மேக்கப் பாக்ஸ்-ஃபவுண்டேஷன்
மேக்கப் முறையில் மிகவும் முக்கியமானது ஃபவுண்டேஷன். மேக்கப் அதிகம் விரும்பாதவர்கள் கூட ஃபவுண்டேஷனை அதிகம் விரும்புவார்கள். காரணம் வேறு எந்த மேக்கப் கிரீம் பயன்படுத்தாமல், வெறும் ஃபவுண்டேஷன் மட்டுமே போட்டுக் கொண்டால் மேக்கப் போட்டதற்கான லுக் கிடைக்கும்.
 இதனாலேயே பல பெண்கள் ஃபவுண்டேஷனை அதிகம் பயன்படுத்த விரும்புகிறார்கள். எனினும் ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முறையில் இன்னமும் நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன. அது குறித்து முழுமையான விளக்கம் தருகிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் ஸ்ரீதேவி ரமேஷ். ‘‘ஃபவுண்டேஷன் பயன்பாட்டிற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எஸ்.பி.எஃப் எனப்படும் சன் ஸ்கிரீன் லோஷன் போல் ஃபவுண்டேஷன் பயன்படுத்துவது உண்டு. எண்ணெய் பசை சருமத்திற்கான ஃபவுண்டேஷன், வறண்ட சருமத்திற்கான ஃபவுண்டேஷன், சிலிக்கான் ஃபவுண்டேஷன், ஏர் பிரஷ் ஃபவுண்டேஷன், லைட் வெயிட் ஃபவுண்டேஷன், மியூஷ் ஃபவுண்டேஷன் இப்படி நிறைய ஃபவுண்டேஷன்கள் இருக்கு. இதனை அவரவர்களுக்கு ஏற்ப தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
சிலருக்கு கருவளையம், பருக்கள், இருக்கறதை மறைக்கவும் கூட ஃபவுண்டேஷன் பயன்படும். ஏர் பிரஷ் ஃபவுண்டேஷன் தான் இப்போதைய டிரெண்ட். மணப்பெண் அலங்காரத்திற்கு பெரும்பாலான மேக்கப் கலைஞர்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த ஃபவுண்டேஷன் எந்த ஸ்கின் டைப்பிற்கும் செட்டாகும். மேலும் லைட் வெயிட் ஃபவுண்டேஷன் என்பதால், நீண்ட நேரம் இருக்கும் என்பதால், பெண்களும் இந்த ஃபவுண்டேஷன் மேக்கப்பினை தான் அதிகம் விரும்புகிறார்கள்’’ என்ற தேவி என்ன சருமத்திற்கு என்ன ஃபவுண்டேஷன் என விளக்கினார். எண்ணெய் பசை சருமத்திற்கு வாட்டர் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்திற்கு கிரீம் ஃபவுண்டேஷன், ஸ்கின் பாதுகாப்பு ஃபவுண்டேஷன், இது தவிர எலிமினேட்டர் ஃபவுண்டேஷன் நல்ல மினுமினுப்பு கொடுக்கும். இதனை இரவு நேர பார்ட்டி அல்லது திருமண வரவேற்புக்கு செல்பவர்கள் பயன்படுத்தலாம். இரவு நேர வெளிச்சத்தில் இது சருமத்திற்கு ஒரு ஜொலிஜொலிப்பினை கொடுக்கும்.
எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
முதலில் நம்முடைய சருமம் எப்படிப்பட்டது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சருமத்திற்கு எந்த விதமான ஃபவுண்டேஷன் சரியாக இருக்கும் என்று தேர்வு செய்து திட்டமிட்டு வாங்கலாம். மிக முக்கியமான விஷயம் சரும நிறம் என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் ஃபவுண்டேஷன் நிறமும் தேர்வு செய்யணும். சிலருக்கு இதனை சரியான முறையில் தேர்வு செய்ய தெரியாது.
அந்த சமயத்தில் அழகுக் கலை நிபுணர்களின் ஆலோசனை பெற்று தேர்வு செய்யலாம். காரணம் சருமத்தின் தன்மை மற்றும் நிறத்திற்கு ஏற்ப தேர்வு செய்யவில்லை என்றால், அதனை பயன்படுத்தும் போது, அது அவரின் சருமத்துடன் சரியான முறையில் ஜெல் ஆகாமல் வித்தியாசமான தோற்றமளிக்கும். ரூ.150 துவங்கி ரூ.15,000 வரை கூட ஃபவுண்டேஷன்கள் உள்ளன.
எதுவாக இருந்தாலும் தரமான பிராண்டின் பொருளை பயன்படுத்துவது சிறந்தது’’ என்று கூறும் தேவி ஃபவுண்டேஷனுக்கு முன் சரும பராமரிப்பு குறித்து தொடர்ந்து பேசினார். ‘‘சிலருக்கு சென்சிடிவ் சருமமாக இருக்கும். அவர்கள் முதலில் மாய்ச்சுரைஸர் கிரீம் பயன்படுத்திவிட்டு பிறகு ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். முடிந்தவரை நல்ல பிராண்ட் மற்றும் சரியான சருமத்துக்கு சரியான ஃபவுண்டேஷன் தேர்வு செய்வது முக்கியம். மேலும் தினசரி பயன்பாட்டுக்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்தி விட்டு அதன் மேல் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். அல்லது சன் ஸ்கிரீன், எஸ்.பி.எஃப் அடங்கிய ஃபவுண்டேஷன்களே இப்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம்.
விலை குறைவு என்று சரியான ஃபவுண்டேஷன் பயன்படுத்த தவறினால், அது நாள டைவில் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகத்தின் சரும நிறமும், கைகளின் சரும நிறமும் வேறு வேறாக இருக்கும். எனவே முக சருமத்தின் நிறத்துடன் ஒப்பிட்டே ஃபவுண்டேஷன் தேர்வு இருக்க வேண்டும். அடுத்து பலரும் சொல்லும் பிரச்னை ஃபவுண்டேஷன் பயன்படுத்தினால் கொஞ்ச நேரத்தில் முகத்தின் சருமம் கிரே ஷேடாக மாறிவிடுகிறது என்று கூறுவது வழக்கம். சில நேரத்தில் மணப்பெண்களுமே இந்த பிரச்னையை சந்தித்திருக்கிறார்கள்.
இந்த பிரச்னைக்கு தீர்வு சருமத்தில் பவுண்டேஷன் போடுறதுக்கு முன் கண்டிப்பாக மாய்ச்சுரைஸர் பயன்படுத்த மறக்ககூடாது. மேலும் ஃபவுண்டேஷன் போட்ட பிறகு அப்படியே விட்டுவிடாமல் அதற்கு மேல் காம்பாக்ட் பவுடரை பயன்படுத்தலாம். இது சருமத்தில் நிறம் மாறுவதை கட்டுப்படுத்தும். அதேபோல் 30 வயதுக்கு மேல் போதுமான சரும பராமரிப்பு மிக அவசியம். பராமரிப்பு இல்லாத சருமத்தில் ஃபவுண்டேஷன் பயன்படுத்தினால், கிரே ஷேடாக மாறும். அதிக வெப்பம் காரணமாகவும் ஃபவுண்டேஷன்கள் நிறம் மாறும். எனவேதான் மேக்கப் ஆர்டிஸ்ட்கள் இப்போது மேக்கப் ஸ்பிரே கொண்டு மேக்கப்பினை செட் செய்கிறார்கள்.
ஷாலினி நியூட்டன்
|