சிறுகதை-சாமியாடி



‘‘மாரிம்மா மகளுக்குப் பேய் பிடிச்சுருச்சாம்...மாரிம்மா மகளுக்குப் பேய் பிடிச்சுருச்சாம்..”  ஊரெல்லாம் இரண்டு நாட்களாக பரபரப்பாக இதே பேச்சுதான்.. எங்கே இரண்டு பேர் சேர்ந்து நின்றாலும் ஆச்சரியத்துடன் இதையே பேசினார்கள்.. பின்னே ஆச்சரியப்படாமல் என்ன செய்வார்கள்..?!மாரிம்மா.. ஊரில் பெரிய சாமியாடி.. அவள் சின்னப் பெண்ணாக இருந்த போது கரட்டு மேட்டுப் பக்கமாக ஆடு மேய்க்கப் போனாள்.போனவள் பொழுது சாய்ந்தும் வராமல் போகவே, அவள் தகப்பனும் தாயும் தேடிக்கொண்டு போயிருக்கிறார்கள்.போனவர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள்.

மாரிம்மா.. எல்லைப்பிடாரி கோயிலில் தலை விரி கோலமாக உட்கார்ந்து கொண்டு அமானுஷ்யமாக சிரித்தாளாம்.. இவர்களுக்கு பயத்தில் உடலே சில்லிட்டுப் போய் விழித்திருக்
கிறார்கள்.‘‘பயப்படாதீங்க ....எல்லைப்பிடாரி வந்திருக்கேண்டா..உம் பிள்ளைய எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு..அதான் அவகிட்ட குடி வந்துட்டேன்..” னு பயங்கரமா சிரிச்சாளாம்.
‘‘ஆத்தா.. இப்பதான் மொட்டு விட்டுருக்கு..கல்யாணம்.. காச்சின்னு இன்னும் எவ்வளவோ இருக்கு...” தயங்கித்தயங்கி சொல்ல..‘‘கவலைப்படாதே..அவளுக்குக் கல்யாணம் ஆகி புள்ள பொறக்கவரை அவளை விட்டு விலகிருவேன் ...” சொல்லுச்சாம்..சொன்ன மாதிரியே மாரிம்மாக்கு கல்யாணம் ஆகி அம்சவள்ளி பொறந்து ஒரு வருஷம் வரை வரவே இல்லை..அதுக்கப்புறம் வழக்கப்படி சாமியாட ஆரம்பிச்சுட்டா..

மாரிம்மா வெள்ளிக்கிழமை மட்டும் தான் அருள்வாக்கு சொல்லுவா..அதுவும் அவ கூப்பிடறவங்களுக்கு மட்டும்தான்.. தானா கேட்டா சொல்ல மாட்டா..
மத்தநாட்கள்ள எல்லாம் சாதாரணமா அமைதியா இருக்கறவ ,வெள்ளிக்கிழமை வீட்லேயே பூஜையை ஆரம்பிச்சுருவா.. தலை குளிச்சிட்டு, நல்ல சிகப்புல வேப்பிலை போட்ட சிவப்பு அல்லது மஞ்சள் புடவை கட்டி  சாம்பிராணி போட்டு வீட்ல இருக்கற ஒவ்வொரு சாமிக்கும் ஊதுவத்தி காமிச்சுட்டு கட்டி சூடம் ஏத்திக் கும்பிடுவா.அப்பவே எல்லைப்பிடாரி அவ மேல வந்துருவா..
வீட்டுலேர்ந்து கரட்டு மேட்டுக்கு உச்சி வெயில்ல கால் கொலுசு ‘‘ஜல் ..ஜல்..”னு ஒலிக்க வீதியில் நடக்க ஆரம்பிச்சா.. ஊர் ஜனமே அவ பின்னாடி போக ஆரம்பிச்சுரும்.

அப்புறம் அரை மணியோ,முக்கால் மணியோ சாமி மலையேறும் வரைக்கும் ஒரே சத்தம்தான்..அவ சொல்றதுதான் ஒரே வாக்கு.. யாரும் மீற மாட்டார்கள்..

ஒருதடவை சாமியாடி, ஊர் பெருந்தனக்காரர் மகளுக்கு பார்த்திருந்த வரனுக்கு கட்டிக் கொடுக்கக் கூடாதுனு சொல்ல,‘‘பெருசா சாமியாடறாளாம்..

எல்லாம் பொய்யி..ஊரை ஏமாத்தறா.. குலங் கெட்ட சிறுக்கி..”னு திட்டிகிட்டே அதே மாப்பிள்ளைக்கு கட்டி வச்சார்.பணக்காரரான அவருக்கு பயந்தும், என்னதான் சாமியாடினாலும் மாரிம்மா கீழ் குலத்துல பிறந்தவங்கறதுனாலேயும், ஊர் வாய மூடிக்கிருச்சு. ஆனா போன மூணே மாசத்துல பெருந்தனக்காரர் மகள் விதவைக் கோலத்துல ஊர் திரும்பினவுடனே மாரிம்மா மேல வச்சிருந்த மதிப்பு பல மடங்காயிருச்சு..அவ பிறந்த குலத்துக்கே அவளால மரியாதை உண்டாயிருச்சு..

அப்பேர்ப்பட்ட மாரிம்மா மகளுக்கா பேய் பிடிச்சுருச்சுன்னு ஊரே அதிசயப்பட்டது.ஏன்னா ..மாரிம்மா சாமி மட்டும் ஆட மாட்டா..காத்து, கருப்பு எதுவானாலும் அவ ஊதுற திருநீறுக்கும்,வேப்பிலை அடிக்கும் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிரும்..அவ மகளுக்கேவா..?!னுதான் ஆச்சரியம்..சாமி சொன்ன மாதிரி பிரசவம் வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமதான் பிறந்தா அம்சவள்ளி. மாரிம்மா குலத்துல எல்லோருமே கருத்த மேனிதான்..ஆனா அம்சவள்ளி மட்டும் பேருக்கேத்த மாதிரி கலரா, மூக்கும் முழியுமா லட்சணமா இருந்தா..

ஒரு பொண்ணுக்கப்புறம் மாரிம்மாவும் புள்ளையாளவே இல்லை. காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சுகிட்டு இருந்தா அம்சா. எல்லோரும் அவளை அம்சான்னு கூப்பிட்டா மாரிம்மா மட்டும் வள்ளின்னுதான் கூப்பிடுவா.

பரிட்சைக்குப் படிக்கிறேன்னு தோழி வீட்டுக்குப் போயிருக்கா..மாரிம்மாவுக்கு மக மேலேருந்த பெருமைல எதுவும் கண்டுக்க மாட்டா..போய்ட்டு பொழுது சாய வந்தவளுக்கு நல்ல காய்ச்சல்.. திடீர் திடீர்ன்னு ராத்திரில எழுந்து கத்திருக்கா..ஊர் வாய்க்கு பயந்து மாரிம்மாவும் வெளியே தெரியாம மந்திரிச்சுப் பார்த்துருக்கறா..ஆனால் மாரிம்மா சாமி ஆடறப்ப மட்டும் தான் மந்திரிக்கறது பலிக்கும்.சாமியாடற இடத்துக்கே வந்து அம்சவள்ளி குதிக்க ஆரம்பிக்கவும்தான் விஷயம் ஊருக்கே தெரிஞ்சிருச்சு.

அவளோட உருட்டலுக்கும் , மிரட்டலுக்கும் அம்சவள்ளி பயப்படவே இல்லை.. எதுவும் பேசவும் இல்லை.. ‘‘ஊய்..ஆய்..”ன்னு சத்தந்தான் போடறாளே ஒழிய, யார் பிடிச்சுருக்குன்னு சொல்லவே இல்லை..மாரிம்மாவுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை.தன்னோட மரியாதை போனாலும் பரவாயில்லை ன்னு பக்கத்தூர்ல பேய் ஓட்டற மந்திரவாதியக் கூட கூப்பிட்டு வந்து பார்த்தா.. ஊஹீம்..பேய் ஓடற.

வழியக் காணோம்..ஒரு மாதம் ஓடிப்போச்சு.அன்னைக்கு வெள்ளிக்கிழமை..வழக்கத்தை விட ரொம்பவே உக்கிரமா புறப்பட்டா மாரிம்மா..பூசாரி உடுக்க அடிக்க அடிக்க அம்சா ஆட ஆரம்பிச்சா..என்னைக்குமில்லாம மாரிம்மாவோட கண்ணெல்லாம் செவந்து கண்ணீர் பொங்குச்சு... டாய்..ன்னு அவ கத்துன சத்தம் கரட்டு மேட்டு முகடு வரைக்கும் கேட்டுச்சு..
‘‘மேட்டுக்குடி அருணாசலத்தையும், அவன் மகனையும் வரச் சொல்லுடா..”ஓடி வந்தார்கள் இருவரும்..உக்கிரமா அவர்களை முறைத்தவள் ..‘‘டேய் அருணாசலம்.. நீ என்னோட பரமபக்தன்.உங் குலமே காலங்காலமா என்னைக் குப்புடறவங்க..”துண்டை இடுப்பில கட்டிகிட்டு பவ்யமாக .. ‘‘ஆமாத்தா..” என்றார் தழுதழுத்த குரலில்.

‘‘டேய்..இந்தப் புள்ள உடம்புல ஏறிருக்கறது யாருன்னு நெனக்கற..அம்சவள்ளியோட மூதையா.. அவ அத்த மொறக்காரி..அவ..அவ..” என்றவள் உக்கிரமா சிரிக்க..
அதுவரை ஊய் ,ஊய் ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டு தலை விரிச்சுப் போட்டிருந்த அம்சா சட்டுன்னு அமைதியாகிட்டா..‘‘உங் குலத்து வாரிச காவு கேட்கறாடா..காவு கேட்கறா..எப்பவோ அவள  உங்குலத்துக்காரன்  கெடுத்து கை விட்டதுக்கு பழி கேட்கறா..‘‘ஆத்தா..” ன்னார் ..அருணாசலம் நடுங்கிய குரலில்..

‘‘எம் புள்ளைங்கள நா அப்படி வுட்ருவேணாடா..என்ன வேணும் உனக்குன்னு கேட்டேன்.. அவன் வாரிசு இவளக் கட்டிகிட்டா பேசாம போயிருவேன்னு சொல்றாடா..சொல்றா.. இதத் தவிர அவ உக்கிரந் தணிக்க வழியில்லடா..”என்றவள் மீண்டும் ஆக்ரோஷமா சிரிச்சுகிட்டே மயங்கி விழுந்துட்டா..அதுவரைக்கும் அமைதியாயிருந்த அம்சா..அருணாசலம் மகன உக்கிரமா முறைச்சு ..‘‘ஊய்..ஊய்..” மண்ணை ரெண்டு கையிலேயும் எடுத்து வாரிப் போட ஆரம்பிச்சா..மௌளனமா எதுவும் பேசாமல் போன அருணாசலம் அடுத்த அரைமணி நேரத்துலேயே குடும்பத்தோட கலந்து பேசி,மாரிம்மா வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்துட்டார்.அடுத்த ஒரு வாரத்துல மலைக் கோவில்ல எளிமையாக் கல்யாணமும் ஆச்சு..கல்யாணம் பேசுனதலேர்ந்தே அம்சவள்ளி அமைதியாயிட்டா..

கல்யாணம் முடிச்சு பொண்ணையும், மாப்பிள்ளையையும் அனுப்பிச்சுட்டு உள்ளே வந்தா மாரிம்மா..நேரா மாடத்துல வச்சுருந்த எல்லைப் பிடாரி படத்துகிட்டப் போய் விம்மி அழ ஆரம்பிச்சா..
‘‘ம்மா.. என்னை மன்னிச்சிரு..இரண்டு மாசத்துக்கு முன்னாடி.என்னைத் தனியா  சந்திச்ச அம்சாவோட சிநேகிதி பொன்னி ‘‘ஆத்தா..அம்சா மேட்டுக்குடி அருணாசலம் மகன் முருகனோட சுத்தறா..”னு சொன்னா..அப்பதான் எனக்கு ஒரு விஷயம் உறைச்சது இந்த மாசம் வள்ளி ஒதுங்கவே இல்லைனு..

ஆத்திரத்தோட வீட்டுக்கு வந்தவ வள்ளிய மிரட்டிக் கேட்டவுடனேயே ஒத்துகிட்டு எங் கால்ல விழுந்து..‘‘நீதாம்மா..எப்படியோ இந்தக் கல்யாணத்த நடத்தி வைக்கணும்..”னு கதறுனா..
அவளைத் தேத்தி நா சொல்றபடி நடின்னு சொல்லிக் கொடுத்தேன்... ‘‘ஆத்தா... எனக்கு வேற வழி தெரியல..சாமியாடியா ஊருக்கு உன் வாக்க சொல்லிகிட்டு இருந் தவ என் சுயநலத்துக்காக தப்பு பண்ணிட்டேன்.. ..இனிமேல் நான் சாமியாடி இல்ல.. எம் மேல இனி நீ வராதே...”அடுத்த வெள்ளிக்கிழமை... கரட்டு மேட்ல ஒரே கூட்டம்... மாரிம்மா சாமியாடிகிட்டு இருந்தா..
‘‘டேய்... நா எல்லைப் பிடாரி வந்துருக்கேண்டா...”

கோடையை இதமாக்கும் மோர்

நம் முன்னோர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் மோர்தான் குடிக்க கொடுப்பார்கள். மேலும் பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

*குடித்த உடனேயே புது தெம்பையும், தாகத்தையும் தீர்க்கும் சக்தியையும் கொண்டது மோர்.

*மோரில் லெசிதீன் எனும் ஒருவகை சத்து இருக்கிறது. இச்சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவைகளை பலப்படுத்தும்.

*வெயிலில் அலையும் சிலருக்கு வியர்வை மற்றும் சிறுநீர் போன்றவை சரியாக பிரியாது. அப்படிப்பட்டவர்கள் தினமும் மோர் குடிக்க வேண்டும்.

*பசு மோர் உடலுக்கு நல்லது. தாகத்தை தீர்ப்பதோடு சூட்டை தணிக்கும். மூளை சூடு குறையும்.

*பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியை துண்டு துண்டாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது நல்லது.

*மோர் சாதமானது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடம்பில் தோன்றும் எரிச்சலை நீக்கும்.

*பானை நீரில் தயிரை கடைந்து சிறு துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், ஒருபிடி கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

*புளிக்காத தயிரில் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்றாக ஆற்றி ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட குளுமையாக இருக்கும்.

*மோரில் கிர்ணிப் பழத்தையும், இஞ்சி விழுது, மிளகாயையும் சேர்த்து உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.

*தயிரை கெட்டியாக தயார் செய்து வெள்ளரித்துண்டுகளை நறுக்கிப் போட்டு சாப்பிட ஜில்லென இருக்கும்.

*கோடைக்கு மோர் மற்றும் தயிர் இரண்டுமே உடலை குளிர்ச்சி செய்யும். வயிற்றுப்புண், வாய்ப்புண் வராது தடுக்கும்.

*நீர் மோர் துவர்க்காமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்த்தால் போதும்.

*தயிர் ஒரு கப் எடுத்து அதில் பச்சை திராட்சை துண்டுகளைப் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிட கோடையே தெரியாது.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.