அரைச்சு விட்ட சாம்பாருக்கு என் சொத்தையே எழுதி வச்சிடுவேன்!



காஸ்ட்யூம் டிசைனர் தக்‌ஷா

‘‘சாப்பாடுன்னா எனக்கு சாலையோர உணவுகள் தான் நினைவுக்கு வரும். பெரிய பெரிய ஓட்டலில் சாப்பாட்டுக்காக அரை மணி நேரம் காத்து இருந்து அதன் பிறகு சாப்பிடுறது எல்லாம் எனக்கு வேலைக்கு ஆகாத காரியம். கண்ணுல பார்த்ததை வாயில் போட்டுக்கணும்’’ என்கிறார் தமிழ் சினிமாவில் முன்னணி காஸ்ட்யூம் டிசைனரான தக்‌ஷா. தக்‌ஷாவின் தாத்தா சி.கே.கண்ணன் அவர்களும் தமிழ் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனர்தான். தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இருவருக்கும் இவர் தான் ஆஸ்தான உடை அலங்கார நிபுணர். இவரின் சகோதரர் சி.கே.மாணிக்கம் திருவிளையாடல் படத்திற்கு உடை அலங்காரம் செய்துள்ளார்.

அவரை தொடர்ந்து அந்த குடும்ப வாரிசான தக்‌ஷா தற்போது பல திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு உடை அலங்காரம் செய்து வருகிறார். ‘டிஷ்யூம்’... படத்தில் துவங்கி இவரின் பயணம் பிரிவோம் சந்திப்போம், மொழி, பீட்சா, மீகாமன், வேதாளம்...என இவரின் பயணம் தொடர்ந்து வருகிறது. ஆடை அலங்காரத்திற்காக பல ஊர்கள் சுற்றித்திரியும் தக்‌ஷா தன் உணவு பயணத்தையும் பகிர்ந்து கொண்டார். ‘‘தமிழகம், வட இந்தியா, தாய்லாந்து, சீனா, கொலம்போ, பாங்காக், சிங்கப்பூர்ன்னு பல இடங்களில் பயணம் செய்து இருக்கேன். ஒவ்வொரு ஊரின் உணவிலும் அவர்களின் பாரம்பரியத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

மும்பையில் ஒரு தெருவின் பெயர் ‘காவ் களி’. ஹிந்தியில் காவ் என்றால் சாப்பிடு, களின்னா தெரு. மாலை ஆறு மணிக்கு தான் இயங்க ஆரம்பிக்கும் அந்த தெருவில் வழிநெடுக்கும் பலவிதமான உணவுகளை பார்க்கலாம். தோசை, சப்பாத்தி, பாவ் பாஜி, மசாலா சோடா, சாட் உணவுகள்னு விதவிதமா இருக்கும். இங்கு மட்டும் இல்லை வெளிநாடுகளிலும் குறிப்பா ஆசியா நாடுகளான சிங்கப்பூர், பாங்காக், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் சாலையோர அசைவ உணவுகள் பிரபலம். அங்க உணவுகள் எல்லாம் ரொம்ப கடினமா இருக்கும். கரப்பான் பூச்சி, எலி பூச்சி, ஆக்டோபஸ், ஆமை, வெட்டுக்கிளி, தவளை, பாம்புன்னு வகைவகையா இருக்கும்.

தவளைய அப்படியே முழுசா எண்ணையில் பொரிச்சு குச்சியில் குத்தி தருவான். அதை எல்லாம் நம்மால சாப்பிடவே முடியாது. அங்கு சாத்தேன்னு ஒரு உணவு ரொம்ப ஃபேமஸ். இங்க பார்பக்யூ செய்வது போல், அடியில் கங்கு இருக்கும். அதன் மேல் இரும்பு வலை வச்சு அதில் குச்சியில் குத்தி சிக்கன், ஃபிஷ், பிரான் தருவாங்க ரொம்பவே நல்லா இருக்கும். பாங்காக்கில் பாம்பு, மீன், நண்டு, ஆமை எல்லாம் உயிரோட இருக்கும். நாம சொல்வதை சமைச்சு தருவாங்க. என்னதான் வெளிநாடுகளில் இது போன்ற உணவுகளை நாம் சாப்பிட்டாலும், வீட்டுச் சாப்பாட்டுக்கு அடிச்சுக்கவே முடியாது.

நான் கூட்டுக்குடும்பத்தில் தான் வளர்ந்தேன். பாட்டி, அம்மா, சித்தி, மாமி எல்லாருமே சூப்பரா சமைப்பாங்க. என் அம்மாவின் சாம்பார் சாதம், புளியோ தரை, தயிர்சாதம், உருளைக்கிழங்கு வறுவலுக்கு ஈடு இணையே கிடையாது. இது ஒரு பக்கம்னா பூண்டுக் குழம்பு, உருண்டை குழம்பு, மொச்சை குழம்புன்னு மறுபக்கம்’’ என்றவரின் வீட்டில் பல சினிமா பிரபலங்கள் உணவருந்தியுள்ளனராம்.‘‘என்னோட தாத்தாக்கள் எல்லாரும் சினிமாவில் உடை அலங்காரம் செய்தாங்க. அதனால வீட்டுக்கு தினமும் யாராவது டிரையல் பார்க்க வருவாங்க. மதியம் வந்தாங்கன்னா முதல்ல சாப்பாடு பிறகு எங்க வீட்டு திண்ணையில் ஒரு நல்ல தூக்கம், மாலை டிகிரி காபி சாப்பிட்டு தான் உடையே டிரையலே பார்ப்பாங்க.

இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு சாப்பாடு பிடிக்கும். ஜெய்சங்கர் சாருக்கு நண்டு தொக்கு பிடிக்கும். மஞ்சுளா அம்மா வந்தா கருவாடு குழம்பு, பாக்யராஜ் மாமாவுக்கோ எறால் தொக்கு பிடிக்கும். எங்க வீட்டில் பீஃப், போர்க் தவிர காடை, கவுதாரி, முயல், மட்டன், மீன், சிக்கன்...ன்னு எல்லாமே செய்வாங்க. ஒவ்வொரு உணவையும் சிரமம் எடுத்துதான் செய்வாங்க. மசாலா பொடி கூட அப்பப்ப அரைச்சு சேர்ப்பாங்க. நாங்க சுமார் 30 பேர், கிரைண்டர்ல தான் மசாலாவே அரைப்பாங்க. தினமுமே விழாவுக்கு சமைப்பது போல் தான் தடபுடலா சமைப்பாங்க. வாரத்தில் செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளை தவிர மற்ற எல்லா நாளும் அசைவம் தான். அதுவும் எங்களுக்கு காலை உணவுடன் முட்டை கண்டிப்பா இருக்கும்.

எனக்கு முட்டை ஹாஃப் பாயில்டு தான் பிடிக்கும். அம்மாவின் அரைச்சு விட்ட சாம்பாருக்கு நான் என் சொத்தையே எழுதி வச்சிடுவேன். அவங்க எறால் குழம்பை நான் வேற எங்கேயும் சாப்பிட்டது இல்லை. ஒவ்வொரு குழம்புக்கும் தனி மசாலா ரெசிபி உண்டு. அதன் படி தான் செய்வாங்க’’ என்று கூறும் தக்‌ஷாவிற்கு பல விதமான உணவுகளை எக்ஸ்புளோர் செய்வதில் விருப்பமாம். ‘‘புதுப்புது உணவுகளை எக்ஸ்புளோர் செய்யும் போது ரொம்ப திரில்லிங்கா இருக்கும். சிலோன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், பாங்காக், தாய்லாந்து போன்ற நாடுகள் சுத்தி இருக்கேன். சீனாவிற்கு நானும் என் மகனும் போன போது, நிறைய சாப்பிட்டோம்.

அங்குள்ள விதவிதமான உணவுகளை பார்க்கும் போது நமக்கு தலையே சுத்தும். அசைவ உணவு எப்படியோ அதே போல் சைவ உணவினையும் சாப்பிடு வாங்க. எல்லாம் அரைவேக்காடு தான். சிலோன் சமையல் வேற மாதிரி இருக்கும். அவங்க சாப்பாடு சாப்பிட்டா உச்சி முடி நட்டுக்கிட்டு நிக்கும். அவ்வளவு காரமா இருக்கும். மிளகாய அரைச்சு அந்த பேஸ்டை தான் உணவில் சேர்ப்பாங்க. ஆசியா நாடுகளுக்கு போகும் போது சாலையோர உணவினை சாப்பிட தவறமாட்டேன். அவங்களிடம் தான் அந்த ஊரின் பாரம்பரியம் தெரியும். அரசியல் முதல் அன்றைய டெக்னாலஜி வரை பேசுவாங்க. அங்க உணவின் விலையும் குறைவு.

நம்ம ஊரு காசு ரூ.100க்கு அங்க மூணு வேலையும் சாப்பிடலாம். சிங்கப்பூரில் ஒரு சாலையோர கடையில் நூடுல்ஸ் நல்லா இருக்கும். நான் அங்க போகும் போது அதை சாப்பிடாம வரமாட்டேன். அதன் விலை 2 டாலர் தான். வயிறு முட்ட சாப்பிடலாம்’’ என்றவர் தமிழ்நாட்டையும் ஒரு வலம் வந்துள்ளார். ‘‘தமிழ்நாட்டில் நான் சாப்பிடாத இடமே இல்லை. எங்க வீட்டுல சாமி பைத்தியம். வருஷத்துல இரண்டு மாசம் வேன் புக் செய்து கோயில் டூர் போடுவாங்க. அப்ப சாலையோர கடைகளில் தான் சாப்பிடுவோம். பாட்டி ஒரு அடுப்பு வச்சு, இட்லி சுடுவாங்க. அதுக்கு காரச்சட்னி. கலப்படம் இல்லாம அவ்வளவு சுவையா இருக்கும்.

அவங்களின் அன்றாட வாழ்வாதாரம் என்பதால் உணவும் ஃப்ரஷ்ஷா இருக்கும். திருநெல்வேலியில் உப்புக்கடம், மீன் ஃபேமஸ். அதே போல் மதுரைன்னா கோனார் மெஸ் கறிதோசை.. இப்படி ஒவ்வொரு கடையா நிறுத்தி நிதானமா சாப்பிடுவோம். எனக்கு கேரளா உணவுன்னா ரொம்ப பிடிக்கும். ஸ்டூ ஆப்பம், புட்டு, கடலைக்கறி சாப்பிடாம வரமாட்டேன். ஆந்திரான்னா பருப்பு பொடி, கோங்குரா சட்னி, பெசரட்டு, பெங்களூர் நீர் தோசை மற்றும் அங்குள்ள கான்டினென்டல் உணவு ரொம்ப பிடிக்கும். மும்பாய், தில்லி, கொல்கத்தாவுல சாட் உணவுகள் அள்ளும். குறிப்பா கொல்கத்தா சாட் மற்றும் மீன் உணவுகள் ரொம்ப ஃபேமஸ்.

தில்லியில் மண்பானையில் தான் தயிர் தருவாங்க. வெண்ணை போல இருக்கும். லசியும் ஃபேமஸ். அங்கு கிச்சடின்னு அரிசியில் செய்யும் பருப்பு சாதம் கூழ் மாதிரி இருக்கும். ரொம்ப ருசியா இருக்கும். மும்பையில் அவல் சார்ந்த உணவுகள், சாபுதானா வடை...ன்னு சொல்லிக் கொண்டே போகலாம்’’ என்றவரின் ஆல்டைம் பேவரெட் உணவுகளை ஒரு பட்டியலே இட்டார். ‘‘எல்லா நேரமும் அம்மா சமைக்கும் சாம்பார் மற்றும் சக்கரவள்ளிக் கிழங்கு, உருண்டை குழம்பு, மொச்சை மற்றும் பூண்டுக் குழம்பு, அசைவத்தில் இறால் தொக்குக்கு இந்த உலகமே ஈடு கிடையாது. இறால் தொக்கில் அந்த தொக்கு சுருண்டு இருக்கும்.

அந்த தொக்கை மட்டுமே ஸ்லோவா சமைப்பாங்க. அதன் பிறகு இறால் போடுவாங்க. கருவாட்டு குழம்பு, சுறாப்புட்டு மற்றும் நண்டு ரசம் எல்லாம் வித்தியாசமா செய்வாங்க. அந்த சுவையை நாம் வெளியே சாப்பிட்டு இருக்க மாட்டோம். இப்பக்கூட நான் ஷூட்டிங் போயிட்டு வந்தாலும் அம்மா எனக்கான உணவை சமைச்சு தருவாங்க. நமக்கு பிடிச்ச உணவு சாப்பிட்டு வந்தா நம்முடைய சைக்காலஜியே மாறும். நான் அசைவ பிரியை என்பதால் அசைவ உணவுகள் அனைத்தும் சமைப்பேன். உடல் நிலை காரணமா நாலு வருஷமா சைவத்துக்கு மாறிட்டேன்.

என் உடல் நிலையை பார்த்து என் கணவரும் மகனும் ரொம்ப கவலைப்பட்டாங்க. அதனால் கண்டிப்பா என்னுடைய உணவு முறையை மாத்தணும்ன்னு நினைச்சேன். கோவையில் டாக்டர் திரேசாவின் அறிமுகம் கிடைச்சது. அவர்தான் என்னை முழுசா மாத்தி அமைச்சார். 108ல் இருந்து 65 ஆக என் எடையை குறைச்சிருக்கேன். நேச்சுரோபதி உணவு முறை மூலம், இரண்டு வேளை சமைக்காத உணவு, ஒரு வேளை மட்டும் சமைச்ச உணவுன்னு சாப்பிடுறேன். நிறைய காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், பால் கூட பாதாம் மற்றும் நிலக்கடலை பால் தான். தேவையானதை சாப்பிட்டு தேவையற்ற வார்த்தையை வெளியே விடாம இருந்தாலே ஆரோக்கியம் தான்’’ என்றார் தக்‌ஷா சிரித்துக் கொண்டே.

நண்டு தொக்கு

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 4
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேைசக்கரண்டி
மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நண்டு - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 3 மேசைக்கரண்டி.

அரைக்க :

தேங்காய் - கால் மூடி
மிளகு - 3 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை : கடாயில் எண்ணை ஊற்றி சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி சேர்த்து சுருள வதக்கவும். பிறகு நண்டு சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அரைத்த பேஸ்டை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு நன்கு சிவந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

- ப்ரியா