பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் தம்பதியினர்!



சென்னை சூளைமேட்டில் வசிப்பவர்கள் ரவிச்சந்திரனும் அவரது மனைவி வித்யா ரவிச்சந்திரனும். இருவரும் இப்போது ஐம்பது வயதை கடந்தவர்கள். இவர்களுக்கு தொண்ணூறுகளில் முதலில் ஒரு மகன் பிறந்து பின் 1994ல் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
ஆனால் எதிர்பாராத விதமாக இவர்களுடைய மகள் சாருமதி 4 மாத குழந்தையாக இருக்கும் போதே இறந்துவிட்டார். தங்கள் குழந்தை இந்த உலகத்தில் வந்து சென்றதற்கான அடையாளமாக அவளுடைய கண்களை இரண்டு பேருக்கு சாருமதியின் பெற்றோர் தானம் அளித்துள்ளனர்.

இதன் மூலம் தங்களுடைய மகள், இன்று இந்த உலகத்தின் ஏதோ ஒரு இடத்தில் தங்களுடன் சேர்ந்து ஒவ்வொரு விடியலையும் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்பது இவர்களின் நம்பிக்கை. அதனால் தங்கள் மகளின் பிறந்த நாள் அன்று இலவச கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் இலவச கண் பரிசோதனை முகாமையும் நடத்தி ஏழை மக்களுக்கு மூக்கு கண்ணாடியும் அறுவை சிகிச்சை செய்ய தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து வித்யா ரவிச்சந்திரன், “1993ல் என்னுடைய அப்பா இறந்த போது, முதல் முறையாக எங்கள் குடும்பத்தில் அவருடைய கண்களைதான் தானம் செய்தோம். அடுத்து 1994ல் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அவளுக்கு சாருமதி என பெயரிட்டோம். அவள் பிறந்த நான்கே மாதத்தில் தவறிவிட, அவளுடைய கண்களையும் தானம் செய்தோம். அப்போது தொடங்கி இன்று வரை இது வரை எங்களுக்கு தெரிந்தவர்கள் யார் இறந்தாலும், அவர்களின் குடும்பத்தாரை கண் தானம் செய்ய சொல்லி நாங்கள் வலியுறுத்துவோம். அதன்படி இது வரை 25 கண் தானங்களை நானும் என் கணவரும் சாத்தியப்படுத்தி உள்ளோம்.

இப்போது ஒருவர் கண் தானம் வழங்க முன் வந்தால், அதன் மூலம் ஐந்து பேருக்கு பார்வையை கொடுக்க முடியும். எல்லோருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதை முதற்கட்ட நோக்கமாக வைத்து தான், இந்த முகாமை நாங்கள் நடத்துகிறோம். பொதுவாக இலவச கண் பரிசோதனை செய்து, தேவையானோருக்கு மூக்கு கண்ணாடிகளை மட்டும் வழங்கி, அந்த முகாமில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இந்தாண்டு தான் முதல் முறையாக ஏழை எளியோருக்கான இலவச கண்புரை அறுவைசிகிச்சை திட்டத்தையும் அறிமுகப்படுத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இதை எல்லா பகுதிகளிலும் செய்ய வேண்டும் என்று ஆசை.

இறந்த பின்னரும் தானம் செய்யக் கூடிய வெகு சில உறுப்புகளில் கண் தானத்திற்கு தான் இங்கு முதலிடம். ஆனால், இன்று பலரும் இதைப் பற்றி பேசுவது கூட இல்லை.
நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உயிரிழக்கும் போது, அவர்கள் இன்னும் வேறு ஒரு ரூபத்தில் இன்னொருவரின் மூலம் இந்த உலகத்தில் நம்முடன் தான் இருக்கிறார் என்பதே நமக்கு மிகப் பெரிய மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும்.

நானும் என் கணவரும் மருந்தக துறையில் தான் வேலை செய்தோம். அதனால் ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு மருத்துவத்தின் மீதும், உறுப்பு தானத்தின் முக்கியத்துவமும் தெரிய வந்தது. அது தவிர, என்னுடைய அம்மாவிற்கு எண்பதுகளில் செய்யப்பட்ட கண் மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு இந்த அழகான உலகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய கணவருக்கும் இடது கண் பார்வை முழுவதுமாக தெரியாது. இதெல்லாமே எங்களுக்குள் எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. அதனால் தான் என் குழந்தை இறந்த அந்த சமயம் கூட என்னால் தெளிவாக ஒரு முடிவை எடுக்க முடிந்தது.

வித்யாவை தொடர்ந்து பேசிய அவரது கணவர் ரவிச்சந்திரன், ‘‘பட்டி தொட்டியெங்கும் கண் தானத்தின் விழிப்புணர்வு சென்றடைய வேண்டும். ஒருவர் இறக்கும் போது, அந்த குடும்பத்தில் இருக்கும் ஒருவராவது, கண் தானம் பற்றி சபையில் பேச வேண்டும், மருத்துவரிடம் அதற்கான வாய்ப்பு பற்றி கேட்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். நான் இது வரைக்கும் என் வாழ்க்கையில் சந்தித்து பேசிய அனைவரிடமுமே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன். யாரோ ஒருவரிடம் நாம் ஐந்து நிமிடம் பேசினாலே அது அப்படியே எங்காவது ஒரு இடத்தில் அவர்களுக்கு மனமாற்றம் ஏற்படலாம், அதன் மூலம் ஒருவருக்கு பார்வை கிடைக்கலாம் என்பதே என் எண்ணம்.

ஒரு நான்கு மாத குழந்தையால் இன்று இரண்டு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது என்பதே பலருக்கும் நல்ல விழிப்புணர்வாக அமைந்துள்ளது. அதனால் தான் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து எங்கள் குழந்தையின் கண் தானத்தை நாங்கள் அடிக்கோல் இட்டு காட்டி வருகிறோம். ஒரு நாளைக்கு சென்னையில் மட்டும் 150 பேர் இறக்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு கண் தானம் கூட நடப்பதில்லை.

எப்படி கொரோனாவுக்கு திரும்ப திரும்ப விழிப்புணர்வு ஏற்படுத்தினோமோ, அதே போல கண் தானத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான், மக்கள் இயற்கையாக யாருடைய அழுத்தமும் இல்லாமல் தாமாக முன் வந்து உதவுவார்கள். எண்பது, தொண்ணூறுகளில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருந்தது. அப்போது பலரும் முன்வந்து கண் தானம் அளித்தனர். அப்போது ஒருவரால் இரண்டு பேருக்கு மட்டுமே பார்வை கொடுக்க முடியும். ஆனால் இப்போது ஒரே ஒருவரால் ஐந்து பேர் வரை பார்வை  கொடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. ஆனால் கண் தானம் கொடுக்க தான் இங்கே யாரும் இல்லை.

இறந்த பின், ஆறு மணி நேரத்திற்குள் இந்த கண் மாற்று அறுவை சிகிச்சையை நாம் செய்ய வேண்டும். ஆனால் யாரோ ஒருவருக்கு பார்வை கொடுக்கக் கூடிய கண்கள் எங்கோ மண்ணுக்குள் வீணாக போகிறது. எந்த குடும்பத்தாராலுமே தங்களுக்கு நெருங்கியவர் தவறிவிடும் போது, இது போன்ற முடிவுகளை எடுப்பது கடினம் தான். ஆனாலும் இதை மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பேசி அவர்களின் ஒப்புதலை பெற முயலலாம்” என்கிறார் ரவிச்சந்திரன் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கூட கண் தானம் செய்ய முடியும். கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண் தானம் செய்யலாம்.

இன்று இந்தியாவில் பல இளம் வயதினர் விபத்தினால் அல்லது கருவிழி குறைபாடால் பார்வை இழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வை கொடுக்க முடியும். ஆனால் இவர்களில் ஐம்பது சதவீதத்தினர் கண் தானம் கிடைக்காமல் இருட்டில் வாழ்ந்து வருகின்றனர். வித்யா-ரவிச்சந்திரன் தம்பதியரின் ஆசைப் படி, எப்போது கண் தானம் பற்றி மீண்டும் மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பிக்கிறார்களோ அப்போது தான் கண் தானம் உட்பட பிற உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.

ஸ்வேதா கண்ணன்