பெண்களை மதித்தால் செல்வம் பெருகும்!இப்போது கோவிட் காலம் என்பதால் எல்லாமே ஆன்லைன் காலமாக மாறிவிட்டது. காய்கறி, மளிகை பொருட்கள், அசைவ உணவுகள்... ஏன் உடைகள் என எல்லாமே ஆன்லைனில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இன்னும் சொல்லப்போனால், மாணவர்களுக்கான கல்வி முறையிலும் இதையே பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.
இதில் தியானமும் விதிவிலக்கல்ல. சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு வாரம் தொடங்கி சுதந்திர தினம் வரை ஏழு நாட்கள் என ஆன்லைனில் தியான பயிற்சி நடத்தப்பட்டது. இதில் என்ன சிறப்பு என்றால் நடத்தப்பட்ட முதல் நாளிலேயே ஒரு கோடி பேர் அதில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலர் பங்கேற்றனர். இந்த தியான நிகழ்ச்சியை ஆந்திராவை சேர்ந்த ஏகம் என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் இந்த நிறுவனத்தின்  இணை உருவாக்குனர் ஸ்ரீபிரித்தாஜி மற்றும் ஸ்ரீகிருஷ்ணாஜி இருவரும் பங்கேற்றனர்.

ஆன்லைன் தியானம் என்பதால், இந்தியாவில் மட்டுமின்றி உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள 100 நாடுகளை சேர்ந்தவர்களும் தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தியாவை சேர்ந்த 2000 கிராமங்களில் உள்ள மக்கள், 2 ஆயிரம் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளும் ஒரு வாரம் மிகவும் சிரத்தையுடன் தியானத்தில் ஈடுபட்டனர். ‘உலக அமைதிக்கான தியானம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.

இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளை கொத்தடிமையில் இருந்து மீட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஸ்ரீபிரித்தாஜி பேசுகையில் `‘பெண்கள் மனித குலத்தின் பாதி, ஒவ்வொரு நாளும் உதவியற்ற நிலையில் பெண்கள் கண்ணீர் சிந்தினால் உலகில் அமைதி எப்படி நிலவும்.

பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ அங்கு  செல்வ வளம் பெருகும்’’ என்றார். பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும் பெண்களின் கவுரவத்தை பாதுகாக்கவும் மற்றும் கொரோனா நெருக்கடியில் இருந்து உலகம் விடுபட கூட்டுப் பிரார்த்தனையும் இந்த தியான நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது.

கோமதி பாஸ்கரன்