மாற்றம் ஒன்றே மாறாதது!தொழில்நுட்பம் நம்மில் ஒன்றோடு ஒன்றாக இணைந்துவிட்டது. அது இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் டி.வி, ஃபிரிட்ஜ், கைபேசி முதல் எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் இணைந்துள்ளது.
இது ஒரு புறமிருக்க, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமக்கான ஒரு தொழிலை உருவாக்க முடியும் என்கிறார் சென்னையை சேர்ந்த குமார் வேம்பு. இவர் ‘கோஃப்ரூகல்’ என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் சின்ன பெட்டிக்கடை வியாபாரிக்கும் இந்த கொரோனா காலத்தில் வருமானம் பார்க்க வழிவகுத்து வருகிறார்.

‘‘1990ல் அழகப்பா செட்டியார் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் பொறியியல் பட்டப்படிப்பு முடிச்சேன். அதன் பிறகு ஐ.ஐ.டி மெட்ராசில், டாக்டர் அஷோக் என்பவருடன் இணைந்து டெலிகாம் துறையில் ஒரு பிராஜக்டில் வேலை பார்த்தேன். ஒரு வருடம் அமெரிக்காவில் வேலை. 1995ம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பிய நான் இங்கு ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தை துவங்கினேன். ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், அங்கிருந்து சில பிராஜக்ட்களை வாங்கி எங்க நிறுவனம் மூலம் அதனை செயல்படுத்தி வந்தேன்.

இந்த சமயத்தில் தான் வளர்ந்த நாடுகளுக்கு நான் வேலை பார்ப்பது இருந்தாலும், நம்முடைய நாட்டுக்கும் நம்மால் முடிந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. காரணம் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் இதர வெளிநாடுகள் மட்டுமே பயன்படுத்துவதில்லை. நம்மை போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு நமக்கு தான் அதிகம் தேவை என்பதை புரிந்து கொண்டேன்’’ என்றவர் வியாபாரிகளின் தொழிலில் எந்த காலக்கட்டத்திலும் முடக்கம் ஏற்படாமல் இருப்பதற்காகவே ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளார்.

‘‘இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இதனால் அதே தொழிலில் இங்கு ஈடுபட்டு வரும் சிறு வியாபாரிகள் பெரிய அளவில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் பல மடங்கு பலசாலியாக இருப்பார்கள். அவர்களுடன் போட்டி போடுவதற்கு மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள சிறு வியாபாரிகளுக்கும் தொழில்நுட்பத்தின் அறிமுகம் தேவை.

இது குறித்து அவர்களிடம் பேசிய போது, அதற்கான அவசியம் இல்லை என்றே தெரிவித்தனர். காரணம் வாடிக்கையாளர்கள் என்றும் அவர்களை விட்டு போகமாட்டார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் இந்த ஐந்து மாதமாக நம்மை அலைக்கழித்து வரும் கொரோனா நமக்கு பல விதத்தில் பாடங்களை புகட்டி வருகிறது. பலரின் தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வியாபாரம் செய்பவர்கள் ஒரு இடத்தில் வாடகைக்கோ அல்லது சொந்தமாக கடை வைத்து பல ஆண்டு காலமாக தொழிலை நடத்தி வருவது வழக்கம். பிரச்னை இல்லாத காலம் வரை இவர்களின் ெதாழிலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது நிலவி வரும் ஊரடங்கு மற்றும் நோய் தொற்று காரணமாக மக்கள் வீட்டில் இருந்தபடியே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டனர். மற்ற கடைகள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இவர்களுக்கு ஏன் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு செய்தேன்.

எங்க நிறுவனம் மூலம் இவர்களுக்கு ஏற்ற ஒரு சாஃப்ட்வேர் ஒன்றை அறிமுகம் செய்தேன். அதன் மூலம் சின்ன பெட்டிக்கடை முதல் உணவகம் வரை அனைவரின் தொழிலையும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நடத்தலாம்’’ என்றவர் அதற்கான ஆப் (app) ஒன்றை வடிவமைத்துள்ளார்.

 ‘‘தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடை நிறுவனர்கள் எங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வராங்க. இந்தியா மட்டும் இல்லாமல் வளர்ந்து வரும் நாடுகளான ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு ஆசியா போன்ற நாடுகளிலும் எங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் தேவையான பொருட்களை விரும்பும் கடைகளில் இருந்து ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியினை நாங்க சின்ன மளிகை கடைகளிலும் அமைத்து தருகிறோம். ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்வது மட்டுமல்லாமல், வீட்டில் டெலிவரிசெய்யும் வசதியும் உள்ளது. மேலும் டெலிவரியினை டிராக் செய்யவும் முடியும்.

இதற்கு கடை நிறுவனர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அவர்கள் கடைப் பற்றிய விவரங்களை எங்களிடம் கொடுத்தால், கடையின் பெயரிலேயே ஆப் ஒன்றை அமைத்து, கூகில் ப்ளேஸ்டோரிலும் அப்லோட் செய்திடுவோம். அதன் பிறகு கடை நிறுவனர் தங்கள் கடையில் உள்ள பொருட்கள் மற்றும் அதன விலைப் பட்டியலை ஆப்பில் பதிவு செய்யலாம். இதன் மூலம் பேரிடர் காலத்திலும் பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், புது வாடிக்கையாளர்களும் உருவாகும் வாய்ப்புள்ளது.

இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தொழில்முறையை மாற்றி அமைத்துக் கொண்டால்தான், போட்டி நிறைந்த இந்த உலகில் நம்மால் நிலைத்து நிற்க முடியும். பத்து வருஷம் முன்பு யாரும் பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து தரமாட்டாங்க. காலப்போக்கில் அந்த நிலை மாறியது. தற்போதைய மாற்றம் ஆன்லைன் ஷாப்பிங். அதற்கு ஏற்ப நாமும் நம்முடைய தொழிலை மாற்றி அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். இல்லை என்றால் நாளடைவில் நம்முடைய வாடிக்கையாளர்களை நாம் இழக்க நேரிடும்’’ என்றவர் ஆன்லைன் மற்றும் டெலிவரி செய்வது மூலம் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் யுக்தியை தெரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.

‘‘வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் ெபாருட்கள் நம்மிடம் இல்லாத போதோ, அல்லது தவறான பொருட்களை டெலிவரி செய்யும் போது இந்த பிரச்னைகள் ஏற்படும். அதனால் பொருட்களை டெலிவரி செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்ப்பது அவசியம். வாடிக்கையாளர்
களுக்கு என்ன தேவை என்று பார்த்து அதற்கு ஏற்ற பொருட்களை நம் வசம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு டெலிவரி செய்ய வேண்டும்.

காய்கறி கடைகள் முதல் மருந்து கடைகள் வரை யார் வேண்டும் என்றாலும் இந்த ஆப்பினை பயன்படுத்தலாம். அந்த வசதியினை பெற விரும்புபவர்கள், எங்க நிறுவன இணையதளம் மூலமாக தொடர்பு கொள்ளலாம். இம்மாதம் இறுதி வரை இலவசமாக அமைத்து தருகிறோம். அதன் பிறகு வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்’’ என்றார் குமார் வேம்பு.

ஷம்ரிதி