தமிழகத்தில் களமிறங்கும் பெண் வேட்பாளர்கள்
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதுமிருந்து 61 பெண்கள் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றனர். இதுதான் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்திருக்கிறது.
 ஆனால் மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பார்க்கும்போது பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 7 பெண் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இடைத்தேர்தலில் போட்டியிட 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தான் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் இரண்டு பெண் வேட்பாளர்களாக கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் இடம்பெற்றுள்ளனர். இதில் தூத்துக்குடியில் கனிமொழியும், தென்சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி.யான மரகதம் குமரவேல் மீண்டும் காஞ்சிபுரம் (தனி) தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பெண் வேட்பாளர்களாக திருச்சியில் சாருபாலா தொண்டைமான், நாகப்பட்டினத்தில் செங்கோடி, தென்காசி (தனி) பொன்னுத்தாய் ஆகிய மூன்று பெண்கள் களம் இறங்குகின்றனர்.
சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வில் பெண் வேட்பாளர்கள் இடம்பெறவில்லை. அ.தி.மு.க.வில் ஓசூர் தொகுதிக்கு ஜோதி பாலகிருஷ்ண ரெட்டியும், நிலக்கோட்டை தனி தொகுதிக்கு எஸ்.தேன்மொழி என இரண்டு பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.ம.மு.க கழக குடியாத்தம் தொகுதி பெண் வேட்பாளராக ஜெயந்தி பத்மநாபன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி 50% அளித்து 20 பெண் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. 2008-ம் ஆண்டு தேர்தலில் இருந்தே அரசியலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட மேடைகளிலும், தங்கள் அறிக்கைகளிலும் முழங்கினாலும், வேட்பாளர்கள் அறிவிப்பின்போது அதைச் செய்வதில்லை என்கிற கண்டனக் குரல்களும் ஆங்காங்கே பரவலாய் கேட்கத் தொடங்கியுள்ளன. பெண்களின் குறைந்தபட்ச குரல்களாவது நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.
 * நம் நாட்டின் மொத்த மக்களவை தொகுதிகள் 545. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 543 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெறும். * பொதுத் தேர்தலில் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். * மொத்த மக்களவைத் தொகுதிகளில் 131 தொகுதிகளில் பட்டியல் சாதிகளுக்கு 84 தொகுதிகளும், 47 தொகுதிகள் பட்டியல் பழங்குடி மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தனித் தொகுதிகள் எனப்படும். * பெண்கள் மிகக் குறைந்த அளவிலே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். * தேர்தலில் வாக்களிப்பதில் பெண் வாக்காளர்களின் பங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
- மகேஸ்வரி நாகராஜன்
|