குறட்டை முதல் பக்கவாதம் வரை... விரட்டும் உடற்பருமன்!உலக அளவில் நாடு, மொழி, இனம், மதம், சாதி, வயது, காலம் என இப்படி எல்லாவற்றையும் கடந்து நம்மோடு எப்போதும் இருப்பது காதல் மட்டுமல்ல, உடற்பருமனும் தான். அதிலும் இன்றைய டெக் உலகில் நம் உடல் எடையும், இதை சார்ந்த உணவு முறைகளும் வணிகமயமாகிவிட்ட சூழலில் ஒருவருக்கு உடற்பருமன் ஏன் ஏற்படுகிறது? அதனால் என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்? இதற்கான தீர்வுகள் என்ன? என்பதை தெளிவாக அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்று.

நாம் ஒவ்வொருவரும் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை தருவது நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டு சத்து எனலாம். இது சர்க்கரையாக மாறி ஆற்றலை கொடுக்கக் கூடியது. இச்சத்து தீர்ந்து போனால் நம் உடலில் இருக்கும் புரதமானது கரைந்து சர்க்கரையாக மாறி ஆற்றல் தரும். இதுவும் தீர்ந்துபோனால் கொழுப்பு சத்து கரைந்து ஆற்றல் கொடுக்கும். எனவே இதற்காக எப்போதும் தேவையான அளவு கொழுப்பை நம் உடலானது சேகரித்து வைப்பது இயல்பு. அப்படி சேகரித்து வைக்கும் கொழுப்பின் அளவானது தேவைக்கு அதிகமாக ஆவதை உடற்பருமன் என்கிறோம்.

உடற்பருமன் ஏற்பட என்ன காரணம்..?

தைராய்டு சுரப்பி சார்ந்த ஹார்மோன்கள் சமச்சீரின்மை, ஸ்டீராய்டு வகை மாத்திரைகள், புகை மற்றும் மது பழக்கம், உடல் உழைப்பு
இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம், இன்சுலின் சமச்சீரின்மை, நொறுக்குத் தீனிகள், துரித உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பால் சார்ந்த பொருட்கள், இனிப்பு பலகாரங்கள், பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் போன்றவற்றால் ஒருவருக்கு உடற்பருமன் வரலாம்.

விளையும் விளைவுகள்

உடற்பருமன் ஏற்படுவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக எடையினால் மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு மூட்டு வலிகள் வருவது, பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் புற்றுநோய் வருவது, உடலின் இயங்கும் ஆற்றல் குறைவது, ரத்தத்தில் கொழுப்பின் அளவு உயர்வது, மாரடைப்பு, பக்கவாதம், சினைப்பைக் கட்டிகள், பித்தப்பை கற்கள் உள்ளிட்ட இன்னும் பல நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. அத்தோடு, அண்மையில் குறட்டை வருவதற்கு கூட உடற்பருமன் ஒரு காரணமாக இருப்பதாக ஓர் ஆய்வு முடிவு சொல்கிறது.

எப்படி கணக்கிடுவது..?

உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட BMI (Body Mass Index) விதிமுறையினைக் கொண்டு ஒருவரின் உடல் பருமனானது கணக்கிடப்படுகிறது.

பி.எம்.ஐ = எடை (கிலோ) / உயரம்
(மீட்டர்)2 (ஸ்கொயர்).
உதாரணமாக, உங்கள் எடை 55 கிலோ, உயரம் 155 செ.மீட்டர் என்றால்.. 55 / (1.55 x 1.55) = 22.9. நீங்கள் ஆரோக்கியமான எடையில் இருக்கிறீர்கள்.
குறைந்த உடல் எடை    : 18.5 கீழ் இருந்தால்
சரியான அளவு     : 18.5 முதல் 25 வரை
அதிக எடை     : 25 முதல் 30 வரை
முதல் நிலை பருமன்    : 30 முதல் 35
இரண்டாம் நிலை பருமன்: 35 முதல்40 40க்கு மேல் மிக அதிக பருமன்.
தீர்வு என்ன?

*அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை குறைக்கலாம் எனினும், அதனால் வரும் பக்க விளைவுகள் மற்றும் இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதை தவிர்த்து வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாலே போதுமானது.

*தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் நடைப்பயிற்சி, நீச்சல், நடனம் என புதியதாக, விருப்பமானதாக தேர்ந்தெடுத்து தினமும் ஒருமணி நேரம் செய்யலாம். குறைந்தது வாரத்திற்கு ஐந்து நாட்களாவது செய்ய வேண்டும்.

*உணவுக் கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு வகைகள் எது? போன்ற சந்தேகங்களை ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு உணவு எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

*உடல் எடையைக் குறைக்க உணவு, உடற் பயிற்சி இரண்டுமே அவசியம் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*மது மற்றும் புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

*எவ்வளவு கலோரிகள் உட்கொள்கிறோம் என்பதும், எவ்வளவு கலோரிகள் தினமும் உடற்பயிற்சி மூலமாக குறைக்கிறோம் என்பதும் மிக முக்கியம்.

*பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு வண்டியில் செல்லாமல் நடந்து செல்வது, வேலைக்கு துணை ஆட்கள் வைத்துக் கொள்ளாமல் நாமே வீட்டு வேலைகளை செய்வது, மிதிவண்டி பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு அதிக நேரம் கைப்பேசி கொடுக்காமல் மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியமானது.

நம் வாழ்க்கை மட்டுமல்ல... உடல் எடையும்  நம் கையில் தான் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உடற்பருமன் மட்டுமல்ல, எவ்வித நோய்களும் நெருங்காத ஆரோக்கிய வாழ்வை நோக்கி நாம் ஒவ்வொருவரும் முன்னேறலாம்.

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்...

*அதிக நேரம்  தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பார்ப்பதால் குழந்தைகளும், நீண்டநேரம்  அமர்ந்து வேலை பார்ப்பது மற்றும் குறைவான உடல் உழைப்பால் பெரியவர்களும்  அதிகளவில் உடற்பருமனால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள்  சொல்கிறது.

*உலக அளவில் தடுக்கக்கூடிய நோய்களினால் ரத்த அழுத்தம்,  மாரடைப்பு, சர்க்கரை நோய், பக்கவாதம் ஏற்படும். இறப்பிற்கு முதன்மையான  காரணமாக உடற் பருமன் இருப்பதை அனைவரும் அறியவேண்டியது அவசியம்.

*உடற்பருமன் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில்  இருப்பதும், இந்தியாவில் மட்டும் நான்கு கோடி மக்கள் உடற்பருமனுடன்  உள்ளதாகவும், அவற்றில் பெண்களை விட ஆண்களே அதிகம் என்பதும் அறியலாம்.

*உலகம் முழுக்க 350 மில்லியன் மக்கள் உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்