திருமண மேக்கப்பில் ஜொலிக்கும் நியூஸ்‌ ரீடர்



திருமணம் என்றாலே பெண்களுக்கு பெரும் கனவு இருக்கும். அதன் தொடக்கமாக, திருமணம் நடக்கும்போது, பலரது முன்னிலையில் அழகாக தெரியவேண்டுமென்று நிறைய ஆசை கொண்டிருப்பார்கள்.
அவர்களின் எண்ணத்தை அழகாக்கும் வண்ணம் புதுமையை படைத்து வருகிறார், ‘தாட்சு மேக் ஓவர்’ நிறுவனத்தை சேர்ந்த தாட்சாயிணி. செய்திவாசிப்பாளரான இவர் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் என்று பெண்களை தேவதைபோல் ஜொலிக்க செய்வதில், தமிழ்நாட்டையும் தாண்டி தென்னிந்தியாவிலும் தனக்கான முத்திரையினை பதித்து வருகிறார்.

‘‘சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். அக்கா, தம்பி, தங்கச்சி  என்று கூட்டு குடும்பமாகத்தான் வசிக்கிறோம். எனக்கு சின்ன வயசாக இருக்கும்போதே கல்யாணம் ஆகிடுச்சி. நான் கர்ப்பமாக இருந்தப்போ ‘ஜாக்’ டி.வி.யில் செய்திவாசிப்பதற்கு அழைப்பு வந்தது. அப்படித்தான் எனக்கும் தொலைக்காட்சிக்குமான தொடர்பு ஆரம்பமானது. செய்திவாசிப்பாளரா தேர்வாயிட்டேன். ஆனால் எனக்கு ‘மேக்கப்’ என்ற விஷயம் தேவைப்பட்டது... அதாவது ‘செல்ஃப்’ மேக்கப் போட வேண்டியிருந்தது.

ஏற்கனவே, எனக்கு சின்ன வயசில் இருந்து மேக்கப் மேல தனி இன்ட்ரஸ்ட் உண்டு. அதனால்தான், நமக்கு நாமே மேக்கப் போடுவதற்கு ஏன் கத்துக்கொள்ள கூடாதுன்னு தோன்றியது. அதன்பின், ‘டிப்ளமோ இன் காஸ்மெடாலஜி’ படிச்சேன். அதை கொண்டுதான் நண்பர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு, அக்கம்பக்கத்தினருக்கு ‘மேக்கப்’ போட்டேன். அப்போது, ‘மேக்கப் நல்லாயிருக்கே...தேவதைபோல் எங்களை காட்டுறீங்க’ என்று பலரும் சொன்னாங்க. இதற்கு காரணம், எனக்கு மேக்கப் போடும் போது எது நல்லா இருக்கும்னு நினைக்கிறேனோ, அதே தான் மற்றவர்களுக்கு போடும்போதும் எண்ணுவேன்.

அவங்களோட முக அமைப்புக்கு என்ன ஹேர்ஸ்டைல் மேக்கப் பொருத்தமா இருக்கும்ன்னு பார்த்து அதன் படி மேக்கப் பண்ணுவேன். அவர்களுக்கு பொருத்தமான மேக்கப் கொடுப்பதனால் மிகவும் அழகாக தெரிவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் பிரபல தொழில் அதிபரின் மகளுக்கு மேக்கப் போட வாய்ப்பு வந்தது. அவருக்கு மேக்கப் போட்டதை பார்த்து திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.

அந்த ஊக்கம்தான் பிசினசை இன்னும் வளர்க்கலாமே என்ற ஆர்வத்தை தந்தது. என்னுடைய கலையை என் சகோதரிகளுக்கும் சொல்லிக் கொடுத்தேன். இப்போது நாங்க எல்லாரும் சேர்ந்து தான் செய்கிறோம்’’ என்றவர் பல பிரபலங்களின் ஆஸ்தான மேக்கப் ஆர்ட்டிஸ்டாக உள்ளார்.  ‘‘எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னுடைய மேக்கப் திறமையை ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவிடுவேன். அப்படித்தான் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா என்று தென்னிந்தியா வரை சென்றடைந்தேன்.

இன்னும் சொல்லப்போனால், டெல்லி, பீகார், குஜராத் போன்ற இடங்களில் எல்லாம் வாய்ப்பு வந்தது. எனக்கு 5 வயதில் மகன் இருக்கிறான். அவனை நன்றாக கவனிக்க வேண்டுமென்பதால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியல. எனினும், லோக்கல் டி.வி.யில் தொடங்கி இன்று சன் டி.வி. செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தாலும்  3000க்கும் அதிகமான மேக்கப்களை போட்டுள்ளேன்’’ என்று கூறிய தாட்சாயிணிக்கு தனக்கு தெரிந்த திறமையை எதிர்கால தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டுமாம்.

‘‘என்னைப் பொறுத்தவரை எனக்கு தெரிந்த கலை என்னோடு அழிந்துவிடக்கூடாது. பலருக்கு சொல்லித் தரணும் என்ற ஆர்வத்துல உள்ளேன். இதுக்காக, ஒரு அகாடமியை தொடங்கி எனக்கு தெரிஞ்ச அனைத்தையும் சொல்லித் தரலாம் என்று இருக்கேன்’’ என புன்னகையுடன் கூறினார்.
இறுதியாக அவரிடம் ‘மேக்கப்பில் ஜொலிக்கும் நீங்கள், திரைத்துறைக்கு செல்லும் எண்ணம் உண்டா?’ என்று கேட்டதற்கு, ‘‘இதுவரைக்கும் இல்ல.

செய்தி வாசிப்பு; பிசினஸ்; ஃபேமிலி என்று போகுது... எனக்கு ஏற்கனவே, வாய்ப்புகள் வந்தது. அப்போது, நான் வேண்டாம் என தவிர்த்து விட்டேன். இப்ப நான் ஒரு குடும்பத்தலைவி; 2 குழந்தைகளுக்கு அம்மா என்பதால், குணச்சித்திர வேடமோ குடும்ப பாங்கு போன்ற கேரக்டர்களோ வந்தால் ஒப்புக்கொள்வேன்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆ.சுதாகர்