விரிதியானா
பெண் மைய சினிமா
திரைப்படம் மிகச் சுலபமாக மனிதனோடு தொடர்பு கொள்ளக்கூடிய கலை. அது வெறும் பொழுதுபோக்காக மலினப்பட்டு போகக்கூடாது. நம் சிந்தனையைக் கிளறி புதிய பாதைகளை திறக்க வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ‘விரிதியானா’.
 மத நம்பிக்கையையும், அதற்காக மனிதன் இழப்பதையும் ஒரு பெண்ணின் வாழ்வினூடாக அதீத யதார்த்தத்துடன் அலசுகிறது இப்படம். சந்தர்ப்ப சூழ்நிலையால் கன்னியாஸ்திரியாக மாறிய விரிதியானா ஒரு கிறிஸ்துவ மடத்தில் வாழ்ந்து வருகிறாள். இளமையும் அழகும் ததும்பும் அவளுக்கு ஒரு மாமா இருக்கிறார். சிறு வயதில் இருந்து அவளுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தவர் அவர்தான். அதனால் அவர் உரிமையுடன் விரிதியானாவை வீட்டுக்கு வந்து தன்னுடன் தங்குமாறு கேட்கிறார். ஆனால், அதற்கு விரிதியானா மறுக்கிறாள்.
கன்னியாஸ்திரி மடத்திலுள்ள மூத்த சகோதரியின் அன்பான வேண்டுகோளுக்குப் பணிந்து மாமாவின் வீட்டிற்குச் செல்ல சம்மதிக்கிறாள் விரிதியானா. மாமாவிற்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு விரிதியானாவின் வயதிருக்கும். அவன் அருகில் இல்லை. மனைவியை இழந்து தனிமையில் வாடும் அந்த மாமா விரிதியானாவைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். அவளது இளமை அவரை தடுமாற வைக்கிறது. ஒருமுறை விரிதியானாவுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளோடு பாலியல் உறவுகொள்ள முயற்சி செய்கிறார்.
ஆனால், அவரது மனசாட்சி தடுத்து விடுகிறது. மாமா தன்னிடம் அப்படி நடந்துகொண்டதை, திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிந்த விரிதியானா, கோபத்துடன் வீட்டை விட்டு மடத்திற்கு கிளம்புகிறாள். செல்லும் வழியில் மாமா தற்கொலை செய்துகொண்ட தகவல் அவளுக்குக் கிடைக்கிறது. தன்னால்தான் மாமா தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றவுணர்வு கொள்கிறாள். குற்றவுணர்வில் இருந்து பரிகாரம் தேட அறப்பணியில் ஈடுபடுகிறாள். பிச்சைக்காரர்களை வீட்டிற்கு அழைத்து வந்து பக்கத்தில் உள்ள மாமாவின் எஸ்டேட்டில் தங்க வைக்கிறாள்.
அவர்களுக்கு உணவு, உடை என்று வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தருகிறாள். இதை மாமாவின் மகன் கண்டிக்கிறான். விரிதியானா தன் உறவினர்களுடன் வெளியே சென்ற நேரம் பார்த்து பிச்சைக்கார்கள் வீட்டிற்குள் புகுந்து, மது அருந்தி, வீட்டை நாசமாக்கிவிடுகின்றனர். பிச்சைக்காரர்கள் வீட்டை ஒரு சத்திரமாக மாற்றிக்கொண்டு இருக்கும் நேரத்தில் வெளியே சென்ற விரிதியானாவும், மாமாவின் மகனும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். பிச்சைக்காரர்கள் விரிதியானாவுடன் வந்தவரைத் தாக்கிவிட்டு, அவளை வன்புணரும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
 அப்போது காவல்துறை அங்கே வந்து விரிதியானாவையும், மாமாவின் மகனையும் பிச்சைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. இறுதியில் விரிதியானா மாமாவின் மகனின் அறைக்குச்சென்று எல்லோரையும் போல வாழ்க்கை என்ற சீட்டு விளையாட்டில் ஈடுபடுத்திக்கொள்வதோடு படம் முடிகிறது. படத்தில் ஓர் அற்புதமான காட்சி. சாலையில் ஒரு வண்டி சென்று கொண்டிருக்கும். அந்த வண்டியின் அடியில் ஒரு நாயைக் கட்டியிருப்பார்கள். வண்டி ஓடும்போது ஓர் அடிமை போல அந்த நாயும் வண்டியுடன் ஓடிக்கொண்டே இருக்கும்.
அந்த நாயின் மேல் கரிசனம் கொண்ட ஒருவன் அதிக விலை கொடுத்து அந்த நாயை வாங்குவான். அதை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவித்து சுதந்திரமாக கொடுத்துவிட்டதாக மகிழ்வான். அப்போது அவனை கடந்து இன்னொரு வண்டி செல்லும். அதன் அடியிலும் ஒரு நாய் கட்டப்பட்டு இருக்கும். இதே மாதிரி விரிதியானா பிச்சைக்காரர்களை அழைத்து வந்து தன் எஸ்டேட்டில் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எல்லாமும் செய்து கொடுத்து, அவர்களின் மீது அன்பாக இருந்தாலும் அவர்கள் விரிதியானாவின் மீது திரும்ப காட்டுவது நன்றி உணர்வோ, அன்பிற்கான நெகிழ்ச்சியோ, மனித நேயமோ இல்லை.
மாறாக விரிதியானாவை வன்புணர முயல்கிறார்கள். அவளின் வீட்டை நாசமாக்குகிறார்கள் மற்றும் சிலுவையை கைப்பிடியாக கொண்ட கத்தி, மத ஆராதனை பாடலுக்கு நடுவே காம களியாட்டமும், மது விருந்தும், இயேசுவின் முள் கிரீடத்தை தீயில் இடுதல் என்று படம் முழுவதும் எதிராக இருந்தாலும், பெண்களின் நிலையையும் வெளிப்படையாக பதிவு செய்கிறார் இயக்குனர் லூயி புனுவல்.
ஆம்; விரிதியானா போன்ற இளம் அப்பாவி பெண்கள் ஏன் தன்னை மதம் சார்ந்த அறப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்? ஏன் அவர்கள் மத கோட்பாடுகளுக்காக தங்களுடைய உண்மையான இயல்புகளை, உணர்வுகளைத் தியாகம் செய்ய வேண்டும்? ஏன் எல்லோரையும் போல அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழக்கூடாது? மதத்திற்குள் அவர்களை யார் இழுத்து கொண்டுவந்தது? அங்கே கன்னியாஸ்திரிகளாக இருப்பவர்கள் எல்லாம் யார் என்று விரிதியானாவின் மூலம் பல கேள்விகளை அடுக்குகிறார் லூயி புனுவல்.
த.சக்திவேல்
|