கண்ணம்மா கண்ணம்மா
ஒவ்வொருவருக் குமே தன் கனவு கைகூட பல்வேறான சிரமங்களைக் கடக்க வேண்டி இருக்கும். தடைகளை உடைத்து சோதனைகளை கடந்து வெற்றி இலக்கை அடைவது என்பது அத்தனை சுலபமானது அல்ல. அதிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் சவால்களை சந்திப்பதே சிரமமாக இருக்கும் போது, பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்ணான ஜோதியின் பயணம் வியக்க வைக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘றெக்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணம்மா கண்ணம்மா...’ பாடல் எல்லா ருடைய மனதையும் கவர்ந்த பாடல்.
 அதே பாடலை தன் இனிமையான குரலால் சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தியவர் ஜோதி. இவர் சென்னை அடையாறு இசைக் கல்லூரியில் டி.எம்.டி ஆசிரியருக்கான படிப்பைப் படித்து வருகிறார். ‘‘எனக்கு உங்கள மாதிரி பார்க்க முடியாது. அதை நினைச்சு நான் கவலைப்பட்டது இல்லை. ஏன்னா என்னுடைய கண்ணா என் அம்மா இருக்காங்க. சின்ன வயசில் இருந்தே எனக்கு இசை மேல் தனி ஈடுபாடு உண்டு. இசை இல்லாமல் நான் இல்ல. இசை தான் எல்லாமே எனக்கு.
என்னுடைய பார்வைக் குறைபாடு ஒரு பக்கம் என்றால் எனக்கு பேச்சும் சரியா வராது. நான் இப்ப தெளிவா வார்த்தை பிசகாமல் பாடுவதற்கு என் தாத்தா சொக்கலிங்கம் தான் காரணம். பள்ளி பாடங்களுக்கு நடுவே திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற கருத்துள்ள பாடல்களையும் சொல்லிக் கொடுத்தார். வார்த்தைகளை திரும்பத் திரும்ப உச்சரிக்க பழகினார். ஒரு டம்ளரும் சில்லரை காசுகளும் தான் எனக்குள் இசை மேல் ஆர்வத்தை தூண்டியது. எனக்கு டம்ளரில் சில்லரை காசுகளை போட்டு விளையாட பிடிக்கும். அது எழுப்பும் ஒலி எனக்குள் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
தாத்தா சொல்லி கொடுத்த பாடல்களை இசையுடன் சேர்த்து பாட தொடங்கினேன். சில மாதங்களுக்கு முன் தாத்தா உடம்பு சரி இல்லாம இறந்துட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பெரிய பேரிழப்பு இது. என் தாத்தாவின் வேலைய அம்மா எடுத்துக்கிட்டாங்க. எனக்கு எல்லாமே அவங்க தான். ஒரு தனி மனிஷியா என்னை கவனிச்சுக்கிறாங்க. என் தாத்தா சொன்னது போலஇந்த உலகம் முழுக்க என் குரல் பிரதிபலிக்க அவங்க எனக்காக ஏறாத மேடையும் இல்ல, அசிங்க படாத இடங்களும் இல்ல. எனக்காக ரொம்பவே கஷ்டப்படுறாங்க.
கண்டிப்பா என் அம்மாவுக்காக ஒரு பெரிய பாடகியாவேன்’’ என்ற ஜோதி பாட்டு தவிர கீபோர்ட் மற்றும் வயலினும் வாசிப்பாராம். ‘‘இசை மேல் இருந்த ஆர்வத்தால் 13 வயதில் அடையாறு இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். இசையை பயின்று வருகிறேன். இசை தெரியும். ஆனா சினிமா பாடல் என்றால் என்னவென்றே தெரியாது. பல கச்சேரி மற்றும் கோவில் விழாக்களில் எல்லாம் சாமி பாட்டுக்களை மட்டுமே பாடி வந்தேன். அதன் மூலம் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு தேடி வருகிறது. பாடுவதற்காகவும் பல மேடைகளும் கிடைத்து வருகிறது.
 இரண்டு முறை மலேசியாவில் நடை பெற்ற நிகழ்ச்சியிலும் பாடியிருக்கேன். அந்த சமயத்தில் தான் ‘றெக்க’ படப்பாடல் ‘கண்ணம்மா கண்ணம்மா’ பிரபலமாச்சு. அந்தப் பாடலை நான் பாடினா நல்லா இருக்கும்னு என் கல்லூரி சீனியர் சுபாஷ்ணி சுப்பிரமணியம், என்னை பாடச் சொல்லி பதிவு செய்தார். ‘சென்னை மீம்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வாக போட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாச்சு. அதை பார்த்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘அடங்காதே’ படத்தில் ‘நிலவின் நிறமும் வண்ணம் கொள்ள... பாடல் பாட வாய்ப்பு கொடுத்தார்.
‘த லிட் லைட்’ அமைப்பை சேர்ந்த பரத் என்பவரும் மாற்றுத் திறனாளிக்கான நிகழ்ச்சிகளில் பாடுவதற்கான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தருகிறார்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் தாயார் கலைச்செல்வி. ‘‘ஜோதிக்கு 18 வயசு. ஆனாலும் அவ 10 வயசு குழந்தை மாதிரி தான் நடந்துப்பா. நாம பேசுறதை கூட அவ புரிந்து கொள்ள கொஞ்சம் நேரமாகும். அவளால நம்மை போல சகஜமா பேசமுடியாது. ஆனா பாட்டுன்னா, அவ மெய் மறந்திடுவா. தினமும் மூன்று மணி நேரம் இசை பற்றி குறிப்பு எடுப்பா. அவள் பாடும் பாடலை ரெக்கார்ட் செய்து தெரிந்தவர்களிடம் அனுப்பி சந்தேகம் கேட்டு அதில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்வாள்.
பலருக்கு சொல்லியும் தருகிறாள். நான் இருக்கும் வரை அவளைப் பார்த்துக் கொள்வேன். எதிர்காலத்தில் அவ யாரையும் நம்பி இருக்கக்கூடாது. அவளுடைய வாழ்க்கையை அவள் பார்த்துக் கொள்ளணும். பார்வை இல்லை என்றாலும் தன் சொந்தக் காலில் அவள் நிக்கணும்’’ என்று சொல்லும் போது ஒரு தாயின் பரிதவிப்பை உணர முடிந்தது. என்ன வாழ்க்கை என்று குறை சொல்லிக் கொண்டு இருக்கும் பலரின் மத்தியில் தன் குறையினைப் பொருட்படுத்தாமல், சாதிக்க நினைக்கும் ஜோதி எல்லோருக்கும் ஒரு அடையாளமாக திகழ்வார்.
- ஆனந்தி ஏ.டி.தமிழ்வாணன்
|