தடை இல்லாத அந்த நாட்கள்!



கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி. ஐ.டி ஊழியரான இவர், திருமணமாகி குழந்தை பிறந்ததும் வேலையை தொடர முடியாமல், ஐ.டி வேலையை உதறியுள்ளார். கொரோனா சமயத்தில் தனக்கு ஆரோக்கியமான சானிட்டரி நாப்கின் தேவை என தேடலை தொடங்கியவர், தனக்கான மூலிகை நாப்கினை வீட்டில் இருக்கும் தையல் மெஷினிலேயே செய்ய ஆரம்பித்து, இப்போது இந்தியா முழுவதும் தன்னுடைய ஹெர்பல் நாப்கின்களை விற்பனை செய்து வருகிறார்.

‘‘எனக்கு சின்ன வயசுல இருந்தே ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. 2018ல் எனக்கு குழந்தை பிறந்தது. என் பையனுக்கு நான் டயாபர்கள் எதுவும் பயன்படுத்தவில்லை. காட்டன் துணிகளை தான் பயன்படுத்தினேன். குழந்தையை இவ்வளவு பத்திரமாக பார்த்துக்கொள்ளும் போது, நாம் மட்டும் மாதவிடாய் நாட்களில் எதற்காக ப்ளாஸ்டிக் கலந்த நாப்கின்களை பயன்படுத்த வேண்டும் என்று தோன்றியது.

அதனால் சானிட்டரி நாப்கின்கள் எப்படி தயாராகின்றன, அதன் மூலப் பொருட்கள் என்ன என்பதை ஆராய்ந்தேன். அப்போது தான் கமர்ஷியல் நாப்கின்கள் நம் உடலுக்கு மட்டும் தீங்கை விளைவிக்காமல் நம் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். நான் சில ப்ராண்டட் கமர்ஷியல் நாப்கின்களை வாங்கி அதை வெட்டி அதற்குள் என்ன பொருட்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை பார்த்தேன். அதை என் வீட்டின் ஒரு பகுதியில் புதைத்து வைத்து எவ்வளவு நாட்களில் மக்கிவிடுகிறது என்றும் கவனித்தேன்.

இப்போது சுமார் மூன்று வருடங்கள் கழித்தும் அந்த நாப்கின் அந்த மண்ணிற்குள் அப்படியே சிதையாமல் இருக்கிறது. இந்த நாப்கின்கள் மண்ணுக்கும் கேடு விளைவிக்கின்றன என்பதை என் கண்களால் பார்த்த பிறகு என்னால் அதை பயன்படுத்தவே முடியவில்லை. அதனால் இந்த கமர்ஷியல் நாப்கின்களுக்கு பதிலாக வேறு ஒரு மாற்று நாப்கினை தேட ஆரம்பித்தேன். அப்போது தான் சானிட்டரி நாப்கின்களில் முக்கியமாக இருக்க வேண்டியது காட்டன் மட்டும் தான் என்பது தெரியவந்தது.

அதற்கு நம் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் சர்ஜிகல் காட்டனே போதுமானது. இந்த காட்டனை வைத்தே எப்படி நாப்கின்களை தயாரிக்கலாம் என்று என்னுடைய தேடல் தொடங்கியது. இந்த காட்டனுக்கு மேலும் கீழும் கவரிங் ஷீட்கள் தேவை. அதற்குமே சாதாரண காட்டன் துணிகள் போதுமானது.  துளசி, வேப்பிலை, சோற்று கற்றாழை பொடிகளை இந்த நாப்கின்களில் சேர்த்து அடியில் லீக் ப்ரூஃப் லேயரை வைத்து நானே இந்த சானிட்டரி நாப்கினை வீட்டில் இருந்த தையல் மிஷினில் தைத்தேன். அவ்வளவுதான் ஆரோக்கியமான தரமான சானிட்டரி நாப்கின் ரெடியாகிவிட்டது.  

நானே முதல் முறையாக இதைப் பயன்படுத்தி பார்த்த போது, எனக்கு பல மாற்றங்கள் தெரிந்தது. இது வெறும் காட்டன் என்பதால், எந்த அசெளகரிய உணர்வும் இல்லை. எந்த விதமான தடுப்புகளோ அரிப்போ இல்லை.

மேலே எந்த பிளாஸ்டிக் ஷீட்களும் இல்லாததால் மாதவிடாய் காலத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் என்னால் எப்போதும் போல சாதாரணமாக  என் அன்றாட வேலைகளில் ஈடுபட முடிந்தது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வேப்பிலை, துளசி, கற்றாழை போன்ற மூலிகைகளை நாம் வாய் வழியாக சாப்பிட்டாலே நல்லது என்று எல்லோருக்குமே தெரிந்தது தான். இயற்கையான இந்த பொருட்கள் என்றுமே நம் உடலுக்கு தீங்கினை விளைவிக்காது. மிகவும் பாதுகாப்பானது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததுதான். அதிலும், இது கர்ப்பபைக்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆரோக்கியமான ஹெர்பல் நாப்கின்ஸை கமர்ஷியல் நாப்கின்களுக்கு ஈடாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இதில் விங்ஸ் டைப் மாடல், பேண்டி லைனர்கள், டெலிவரி பேட்ஸ், மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கும் பெண்கள் என அனைவரின் தேவைக்கும் ஏற்ப கஸ்டமைஸ்ட் நாப்கின்களையும் தயாரிக்க ஆரம்பித்தேன். என்னுடைய நாப்கின்களில் விங்ஸ் வகைகளில் பசைக்கு பதிலாக பட்டன் மாடலில் வரும். இதனால் இதை எளிதாக மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் நான் மட்டுமே பயன்படுத்தி வந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து இதை உபயோகித்து பார்க்க சொன்னேன். எல்லோரிடத்தில் இருந்தும் நல்ல வரவேற்பு இந்த நாப்கின்களுக்கு கிடைக்க ஆரம்பித்ததும், இதை மெதுவாக வெளியில் பொதுமக்களிடமும் எடுத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு முதலில் அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து இதை ஒரு சிறு-குறு தொழிலாக பதிவு செய்து சான்றிதழையும் பெற்றோம். நங்கை ஹெர்பல் நாப்கின்ஸ் (Nangai Herbal Napkins) எனும் பெயரில் என்னுடைய நாப்கின்களின் விற்பனை ஆரம்பமானது.

முறையான ஒப்புதல் பெற்றதும், இதை முதலில் பள்ளி மாணவிகளிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குழந்தைகள், முதல் முறையாக மாதவிடாயை சந்திக்கும் போதே, ஆரோக்கியமான மூலிகை நாப்கின்களை பயன்படுத்தினால், அவர்களுக்கு ஏற்பட இருக்கும் தீங்கை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிடலாம். கமர்ஷியல் நாப்கின்களை பயன்படுத்தி பழகியவர்களுக்கு ஆரம்பத்தில் இந்த மூலிகை நாப்கின்களை பயன்படுத்துவதில் ஒரு தயக்கம் இருக்கும். அந்த தயக்கத்தை உடைக்கவே நாம் நிறையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே நான் ட்ரையல் நாப்கின்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

அதாவது ஒரு பேக்கில் பல வகையான பல அளவில் இருக்கும் நாப்கின்களை வைத்து கொடுப்பேன். பெண்கள் அதை உபயோகப்படுத்தி பார்த்து அவர்களுக்கு எந்த வகையான நாப்கின் சரியாக இருக்கிறதோ, அதை அடுத்த முறை வாங்கிக்கொள்ளலாம். பல பள்ளி கல்லூரிகளில் என்னை மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  மாதவிடாய் கல்வியாளர் (Menstrual Educator) ஆகவும் என்னை நியமித்து மாதவிடாய் குறித்தும் அதே நேரம் பிளாஸ்டிக் கலந்த சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பேச சொல்லி அழைத்தனர்.

பின்னர், சில மருத்துவமனைகளிலேயே நங்கை ஹெர்பல் நாப்கின்களை பெண்களுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்து, யோகா பயிற்சி மையங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான ஈக்கோ-ஃப்ரெண்ட்லி கடைகளில் என்னுடைய நங்கை நாப்கின்களை விற்க ஆரம்பித்தோம். டெக்ஸ்டைல், ஃபேஷன் கல்லூரி மாணவர்களும் என்னிடம் வந்து இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு நல்ல தொழில் வாய்ப்பாகவும் இருக்கிறது. சிலர் இந்த மூலிகை நாப்கின்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது மன அழுத்தம்
குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதில் என்னை மிகவும் நெகிழ வைத்த சம்பவம் என்னவென்றால், இது வரை மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அசெளகர்யத்தால் அந்த மூன்று நாட்கள் மட்டும் பள்ளிக்கு செல்லாமல் இருந்த சிறுமி, எங்களுடைய நாப்கின்களை பயன்படுத்த ஆரம்பித்ததும், மாதவிடாய் நாட்களிலும் எந்த தடையும் இல்லாமல் பள்ளிக்கு செல்வதாக அந்த சிறுமியின் அம்மா மிகவும் மனம் நெகிழ்ந்து தெரிவித்திருந்தார். நீங்கள் எந்த நாப்கின் பயன்படுத்துவதாக இருந்தாலுமே அதை 4 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. இது போல பிளாஸ்டிக், கெமிக்கல் கலக்காத நாப்கின்களை ஆறு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்” என்ற ப்ரீத்தி இதனை நேரடியாகவும் அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்.

ஸ்வேதா கண்ணன்