தோழியருக்கான நட்சத்திர பலன்கள்(செப்டம்பர் 1 முதல் 15 வரை)

1. அசுவினி:  வெளிப்படையாய் பேசும் குணமும், அனைவரிடமும் எளிதில் நட்பு பாராட்டும் நல்ல சுபாவமும் கொண்ட திறமை மிக்க பெண்மணிகளான உங்களை மகிழ்விக்கும் மாதமாய் இம்மாதம் அமையக் காத்திருக்கின்றது. ராசியில் செவ்வாய், குரு பார்வை குரு மங்கள யோகம். 2-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 5-ல் சூரியன், 6-ல் புதன், 9-ல் குரு, சனி, 8-ல் கேது என கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாய் உள்ளதால் எண்ணியது கிட்டும் ஓர் இனிய நேரம். தேகம் பளிச்சிடும். திடீர் பண வரவால் மகிழ்வீர்கள். பிதுர் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து ஓர் பெரிய தொகை கைக்கு வந்து சேரும். மனம் இன்புறும். புதிய சொத்து சேரும். கணவரின் அன்பைக்கண்டு மனம் மகிழ்ந்து போகும் இனிய மாதம். மயிலை நவசக்தி விநாயகரை செவ்வாய் அன்று தரிசித்தல் நன்று.

2. பரணி: அனைவரின் உள்ளத்தையும் புரிந்து அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ளும் அன்பான பெண்மணிகளான உங்கள் மனம் இன்புறும் வண்ணம் நற்செய்திகள் வந்து சேரும் ஓர் நல்ல மாதமிது. இந்த ராகு, கேது பெயர்ச்சியினால் நன்மையைக் காணும் நேரம். ராசியில் செவ்வாய், 2-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 5-ல் சூரியன், 6-ல் புதன், 8-ல் கேது, 9-ல் குரு, சனி என கிரக நிலை சாதகமாய் சஞ்சாரம். எனவே கனவுகள் நனவாகும். முகம் பளிச்சிடும். தனவரவு இரட்டிப்பாகும். தந்தையின் வழியில் பண வரவு கிட்டும். வீடு, வாகனம் என சொத்துக்கள் சேரும். இல்லறம் நல்லறமாய் மனதில் சந்தோஷம் வந்து சேரும் மாதம். ஞாயிறு அன்று மாலை காளியம்மன் தரிசனம் கவலைகளைப் போக்கும்.

3. கிருத்திகை: எடுத்த செயல் எதுவாயினும் அதனை முடிக்கும் வரை ஓயாது போராடி வெற்றியைத் தட்டிச்செல்லும் வெற்றித்திலகங்களான உங்கள் எண்ணங்கள் ஈடேறும் நல்ல மாதமிது. ராசியில் ராகு, 3-ல் சுக்கிரன், 4-ல் சூரியன், 5-ல் புதன், 7-ல் கேது, 8-ல் குரு, சனி, 12-ல் செவ்வாய் என கிரக சஞ்சாரம். எனவே உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவில் நல்ல முன்னேற்றம் தென்படும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். மனதில் தெம்பும், தைரியமும் என வளைய வருவீர்கள். குடும்பத்தில் சுபமங்களமான நிகழ்வுகள் கூடிவரும். சித்தர்களை தரிசிப்பீர்கள். தெய்வப்பிரார்த்தனைகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு குடிபோகும் யோகமும் சிலருக்குண்டு. கணவன், மனைவி உறவில் அந்நியோன்யம் கூடுதலாகும் நேரம். வெள்ளிக்
கிழமையன்று துர்க்கையை வழிபட துக்கம் விலகி ஓடும்.

4. ரோகிணி: என்றுமே சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறமையும், முன்யோசனையுடன் திட்டமிட்டு விவேகமாய் செயல்படும் வெற்றிப்பெண்மணிகளான உங்களை மகிழ்விக்கும் வண்ணம் இம்மாதம் பெருமையுடன் மலர இருக்கின்றது. ராசியில் ராகு, 7-ல் கேது, 4-ல் சூரியன், 5-ல் புதன், 8-ல் குரு, சனி, 12-ல் செவ்வாய் என கிரக சஞ்சாரம். எனவே தேக நலம் சீரடையும். பணமுடைகள் தீரும். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு தடைபட்டு வந்த திருமணம் கைகூடி வரும். சுபநிகழ்வுகளால் செலவுகளும் அதிகரிக்கும் நேரம். இல்லறத்தில் இன்பம் வந்து மனதைக் குளிர்விக்கும் மாதமிது. திங்கட்கிழமையன்று கிருஷ்ணரை தரிசிக்க நன்மைகள்  கிட்டும்.

5. மிருகசீரிடம்: எவருக்கும் உதவி புரியும் நற்குணமும், சேவைகள் செய்யும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்ட தியாகப்பெண்மணிகளான தங்களை மகிழ்விக்க இம்மாதம் நல்ல திருப்பங்களுடன் அமைய உள்ளது. 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன், 6-ல் கேது, 7-ல் குரு, சனி, 12-ல் ராகு, 11-ல் செவ்வாய் என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் உடல்நலம் தெம்பாகும். பணவரவில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிதுர் சொத்துக்களால் நன்மைகள் கிட்டும். தாய் வீட்டின் ஆதரவால் புதிய சொத்துக்களை  வாங்குவீர்கள். மக்களின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் தரும். தாம்பத்திய உறவில் வெறுப்புக்கள் நீங்கி விருப்பம் அதிகரிக்கும். செவ்வாய் அன்று மகாபலிபுரம் நிலமங்கைத் தாயாரை தரிசிக்க நிம்மதி கிட்டும்.

6. திருவாதிரை: நயமான பேச்சுத்திறமையும், தன் கனிவான அன்பால் அனைவரையும் கட்டிப்போடும் அசாத்தியமான திறமை கொண்ட துணிச்சலான பெண்மணிகளான உங்களை சந்தோஷப்படுத்தும் வண்ணம் இம்மாதம் மலர இருக்கின்றது. 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன், 6-ல் கேது, 7-ல் குரு, சனி, 11-ல் செவ்வாய், 12-ல் ராகு என்று கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவையும், அபிவிருத்தியையும் காண்பீர்கள். தனவரவில் இதுநாள் வரையில் இருந்து வந்த தடைகள் நீங்கி சரளமான பண வரவிற்கு வழிகள் தோன்றும். உத்தியோகத்தில் இருந்துவந்த பணிச்சுமைகள் குறையும். சிலருக்கு இடமாற்றத்திற்கும் வாய்ப்புண்டு. ஞானிகள் ஆசி கிட்டும். சிலரின் தடைபட்டு வந்த திருமணம் திடீரென முடிவாகக்கூடும். கணவன், மனைவியிடையே விரிசல் நீங்கி விருப்பம் தோன்றும் நேரம். ஞாயிறு அன்று பெரும்புதூர் இராமானுஜரை தரிசிக்க
நன்மையுண்டு.

7. புனர்பூசம்:  காரியம் முடிப்பதில் வெகு சாமர்த்தியமும், நுட்பமான அறிவுத்திறன் கொண்ட அறிவாளிப் பெண்மணிகளான தங்களின் திறமைகட்கு பரிசுகள், பாராட்டுக்கள் வந்து சேரும் ஓர் நல்ல மாதமாய் மலர உள்ளது. 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன், 6-ல் கேது, 7-ல் குரு, சனி, 11-ல் செவ்வாய், 12-ல் ராகு என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் தேக ஆரோக்கியம் மேன்மையாகும். பணமுடை தீரும். சகோதரர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ள அழைப்பு வரும். தெய்வ வழிபாடுகளை நிறைவேற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புக்களும், கூடுதல் சம்பளமும் என பணிச்சுமைகளால் அசந்து போவீர்கள். கணவன், மனைவி உறவில் அந்நியோன்யம் அதிகரிக்கும் நேரம். திங்கட்கிழமையன்று வேங்கடநாதன் தரிசனம் வேண்டுதல் நிறைவேறும்.

8. பூசம்: என்றும் கனிவான பேச்சும், உதவி புரியும் உயர்ந்த நல்ல உள்ளமும் கொண்ட பண்பான பெண்மணிகளான உங்களின் உயர் மனதை மகிழ்விக்கும் நற்செய்திகள் வந்து சேரும் ஓர் நல்ல மாதமாய் அமையக் காத்திருக்கின்றது. ராசியில் சுக்கிரன், 2-ல் சூரியன், 3-ல் புதன், 5-ல் கேது, 6-ல் குரு, சனி, 10-ல் செவ்வாய், 11-ல் ராகு என கிரக சஞ்சார நிலை தென்படுவதால் மனம் லேசாகும். முகம் பளிச்சிடும். தேக நிலையில் தெளிவைக்காண்பீர்கள். பணவரவில் நல்ல முன்னேற்றம் காண்பதற்கு புதிய வழிகளை யோசிப்பீர்கள். தாய் வீட்டின் ஆதரவினால் புதிய சொத்துக்கள் வாங்க எண்ணம் தோன்றும். கடன் சுமை தீரும். தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து நடந்துகொள்வீர்கள். செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மன் தரிசனம் துக்கம் விலகும்.

9. ஆயில்யம்:  உயர்வான எண்ணங்களும், சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறமையும், எதிலும் முன்னிலை வகிக்கும் அறிவுப்பெண்மணிகளான உங்களின் நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும் ஓர் நல்ல மாதமாய் இம்மாதம் இனிதே மலர உள்ளது. ராசியில் சுக்கிரன், 2-ல் சூரியன், 3-ல் புதன், 5-ல் கேது, 6-ல் குரு, சனி, 10-ல் யோககாரகன் செவ்வாய் ஆட்சி, 11-ல் ராகு என கிரக சஞ்சாரம் அனுகூலமாய் சஞ்சாரம். எனவே உடல்நலம் தெளிவடையும். தனவரவு இரட்டிப்பாகும். சகோதரர்களின் மூலம் நன்மைகள் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி தென்படும். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு அரசாங்க வேலை கிட்டும் நேரம். சிலரின் நீண்ட நாட்களாய் தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். இல்லறத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவம் தோன்றும் மாதம். ஞாயிற்றுக்கிழமையன்று நாகர்பூஜை செய்ய நலம் உண்டாகும்.

10. மகம்: எவரையும் நேருக்கு நேர் சந்திக்கும் திறமையும், தன் சுயமுயற்சியினால் வாழ்வில் உன்னத நிலையை அடைய ஓயாது போராடி வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் செயல் ராணிகளான உங்களின் எண்ணங்கள் ஈடேறும் ஓர் நல்ல மாதமிது. ராசியில் சூரியன், 2-ல் புதன், 4-ல் கேது, 5-ல் குரு, சனி, 9-ல் செவ்வாய், 10-ல் ராகு, 12-ல் சுக்கிரன் என கிரக சஞ்சாரம் அனுகூலமாய் உள்ளதால் தொட்டது யாவும் துலங்கும். தேகம் ஆரோக்கியம் சீராகும். பணவரவில் முன்னேற்றமான நிலை தெரியும். சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தந்தையின் அன்பைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம், மண், மனைகள் சேரும். கடன் சுமைகள் தீரும். தாம்பத்திய உறவில் பரஸ்பரமான அன்பு மலரும் தருணமிது. திங்கட்கிழமை காளத்திநாதரை தரிசிக்க காரியத்தடை நீங்கும்.

11. பூரம்: எந்த நிலையிலும் மனஉறுதியுடன் நின்று போராடும் அசாத்தியமான துணிச்சலும், மதிநலத்தால் வெற்றி காணும் ஓர் அபாரமான திறமை கொண்ட பெண்மணிகளான தங்களின் ஆசைகள் நிறைவேறும் ஓர் நல்ல மாதமாய் மலர உள்ளது. ராசியில் சூரியன், 2-ல் புதன், 4-ல் கேது, 5-ல் குரு, சனி, 9-ல் செவ்வாய், 10-ல் ராகு என கிரகங்களின் சஞ்சார நிலை அனுகூலமாய் சஞ்சரிப்பதால் கேட்டது கிடைக்கும் நல்ல நேரம். புதிய தொழில் ஆரம்பிக்க யோசனைகள் உருவாகும். தேகம் புதுப்பொலிவு பெறும். தனவரவு இரட்டிப்பாகும். உத்தியோக முயற்சி வெற்றியாகும். சிலருக்குத் திருமணம் கூடும். புத்திர பேறு அமையும் யோகம் உண்டு. வீடு, வாகனம் என சேரும். இல்லறத்தில் இனிப்பான நிகழ்ச்சிகளால் மனம் ஒன்று கூடும் நேரம். குடும்பம் ஒன்றுபட குலதெய்வ வழிபாடு மேன்மையைத் தரக்கூடும்.

12. உத்திரம்: எப்போதும் கள்ளம் கபடமற்ற பேச்சும், எவருக்கும் ஓடிப்போய் உதவி செய்யும்  மனோபாவமும் கொண்ட தியாகப் பெண்மணிகளான உங்களின் அபிலாஷைகள் நிறைவேறும் ஓர் நல்ல மாதமாய் இம்மாதம் மலர உள்ளது. ராசியில் புதன், 3-ல் கேது, 9-ல் ராகு, 4-ல் குரு, சனி,
3, 8-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு யோகம் தரும். 11-ல் சுக்கிரன், 12-ல் சூரியன் என கிரக சஞ்சாரம் அமைந்துள்ளதால் தேக ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது அவசியம். தனவரவில் பஞ்சமிராது. இருப்பினும் வரவைக்காட்டிலும் செலவுகள் கூடுதலாகும். தாயாரின் அன்பால்  மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் இடம் மாற்றம் வரலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வீடு தேடி வரும். தாம்பத்திய உறவில் இன்பங்கள் இரட்டிப்பாகும் இனிய நேரம். ஞாயிற்றுக்கிழமையன்று சூரிய தரிசனம் செய்ய நன்மை உண்டு.

13. அஸ்தம்: என்றும் புதிதாய் சாதித்துக் காட்ட எண்ணம் கொண்டவர்களும், கலையார்வம் மிக்க விருப்பத்துடன் முயற்சி செய்து வெற்றி வாகை சூடும் வீராங்கனைப் பெண்மணிகளான தங்களின் எண்ணங்கள் ஈடேறும் ஓர் நல்ல மாதமிது. ராசியில் புதன் ஆட்சி, 3-ல் கேது, 9-ல் ராகு, 4-ல் குரு, சனி, 3, 8-க் குடைய செவ்வாய் 8-ல் மறைவு கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம், 11-ல் சுக்கிரன், 12-ல் சூரியன் என கிரகங்களின் சஞ்சாரம் காணப்படுவதால் உடல்நலனில் கவனம் கொள்வது அவசியம். சரளமான பணவரவு அதற்கேற்ப செலவும் வந்து சேரும். ஞானிகளின் ஆசி கிட்டும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பால் பணிச்சுமைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து மாறுபாடுகள் நீங்கும். புதன்கிழமையன்று வராக மூர்த்தியை சேவிக்க வாழ்வு வளமாகும்.

14. சித்திரை: மதிநுட்பத்தினால் கடினமான செயலையும் எளிதில் செய்து முடிக்கும் வேகமும், விவேகமும் கொண்ட திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் கனவுகள் நனவாகும் இனிமையான ஓர் நல்ல மாதமிது. 2-ல் கேது, 3-ல் குரு, சனி, 7-ல் செவ்வாய் ஆட்சி,  8-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், 12-ல் புதன் என கிரக நிலைகள் சாதகமாய் சஞ்சாரம். எனவே மனம் உற்சாகத்தில் துள்ளும். தேக நிலையில் மாற்றங்கள் நன்கு தெரியும். பண வரவில் தடைகள் நீங்கும். தெய்வ அனுக்கிரகம் கிட்டும். மக்களின் கல்வியில் முன்னிலை கண்டு மகிழ்வீர்கள்.
அரசாங்க வேலை கிடைக்கும் யோகம் உண்டு. புதிய வேலை கிட்டும் நல்ல நேரம். கணவன், மனைவி இருவரும் அன்பால் இணையும் ஓர் அற்புதமான நேரம். செவ்வாய் அன்று பழநியாண்டவரை தரிசிக்க பாவங்கள் விலகும்.

15. சுவாதி: என்றுமே எதிலும் புதுமையை விரும்பும் கலை உணர்வு அதிகம் கொண்டவர்களும், எதையேனும் சாதிப்பதில் விருப்பங்கள் கொண்டு சாதித்துக்காட்டும் வீரப்பெண்மணிகளான தங்களின் ஆசைகள் நிறைவேறும் ஓர் இனிய மாதமிது. 2-ல் கேது, 8-ல் ராகு, 3-ல் சனி, குரு, 7-ல் செவ்வாய், 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன்,  12-ல் புதன் என கிரக நிலை அனுகூலமாய் காணப்படுவதால் மனதில் இருந்துவந்த சலனங்கள் விலகும். குடும்ப ஒற்றுமை தென்படும். தேகத்தில் நல்ல முகவசீகரம் தோன்றும். தனவரவில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோகத்தில் இருந்துவந்த பணிச்சுமைகள் குறையும். தடைபட்ட திருமணம் சிலருக்கு முடிவாகும். வீடு, வாகனம் என சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. இல்வாழ்க்கையில் மனபேதங்கள் விலகி இன்பங்கள் வந்து சேரும். சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை சேவிக்க அனைத்தும் ஜெயமாகும்.

16. விசாகம்: என்றும் பொறுப்புடன் செயலாற்றும் விவேகமும், மதிநலத்தால் விவேகமாய் செயல்பட்டு சாதித்துக்காட்டும் வெற்றியின் ராணிகளான உங்களின் திறமைகளால் பரிசும், பாராட்டும் வந்து சேரும் ஒரு நல்ல மாதமாய் இம்மாதம் மலர உள்ளது. 2-ல் கேது, 3-ல் குரு, சனி, 7-ல் செவ்வாய், 8-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், 12-ல் புதன் என கிரக சஞ்சாரம் உள்ளதால் உங்களின் கனவுகள் செயல் வடிவம் பெறும். உடல்நலம் தெளிவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று மனம் மகிழும் நேரம். சிலருக்கு மகப்பேறு கிட்டும். நீண்ட நாட்களாய் தடைபட்டு வந்த திருமணம் கூடிவரும். வீடு, வாகனம் என சொத்துக்கள் சேரும். தாம்பத்திய வாழ்க்கையில் இருந்துவந்த மனவேறுபாடுகள் நீங்கும். செவ்வாய் அன்று மயிலை சிங்காரவேலர் தரிசனம் சிறப்பைத் தரும்.

17. அனுஷம்: உயர்ந்த எண்ணங்களும், அனைவருக்கும் உதவும் பரந்த மனப்பான்மையும் கொண்ட மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கப்பெற்ற தங்களின் திறமைகட்கு விருதுகள் வந்து சேரும் ஓர் இனிமையான மாதமாய் இம்மாதம் உங்களை வரவேற்கின்றது. ராசியில் கேது உச்சம், 2-ல் குரு ஆட்சி, சனி, 6-ல் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி, 7-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன் ஆட்சி, 11-ல் புதன் ஆட்சி உச்சம் என கிரக நிலைகள் சாதகமாய் சஞ்சாரம். அத்துடன் ஜீவனஸ்தானத்தை குரு பார்ப்பதால் பணமழைதான் போங்கள். தனவரவு இரட்டிப்பாகும். தேகம் வசீகரமாகும். பிதுர்க்கள் மூலம் பணம் வரும். வீடு, வாகனம், பொன் ஆபரணங்கள் சேரும். கணவன், மனைவியிடையே விருப்பங்கள் கூடுதலாகும் மாதம். வெள்ளிக்கிழமையன்று மீனாட்சியம்மன் தரிசனம் வெற்றியைத் தரும்.

18. கேட்டை: மனதில் உறுதியும், பொறுப்புடன் செயல்படும் விவேகமும், பொறுமையுடன் அணுகும் விவேகப் பெண்மணிகளான உங்களின் கலைத்
திறன் அனைவராலும் பாராட்டுப் பெறும் ஓர் இனிய மாதமாய் இம்மாதம் மலர இருக்கின்றது. ராசியில் கேது, 2-ல் குரு, சனி, 6-ல் செவ்வாய், 7-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் புதன் என கிரக நிலைகள் சாதகமாய் சஞ்சாரம். எனவே எதிலும் வெற்றிதான். தேகம் தெளிவடையும். பணவரத்து கூடும். வீட்டில் சுபமங்கள நிகழ்வுகள் கூடி வருவதும் அதன் பொருட்டு உறவினர்கள் ஒன்று சேரும் நேரம். சித்தர்களின் தரிசனம் கிட்டும். பழைய வீட்டை மாற்றி புது வீட்டிற்கு குடிபோகும் நல்ல நேரம். கடன் சுமைகள் குறையும். மக்களின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு இதம் தரும். இல்லற வாழ்வில் இனிமைகள் வந்து மகிழ்விக்கும் ஒரு நல்ல மாதமிது. சனிக்கிழமையன்று நரசிம்மரை தரிசிக்க நலம் உண்டாகும் மாதம்.

19.மூலம்: தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவமும், அனைவரிடமும் அன்பு காட்டும் பண்பும், எவருக்கும் உதவி புரியும் நல்ல உள்ளம் கொண்ட தங்கள் மனம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் ஓர் இனிய நல்ல மாதமிது. ராசியில் குரு, சனி, 5-ல் ராகு, 8-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், 10-ல் புதன், 12-ல் கேது என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் உடல் நலம் தெளிவாகும். பணமுடை  தீரும். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு பணியிட மாற்றமும் உண்டு. நட்பு வட்டம் மூலம் அனுகூலம் பெறுவீர்கள். வீடு, வாகன யோகமும் உண்டு. கணவரின் நிறைவான அன்பைக் கண்டு அசந்து போவீர்கள். செவ்வாய் அன்று மயிலம் முருகனை தரிசிக்க மனதில் சலனங்கள் விலகும்.

20. பூராடம்: தெளிவான தொலைநோக்குப்பார்வையும், பிறர் மனதைப்புரிந்து நடக்கும் உத்தம குணம் கொண்ட நல்ல பெண்மணிகளான தங்களின் மனம் மகிழும் ஒரு நல்ல மாதமாய், நற்செய்திகள் தேடி வந்து மனதை இன்புறச்செய்யும் மாதமிது. ராசியில் குரு, சனி, 5-ல் செவ்வாய், 6-ல் ராகு, 8-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், 10-ல் புதன், 12-ல் கேது என கிரக சஞ்சாரம் உள்ளதால் எதிலும் வெற்றி முகம்தான். தேகம் தெளிவு பெறும். பணமுடை தீரும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் கூடுதலாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஒரு தொகை வரக்கூடும். தாம்பத்திய வாழ்வில் ஒரு தனி இன்பம் வந்து சேரும் நல்ல மாதம். சனியன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமான் தரிசனம் ஒற்றுமை
தரும்.

21. உத்திராடம்: சரளமான பேச்சுத்திறமையும், அறிவாற்றலும் கொண்ட திறமைசாலிப் பெண்மணிகளான உங்களை மகிழ்விக்கும் வண்ணம் இனிய செய்திகள் வந்து அசத்தப்போகும் ஓர் இனிமையான மாதமாய் மலர உள்ளது. 4-ல் செவ்வாய், 5-ல் ராகு, 7-ல் சுக்கிரன், 8-ல் சூரியன், 9-ல் புதன், 11-ல் கேது, 12-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் உள்ளதால் தேவையற்ற மனஉளைச்சலுக்கு இடம் கொடுக்காதீர்கள். எதிலும் பதற்றம் வேண்டாம். பொறுமையுடன் செயல்பட பெருமை உண்டு. தேகம் தெளிவாகும். பணவரவு கூடுதலாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். குடும்பப் பிரச்னைகள் தீரும். சுபநிகழ்வில் பங்கு பெறுவீர்கள். நட்பு வட்டம் மூலம் அனுகூலம் கிட்டும். மக்களின் கல்வி முன்னேற்றத்தால் மகிழ்வு கிட்டும். இல்லற வாழ்க்கையில் இனிமைகள் வந்து சேரும் நல்ல மாதமிது. ஞாயிறு அன்று கருடபகவானை தரிசிக்க கவலைகள் விலகும்.

22. திருவோணம்: தெளிவான தொலைநோக்குப் பார்வையும், பிறரின் மனம் புண்படாமல் பேசும் வாக்குவன்மையும் கொண்ட தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்ட உத்தமப் பெண்மணிகளான உங்களின் நீண்ட நாளைய எண்ணங்கள் செயலாகும் ஓர் இனிய மாதமிது. 4-ல் செவ்வாய், 5-ல் ராகு, 7-ல் சுக்கிரன், 8-ல் சூரியன், 9-ல் புதன், 11-ல், 12-ல் குரு, சனி என  கிரக சஞ்சாரம் காணப்படுவதால் நினைத்த காரியம் ஜெயமாகும். உடல்நலம் தெம்படையும். பணவரவு இரட்டிப்பாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். தெய்வப்பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமைகள் அதிகரிக்கும். வீடு, வாகன யோகமுண்டு. கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசி மகிழும் இனிய தருணம். செவ்வாய் அன்று மயிலம் முருகப்பெருமான் தரிசனம் மனம் மகிழ்வு காணும்.

23. அவிட்டம்: அசாத்தியமான துணிச்சலும், மனோதிடம் அதிகம் உள்ள எவரையும் நேருக்கு நேர் நின்று பேசும் தனித்திறன் கொண்ட வெற்றி நாயகிகளான உங்களின் கலைத்திறன் அனைவராலும் பாராட்டு பெறும் ஒரு நல்ல மாதமாய் அமைய இருக்கின்றது. 4-ல் செவ்வாய், 5-ல் ராகு, 7-ல் சுக்கிரன், 8-ல் சூரியன், 9-ல் புதன், 11-ல் கேது, 12-ல் குரு, சனி என கிரக நிலை தென்படுவதால் தேகம் பளிச்சிடும். தனவரவில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் அன்பைப் பெறுவீர்கள். பிதுர் சொத்துக்களின் மூலம் ஒரு பெருந்தொகை கைக்கு வந்து சேரும். புதிய சொத்து வாங்க எண்ணம் தோன்றும். உத்தியோக முயற்சிகளில் வெற்றியாய் அரசாங்க வேலை கிட்டும். தாம்பத்திய உறவில் விரிசல்கள் நீங்கி விருப்பம் கூடு தலாகும். திங்கட்கிழமையன்று காமாட்சியை தரிசிக்க கவலைகள் விலகும்.

24. சதயம்: பொதுநலத் தொண்டில் ஆர்வமும், இனிமையாய் பேசுவதில் சாமர்த்தியமும் உள்ள எவருக்கும் உதவி புரியும் தியாகப்பெண்மணிகளான தங்களின் திறமைகட்கு பாராட்டுக்கள் வந்து சேரும் ஓர் இனிமையான மாதமாய் இம்மாதம் அமைய உள்ளது. 3-ல் செவ்வாய், 4-ல் ராகு, 6-ல் சுக்கிரன், 7-ல் சூரியன், 8-ல் புதன், 10-ல் கேது, 11-ல் குரு, சனி என்று கிரகங்களின் சஞ்சாரம் காணப்படுவதால் எங்கும் வெற்றி. எதிலும் வெற்றி என பாடத்தோன்றும் நேரம். புதிய தொழில் அமையும். பணமுடை தீரும். தேகம் பளீரென மின்னும். தெய்வ அனுக்கிரகம் கிட்டும். விருந்துகள், சுபநிகழ்வில் கலந்துகொள்வீர்கள். சிலர் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவர். கணவன், மனைவி உறவில் அன்பும், பாசமும் அதிகரிக்கக் கூடும். ஞாயிறு மாலை ராகு காலம் 4.30 to 6.00 மணி அளவில் திருத்தணியை அடுத்த மத்தூர் மகிஷாசுரமர்த்தினியை தரிசிக்க தடைபட்ட திருமணம் கூடும்.

25. பூரட்டாதி:  கடமையில் கண்ணும் கருத்துமாய் செயலாற்றும் தனித்திறமையும், எப்போதும் உழைக்கத்தயாராய் நிற்கும் சுறுசுறுப்பானப் பெண்மணிகளான தங்களின் திறமைகட்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் வண்ணம் இம்மாதம் இனிய செய்திகள் தேடி வந்து மகிழ்விக்கும் மாதமிது. 3-ல் செவ்வாய், 4-ல் ராகு, 6-ல் சுக்கிரன், 7-ல் சூரியன், 8-ல் புதன், 10-ல் கேது, 11-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் உள்ளதால் நினைத்த காரியங்கள் யாவுமே ஜெயமாகும். உடல் ஆரோக்கியம் தேஜஸாகும்.  பணவரவு அதிகரிக்கும். மனம் லேசாகும். தாயாரின் அன்பைப் பெறுவீர்கள். மக்களின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு இதமளிக்கும். வாகனம், ஆபரணங்கள் சேரும். கணவன், மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும் இனிமையான மாதமிது. வியாழக்கிழமையன்று தேனாம்பேட்டை பாலசுப்ரமணியரை தரிசிக்க நன்று.

26. உத்திரட்டாதி: கற்பனை குணம் அதிகம் உள்ளவர்களும், எழுத்தாற்றல், யோசித்து செயல் புரியும் மதிநலம் கொண்ட உத்தமமான பெண்
மணிகளான உங்களின் கலைத்திறமை அனைவராலும் பெருமைபடுத்தப்படும் ஒரு நல்ல மாதமாய் இம்மாதம் மலர இருக்கின்றது.  2-ல் செவ்வாய், 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 7-ல் புதன், 8-ல் கேது, 10-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் எடுத்த செயல் யாவும் வேகமாய் முடியும். எதையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்க எண்ணம் தோன்றும். முகம் பளிச்சிடும். தந்தையின் ஆதரவினால் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமுள்ளது. கணவன், மனைவி இருவரும் அன்பால் இனிமையுறும் நல்ல மாதம். சனிக்கிழமையன்று சனீஸ்வரரை தரிசிக்க சலனங்கள் விலகும்.

27. ரேவதி: அனைவரின் அன்பையும் பெற உள்ளம் புரிந்து செயல்படும் நல்ல குணவதிகளான தங்களின் பொறுமையினால் எதிரிகளையும் பணிய வைக்கும் திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் விவேகம் பாராட்டப்படும் மாதமாய் இம்மாதம் அமைய உள்ளது. 2-ல் செவ்வாய், 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 7-ல் புதன், 9-ல் கேது, 10-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் தேகம் பொலிவடையும். தனவரவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செய்யும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சிலர் பழைய வீட்டை மாற்றி புதிதாய் அமைப்பர். மகான்களை தரிசிப்பீர்கள். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்டு வந்த திருமணம் கூடும். சுபமங்கள நிகழ்வு இல்லத்தில் கூடிவரும். தாம்பத்திய வாழ்வில் மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையாவீர்கள். புதன்கிழமையன்று  வைகுந்த பெருமாள் தரிசனம் வாழ்வு வளமாகும்.

ஜோதிடமணி வசந்தா சுேரஷ்குமார்