பெண்கள் பொம்மை என்ற நாட்கள் தூரமே!



டிசைனர் மஞ்சுவின் வாழ்க்கையில் நடந்த அத்தனையும் ஒரு கனவு மாதிரி இருக்கு. இப்படியும் ஒரு பெண் மேலே எழுந்து வர முடியுமா என நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கிறார் மஞ்சு.

‘‘திருவள்ளூர் பக்கத்தில் தோவூர் என்கிற குக்கிராமம் என்னுடையது. என்னோடு பிறந்தது ஒரு அண்ணன் மட்டுமே.
என் சின்ன வயதில் வறுமையில் சிக்கி, வாழ்றதுக்கே போராடிய பொண்ணு நான். எட்டாவது முடிச்சு ஒன்பதாவது படிக்க ஆரம்பிக்கும்போதே எனக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்தார்கள். எனது பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தபோது ஸ்கூல் டாப்பர் மஞ்சு என்கிற பெயர் மட்டுமே எனக்கு மிச்சம்’’ என்கிற மஞ்சு தற்போது சென்னையில் டாப் டிசைனராக வலம் வருகிறார். இந்த இடத்தைப் பிடிக்க போராடி மேலெழுந்த தன் வாழ்க்கையை பின்னோக்கி அசை போட்டபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘‘ஒன்பதாம் வகுப்பு காலாண்டுத் தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு வருகிறேன். என் அம்மா பெங்களூரில் இருந்து உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீடு வந்துருக்காங்கன்னு சொன்னாங்க. எனக்கு திருமணம் பேசும்போது, நான் பள்ளியில் சிறந்த கபடி பிளேயர். எனக்கோ போலீஸ் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. படிப்பதற்காக வீட்டில் நிறைய போராடுனேன். சண்டை போட்டேன். கிணற்றில் எகிறி குதிச்சேன். மாப்பிள்ளை வீட்டில் உன்னைப் படிக்க வைப்பாங்கன்னு பெற்றோர் சமாதானப்படுத்தினாங்க.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு அப்படி எதுவுமே நடக்கலை. காலையில திருமணம். மாலையில என் மொத்த கிராமத்து வாழ்வையும் பெற்றோர், உறவினர், தோழிகள், ஆடு, மாடு, கோழின்னு எல்லாத்தையும் உதறீட்டு, அவர் பின்னாடி அப்படியே அனுப்பப்பட்டேன். திருமணம் என் மொத்த வாழ்க்கையையும் திருப்பிப் போட்டுருச்சு...’’ என ஒரு நிமிடம் நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்தியவர், ‘‘நரகத்திற்குள் வாழ்ந்த அவஸ்தை அது.
போதையில் தினமும் அவரிடமிருந்து அடி, உதை, உடம்பில் சிகரெட்டால் சூடு என சித்ரவதைகள் தொடர்ந்தது.  எனக்கு நடந்த கல்யாணம் என்  மொத்த வாழ்க்கையையும் சூரையாடிருச்சுன்னு சொல்லலாம். இருந்தாலும் அவருடன் வாழ நிறையப் போராடுனேன்’’ என்றவர், ஆனால் அது என்னால கடைசிவரை முடியல என்கிறார்.

‘‘பெங்களூருவில் எனக்கு கன்னட மொழி பேசத் தெரியாததால் என்ன சொல்றாங்க, என்ன என்னைத் திட்டுறாங்கன்னுகூட எனக்குத் தெரியாது. ஏளனமாக என்னைப் பார்த்தவர்கள், சிரித்தவர்கள் முன்பு கஷ்டப்பட்டு வெறியோடு கன்னட மொழியை பேசக் கற்றுக் கொண்டேன். இந்த நிலையில் தலை பிரசவத்திற்கு அம்மா வீட்டுக்கு அழைத்துவரப்பட்டு, என் மகள் பிறந்தாள்.

எப்படியாவது என் வாழ்க்கைய சரி பண்ணீரலாம் என நினைத்து மீண்டும் கணவர் வீட்டுக்கு குழந்தையோடு அனுப்பி வைக்கப்பட்டேன். குழந்தையோடு மூன்று ஆண்டுகள் அவரோடு போராடியதில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. தாங்க முடியாத சூழ்நிலையில், ஒரு கட்டத்தில் என் குழந்தையை தூக்கிக்கொண்டு, என் அண்ணனோடு சென்னைக்கு நிரந்தரமாக வந்துவிட்டேன்.

என் அண்ணன் இங்கு திரைத்துறை சார்ந்து பல்வேறு வேலைகளை செய்து வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தார். அண்ணனுடன் சேர்ந்து நானும் திரைத் துறையினருக்கு உணவு சமைத்து சப்ளை செய்ய ஆரம்பித்ததில், பிரபலங்கள் பலரின் நட்பு கிடைக்க ஆரம்பித்தது. எனது கெரியர் வேறொரு தளத்தில் இயங்கத் தொடங்கிய நிலையில், எனக்கு ஆர்ட் தொடர்பான வேலைகள் பிடித்தமானதாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உடைகள் தைக்கக் கற்றுக் கொண்டேன். எனது மகளுக்கு சின்னச் சின்ன உடைகளை கிரியேட்டிவாக தயாரித்து அணிவிக்க ஆரம்பித்து, அப்படியே உடை தயாரிப்பில் புதிய புதிய விஷயங்களை நானே முயற்சித்து உருவாக்க ஆரம்பித்தேன். மணப் பெண் ஜாக்கெட்டிற்கான ஆரி வேலைப்பாடுகளையும் எடுத்து செய்யத் தொடங்கினேன்.

அழகுக் கலையின் மீதும் என் ஆர்வம் திரும்பியது. எனது அண்ணன் மூலமாக பிரபல மைதிலீஸ் ப்யூட்டி பார்லரில் இணைந்து ப்யூட்டீஷியன் கலையினையும் முறையாகக் கற்றுக் கொண்டே அந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கியதில், அதன்  உரிமையாளர் வெங்கட் அண்ணாவின் நட்பு கிடைத்தது.  கிராமத்து வாழ்வின் பின்னணியில் மண்ணாக இருந்த எனக்கு உருவம் கொடுத்து சிலையாக என்னைச் செதுக்கியவர் வெங்கட் அண்ணாதான். கொஞ்சம் கொஞ்சமாக ப்ரைடல் மேக்கப்பில் கை தேர்ந்தவளாக மாறத் தொடங்கினேன்.

தொடர்ந்து திரைத்துறை பிரபலங்களுக்கு மேக்கப் போட ஆரம்பித்தேன். எனது திறமையை பார்த்து, சேலம் ஜி.ஆர்டி. குரூப்பின் ஆஸ்தான அழகுக்கலை நிபுணராக பணிபுரியும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. நான் அணிந்து செல்கிற வெரைட்டியான, ஃபிட்டான உடைகளைப் பார்த்து, எங்களுக்கும் இதேபோல் உடை தயாரித்துக் கொடுங்கள் என பிரபலங்கள் பலரும் என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.

ஸ்கின் டோனுக்கு ஏற்ப அவரவர் உடல்வாகுக்கு உடைகளை ரெடி செய்து கொடுக்க ஆரம்பித்தேன். ஆடை தயாரிப்பில் தேடல்கள் எனக்கு நிறைய இருந்ததால், புதிது புதிதாக எதையாவது தேடித் தேடி அதை செய்ய ஆரம்பித்தேன்’’ என்றவர், ‘‘உடை தயாரிப்பில் எனக்கு ஏன் இந்த அளவு காதல் என்றால், சின்ன வயதில் நான் உடுத்த மாற்று உடையின்றி கஷ்டப்பட்டவள். பள்ளி சீருடையான வெள்ளைச் சட்டையும், ஊதா பாவாடையும் மட்டும்தான் எப்போதுமே என் உடையாக இருந்தது.

அதில்தான் எப்போதுமே கிராமத்தில் வலம் வருவேன். இதனால் ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்களுக்குக்கூட போக எனக்கு விருப்பம் இருக்காது. அம்மா பயன்படுத்திய சேலைகளை கிழித்து கைகளால் தைத்து, எனக்கான உடைகளை நானே உருவாக்கி அணிய தொடங்கினேன். அந்த அளவுக்கு என் வீட்டில் வறுமை இருந்தது. இந்த வெறிதான் நவீன ஆடை தயாரிப்பில் கைதேர்ந்தவளாக என்னை செதுக்க ஆரம்பித்தது’’ என்கிறார் மஞ்சு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவாறு.

‘‘அழகுக்கலை சார்ந்த அப்டேட் விஷயங்களையும் என் குடும்பத்தில் இருந்தவர்களிடம் இருந்துதான் தொடங்கினேன். முதலில் நங்கநல்லூரில் ப்யூட்டி பார்லருடன், டெய்லரிங் யூனிட் ஒன்றையும் இணைத்து மஞ்சூஸ் (Manju’s) டிசைனிங் என்ற பொட்டிக் ஒன்றை ஆரம்பித்து எனது கெரியரை வெற்றிகரமாகத் தொடங்கினேன். பெண்களுக்கு ஆரிவொர்க் வகுப்புகளையும் எடுக்க ஆரம்பித்து, உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு என 24 மணிநேரமும்  ஓடியதில், எனது தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது. நிறைய செலிபிரேட்டி கஷ்டமர்கள் மற்றும் என்.ஆர்.ஐ கஷ்டமர்களின் ஆடைகள் தயாரிப்பு என்னிடம் வர ஆரம்பித்தது.

ஃபுல் குரூமிங் மேக்கப் செட் அதாவது சேலை, ப்ளவுஸ், தலைக்கு அணியும் வேனில், இடுப்பு பெல்ட், உடைக்கு ஏற்ற செட் அணிகலன்கள் என தயாரித்தும் மணப் பெண்களுக்கு கொடுத்து வருகிறேன். டெய்லரிங் யூனிட்டை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுப்படுத்தியதில் தற்போது என்னிடம் எட்டுபேர் வரை வேலை செய்கிறார்கள்’’  என்றவர், நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவர் அல்லது வெளியூர்களில் வசிப்பவர் எனில், உங்களின் வடிவமைப்புக்கு உங்கள் புகைப்படம் மட்டுமே எங்களுக்கு போதுமானது. அந்த அளவுக்கு கனகச்சிதமாக, அளவெடுத்து தைத்ததுபோல், பக்காவாக ஜாக்கெட் மற்றும் உடைகளை உருவாக்கி எங்களால் தரமுடியும் என்கிறார் மிகவும் அழுத்தமாக.

‘‘எனது அண்ணனைப் போன்ற உடன் பிறப்புகள் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கையில் அமைந்தால் பெண்களால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அந்த அளவு நான் வாழ்க்கையில் ஜெயித்து மேலே வருவதற்கு அண்ணன் ஏணியாக எனக்கு நின்றார். அவருடைய ஒரு நல்ல நண்பரை எனக்கு வாழ்க்கைத் துணையாக அமைத்த பிறகே அவரும் திருமணம் செய்து கொண்டார். இன்று எனது பெரிய மகள் மருத்துவம் படித்து வருகிறாள்.

எட்டு மொழிகள் வரை அவளுக்குப் பேசத் தெரியும். இப்போதுவரை நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தண்ணீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதிகள் எதுவும் கிடையாது. மருத்துவ வசதியின்மையால் பாம்பு கடித்து பலர் என் கிராமத்தில் இப்போதுவரை இறக்கிறார்கள். குழந்தைப் பேற்றிலும் பெண்கள் பலர் ஆரம்ப சுகாதார வசதிகள் இல்லாமையால் இறந்துள்ளார்கள்’’ என்கிற மஞ்சு, ‘‘அடிப்படை மருத்துவ வசதியே இல்லாத எனது ஊரில் ஒரு மருத்துவமனை கட்டி, அதில் என் மகளை மருத்துவராக  அமர வைத்து, என் கிராமத்து மக்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே என் லட்சியம்’’ என்கிறார். மஞ்சு நிச்சயம் சாதிப்பார்... அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்