையான காட்சிகளையே திரைக்கதையாக்கி படமாக்கியுள்ளார் இயக்குநர்.
போட்டோகிராபராக வரும் ஜீவா காட்டும் துறுதுறுப்பும், வேகமும் படத்தின் வேகத்துக்கு ரொம்பவே உதவுகிறது.ராதாமகள் கார்த்திகா, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி சபாஷ் வாங்குகிறார்.
அலட்டல் பேர்வழியாக வந்தாலும், காதலில் தோற்கும் போதும், மிதிபட்டு சாகும்போதும் கண்கலங்க வைக்கிறார் பியா.
வாய்ப்பு குறைவானாலும் பிரகாஷ்ராஜின் கேரக்டரில் நிறைவு இருக்கிறது. அதிரடி+காமெடி கலந்த அரசியல் வாதியாக கோட்டா சீனிவாசராவ்.
சமூக சேவை செய்யும் அஜ்மல், கடைசியில் காட்டும் கோரமுகம் எல்லோரையும் அதிர வைக்கிறது.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ‘என்னமோ ஏதோ...’ பாடல் மனதுக்குள்ளேயே ரவுண்டு கட்டுகிறது. ரிச்சர்டு நாதனின் கேமரா உள்ளூர் அழுக்கையும், வெளிநாட்டு அழகையும் அழகாகக் காட்டியுள்ளது.
இரண்டு ஜாம்பவான் அரசியல்வாதிகளை எதிர்த்து, சிறகுகள் அமைப்பு ஜெயித்து, அஜ்மல் முதல்வராவதை நம்ப முடியவில்லை.
ஜீவா கேரக்டருக்கு அழுத்தம் கொடுத்து, பத்திரிகையாளர் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம் என்பதை நம்பகத்தன்மையோடு எடுத்துக்காட்டி, வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.