மும்பை மட்டுமில்லாமல் பான் இந்தியா முழுக்க கால் பதிக்க வேண்டும்!



பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பது அவர்களின் நீளமான தலைமுடி. அந்த தலைமுடிக்கு மேலும் அழகு சேர்ப்பது அதில் அணியும் அணிகலன்கள். பெண்களின் உடை மட்டுமில்லை அவர்கள் அணியும் பொட்டு, கம்மல், வளையல், காலணிகள் முதற்கொண்டு... அனைத்தும் டிரண்டிற்கு ஏற்ப மாறிவருகிறது.
இதில் தலை முடியில் அணியும் அணிகலன்களும் விதிவிலக்கல்ல. தலைமுடிக்கான அணிகலன்கள் என்றால் முன்பு மெல்லிய பிளாஸ்டிக் நூல் இழை போன்ற அமைப்பில் ரப்பர் பேண்டுகள் இருந்தன. இவை கருப்பு, வெள்ளை மட்டுமில்லாமல் பல நிறங்களிலும் இருக்கும். இவை தலைமுடிக்கு சேதம் விளைவிப்பதால், அதையே கொஞ்சம் மிருதுவாகவும், திக்காகவும் மாற்றி அமைத்தனர். இப்போது பெண்கள் தலையில் பின்னல் போடுவதை மறந்து லூஸ் ஹேர் என்பது ஃபேஷனாகி வருகிறது.

ஒரு சிலர் தலைமுடியினை அப்படியே காற்றில் பறக்க விடுகிறார்கள். ஒரு சிலர் தலைமுடியினை ஒன்றாக இணைத்து கிளட்ச் போன்ற கிளிப் வகை அணிகலன்களை அணிகிறார்கள். இவ்வாறு டிரண்டிற்கு ஏற்ப மாறி வரும் தலைமுடி அணிகலன்களுக்காகவே ‘சானியா எளிமென்ட் ஆஃப் ஸ்டைல்’ என்ற பெயரில் பிரத்யேக கடை ஒன்றை தன் தந்தையுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார் மும்பையை சேர்ந்த சானியா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான தலைமுடி அணிகலன்களை புதிய டிரண்டிற்கு ஏற்ப தன் கடையில் குவித்துள்ளார்.
‘‘இந்த கடையை அப்பா தான் முதலில் ஆரம்பித்தார். எங்களின் பூர்வீகம் மும்பை. எங்க தாத்தா காலத்தில் இருந்தே பிசினஸ் தான் எங்களின் தொழில்.

தாத்தா துணிகடை வச்சிருக்கார். அப்பா படிப்பு முடிச்சதும்... தாத்தாவுடன் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்தார். மும்பையில் இது போன்ற மொத்த விற்பனை கடைகளுக்கென தனிப்பட்ட மார்க்கெட் உண்டு. அங்குதான் எங்களின் கடையும் இருந்தது. எங்களின் துணிக்கடை மட்டுமில்லாமல் ஃபேஷன் குறித்து பல கடைகள் அங்குண்டு. அந்த சமயத்தில் தான் அப்பாவிற்கு குடும்ப தொழிலாக இருந்தாலும், அவருக்கு தனிப்பட்ட முறையில் தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் அப்பாவிற்கு ெபண்களின் சிகையினை அலங்காரம் செய்யும் வகையில் அணிகலனுக்காக பிரத்யேக கடையினை துவங்க நினைத்தார்.

ஒரு தொழில் ஆரம்பிக்கும் போது, அதைப் பற்றி நல்லா தெரிந்திருக்கணும். அதனால் அப்பா அது குறித்து நிறைய இடங்களுக்கு சென்று பார்த்து வந்தார். மும்பை மட்டுமில்லாமல் பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள டிரண்டு மற்றும் டிசைன்கள் குறித்து தெரிந்து கொண்டார். மேலும் இவருக்கான சப்ளையர் செயினையும் உருவாக்கினார். அதன் பிறகு 2001ம் ஆண்டு அப்பா என்னுடைய பெயரில் இந்த கடையை திறந்தார். அப்ப எனக்கு இரண்டு வயசு இருக்கும்.

எங்க கடையில் தலை அலங்காரம் குறித்த அனைத்து பொருட்களும் கிடைக்கும். தலை அலங்காரம் என்றால் ரப்பர் பேண்ட், ஹெட்பேண்ட், கிளப், கிளட்ச் தான் எல்லாரும் நினைப்பாங்க. ஆனால் அதையும் தாண்டி பல வித அலங்காரப் பொருட்கள் உள்ளன. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஹேர் எக்ஸ்டென்ஷன், விக் போன்றவை. மேலும் இளைய தலை
முறையினரை மட்டும் டார்கெட் செய்யாமல், சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கான அலங்காரப் பொருட்களை அப்பா தேடி தேடி பார்த்து வாங்கி கடையில் விற்பனைக்காக வைத்திருக்கிறார்.

நாங்க வெளியே வாங்குவது மட்டுமில்லாமல் சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறோம். அதற்காக எங்களிடம் பிரத்யேக கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் எங்களுக்கான டிசைன் என்ன என்று குறிப்பிட்டால், அதன் படி செய்துக் கொடுத்திடுவார்கள்’’ என்று கூறும் சானியா அப்பாவின் தொழில் மும்பை மட்டுமில்லாமல் பான் இந்தியாவிலும் பரவவேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் இணைந்துள்ளார்.

‘‘நான் இளங்கலை படிப்பு முடிச்சிட்டு முதுகலையில் படிச்சிட்டு இருக்கேன். சின்ன வயசில் இருந்தே அப்பா பிசினஸ் செய்வதைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே அப்பாவுடன் இணைந்து தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் அப்ப படிச்சிட்டு இருந்ததால் நான் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இப்ப இளங்கலை பட்டம் வாங்கியாச்சு. அப்பதான் சித்தப்பா என்னிடம், நம்முடைய கடையைப் பற்றி மும்பை மட்டுமில்லாமல் மற்ற ஊர்களுக்கும் தெரியப்படுத்தணும்ன்னு சொன்னார். நாம ஊர் ஊரா போய் விற்பனை செய்ய முடியாது. இருக்கும் இடத்தில் இருந்தே விற்பனையை அதிகரிக்க ஒரே தளம் சமூகவலைத்தளம்.

அதனால் நானும் சித்தப்பாவும் ‘saniyaselementofstyle’ என்ற பெயரில் சமூகவலைத்தளத்தில் ஆரம்பித்தோம். இன்ஸ்டா, முகநூலில் பக்கங்கள் துவங்கி அதில் எங்களின் கடைகளில் உள்ள சிகை அலங்கார பொருட்கள் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்தேன். முதலில் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதைப் பற்றி தெரிவித்தேன். அவர்கள் மூலமாக பார்வையாளர்கள் அதிகரிக்க ஆரம்பிச்சாங்க. இப்ப மும்பை மட்டுமில்லாமல், சென்னை, பெங்களூர், ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளது. தற்ேபாது இந்தியா முழுக்க நாங்க சப்ளை செய்து வருகிறோம்.

வெளிநாட்டில் தற்போது நேரடியாக சப்ளை செய்வதில்லை. இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அங்குள்ளவர்களுக்காக இங்கு வாங்கி செல்கிறார்கள். தற்போது எங்க கடைக்கான இணையதளம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். அதற்கான டிசைனிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் இணையதளம் ஆரம்பிச்சிடுவோம். அதன் பிறகு நேரடியாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்ய ஆரம்பித்திடுவோம்’’ என்றவர் தற்போது பெண்கள் மத்தியில் உள்ள ஹாட் செல்லிங் அலங்கார அணிகலன்கள் குறித்து விவரித்தார்.

‘‘இப்ப பெரும்பாலான பெண்கள் விரும்புவது ஹேர் ஷாப்பிங் கோம்ப்ஸ். சீப்பில் உள்ள பற்கள் போன்ற  அமைப்பில் அழகான முத்து, பூ மற்றும் கற்கள் வேலைப்பாடுகள் கொண்டு வரும் கிளிப். இந்த கிளிப்களை முடி கற்றினை அப்படியே அள்ளி தலையில் சொருக வேண்டும். தலையில் இடது அல்லது வலது பக்கவாட்டில் அணியப்படும் இந்த கிளப் தலையில் பார்க்கும் போது மிக அழகாக இருக்கும். ரைன்ஸ்டோன் சைட் கிளா... இதில் சீப்பில் இருப்பது போல் நிறை பற்கள் இருக்காது.

இரண்டு பற்கள் கொண்டு அழகான கற்கள் வேலைப்பாடுகள் கொண்டு இருக்கும். கொண்டையோ அல்லது முடியினை மடித்து காதோரம் இந்த கிளிப்பினை குத்தினால் பார்க்க அழகாக இருக்கும். பிஷ்டெயில் கிளா... இது கிளட்ச் கிளப் போன்ற அமைப்பு. மீன் வால் போன்ற வடிவமைப்பில் அழகான முத்துக்கள் பதியப்பட்டு வரும். இந்த கிளட்ச் டைப்பில் நிறைய டிசைன்கள் உள்ளன. முத்துக்கள், கிரிஸ்டல் கற்கள் போன்ற டிசைன்களிலும் கிடைக்கிறது.

அடுத்து பட்டர்பிளை கிளா. இதுவும் கிளட்ச் வகை தான். பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும். இதைத் தவிர ஹாண்டகிராப்டெட் ஹேர் ஸ்டிக்... சின்ன குச்சிப் போல் இருக்கும். இது மரம் மற்றும் மெட்டலிலும் டிசைன் செய்யப்பட்டு வருகிறது. கொண்டை அணிந்து அவிழாமல் இருக்க இதை பயன்படுத்தலாம். கிரிஸ் கிராஸ் கிளிப். கிரிஸ் கிராஸ் அமைப்பில் வளைந்திருக்கும். இதுவே சின்னக் குழந்தைகளுக்கு ஹேட் பேண்ட், ரிங் கிளிப், டிக்டாக் கிளிப்  என 200க்கும் மேற்பட்ட டிசைன்கள் என அனைத்து வயதினருக்கும் இங்குள்ளது’’ என்றார் சானியா.

ரித்திகா