நெடுஞ்சாலையில் ஒரு காதல்!



இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நிர்பயா, மனிஷா... என்று பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் பட்டியல் கூட நீண்டுகொண்டே செல்கிறது.
இதற்கு எதிராக போராட்டங்கள் நாலாப்பக்கமும் நடந்தாலும் எதுவுமே நிற்கவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் உறவினர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்களாலேயே பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதும் அதிகரித்திருக்கிறது. இப்படி உறவினர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான ஒரு பெண்ணின் கதை தான் ‘ஹைவே’.

எந்நேரமும் உற்சாகமாக இருக்கும் துடிப்பான இளம்பெண் வீரா. ஆனால், மனதளவில் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறாள். பெரும் கோடீஸ்வரரின் மகளான அவளுக்கு வீட்டில் இருக்கவே சுத்தமாக பிடிப்பதில்லை. அவளுக்கு நன்கு தெரிந்த வினயுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முந்தைய நள்ளிரவில் வருங்கால கணவர் வினயுடன் காரில் ஜாலியாக ஊர் சுத்த விரும்புகிறாள். விடிந்தால் கல்யாணம் என்பதால் வீராவின் ஆசைக்கு ஆரம்பத்தில் வினய் மறுப்பு தெரிவிக்கிறான்.

வீரா பிடிவாதமாக இருக்க, வேண்டா வெறுப்புடன் வினய் சம்மதிக்கிறான். வீட்டைவிட்டு வெளியே கொஞ்ச நேரம் போகிறோம் என்ற உணர்வே வீராவை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.

வருங்கால கணவருடன் ஜாலியாக காரில் கிளம்புகிறாள். கொஞ்ச தூரம் போன உடன் வீடு திரும்பலாம் என்கிறான் வினய். ஆனால், வீராவோ இன்னும் கொஞ்ச தூரம் போகலாம் என்று கெஞ்ச, கார் பறக்கிறது. பெட்ரோல் போடுவதற்காக  ஒரு ஹைவேயில் கார் நிற்கிறது. நள்ளிரவு என்பதால் பங்க்கில் எந்த வண்டியும் இல்லை. திடீரென்று அங்கே வரும் ஒரு கும்பல் வீராவைக் கடத்திவிடுகிறது.

வினய் அங்கிருந்து எப்படியாவது தப்பித்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். கடத்தப்பட்ட வீரா பெரும் தொழில் அதிபர் மற்றும் அரசியல் செல்வாக்கு மிகுந்த திரிபாதியின் மகள் என்று தெரிய வருகிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் நடுங்கிப்போகிறார்கள். அரசியல் மற்றும் ரவுடிகளின் செல்வாக்கு மிகுந்தவர் திரிபாதி.  

வீராவைக் கடத்திய இடத்திலேயே கொண்டுபோய் விட்டுவிடலாம் என்று கும்பலைச் சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். மகளைக் கடத்தியது யார் என்று தெரிந்தால் திரிபாதி அவர்களின் கதையை முடித்துவிடுவார் என்ற அச்சம். ஆனால், மகாபீர் மட்டும் பணம் கிடைக்காமல் வீராவைத் திருப்பி அனுப்பப் போவதில்லை என்பதில் உறுதியாக நிற்கிறான். திரிபாதியின் மகள் வீரா என்று தெரிந்தும் கூட அவளிடம் இன்னும் கடுமையாக நடந்துகொள்கிறான்.

காவல்துறை துரித வேகத்தில் வீராவைத் தேடும் வேட்டையில் இறங்குகிறது.  ஒரே இடத்தில் இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று வீராவுடன் ஒவ்வொரு நகரமாக டிரக் வண்டியில் பயணிக்கிறான் மகாபீர். யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் எல்லாம் வீராவை மறைத்து வைக்கிறான் மகாபீர். பயணத்தின் போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் முரண்படுகிறார்கள்.

திக்கு தெரியாத திசைகளில் எல்லாம் வண்டி ஓடுகிறது. தில்லியிலிருந்து இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் என இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அவர்களின் பயணம் நீள்கிறது. இந்தப் பயணத்தின் போது தன்னைக் கடத்திய மகாபீரின் மீது கோபம் கொள்ளாமல் காதல் வயப்படுகிறாள் வீரா. இந்தக் காதல் அவர்களை எதுவரை அழைத்துச் செல்கிறது என்பதுதான் மீதிக்கதை.

கடத்தல்காரனுக்கும் கடத்தலுக்கு உள்ளான பெண்ணுக்கும் இடையில் மலரும் காதலை ஒரு கவிதையைப் போல சொல்கிறது இந்தப் படம். வீராவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவளது மாமாவால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள்.

இது அவள் மனதை வெகுவாக பாதித்து வீட்டின் மீது ஒரு வெறுப்பை உண்டாக்குகிறது. அதனால் தான் எப்போது வீட்டைவிட்டு வெளியே கிளம்பலாம் என்று காத்திருக்கிறாள். வீட்டில் கிடைக்காத சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் தன்னைக் கடத்திய மகாபீரிடம் காண்கிறாள்.

இன்னொரு பக்கம் மகாபீர் குழந்தையாக இருந்தபோது அவனையும் அவன் அம்மாவையும் அவன் அப்பா கொடுமை படுத்தியிருக்கிறார். அதனால் அவனும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான். மகாபீருக்கு வீட்டில் கிடைக்காத ஆதரவும் அன்பும் வீராவிடம் கிடைக்கிறது.

பின்னணியாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அவர்களின் காதலையும் பயணத்தையும் இன்னும் அழகாக்குகிறது. மகாபீராக ரந்தீப் ஹூடாவும் வீராவாக அலியா பட்டும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். என்றென்றும் மறக்க முடியாத ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி.

த.சக்திவேல்