வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!



செவிலியர் நிர்மலா தேவி

தரணிக்கெல்லாம் தானியம் படைக்கும் தஞ்சாவூரை சேர்ந்த நிர்மலா தேவியின் பெருங்கனவு ரொம்பவே வித்தியாசமாக உள்ளது. நடுத்தர வயதை கடந்திருந்தும், தான் வாழ்க்கையில் சந்தித்த பல சோதனைகளை தனது வெற்றிப் படிக்கட்டுகளுக்கான சாதனைகளாக கருதி மனம் தளராமல், நம்பிக்கை இழக்காமல் சோழர் ஆண்ட மண்ணில் இருந்து ஓவிய உலகை ஆள புறப்பட்டுள்ளார்.
சொந்த ஊரான பேராவூரணியில் அக்கா, அண்ணன் எனும் அளவான நடுத்தர வர்க்க குடும்பத்தில், விளைச்சலுக்கு பயன்படும் இரும்பு கருவிகளை வார்ப்பதும், கூர் தீட்டுவதுமான கொல்லு பட்டறை தொழில் செய்து வந்த சிங்காரம், ராசம்மாள் தம்பதிக்கு கடைக்குட்டியாக பிறந்தவர் நிர்மலா. இவர் அவங்க வீட்டின் செல்லக்குட்டியும் கூட.

கர்ணன் எப்படி கவசத்துடன் பிறந்தான் என இதிகாசம் கூறுகிறதோ, அப்படி இந்த பெண்ணுக்கு ஓவியக்கலை பிறப்பிலேயே உருவெடுத்துள்ளது. சுற்று வட்டார தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில், எங்கெல்லாம் ஓவியப் போட்டி நடந்ததோ அங்கெல்லாம் நிர்மலா ஆஜர். ஓவியம் தீட்ட அரை மணி நேரம் என கெடு விதித்தால், மின்னல் வேகத்தில் வரைவது அவருக்கு கை வந்த கலை.

“பெற்றோர் ஆதரவும், ஊக்குவிப்பும் இல்லை என்றால் இந்த அளவுக்கு என்னால் உருவாகி இருக்க முடியாது. என்றென்றும் நான் அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கேன். எப்போதோ போயிருக்க வேண்டிய எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, வாழ்க்கையில் பிடிப்பும் அமைத்து கொடுத்தவர்கள் அவர்கள். என்னுள்ளில் எப்போதெல்லாம் கலக்கமோ அல்லது மன அழுத்தமோ ஏற்பட்டாலும், அதிலிருந்து விடுபட உடனே ஓவியம் வரையத் தொடங்குவேன்.

நான் வரைந்த கடவுள் ஓவியங்களில் லேசான ஒரு புன்னகை மிளிர்வதையும், காண்பவருக்கு உள்ளத்தில் ஒரு மலர்ச்சி உண்மையிலேயே உருவாக்குகிறது என எனது படைப்புகளை பற்றி புகழும் நட்பு வட்டாரங்கள், நல்ல விலைக்கு விற்கலாம், ஸ்டால் போடுங்க சேல்ஸ் பிச்சிக்கிட்டு போகும் என்றெல்லாம் என்னை உசுப்பினார்கள். அவர்கள் சொல்வது உண்மையோ, பொய்யோ.. தெரியாது.. அனைத்து ஓவியங்களும் கண்ணீருடன் நான் வடித்தவை என்பது மட்டும் நிஜம்..அது மட்டுமன்றி கலையை விற்பதா எண்ணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஓவியம் ஒருபுறமிருந்தாலும், தேவையற்ற பொருட்களை அழகாக மாற்றுவது என்னுடைய மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. பயன்படாத விசிட்டிங் கார்டு மற்றும் பத்திரிகை அட்டை இவற்றைக் கொண்டு வீடு, அலங்கார பொருட்கள் செய்வது என இப்படி ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். வீட்டில் வரைய உட்கார்ந்தால் பசி, தூக்கம் எல்லாம் மறந்துவிடும்.

பள்ளிப் பருவத்துக்கு பின் படிப்பில் கவனம் செலுத்தியதால், ஓவியத்தை சில காலம் தள்ளி வைத்திருந்தேன். பள்ளிப் படிப்பிற்கு பிறகு, மதுரை மெடிக்கல் கல்லூரியில் நர்சிங் முடித்தேன். மதுரையில் தனியார் மருத்துவமனையில் 10 ஆண்டுகள் நர்ஸ் பணி. இதற்கிடையில் அக்காவும் அண்ணனும் சென்னை, திருப்பூர் என திருமணமாகி செட்டிலாகியிருந்தனர். எனக்கும் எங்க வீட்டில் கல்யாணம் செய்து வச்சாங்க. ஆனால் அந்த வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

வாழ்க்கை மேல் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. மன அழுத்தம் அதிகமானது. பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்த்தேன். தனிமையை அதிகம் உருவாக்கிக் கொண்டேன். மறுபடியும் பிரஷ்ஷை கையில் எடுத்தேன். உள்ளத்தின் வலிகளை, உணர்ச்சிகளையும் மறக்க, ஓவியம் எனக்கு மிகவும் கை கொடுத்தது. நான்கு ஆண்டுகளில் ஒரு டைரி முழுவதும் ஓவியங்கள்.

ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். ஓவியங்களின் பின்னணியில் என்னுடைய சோக இழையும் கலந்திருப்பது அதனை உற்று கவனித்தால் மட்டுமே புலப்படும். ஓரளவுக்கு மூச்சு விடலாம் என்று நினைத்த போது அடுத்த இடி விழுந்தது. அதுவும் என்னுடைய நெருங்கிய தோழி மூலம் ஏற்பட்டதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

என்னுடைய ஓவியங்கள் கொண்டிருந்த டைரியை அவர் திருடி, அதை தான் வரைந்ததாக எல்லாரிடமும் பறை சாற்றிக் கொண்டாள். ஆனால் அந்த ஓவியங்களை எல்லாம் நான் என்னுடைய செல்போனில் விளையாட்டாக புகைப்படம் எடுத்திருந்ததால், நிழலாவது இன்று என்னிடம் உள்ளது என்று என் மனதை நான் சாந்திப்படுத்திக் கொண்டேன்.

என்னதான் இருந்தாலும் உழைப்புக்கான பரிசு நம் கைவிட்டு போகும் போது ஏற்படும் வலியை பற்றி சொல்ல வார்த்தை கிடையாது. என் தோழியிடம், எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், டைரியை தர மறுத்துவிட்டாள். பொருளோ, நகையோ திருடி இருந்தால் கூட போனால் போகிறது என விட்டிருப்பேன். ஆனால் என்னுடைய அடையாளத்தை பறித்துக் கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. வாழ்க்கையை இழந்த சோகத்தைக் காட்டிலும், என் படைப்பை இழந்த சோகம் என்னை மேலும் பித்தாக்கியது’’ என்றவர் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து வெறித்தனமாக வரைய ஆரம்பித்துள்ளார்.

‘‘அடி மேல் அடியாக விழுந்தாலும், அதை எல்லாம் தகர்த்திவிட்டு தன்னம்பிக்கையுடன் மீண்டும் எழுந்தேன்.  இப்படியே நான்காண்டுகள் ஓடியது. எத்தனை காலம் தனிமையாக இருப்பது... எனக்கென்று ஒரு துணை வேண்டும் என்பதை விட இன்னொருவருக்குத் துணையாக எனது மீதி காலத்தை கழிக்க முடிவு செய்தேன். மாற்றுத்திறனாளி ஒருவரை மணக்கலாம் என ஆர்வம் ஏற்பட்டது.

அப்போது தான் எனது அத்தை மகன் ஞானபாரதி என் மனதில் மணி அடித்தார். 2002ல் ஒரு விபத்தில் சிக்கி நடக்கும் திறன் இழந்த அவர் தோல் தொழில் ஆராய்ச்சி மையத்தில் (சி.எல்.ஆர்.ஐ) ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றி வந்தார். பதினைந்து ஆண்டுகளாக வாழ்வை தொலைத்த அவரை சந்தித்து எனது ஆசையை வெளிப்படுத்தினேன். முதலில் மறுத்தாலும், பின்னர் சம்மதித்தார். எங்களின் வாழ்க்கை இனிதாக தொடங்கியது. கணவருக்கு தேவையான பணிவிடை செய்து, அவர் வேலைக்கு சென்ற பிறகு நானும் என்னுடைய நர்சு பணிக்காக சென்றுவிடுவேன்.

என்னுடைய ஓவியங்களின் ரசிகன் மட்டுமல்லாமல் விமர்சகரும் என் கணவர் தான். அவர், ‘‘உன் திறமை வீண் போகக்கூடாது’’ என பிடிவாதமாக இருந்தார். ‘உன்னோட கணவர் நான் என்று பெருமைப்படணும்’, என்று சொல்லுவார். வீட்டுக்கு யார் வந்தாலும் எனது ஓவியங்களைக் காட்டி பெருமைப்படுவார். ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஓவியப் பொருட்களை வாங்கிக் குவித்து அசத்தி, மறுபடியும் ஓவியத்தின் மீதான எனது பிடிப்பை தொடங்கி வைத்தார்.

அப்போது முதல் இதோ இந்த நிமிடம் வரை பரபரப்பாக இயங்கி வருகிறேன். வீடு முழுவதும் எனது சுவரோவியங்கள், சுவிட்ச் போர்டு பெயின்டிங் என வீடு முழுக்க என் கைவண்ணங்கள். இப்போது நான் வரைந்த ஓவியங்களை கண்காட்சியில் விற்பனைக்காக வைக்க இருக்கிறேன். அதில் வரும் பணத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் நலனுக்காக செலவு செய்ய உள்ளேன்.

அது மட்டுமல்லாமல் இல்லங்கள், அலுவலகங்கள், உணவகங்களில் சுவரோவியங்கள் வரைவதற்கு மற்றும் அன்பளிப்பு கொடுப்பதற்காகவும் வரைந்து தரலாம் என முடிவு செய்துள்ளேன். கலையை வைத்து சம்பாதிப்பது என் நோக்கமல்ல. அதில் கிடைக்கும் வருமானத்தில் இயலாதோருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். வாழ்க்கையில் பெண்கள் எந்த சூழலிலும் துவண்டு விடக்கூடாது. வாழ்க்கை வாழ்வதற்கே.. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக ஒவ்வொரு பெண்ணும் வீர நடை போட வேண்டும்’’ என்றவருக்கு ஆதரவற்றோருக்கான இல்லம் அமைக்க வேண்டும் என்பதே பெருங்கனவாக உள்ளது.

தோ.திருத்துவராஜ்