கொங்கு மண்டலத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு!
தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடமில்லை என்பது பாகவதர் காலத்துக் குற்றச்சாட்டு. ஆனால், அதையும் மீறி எண்ணற்ற தமிழச்சிகள் சாதித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தானும் இடம் பிடிப்பேன் என்கிற தன்னம்பிக்கையோடு கொங்கு மண்டலத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார் சான்ரியா.
‘‘அம்மாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஃபேமிலி சிச்சுவேஷனால் அது நிறைவேறவில்லை. இப்போது நான் நடிகையாகி அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்துள்ளேன்’’ என்று மெல்லிய புன்னகையுடன் ஆரம்பித்தார் சான்ரியா. இவர் ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய் ஜி இயக்கும் ‘பொல்லாத உலகினில் பயங்கர கேம்’ படத்தின் நாயகி.
“சான்ரியா - சிறு குறிப்பு வரைக...” “சொந்த ஊர் சங்ககிரி. விவசாயக் குடும்பம். படிச்சது பி.டெக். படிப்புக்குப் பிறகு ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்தேன். அந்த சமயத்தில்தான் சினிமா பக்கம் கவனம் திரும்பியது. சினிமா என்பது ஒருவழிப் பாதை மாதிரி. அதனால் நல்லா யோசித்துவிட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.”
“உங்களுக்கு சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது?”
“இயக்குநர் விஜய் ஜி சாரை ஏற்கனவே தெரியும். ‘தாதா 87’ படத்துக்குப் பிறகு அவருடைய ஆபீஸில் ஆடிஷன் நடப்பதாகக் கேள்விப்பட்டு அவரிடம் ‘ஆடிஷனில் கலந்துகொள்ளலாமா’ என்று கேட்டேன். சாரும் வரச் சொன்னார். சில டயலாக் பேப்பரைக் கொடுத்து நடிக்கச் சொன்னார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து சார் ஆபீஸிலிருந்து போன் பண்ணி நான் செலக்ட்டான விஷயத்தைத் தெரிவித்தார்கள்.”
“படத்துலே உங்களுக்கு என்ன கேரக்டர்?”
“நிஜத்தில் நான் ஜாலியான ஆள். ரொம்ப துறுதுறுன்னு இருப்பேன். அதே சமயம் சென்சிடிவ்வான ஆளும் கூட. படத்தில் அதற்கு நேர்மாறான கேரக்டர் பண்ணியிருக்கிறேன்.”
“நடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?”
“ரொம்பப் பிடிச்சிருந்தது. சினிமாவுக்கு வருவதற்கு முன் சிலருடைய நடிப்பைப் பார்த்து வியந்துள்ளேன். அப்படிப்பட்ட நான் முதல் நாள் கேமரா முன்னாடி நின்று டயலாக் பேசிய தருணம் மறக்க முடியாதது. காரணம், சினிமா நான் விரும்பி ஏற்றுக்கொண்ட துறை. நான் படிப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு வேலைக்கு போயிருந்தால் என்னுடைய ஆசை முழுமையாக நிறைவடைந்திருக்காது. அதைவிட்டுவிட்டு மனதுக்குப் பிடித்த வேலை செய்யும்போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது.”
“மல்ட்டி ஹீரோயின் படத்தில் நடிக்கறீங்களே?”
“இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அனித்ரா நாயர், ஆராத்யா, சாந்தினி என்று ஐந்து நாயகிகள் இருக்கிறார்கள். ஆனால் இயக்குநர் விஜய் ஜி சார் எல்லாருக்கும் சமமான வேடம் கொடுத்தார். ஒரு படத்தில் நடிக்கும்போது என்னுடைய பார்வை என்னுடைய கேரக்டருக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்றளவில்தான் இருக்கும். மற்றபடி மல்ட்டி ஹீரோயின் படங்களில் நடிப்பதை பின்னடைவாகப் பார்க்கவில்லை.”
“இயக்குநர் விஜய் ஜி?”
“அவரைப் பற்றி நிறையச் சொல்லலாம். மிகப் பெரிய திறமைசாலி. அவருக்கு கேமரா ஒர்க் தெரியும். மியூசிக்கும் தெரியும். டான்ஸும் தெரியும். சில சமயம் ரிஸ்க்கான காட்சிகளைப் படமாக்க டெக்னீஷியன்கள் தயங்கும்போது சார் ஐடியா கொடுப்பார். ஆர்ட்டிஸ்ட்களிடம் ஒளிந்திருக்கும் திறமையை வெளியே கொண்டுவரும் வித்தை கற்றவர். ஏன்னா, அவருக்கு பெர்ஃபக்ஷன் முக்கியம். இயக்குநர் விஜய் ஜி சார் அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டமாட்டார். அவருக்கு பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதை டேக் அதிகமாவதை வைத்து கண்டுபிடிக்க முடியும். எனக்கு அப்படி சில காட்சிகளில் இரண்டு, மூன்று டேக் போனது.”
“படப்பிடிப்பில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் எப்படி பழகுவார்?”
“அவரு செம ஜாலியானவர். அவர் செட்டுக்கு வந்தாலே ஃபன்னாக இருக்கும். நடிப்புக்காக எந்த லெவலுக்கும் போவார். எவ்வளவு கஷ்டமான காட்சியாக இருந்தாலும் நடிக்க தயங்கமாட்டார். செட்டுக்கு வரும்போதே ‘வணக்கம்மா’ என்று அவருக்குரிய கரகரப்பான குரலில் கேட்க ஆனந்தமாக இருக்கும்.”
“சினிமாவில் நடிப்பு தவிர வேறு எதில் ஆர்வம்?”
“எனக்கு கேமரா ஒர்க் பிடிக்கும். படப்பிடிப்புத் தளத்தில் என்னுடைய போர்ஷன் முடிந்ததும் பெரிய நடிகர்கள் எப்படி நடிக்கிறார்கள், லைட்டிங் எப்படி செட் பண்ணுகிறார்கள் என்று வாட்ச் பண்ணுவேன். வேலை முடிந்ததும் கேரவனுக்குள் போய் உட்காரத் தோன்றாது.”
“நடிப்பை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?”
“யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. என்னிடம் என்ன காட்சி விவரிக்கப்படுகிறதோ அதற்கு என்னுடைய ஸ்டைலில் என்ன பண்ணமுடியுமோ அதைத்தான் பண்ணுகிறேன். எல்லோருடைய நடிப்பும் எனக்கு பிடித்திருந்தாலும் எனக்கு என்று தனித்துவமான அடையாளம் வேண்டும் என்பதால் யாருடைய நடிப்பையும் ஃபாலோ பண்ணியதில்லை.”
“குடும்ப குத்துவிளக்கு vs கிளாமர் டால்... உங்கள் சாய்ஸ் எது?”
“ரசிகர்கள் என்னை எல்லா மாதிரி கேரக்டர்களிலும் பார்க்க ஆசைப்படுகிறேன். கிளாமர், ஹோம்லி என்று என்னை ஃபிக்ஸ் பண்ணிக்க மாட்டேன். அப்படி ஒரு முத்திரை என் மீது விழ விரும்பவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லா வகை ரோலையும் எடுத்து பண்றாங்க. நானும் அந்த மாதிரிதான். அதுமட்டுமில்ல, நான் தமிழ்ப் பொண்ணு என்பதால் நம்முடைய கலாச்சாரத்தை மதிக்கிறேன். அதே சமயம் ரசிகர்களை என்டர்டெயினும் பண்ணணும் என்று நினைக்கிறேன்.”
“பில்லோ சேலஞ்ச், பிளாங்கட் சேலஞ்ச் என்று நடிகைகளால் சமூக வலைத்தளங்கள் அதகளப்படுகிறதே.. கவனிக்கிறீர்களா?”
“அந்த மாதிரி விஷயங் களுக்குள்ளே நான் போகவில்லை. இப்போது அப்படி பண்ண வேண்டாம் என்று நினைக்கிறேன். சிலருக்கு அது பண்ண பிடித்திருக்கிறது. அதனால் பண்ணுகிறார்கள். எனக்கு அதில் ஆர்வம் இல்லை.”
“கொரோனா குவாரன் டைன் டைம் எப்படிப் போனது?”
“எனக்கே கொரோனா வந்தது மாதிரி கேட்குறீங்களே சார்? ஊரடங்குன்னா அது வைரஸ் பாதிச்சவங்க, பாதிப்புக்கு உள்ளாகாதவங்க எல்லாருக்கும்தான். சமூக இடைவெளி விடுறது ரொம்ப முக்கியம். எல்லாரும் மாஸ்க் போடணும். நமக்கெல்லாம் வராதுன்னு நாம அலட்சியமா இருக்கக் கூடாது. இந்த குவாரன்டைன் டைமில் தியானம் பண்ணுறேன். எங்க ஏரியாவில் தினமும் சைக்கிள் ரைட் போறேன். கதைகள் எழுத ஆரம்பித்துள்ளேன்.”
- ராஜா
|