ஹத்ராஸ் பாலியல் வழக்கு



உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண் நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததும், அதைத் தொடர்ந்து அவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாமல் காவல் துறையினரால் எரியூட்டப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது ஹத்ராஸ் மாவட்டம். அங்குள்ள கிராமங்களில் ஒன்றான சன்பாவை சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த 19 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 14ம் தேதி தாய் மற்றும் சகோதரருடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கிராமத்தைச் சேர்ந்த உயர் சாதி இளைஞர்கள்  வலுக்கட்டாயமாகப் பெண்ணைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

ஆள் அரவமற்ற இடத்தில் அவரை பலவந்தமாகத் தாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததோடு விசயம் வெளியே தெரியாமல் இருக்க அவரின் நாக்கை அறுத்து, முதுகெலும்பு மற்றும் கழுத்துப் பகுதிகளையும் தாக்கி குற்றுயிராக்கி சாலையோரம் வீசிச் சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் தேடப்பட்ட நிலையில் கிராமத்து மக்களால் மீட்கப்பட்ட இளம் பெண் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 15 தினங்களாகவே உயிருக்குப் போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 29 காலை உயிரிழந்தார்.

அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரும்போதே மிக மோசமான நிலையில்தான் கொண்டுவரப்பட்டார். அவரின் கழுத்தை பலவந்தமாக நெரித்திருக்கிறார்கள். இதில் அவரின் முதுகுத்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவரின் கால்களும் செயலிழந்து, கைகளும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது என மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

எங்களுடன் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த என் மகளை ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே காணவில்லை. அதனால் தேடத் தொடங்கினோம். நீண்டநேரம் தேடியதில் மற்றொரு வயல்வெளி அருகில் உடைகள் களைந்த நிலையில் மயங்கிக் கிடந்தாள். அவளின் கழுத்துப் பகுதி துணியால் சுற்றி இழுக்கப்பட்டிருந்தது. நாக்கு அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதுபோல என் மகள் கிடந்தாள் என ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண்ணின் தாயார் தெரிவித்திருக்கிறார்.

அவர் பலாத்காரம் செய்யப்பட்ட மறுநாள் அவரது கிராமத்தைச் சேர்ந்த சந்தீப், ராம்குமார், லவகுசா மற்றும் ரவி ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு வாரத்திற்குப் பின் நினைவு திரும்பிய நிலையில், இளம் பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நால்வர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச்சம்பவத்தில் ஈடுபடல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் நள்ளிரவு 2.30 மணிக்கு சொந்தக் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

காலையில் இறுதி மரியாதையைச் செய்வதாகச் சொன்ன பெற்றோர் மற்றும் உறவினர்களை வீட்டுக்காவலில் வைத்து பூட்டிய காவல் துறை, பெண்ணின் உடலை அவசர அவசரமாக தாங்களாகவே எரியூட்டினர். மேலும் ஊடகத்தினர் உள்ளே நுழைய முடியாதபடி ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து அரணாக நின்று தடுத்தனர். காவல்துறையால் பலவந்தமாக எரியூட்டப்பட்ட காணொலியைச் செய்தியாக்கிய ஊடகவியலாளர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.

குடும்பத்தினரின் விருப்பமின்றி உடல் எரியூட்டப்பட்ட செயலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் வலுக்கத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் ஊடகத்திடம் பேசியபோது, “நாங்கள் காலையில் இறுதிச்சடங்கு செய்கிறோம் எனக் காவல் துறையிடம் மன்றாடினோம். ஆனால் அவர்கள் உடலை எரிப்பதில் ரொம்பவே அவசரம் காட்டியதோடு எங்களையும் கட்டாயப்படுத்தினார்கள்” என்று தெரிவித்துள்ளார். ‘எங்களிடம் கேட்காமலே எங்கள் மகளின் உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது ஏன்? நாங்கள் ஏன் மீண்டும் மீண்டும் கொடுமைப்படுத்தப்படுகிறோம்.

எரியூட்டப்பட்ட உடல் எங்கள் மகளின் உடல்தானா என்பதை நாங்கள் எப்படி நம்புவது’ போன்ற கேள்விகளையும் பெண்ணின் குடும்பத்தினர் ஊடகத்தினரிடம் எழுப்பி இருக்கின்றனர். தங்கள் மகள் உயிரிழந்தது தொடர்பான மருத்துவ அறிக்கை ஏதும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ‘‘தடயவியல் சோதனைகள் நடைபெற்று வருவதால் தற்போதைக்கு எந்த ஆவணத்தையும் தர இயலாது. அனைத்தும் ரகசியமான ஆவணம்’’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு  போடப்பட்ட நிலையில், வெளி நபர்கள் உள்ளே நுழையவும், பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் வசிக்கும் வீடு இருக்கும் தெரு முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெண்ணின் உறவினர் ஒருவர் கிராமத்தில் இருந்து தப்பி வந்து ஊடகத்தினரிடம் பேசியபோது, `எங்கள் குடும்பம் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்கள் கைபேசிகளையும் காவல்துறையினர் வாங்கிவிட்டனர். நாங்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையும், எங்களுக்கு வரும் அழுத்தங்களையும் உங்களிடம் கூற நினைக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு அரசியல்  தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர். இந்நிலையில் கடும் போராட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினர். இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் டெல்லியிலும் போராட்டங்கள் பெரும் அளவில் வெடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் Justice for Manisha ஹாஷ்டாக் பகிரப்பட்டது.

இரவோடு இரவாக உடலை தகனம் செய்த குற்றச்சாட்டில் உத்தரப்பிரதேச அரசுக்கு அகமதாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், உத்தரப்பிரதேச அரசிடம் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிரியங்கா காந்தி கூறுகையில், “உபியில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் மோசமடைந்துள்ளது. குற்றங்கள் அனைத்தும் வெளிப்
படையாக நடக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என்று உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

முதன்மைக் குற்றவாளியான சந்தீப் ஒரு குடிகாரர். எப்போதும் பெண்களைத் துன்புறுத்துவார். அவர் மீது  புகார் அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். ‘பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்படுபவையே. நம் நாட்டில் பாலியல் வன்முறைகளுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதே கேள்விக்
குறியாக இருக்கும் நிலையில், சிறிய அளவில் கேலி செய்தல் உள்ளிட்ட குற்றங்களை நாம் கண்டுகொள்ளாமல் விடுவதும் பின்னாள்
களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்’ என்கின்றார்கள் சமூக ஆர்வலர்கள்.

 இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில். டெல்லி நிர்பயா, கதுவா சிறுமி, உன்னாவ் சிறுமி, சென்னை ஹாசினி, ஹைதராபாத் பெண் மருத்துவர் என அடுத்தடுத்து பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படுவது இங்கு தொடர்கதை. பெண்களின் பட்டியல்தான் நீள்கிறதே தவிர பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

தற்போது உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ள மத்திய புலனாய்வுத்துறை விசாரணையினால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து பாலியல் வன்கொடுமைக்குப் பலியான பெண்ணின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

*தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் 2019ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த குற்ற நிகழ்வுகளில்  பெண்களுக்கு எதிரான குற்றங்களில்  4 லட்சத்து 5,861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2018 ஆம் ஆண்டை விட 7.3 சதவீதம் அதிகமாகும்.
*தலித்துகள் மீதான குற்றங்கள் 7 சதவீதமும், பழங்குடி மக்கள் மீதான குற்றங்கள் 26 சதவீதமும் அதிகரித்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
*2019 ஆம் ஆண்டில் மட்டும் தலித்துகளுக்கு எதிராக 45 ஆயிரத்து 935 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
*இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 11 ஆயிரத்து 829 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் முதன்மை இடத்தை இம்மாநிலம் பெற்றுள்ளது.

மகேஸ்வரி நாகராஜன்