அக்கா கடை-வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்தினாலே போதும்!



சேலம் ஹைவே சாலையில் ‘மாயாபஜார்’ உணவகம் என்றால் சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவகத்தை மிகவும் பாரம்பரிய முறையில் நடத்தி வருகிறார் ஷண்முகப்பிரியா. இவருக்கு பக்கபலமாக இவரின் மகள் சிவசங்கரி கடையின் நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறார்.

‘‘என்னோட சொந்த ஊர் திருச்செங்கோடு’’ என்று பேசத் துவங்கினார் ஷண்முகப்பிரியா. ‘‘+2 வரை தான் படிச்சிருக்கேன். அப்பறம் டைப்பிங் முடிச்சேன். அப்பா மின்சார வாரியத்தில் வேலைப் பார்த்து வந்தார். என் கூட பிறந்தவங்க இரண்டு பேர். படிப்பு முடிச்சதும் எனக்கு திருமணம் நிச்சயமாச்சு. என் கணவர் தண்டாயுதபாணியின் ஊர் சங்ககிரி என்பதால், நான் அங்கு செட்டிலாயிட்டேன். என் கணவரின் பாரம்பரிய தொழில் ஓட்டல் பிசினஸ் தான். என் மாமனாரின் அப்பா தான் முதலில் சிறிய அளவில் ஓட்டல் வச்சிருந்தார்.

அவருக்கு பிறகு என் மாமனார் வெங்கடேச நாயுடு மற்றும் என் மாமியார் சகுந்தலா இவர்களின் கடுமையான உழைப்பில் தான் மாயாபஜார் உணவகம் உருவாச்சு. ஆரம்பத்தில் சேலம் ஹைவே சாலையில் தான் ஓட்டல் இருந்தது. அப்போ அதற்கு பெயர் எல்லாம் கிடையாது. சாதாரண கூரை போட்டு இரண்டு பெஞ்ச் மட்டும் தான் இருக்கும். என் மாமியார் தோசைக் கல்லில் ஒரு பக்கம் தோசை சுடுவாங்க. இன்னொரு அடுப்பில் அதற்கான குழம்பு கொதிக்கும். முதலில் வெறும் இட்லி தோசை சாம்பார் சட்னின்னு சைவ உணவுகள் மட்டுமே வச்சிருந்தோம்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அசைவ உணவுகளை அறிமுகம் செய்தோம்’’ என்றவர் தங்களின் கடைக்கு மாயாபஜார்ன்னு பெயர் வரக் காரணத்தை குறிப்பிட்டார்.‘‘எங்க உணவகம் ஹைவே சாலையில் இருந்ததால், என் மாமனார் காலையில் கடை போடுவார். மாலை வியாபாரம் முடிஞ்சதும் கூரையை பிரிச்சிடுவார்.

மறுபடியும் மறுநாள் காலை திரும்ப கூரை கட்டி கடை போடுவார். காரணம் ஹைவே சாலையில் கடைகள் அந்த காலத்தில் வைக்கக்கூடாது. அதைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், ‘‘என்ன காலையில் கடை இருக்கு... மாலை வந்து பார்த்தா கடை காணோம்...  மாயாபஜார் மாதிரி ஒரே விந்தையா இருக்கே’’ன்னு சொல்ல... அவர் சொன்ன மாயாபஜாரையே கடைக்கு பெயரா வச்சிட்டார்.

எங்க மாமனார் வீட்டில் பெரிய வசதி எல்லாம் கிடையாது. இந்த கடையில் வரும் வருமானம் தான். என் கணவரையும் சேர்த்து ஐந்து பேர். என் மூன்று நாத்தனார், என் கொழுந்தன் உட்பட அனைவரின் உழைப்பு இருக்கு. அந்த காலத்தில் சங்ககிரியில் தண்ணீர் பிரச்னை உண்டு. அதனாலேயே இங்க பெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டாங்க. என்னோட மூணு நாத்தனாரும் ஒவ்வொரு வேலை பார்ப்பாங்க.

ஒருவர் தண்ணீர் கொண்டு வருவார். ஒருவர் சமையலுக்கு தேவையான தேங்காய் மசாலா அரைப்பார், மற்றொருவர் சாப்பாடு பரிமாறுவார். என் மாமியார் தான் சமையல் முழுதும் பார்த்துப்பாங்க. மாமனார் கடையை நிர்வாகம் செய்வார். என் கணவரும், கொழுந்தனாரும் பொருட்கள் வாங்குவதுன்னு மற்ற வேலைகளை பார்த்துப்பாங்க. இப்ப எல்லாரும் கல்யாணமாகி செட்டிலாயிட்டாங்க. என் மாமனாருக்கு பிறகு என் கணவர் இந்த கடையை நிர்வகிக்க ஆரம்பித்தார். அவருடன் சேர்ந்து நானும் கடையை பார்த்துக் கொண்டேன்’’ என்றவருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்துள்ளது.

‘‘நான் திருமணமாகி வந்த போது அதே ஹைவேயில் தான் கடை இருந்தது. ஆனால் இப்போது ஒரு கட்டிடத்தில் வைத்து நடத்தி வர்றாங்க. என் மாமியார் தான் எப்போதும் போல் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டாங்க. கூடவே அவங்க சொந்தக்காரங்கள்ல ஒரு அக்கா இருந்தாங்க. இப்பவும் அவங்க தான் எனக்கு உறுதுணையா இருக்காங்க. சமையல் முழுதும் அவங்க தான் பார்த்துப்பாங்க. எங்க தொழில் இதுதான் என்பதால், வீட்டுக்கு வந்த மருமகளுக்கும் கடையின் நிர்வாகம் பற்றி தெரியவேண்டும் என்பதில் என் மாமியார் மிகவும் உறுதியா இருந்தார்.

அவங்களுக்கு பிறகு சமையல் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதால், எனக்கு எல்லா சமையலும் சொல்லிக் கொடுத்தாங்க. நான் சமைப்பேன், ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் எனக்கு சமைக்க தெரியும். ஒரு ஓட்டலுக்கு பெரிய அளவில் சமைக்க எனக்கு தெரியாது. என் மாமியார் தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. ஆனால் நம்முடைய கடைன்னு புரிய ஆரம்பிச்சதும், எனக்கே அதன் மேல் ஒரு ஈர்ப்பு வர ஆரம்பிச்சது.

எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்ள ஆரம்பிச்சேன். இதற்கிடையில் என் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அந்த சமயத்தில் அவரின் முழு பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன். மாமனார், மாமியார் காலத்திற்கு பிறகு என் கணவர் ஓட்டல் நிர்வாகத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஒரு பெரிய இடி என் வாழ்க்கையில் விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

என் கணவர் 2015ம் ஆண்டு என்னையும் என் மகளையும் மட்டுமல்ல இந்த கடையின் நிர்வாகத்தையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டார். ஒரு நிமிஷம் எனக்கு எல்லாமே இருண்டது போல் ஆனது. என்ன செய்வதுன்னு புரியல. அந்த சமயத்தில் என்னுடைய தன்னம்பிக்கையும் என் கடையில் வேலை பார்த்து வந்தவர்களும் தான் எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

கையில் ஒரு தொழில் இருக்கு. ஏற்கனவே அதை நிர்வகித்து வந்த அனுபவம். அதனால் தைரியமாக தொடர்ந்து நடத்தலாம்ன்னு முடிவு செய்து, தனி ஆளாக இந்த கடையினை நிர்வகிக்க ஆரம்பிச்சேன். இப்போது என் மகளும் எனக்கு உறுதுணையா இருக்கா. நானும் என் மாமியார் காலத்தில் இருந்தே 35 வருஷமா இருக்கும் அக்காவும் சமையல் மற்றும் கடைக்கு தேவையானதை பார்த்துக் கொள்கிறோம். என் மகள் மற்ற நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறார். அவபி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கா. அவ நினைச்சிருந்தா வேற வேலைக்கு போயிருக்கலாம்.

ஆனால் இது நம்ம கடை நாம தான் இதை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்ன்னு சொல்லிட்டா. இப்ப அவதான் கடையின் நிர்வாகம் மற்றும் வேறு ஏதாவது புதிதாக உணவுகளை அறிமுகம் செய்வது போன்றவற்றை பார்த்துக் கொள்கிறா’’ என்றவர் தன் கடையின் சிறப்பு உணவு பற்றி குறிப்பிட்டார்.‘‘எங்க கடையின் சிறப்பே... ஒவ்வொரு உணவுக்கும் நாங்க வைத்திருக்கும் பெயர்தான். அது என் மாமனாரின் ஐடியா. வித்தியாசமா பெயர் வச்சா, அது என்னென்னு பார்க்கவே சாப்பிட வருவாங்கன்னு சொல்வார்.

இந்த ஏரியா முழுக்க மோட்டார் வாகன கடைகள் இருக்கும் ஏரியா என்பதால், அதற்கும் உணவுக்கும் தொடர்பு இருப்பது போல் பெயர் வச்சார். ைசக்கிள் சுக்கான்னா சிக்கன் சுக்கா... சைக்கிளுக்கு இரண்டு சக்கரம்.. கோழிக்கு இரண்டு கால் அதனால் அந்த பெயர். மட்டன் வறுவலுக்கு... மோட்டார் வறுவல், ஏரோஃபிளைன் வறுவல்ன்னா புறா வறுவல், காடைக்கு  ராக்கெட் வறுவல், அணுகுண்டு சிப்ஸ்ன்னா முட்டை, கம்ப்யூட்டர் ஃபிரை... மூளை ஃபிரை மற்றும் ஹெல்மெட் மசாலான்னா தலைகறி.

மீன், இறால், நண்டுன்னு கடல் சார்ந்த உணவுகள் சமைப்பதில்லை. சிக்கன், மட்டன் தான் இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விரும்புறாங்க. முழு சாப்பாட்டுக்கு சிக்கன், நாட்டுக்கோழி ரசம், மட்டன் குழம்பு தனியா இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மட்டன் மற்றும் நாட்டுக்கோழி பிரியாணி இருக்கும். மதிய உணவு மட்டும் இல்லாமல் காலை சிற்றுண்டியும் உண்டு. அதில் இட்லி, தோசை, பரோட்டா, சிக்கன் மற்றும் மட்டன் கிரேவி, குடல் கொத்துக்கறி, தலைக்கறி கிரேவி. முன்பு இரவு நேர உணவும் இருந்தது. இப்பே கொரோனா காலம் என்பதால் மாலை ஐந்து மணிக்கெல்லாம் கடையை மூடிடுறோம்.

எங்க கடையின் மற்றொரு ஸ்பெஷல் மிளகு ரசம். மத்தவங்க மாதிரி ரசப்பொடி பயன்படுத்துவதில்லை. மிளகு, சீரகம், பூண்டு எல்லாம் தட்டிப்போட்டு தான் கொடுக்கிறோம். சாப்பிட்ட பின் சின்ன கப்பில் குடிக்க கேட்பாங்க. மசாலா பொறுத்தவரை எதுவுமே கடையில் வாங்குவதில்லை. மிளகாய் தனியா எல்லாம் மொத்த விற்பனையில் வாங்கி நாங்களே இங்கு மசாலா தயார் செய்றோம். எந்த கலப்படமும் இல்லாமல் வீட்டு சாப்பாடு மாதிரி இருப்பதால், வயிற்றுக்கும் கெடுதல் ஏற்படுத்தாது. அதனாலேயே பலர் விரும்பி சாப்பிட வராங்க.

எனக்கு இங்க லோக்கல் கும்பலைவிட வெளியூரில் இருந்து சாப்பிட வர்றவங்க தான் அதிகம். சிலர் போன் செய்து நாங்க ஐந்து பேர் வறோம் சிக்கன் கிரேவி எல்லாம் எடுத்து வையுங்கன்னு சொல்லிட்டு வருவாங்க. மளிகை பொருட்கள், அரிசி பருப்பு எல்லாம் மொத்த விற்பனையாக வாங்கிடுவோம். மற்றபடி காய்கறி மற்றும் மட்டன் சிக்கன் எல்லாம் அன்றைக்கு தான் வாங்குவோம். என் மாமனார் காலத்தில் இருந்தே ஒருவர் மட்டன், சிக்கன் கொடுத்து வறார். அவர் தான் இன்றும் எங்க கடைக்கு சப்ளை செய்றார். எந்த தொழிலாக இருந்தாலும் நம்பிக்கை அவசியம்’’ என்றவர் வேறு கிளைகள் திறக்கும் எண்ணம் இல்லை என்றார்.

‘‘ஒரு கடையாக இருந்தாலும் தரமா கொடுக்கணும். வேறு இடத்தில் பிராஞ்ச் திறந்தா முதலில் பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லை. அப்படியே ஆட்கள் போட்டு செய்தாலும், அதே சுவையை அவர்களால் கொடுக்க முடியுமான்னு தெரியாது. அதனால இந்த ஒரு கடை போதும் என்பதில் நான் ரொம்பவே உறுதியா இருக்கேன். இப்ப என் மகளும் கொஞ்சம் கொஞ்சமா சமைக்க கத்துக்கிட்டா.

எனக்கு பிறகு அவ இதைப் பார்த்துப்பான்னு நம்பிக்கை இருக்கு. எங்களுக்கு எல்லாமே இந்த கடைதான். இரண்டு மாசம் கழிச்சு இரவு நேர உணவும் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கு. அப்போது ஃபிரைடு கிரில்ட் சிக்கன் போன்ற உணவுகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். எங்க கடைக்கு சாப்பிட வர்றவங்க வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்தினாலே போதும். அதுவே எங்களை மேலும் மேலும் உயர ஒரு தூண்டுதலாக இருக்கும்’’ என்றார் புன்னகை மாறாமல் ஷண்முகப்பிரியா.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஜெகன்