கிச்சன் டைரீஸ்



டயட் மேனியா

ஐடியல் புரோட்டின் டயட் பற்றி இந்த இதழில் பார்ப்போம். இதை ட்ரான் டைன் சான் என்பவர் வடிவமைத்தார். நாம் உண்ணும் உணவில் உடலுக்கு அடிப்படையான கட்டுமானத்தை வழங்கும் புரோட்டினை சிறந்த முறையில் சேர்ப்பதை வலியுறுத்தும் இந்த டயட் உடல் இளைப்பதை நோக்கமாகக் கொண்ட டயட்களில் ஒன்று. இதில் நான்கு நிலைகள் உள்ளன. டயட் இருப்பவரின் உடல் நிலை, வயது, பாலினம் ஆகியவற்றுக்கு ஏற்ப அவருக்கான டயட் முறை பரிந்துரைக்கப்படும் என்பதால் இது ஒருவகை ஒன் டூ ஒன் டயட்டும்கூடத்தான். எல்லோருக்கும் பொதுவான உணவியல் விதிகள் இதில் அதிகம் இல்லை. புரோட்டினை சிறப்பாகப் பயன்படுத்துவது மட்டுமே பொதுத்தன்மை.

குறைந்த அளவு புரோட்டின் உணவுகள், காய்கறிகள், நீர் ஆகியவற்றின் மூலம் உடலின் கீட்டோசிஸை மேம்படுத்தி எடைக்குறைப்பை நிகழ்த்தும் டயட் இது. கீட்டோசிஸ் கட்டுப்படும்போது தசையின் அடர்த்தியும் ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுகிறது. இதனால் எடை குறைகிறது. நான்கு கட்டமாக நடைபெறும் இந்த டயட் பிளானில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் மிகக் குறைந்த அளவே இடம்பெறும். இந்த டயட்டுக்கு என்று தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் சர்வீஸ் கூட உண்டு. அதில் இருக்கும் பயிற்சி பெற்ற நிபுணர்கள் ஒருவர் உண்ணவேண்டிய ஆரோக்கியமான உணவுகள் பற்றி அறிவுறுத்துவார். மில்க் ஷேக், ஸ்நாக்ஸ் என்று பால் பொருட்களால் ஆன உணவுகளுக்கு முதலிடம் இருக்கும்.

முதல் நிலையில்தான் அதிகப்படியான உடல் எடைக் குறைப்பு திட்டமிடல் இருக்கும். இதில் காலை, மதியம் மற்றும் இரவு உணவு உண்டு. அனைத்துமே ஹோல் புரோட்டின், காய்கறிகள், ஐடியல் புரோட்டின் ஸ்நாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டவை. இரண்டாவது நிலையில் மதிய உணவில் மட்டும் புரோட்டின் மற்றும் காய்கறிகள் உண்பதில் கொஞ்சம் தளர்வான விதிகள் உள்ளன. மூன்றாவது நிலையில் ஆரோக்கியமான காலை உணவு, பழங்கள், தானியங்கள் உண்டு. நான்காம் நிலையில் கார்போஹைட்ரேட்டுடன் புரோட்டின் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவையும் உண்டு. பின்பற்றுவதற்கு கொஞ்சம் காஸ்ட்லி என்பதுதான் இதன் மிகப் பெரிய குறை. மற்றபடி, சிறப்பான உடல் எடைக் குறைப்புக்கு இது ஏற்றது.

ஃபுட் சயின்ஸ்


வைட்டமின் பி3 பற்றி இந்த இதழில் பார்ப்போம். பி காம்ப்ளெக்ஸ் தொகுதியைச் சேர்ந்த வைட்டமின்களில் முக்கியமானது இது. அடிப்படையில் இந்த பி3 மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிகோட்டினமைடு, நியாசின் எனப்படும் நிகோட்டினிக் அமிலம், நிகோட்டினமைடு ரிபோசைடு என்று சொல்வார்கள். வைட்டமின் பி3 நம் உடலில் சேரும்போது நிகோட்டினமைடு அடினைன் டைனக்ளியோடைடு என்ற உயிர்வேதிப் பொருளாக மாறுகிறது.

இதை, NAD என்பார்கள். இதுதான், நம் உடலின் அடிப்படையான டிஎன்ஏ பழுதுபார்த்தலுக்கும் கால்சியம் உடலில் கரைவதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. பீன்ஸ், பால், அசைவம், முட்டை ஆகியவற்றில் வைட்டமின் பி3 நிறைந்துள்ளது. ஒருவர் உடலில் தினசரி 35 மி.கி நியாசின் இருக்க வேண்டும். இது மாறுபட்டால் சரும எரிச்சல், சரும உலர்வு, அரிப்பு, தலைவலி ஆகியவை தோன்றக்கூடும். இது அளவுக்கு அதிகமானாலும் ரிஸ்க்தான். குறிப்பாக, கல்லீரல் நச்சாகும் பிரச்சனை இதன் அதிகரிப்பால் உருவாவதுதான்.

காமாலை போன்ற நோய்களைக்கூட உருவாக்கும் மோசமான நோய்த்தொற்று இது. க்ளூகோஸ் இண்டாலரன்ஸ், ஹைப்பர்யூரிசீமியா, மேக்குலர் எடிமா, மேக்குலர் கட்டிகள் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்கும். பெல்லக்கரா என்ற மோசமான சரும நோய் நியாசின் போதாமையால் ஏற்படுவது. குடிகாரர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இந்த வைட்டமினை மாத்திரை வடிவில் உண்ண வேண்டும். பொதுவாக, ஆரோக்கியமான ஒருவருக்கு உணவின் மூலமே தேவையான நியாசின் கிடைத்துவிடும் என்பதால் அச்சப்பட வேண்டியதில்லை.

எக்ஸ்பர்ட் விசிட்

டெல்லியைச் சேர்ந்த இந்தியாவின் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தாவிடம் அவரின் ஃபிட்னெஸ் ஃபுட் சீக்ரெட் பற்றி கேட்டபோது சொன்னது இது… ‘தினசரி நான் எப்போதும் அளவாகவே உண்பேன். ஒரு உணவு இடைவேளைக்கும் இன்னொரு உணவு இடைவேளைக்கும் ஐந்து மணி நேரம் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். தினசரி உணவில் புரோட்டின் கண்டிப்பாக நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பேன். பால், பழங்கள் ஆகியவை நிச்சயமாக இருக்கும். பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படை. யோகா செய்யும்போது வெறும் வயிற்றில் செய்வதே நல்லது.

அதிகாலையில் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு யோகா செய்யலாம். உடற்பயிற்சி, ட்ரெட் மில்லில் ஓடுவது என்றால் வெறும் வயிற்றில் செய்ய வேண்டாம். அதே சமயம் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நொறுக்குத் தீனிகள் அளவாகச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால் அதையே உணவாக்கிக்கொள்ள கூடாது. இனிப்புகளைத் தவிர்த்தாலே உடல் பெருக்காது. அதேபோல் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சோளப் பொறி, சமோசா, பஜ்ஜி, போண்டா எல்லாம் உடல் எடையைக் கூட்டும் சமாசாரங்கள் என்பதால் அதில் கவனமாய் இருப்பேன்’ என்கிறார் ரூபாலி தத்தா

மரவள்ளிக் கிழங்கின் கதை

உலகில் அதிகம் உற்பத்தியாகும் உணவுப் பயிர்களில் மரவள்ளிக் கிழங்கும் ஒன்று. மரவள்ளிக் கிழங்கில் அரிசி உணவுகளுக்கு இணையான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) இருப்பதால் இதனை ஆப்பிரிக்கா போன்ற வறுமையான நாடுகளில் முக்கியமான உணவுப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மரவள்ளியை தமிழில் ஏழிலைக் கிழங்கு என்றும் சொல்வார்கள். இதைத் தவிர குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு போன்ற பெயர்களும் இதற்கு உள்ளன. இது ஒரு இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்டது.

இது இன்று ஆப்பிரிக்காவில்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவே இன்று உலகில் அதிக அளவில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலங்களில் நன்கு வளரும் என்பதால் நம் ஊர் தட்பவெப்ப நிலைக்கு மரவள்ளி மிகவும் ஏற்றது. ஆண்டுப் பயிரான இதன் வேர்ப் பகுதியில் கிழங்குகள் பிடித்து வளரும். இதிலிருந்துதான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இதைக் கொண்டு உப்புமா, பாயசம், கஞ்சி, வடகம் முதலியன தயாரிக்கலாம். மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாக மட்டுமின்றி பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் உள்ளது. இது இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு “இனிப்பு” மரவள்ளி, “கசப்பு” மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத “கசப்பு” மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்கக்கூடும். “கசப்பு” மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் “கசப்பு” மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.

தற்காலத்தில் உணவுக்காகப் பயிரிடப்படும் மரவள்ளி, ம. எசுக்கியூலெண்டா தாவர இனத்தின் துணை இனமான பிளபெலிபோலியா என்னும் காட்டு மரவள்ளி இனத்திலிருந்தே உருவானதாகக் கருதப்படுகின்றது. இக்காட்டுவகையின் வீட்டுப் பயிராக்கம் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கிமு 6,600 காலப் பகுதியைச் சேர்ந்த, மெக்சிக்கோ குடாவின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள சான் ஆண்ட்ரெசு தொல்லியல் களத்தில் மரவள்ளி மகரந்தப்பொடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல் சல்வடோர் நாட்டில் உள்ள 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன் காலத்துத் தொல்லியல் களமான ஜோயா டி செரனில் மரவள்ளிப் பயிர்செய்கை குறித்த நேரடியான சான்றுகள் கிடைத்துள்ளன.

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதி, நடு அமெரிக்காவின் தெற்குப் பகுதி, கரிபியப் பகுதி ஆகியவற்றை எசுப்பானியர்கள் ஆக்கிரமித்த காலத்துக்கு முன்பே, மரவள்ளி, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக இருந்தது. போத்துக்கேய, எசுப்பானியக் குடியேற்ற காலங்களிலும் இப் பகுதியில் மரவள்ளி தொடர்ந்து பயிரிடப்பட்டது. கொலம்பஸின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம் பெற்றுள்ளது. மோச்சே மக்கள் தமது மட்பாண்டங்களில் மரவள்ளியை வரைந்துள்ளனர். இப்படி, அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஃபுட் மித்ஸ்

அதிகக் கொழுப்பைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று ஒரு மித் உள்ளது. இதில் கொஞ்சம் உண்மை உள்ளது என்றாலும் என்ன வகையான கொழுப்பு என்ற கேள்வி முக்கியமானது. உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இருவகைக் கொழுப்புகள் உள்ளன. இரண்டுமே ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உடலுக்குத் தேவை. கெட்ட கொழுப்பை உடலில் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கும்போது அது, உயர் ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது.

நல்ல கொழுப்பை உடலில் சேர்க்கும்போது அது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்டிவிட்டு உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொண்டுவருகிறது. உதாரணமாக, அவகேடோ, ஆலிவ் ஆயில், நட்ஸ் போன்றவற்றில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவற்றை தாராளமாக உண்ணலாம். முட்டை, பால், மாமிசம் ஆகியவற்றை அளவாக உண்ணலாம். கொழுப்பை உண்ணக் கூடாது என்பதற்காக கார்போஹைட்ரேட்டை அதிகம் உண்டாலும் எடை அதிகரிப்பு நிகழவே செய்யும். எனவே, ஆரோக்கியமான விகிதத்தில் நல்ல கொழுப்பை உடலில் சேர்ப்பதே நல்லது.

உணவு விதி


ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டீடாக்ஸ். இது ஒரு பொன் விதி. நம் உடலில் சுவாசிக்கும் காற்று மூலமும், பருகும் நீர் மூலமும், உண்ணும் உணவு மூலமும் எண்ணற்ற கழிவுகள் சேர்கின்றன. இவை அனைத்துமே நமது சிறுநீர், வியர்வை மற்றும் மலத்தின் மூலம் வெளியாவதில்லை. இதில் கணிசமான கழிவு நம் உடலிலேயே தங்கிவிடுகிறது. எனவே, ஒவ்வொருவரும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டீடாக்ஸ் எனப்படும் நச்சு நீக்கம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.

டீடாக்ஸ் செய்வதற்கு என்று சிறப்பான உணவுகள் சில உள்ளன. அவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் நம் ரத்தம் முதல் உள்ளுறுப்புகள் வரை அனைத்தும் சுத்தமாகின்றன. இதனால், உடலில் வளர்சிதை மாற்றம் சிறப்பாகிறது. மொத்த உடலும் புத்துணர்வடைகிறது. எனவே, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டீடாக்ஸ் செய்ய மறக்காதீங்க.

- இளங்கோ கிருஷ்ணன்