ஆசிரியர் கனவு விலகி... கலெக்டர் கனவு தொற்றிக்கொண்டது!தடைகள் ஏற்பட ஏற்பட நான் அதைத் தாண்டிவரத் துணிந்தேன். பல பின்னடைவுகள் என்னை எழுந்துவர ஊக்குவித்தது எனப் பேசிய பார்வையற்ற  பூரண சுந்தரி யூபிஎஸ்சி தேர்வில் அனைத்திந்திய அளவில் 286-வது ரேங்க் எடுத்து கடந்த வாரம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.

இது என் ஆரம்பம்தான். மக்களுக்காக நான் செய்யப் போகும் வேலைகளில்தான் என்னோட பெஸ்டைக் கொடுக்கணும். எவ்வளவு தடைகள், இடைஞ்சல்கள் வந்தாலும் அடித்தட்டு மக்களுக்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்காகவும் நிறைய செய்யணும் என்றவர், எனது இந்த வெற்றிக்குப் பின்னால் எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் நல்ல உள்ளம் கொண்ட அனைவரின் ஆதரவும், உழைப்பும் இருக்கிறது என்கிறார். அடுத்தது உத்ரகாண்ட் மாநிலம் முசோரியில் நடக்க இருக்கும் ஐ.ஏ.எஸ். பயிற்சியில் பங்கேற்க இருப்பதையும் தெரிவித்தார்.

‘‘எனது ஆரம்ப கல்வி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தமிழ் வழியில் ஆரம்பித்தது.  முதல் வகுப்பில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதிய எழுத்துக்கள் மங்கலாய் தெரியத் தொடங்க, என்னை முன் வரிசையில் அமர வைத்தார்கள். 4ம் வகுப்பில் புத்தகத்தில் இருந்த எழுத்துக்களும் மறையத் தொடங்கின. வெளிச்சமற்ற இடங்களில் இருந்த பொருட்களும் கண்களுக்கு புலப்படாமல் கண்ணாமூச்சி காட்ட, இரு விழிகளும் மெதுமெதுவாய் பார்வை இழப்பை சந்தித்தது. நானோ அதை உணராத குழந்தையாய் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். பெற்றோர்களின் வலியை என்னால் அந்த வயதில் உணர முடியவில்லை.

மதுரையில் இருக்கும் கண் மருத்துவமனைகளுக்கு என்னை அழைத்துக்கொண்டு என் பெற்றோர் ஏறி இறங்கத் தொடங்கினர். எனக்கு ஏற்பட்டிருப்பது ரெக்டினா டிட்டாச்மென்ட் (Retinal Detachment)  பிரச்சனை என சொல்லப்பட்டது. கண்களில் வெளிச்சம்படும்போது பார்வை நரம்பிற்கும் மூளைக்கும் இடையில் இருக்கும் ரெக்டினாக்கள் அவற்றைக் கடத்தும் வேலையைச் செய்கின்றன.

ரெக்டினாவில் ஏற்பட்ட பிரச்சனையில் பார்வைத் திறன் எனக்கு பறிபோனது. தொடர்ந்து சிறப்பு ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியாகப் பார்த்து என்னை சேர்க்கச் சொன்னார்கள். 5 முதல் +2 வரை ரெகுலர் பள்ளி ஒன்றில் ஸ்பெஷல் ஆசிரியர் உதவியுடன் படிக்கத் தொடங்கினேன். மாலை நேரங்களில் ப்ரெயிலி எழுத்துக்களைக் கற்றுத் தந்ததோடு, எனக்கான பாடங்களையும் ஒலிப்பதிவு செய்து ரெக்கார்டாகவே கொடுத்து விடுவார்கள். என்னை ஒதுக்காமல் ஆசிரியர்கள் ரொம்பவே ஊக்குவித்தார்கள்.  பள்ளி மேடைகளில் பேசுவதற்காக ஏற்றப்பட்டேன். விளையாட்டு ஆசிரியரும் என்னை விளையாட்டில் ஊக்கப்படுத்தினார். ஜூனியர் செஞ்சிலுவை சங்கத்திலும் நான் இருந்தேன். பள்ளி சுற்றுலாக்களிலும் எனது பங்களிப்பு இருந்தது.

ஸ்க்ரைப் உதவியோடு தேர்வுகளை எழுதியதில் பத்தாம் வகுப்பில் 471 மதிப்பெண்களும் +2ல் 1092 மதிப்பெண்களும் கிடைத்தது. சயின்ஸ் குரூப் எடுத்துப் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், செய்முறை தேர்வுகளை (practical exam) நினைத்து தயங்கி தியரி மட்டும் உள்ள வொக்கேஷனல் குரூப்பைத் தேர்வு செய்தேன்.  இலக்கியங்கள் மீது ஏற்பட்ட ஆர்வத்தில் +2 முடித்து மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியத்தை முக்கியப் பாடமாகப் படிக்கத் தொடங்கினேன். கல்லூரி வாழ்க்கை பல்வேறு அனுபவங்களைத் தந்தது. எனது வளர்ச்சிக்கு சிறந்த ஆசிரியர்
களும், நல்ல நண்பர்களும் கிடைத்தார்கள்.

கல்லூரிக்குள் நுழைந்தபோது எப்படியாவது ஒரு ஆசிரியர் வேலையை பெற்றுவிட வேண்டும் என்பதே எனது உச்சபட்சக் கனவாக இருந்தது. தமிழ் வழியில் படித்ததில் ஆரம்பம் சவாலாக இருக்க, மதிய வேளைகளில் பேராசிரியர்களைச் சந்தித்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டேன். இரண்டாவது செமஸ்டரில் இருந்து என் மதிப்பெண்கள் கூடத் தொடங்கியது. ஆசிரியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து வகுப்பில் விளக்கினார்கள். எனது ஆசிரியர் கனவு விலகி கலெக்டர் கனவு என்னைத் தொற்றிக் கொண்டது.

தோழிகள் என் கரம் பற்றி அழைத்துச் சென்று நூலகத்தை அறிமுகப்படுத்தினர். அப்போதிலிருந்தே போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். செய்தித்தாள்களையும் விடாமல் வாசித்தேன். நிறைய இன்டெர் மற்றும் இன்ட்ரா காலேஜ் போட்டித் தேர்வுகளிலும் கலந்துகொண்டேன். எனது கட்டுரைகளும், கவிதைகளும் கல்லூரி மலர்களில் இடம்பிடித்தன. இறுதி ஆண்டில் பெஸ்ட் யூசர் ஆஃப் லைப்ரரி விருதை கல்லூரி நிர்வாகம் எனக்கு வழங்கியது.

அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதியதில், தபால் துறையில் எனக்கு முதல் வாய்ப்பு வந்தது. அப்போது என் கவனம் சிவில் சர்வீஸ் தேர்வில் இருந்ததால் கிடைத்த வேலையை ஏற்காமல் பெற்றோர் சம்மதத்துடன் முதல் முறையாய் குடும்பத்தைப் பிரிந்து சென்னைக்கு கிளம்பினேன். சென்னையில் இயங்கும் மனிதநேய அறக்கட்டளையில் சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுக்காக என்னை இணைத்தேன்.

சிவில் சர்வீஸ் தயாரிப்புக்கான புத்தகங்கள் அனைத்தும் பெரிது பெரிதாய் இருக்க, நண்பர்கள் எடுத்த குறிப்புகளை குரல் பதிவு செய்து எனக்கு ஷேர் செய்வார்கள். ஆடியோவைக் கேட்டு லேப்டாப்பில் டைப் செய்து நோட்ஸ் எடுத்துக் கொள்வதோடு, பாடங்களை எனக்கு ஏற்றமாதிரி தயாரித்து படிக்கத் தொடங்கினேன். NVDA (Non-visual Desktop Access) எனும் ஸ்பீக்கிங் சாஃப்ட்வேர் ஒன்றை எனது கணினியில் நிறுவியதில், ஒவ்வொரு முறையும் ஓப்பன் செய்து ஷட்டவுன் செய்யும்வரை என்னோடு தொடர்ந்து அது பேசிக்கொண்டே இருக்கும். திரையில் தோன்றுவது, நாம் டைப் செய்வது என அனைத்தையும் எனக்கு அது சொல்லிக் கொண்டே இருக்கும்.

எனது முதல் சிவில் சர்வீஸ் தேர்வை 2016ல் எழுதினேன். அந்த முயற்சி தோல்வியில் முடிய, மனசு உடைந்தாலும் சரி செய்து கொண்டு மீண்டும் அடுத்த தேர்வுக்குத் தயாரானேன். சென்னை அடையார் க்ரீன்வேஸ் சாலையில் அரசால் இயங்கும் ‘ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டரில்’ இணைந்து பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். 2017 தேர்விலும் தோல்வி. மீண்டும் விடாமல் 2018 தேர்வுக்குத் தயாரானேன்.

இதற்கிடையில் டி.என்.பி.சி. குரூப் II, குரூப் IV என வரும் அத்தனை போட்டித் தேர்வுகளையும் விடாமல் எழுதியதில் தமிழ்நாடு கிராம வங்கியின் விருதுநகர் கிளையில் கிளரிக்கல் வேலை கிடைத்தது. வேலைக்காக தினமும் ரயிலில் சென்றுவந்த நிலையில், உதவிக்கு அம்மா தினமும் கூடவே வருவார். ரயில் பயண கூட்டத்தின் நடுவே அன்றைய செய்தித் தாள்களை அம்மா எனக்கு வாசிக்க, முக்கியமானவற்றை குறிப்பெடுத்து, தேவையானதை கட் செய்து தனியாக வைக்கச் சொல்வேன். இந்த முறை எனக்கு நம்பிக்கை நிறையவே இருந்தது. விடாமுயற்சியாக மீண்டும் 2019 சிவில் சர்வீஸ் தேர்வை எழுதியதில் அகில இந்திய அளவில் எனக்கு 286வது ரேங்க் கிடைத்தது.

2016ல் இருந்து 2019 வரை சிவில் சர்வீஸ் தேர்வுக்காக சென்னையில் தங்கி என்னைத் தயார் செய்தபோது, ஐ.டி.துறையில் பணியாற்றும் தன் முகம் காட்ட விரும்பாத நண்பரான நாகர்ஜுனா என்பவர் உதவி ஒரு தொண்டு நிறுவனம் மூலம் எனக்குக் கிடைத்தது. எனக்கான அத்தனை செலவுகளையும் அவர் ஏற்றார்.

ஒவ்வொரு அட்டெம்டிலும் நான் தோல்வியை சந்தித்தபோது அடுத்த முறை நீங்கள் கட்டாயம் வெல்வீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்து அசராமல் எனக்கு உதவினார். நல்ல மனிதர்கள் ஒன்றிணைந்தால், நம்பிக்கையான வாழ்க்கையை ஒருவருக்கு அமைத்துக் கொடுக்க முடியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

நாம் சம்பாதிக்கிறோம். நமக்கென்று செலவுகள் இருக்கு. ஆனால் கிடைக்கும் வருவாய் 10 என்றாலும் அதில் 1 ரூபாயை எடுத்து அடுத்தவர்களுக்காக செலவு செய்தால் அதில் அவர்கள் வாழ்க்கையே மாறும் என தனது அனுபவத்தை பதிவு செய்கிற பூரண சுந்தரி, உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் யாரோ ஒருவர் மேலே ஏறிவர கை தூக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் அழுத்தமாய் முன் வைக்கிறார்.

என்னை இந்த அளவுக்கு ஊக்குவித்ததில் பெரும் பங்கு என் பெற்றோருக்கே. உன்னால் முடியுமென என் முன்னால் நின்று ‘கமான்... கமான்...’ என கை நீட்டி அழைத்தவர்கள் அவர்கள். முடியாது என்ற வார்த்தையை அவர்கள் என்னிடத்தில் சொன்னதே இல்லை. அட்வென்செர் விளையாட்டைக்கூட உன்னால் முடியும் என விளையாட வைத்தவர் என் அப்பா. எனக்கு பார்வை பறிபோனதுமே ரீடர் வைத்துதான் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது அம்மா எனக்கான ரீடராய் மாறினார்.

தேர்வு நேரங்களில் அதிகாலை 4 மணிக்கு முன் எழுந்து தன்னை தயார் செய்து, என் கூடவே அமர்ந்து எனக்காக அவரும் படிப்பார். அப்பாவும் வேலை முடிந்து வந்தபின் மாலையில் என்னோடு அமர்ந்து ஆங்கில பாடங்களை வாசிப்பார். எங்கே எந்த போட்டித் தேர்வு நடந்தாலும் அங்கே தயங்காமல் என்னை அழைத்துச் செல்வார்கள். செய்தித்தாள்களை எனக்காக வாசிக்க ஆரம்பித்து, முக்கியமானதை குறிப்பெடுத்து, தனியாய் அதைச் சேகரித்து, தேர்வுக்கு ஒரு வாரம் முன்பு சேகரித்ததை மீண்டும் எனக்காக அப்பாவும், அம்மாவும் சலிக்காமல் படித்துக் காட்டுவார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் ரீதியாய் தடங்கல்கள், சிரமங்கள் அதிகம். மொபிலிடிக்காக மட்டுமே நாங்கள் பல கஷ்டங்களைச் சந்திக்கிறோம். கூடவே நிராகரிப்புகளும்.. உதாசீனங்களும்.. தேர்வுக்காக நான் தங்கிய பல விடுதிகளில் உன்னால் முடியுமா என அவர்கள் என்னைப் பார்த்த பார்வையும், கேட்ட கேள்விகளும் வலிகள் நிறைந்தது. மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய புரிதல் மக்களுக்கு வரவேண்டும்.

வெற்றிக்காக பல சவால்களை நாங்கள் சந்திக்க நேர்ந்தாலும், உன்னால் முடியாது எனும்போதுதான் என்னால் முடியுமென எந்திரிச்சு நிற்கத் தோணுது.மாற்றுத் திறனாளி நண்பர்களும் தங்கள் குறைகளைப் பெரிதாக நினைத்து முடங்காமல், தனக்கான திறமையை உணர்ந்து, அதையே கனவாய்... குறிக்கோளாய் மாற்றி நம்பிக்கையுடன் செயல்பட்டால் மற்றவை தானாய் நடக்கும்’’ என்று முடித்தார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: மீ.நிவேதன்