செல்லுலாய்ட் பெண்கள்
பா.ஜீவசுந்தரி-40
கண்களில் காந்தம் மின்ன கணீர் குரலில் பேசிய கம்பீர நடிகை சி.டி. ராஜகாந்தம்
மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என திரும்பிப் பார்க்க வைக்கும் பளிச்சிடும் காந்தக் கண்கள், பளீரிடும் வெள்ளைத்தோல் எல்லாம் இல்லை. அதனால் ஒரு பாதிப்பும் இல்லை என்பது போன்ற பாவனை, அண்ணாந்து பார்க்க வைக்கும் நெடுநெடு உயரம், கம்பீரம் பொருந்திய கணீர் குரல், ஏற்று நடிக்கும் பாத்திரம் நகைச்சுவை என்றாலும், வில்லி வேடமானாலும், குணச்சித்திரம் என்றாலும் வெகு யதார்த்தமான நடிப்பால் தப்பாமல் அதற்கு நியாயம் செய்தவர்.
 இந்தத் தலைமுறையின் நினைவிலிருந்து முற்றிலும் விலகிப் போன ஒரு நடிகை. ஊடகங்களின் மொழியில் சொல்வதென்றால் பழம் பெரும் நடிகை. 50களிலும் பல படங்களில் நடித்தவர். இப்போதும் தொலைக்காட்சியில் பெரும்பாலான பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் இவரைப் பார்க்க முடியும். காந்தம் போல் கவர்ந்திழுக்கும் நடிப்புக்குச் சொந்தக்காரர். பெயரிலும் காந்தம் உண்டு. அவர் நடிகை சி.டி.ராஜகாந்தம். அன்று முதல் இன்று வரை நகைச்சுவை வளம் குன்றாத தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிக, நடிகையர் மிக யதார்த்த நடிப்பை உலவ விட்டுக் கொண்டிருப்பது பெரும் ஆறுதல்.
அப்படி ஒரு நகைச்சுவை நடிகையாகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகி, பின்னர் வில்லத்தனம் நிரம்பிய பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தவர், இறுதிக்காலம் வரை வில்லியாகவே மாறினார். தலை முழுவதும் இலவம் பஞ்சாய் நரைத்து வெளுத்த காலத்திலும் வயது முதிர்ந்த வில்லியாக சின்னத்திரையிலும் கோலோச்சினார். ஏறத்தாழ ஐம்ப தாண்டுகளைக் கடந்து திரையுலகில் வலம் வந்தவர்.
ஆரம்பத்திலேயே கருகிய மண வாழ்வு
1917 ஜனவரி 5 அன்று கோவை யில் பிறந்தவர் சி.டி. ராஜகாந்தம். தந்தை திரவியம் ஆசாரி; தாயார் மருதாயி. குழந்தைப் பருவத்திலேயே அவரது குரல் கணீரென்று ஒலிக்குமாம். பேச்சும் கூட துடுக்கும் துடிப்பும்தான். தந்தையார் திரவியம் ஆசாரிக்கு கோவையில் தோல் மண்டி வியாபாரம். மகளுக்கு ஐந்து வயதான நிலையில் திரவியம் ஆசாரி மரணமடைய, குடும்பம் தத்தளிக்க ஆரம்பித்தது.
ராஜகாந்தத்தின் பள்ளிப் படிப்பு எட்டாம் வகுப்புடன் நின்று போனது. படிக்கும்போதே அக்கால வழக்கப்படி 15வது வயதில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் அப்புக்குட்டி. வாழ்க்கை மிகச் சாதாரணமாக இயல்பாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில், மிகக் குறைந்த காலமே கணவருடன் வாழ நேர்ந்த துர்பாக்கியமான நிலை. மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கணவர் இவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அத்துடன் முடிவுக்கு வந்தது அந்த மண வாழ்க்கை.
ஜானகியால் கிடைத்த நடிப்புலக வாழ்க்கை
அப்போதைய பிரபல நாடக நடிகை கள்ளிக்கோட்டை எஸ்.ஆர். ஜானகி, 1933 ஆம் ஆண்டு நாடகம் நடத்துவதற்காகத் தன் நாடகக் குழுவினருடன் கோவை வந்தவர் மருதாயி அம்மாள் வீட்டில் தங்கியிருந்தார். பின் நாட்களில் இவர் திரைப்படங்களிலும் நடித்துப் பேர் பெற்றவர். (கண்களை உருட்டி விழிக்கும் ‘ஊமை விழிகள்’ பாட்டி என்று இவரைச் சொன்னால் இந்தத் தலைமுறைக்கு எளிதாகப் புரியும்). அங்கு தங்கியிருந்த காலத்தில் ராஜகாந்தத்தின் கம்பீரமான உருவம் மற்றும் குரலால் கவர்ந்திழுக்கப்பட்டு மயங்கியவர், அவரது தாயார் மருதாயி அம்மாளின் அனுமதி பெற்று தன் நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார்.
‘தூக்குத்தூக்கி’ நாடகத்தில் தன்னுடைய தோழியாகவும் நடிக்க வைத்ததன் மூலம் அவரை நாடக மேடைக்கு அழைத்து வந்தவர். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த ராஜகாந்தம், ஒரு பெண் குழந்தைக்குத் தாயான பின் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அப்போதெல்லாம், நாடகக் குழுவுக்குள் இயங்காமல், அழைக்கும் நேரங்களில் மட்டும் வந்து சில பாத்திரங்களில் நடித்துக் கொடுத்து விட்டுப் போனார். ஒரு நாடகத்தில் நடித்தால் ஒரு ரூபாய் ஊதியம் கிடைக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் நடிப்பதன் மூலம் கிடைத்த மூன்று ரூபாய் வருமானம் அவருக்கும் அவரது மகளுக்கும் வாழ்வாதாரமாக இருந்தது.
ஒரு நாடகத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் பெற்றவர் பின்னாளில் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அளவுக்கு உயர்ந்தார். நாயகன், நாயகி, மற்ற கதாபாத்திரங்கள் செந்தமிழிலும், அடுக்கு மொழியிலும் சரளமாக வசனங்களைப் பேசிக் கொண்டிருக்க, நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டும் இயல்பான பேச்சு வழக்கிலும், கொச்சை மொழியிலும் அப்போது வசனம் பேசினார்கள். மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என்றாலும், சோக ரசம் சொட்டச் சொட்டப் பேச வேண்டிய காட்சிகள் என்றாலும் நாயகனும் நாயகியும் அதீத உணர்வுகளைக் கொட்டிக் கொந்தளிக்க வேண்டியிருந்தது.
ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக நகைச்சுவைப் பாத்திரங்கள் போகிறபோக்கில், வீட்டுக்குள் பேசுவது போன்ற தொனியில் எளிதாக வசனங்களைப் பேசிக் கடந்ததுடன், அந்தரத்தில் பறக்காமல் நம்முடன் சரி சமமாகப் பேசி நடந்து சென்றார்கள். அப்படித்தான் இயல்பான மொழி நடையில் அலட்டிக் கொள்ளாமல் வசனம் பேசி, அப்போதே நகைச்சுவை நடிகையாகவும் நடிக்கத் தொடங்கி விட்டார். நாடக மேடைப் புகழும் பின்புலமும் ராஜகாந்தத்தை சினிமாவுக்கு அழைத்து வந்தன.
1939ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமும் சேலம் ஸ்ரீகிருஷ்ணா பிலிம்ஸும் இணைந்து ‘மாணிக்க வாசகர்’ என்ற படத்தைத் தயாரித்தனர். இப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரம் ஒன்றில் ராஜகாந்தம் அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வந்தாலும் அப்போது சகலகலா வல்லவராக அறியப்பட்ட காளி என். ரத்தினத்துடன் ஜோடி சேரும் வரை ராஜகாந்தத்தின் சினிமா புகழ் சற்று மங்கித்தான் இருந்தது. திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் தனக்கு வாழ்வளித்த நாடகத்தை மறந்து விடாமல், தானே சொந்தமாக ஒரு நாடகக் குழுவை யும் வைத்து நடத்தியவர்.
 அசல் ஜோடிக்கு இணையான புகழ் பெற்ற திரை ஜோடி
அப்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஜோடி கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. கலைவாணர் தனது குழுவில் காளி என்.ரத்தினம், எம்.ஆர். சாமிநாதன், டி.எஸ்.துரை ராஜ் போன்ற திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்தார். ஆனால், கலைவாணர் என்.எஸ்.கே, டி.ஏ.மதுரம் போல் அடுத்து ஒரு ஜோடி பிரபலமாக அமையவில்லை. இக்குறையைப் போக்க எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘உத்தமபுத்திரன்’ படத்தில் காளி என். ரத்தினத்துடன் சி.டி. ராஜகாந்தம் ஜோடி சேர்ந்தார்.
பின்னர் 1940-கள் முழுவதும் இந்த ஜோடி கலைவாணர் மதுரம் ஜோடிக்கு இணையாக ‘ரத்ன - காந்தம்’ என திரையை ஆக்கிரமித்தனர். ‘மஞ்சள் பத்திரிகையாளர்’ லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிறைக்குச் செல்ல நேர்ந்த பின் கொஞ்சம் அதிகமாகவே ரத்னம் காந்தம் ஜோடிக்கு வாய்ப்புகள் குவிந்தன. அந்த ஜோடி இல்லாத குறையை இந்த ஜோடி ஈடு செய்தது என்றே சொல்லலாம். ரத்னம் காந்தம் ஜோடி எல்லாப் படங்களிலும் அற்புதமான பாடல்களையும் பாடினர். அப்போது ரத்னத்தின் முகத்தில் தெரியும் சேட்டைகளும் காந்தத்தின் எதிர்வினைகளும் பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை.
அட்டகாசமாய் இணைந்த சபாபதியும் குண்டு முத்துவும்
‘சபாபதி’ படத்தில் ரத்னம் வேலைக்காரர். ஆனால், வீட்டு மனிதர்களைப் போல உரிமையும் உறவுமாக அந்த வீட்டுக்குள் வளைய வருவார். அவர் பெயரும் சபாபதி. இன்னொரு சபாபதி டி.ஆர். ராமச் சந்திரன், வீட்டின் சின்ன எஜமானர். அவர் கூற்றின்படி இவர் ‘அப்பா சபாபதி’. வேலை யாளாக நடித்து ரத்னம் தன் நடிப்பால் ரசிகர்களின் வயிற்றைக் குலுங்க வைத்தார். ‘அப்பா சபாபதி’ டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைப்பார்கள். மணப்பெண் பத்மா வீட்டின் வேலைக்காரி குண்டுமுத்துவாக நடித்தவர் ராஜகாந்தம். எஜமானுடன் அடிக்கடி ரத்னம் அங்கு போக வர இருப்பார். எஜமானியம்மா வீட்டுத் தகவல்களைக் கூற ராஜகாந்தம் வருவார்.
அப்போதெல்லாம் ரத்னம் காதல் பார்வை வீசுவார். ராஜகாந்தம் பொய்க் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்வார். எஜமானர்கள் இல்லாத நேரம் பார்த்து, திருட்டுத்தனமாகத்தானே வேலையாட்கள் பேசிக் கொள்ள முடியும். அவ்வாறு சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் இவர்கள் இருவரிடையே ததும்பும் காதல் அலாதியானது. காந்தம் தொடர்ந்து பொய் வீம்பு காட்டியதால் இவரும், ‘உன் கழுத்தில் தாலி கட்டுகிறேனா இல்லையா பார்’ என சவால் விடுவார். அது மட்டுமல்ல, சொன்னபடியே இரவில் காந்தம் தூங்கும் வேளையில் திருட்டுத்தனமாகக் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி விடுவார். இந்தத் திருமணமும் அப்போது செல்லுபடியானது. அந்தக் காலத்தில் இப்படியும் அடாவடிக் கல்யாணங்கள் நடந்திருக்கின்றன!
கிசுகிசுக்களும் பத்திரிகைகளும்
இந்த ஜோடியின் பிரபலத்துக்குச் சான்றாக அந்தக் கால சினிமா பத்திரிகை ‘குண்டூசி’ யில் வெளியான ஒரு கேள்வி பதிலைக் குறிப்பிடலாம். ஒரு வாசகர், ரசிகர் இப்படி கேள்வி கேட்டிருக்கிறார்: கேள்வி: சி.டி ராஜகாந்தத்தின் விலாஸம் என்ன? அதற்கு ‘குண்டூசி’ பத்திரிகை இப்படி பதில் அளிக்கிறது: பதில்: C/O காளி என்.ரத்னம். இவர் எந்த ஊரில் இருக்கிறாரோ அந்த ஊர் அல்லது அதற்கு சமீபத்திய போஸ்ட். நீர் கடிதம் எழுதாமல் இருப்பதே சிறந்த மார்க்கம். திரைப்பட நடிகைகள் குறித்து, அவர்களின் சொந்த வாழ்க்கை, அந்தரங்கம் பற்றி எல்லாம் அன்றைய பத்திரிகைகள் என்ன மாதிரியான மதிப்பை வைத் திருந்தனவோ, அதற்குச் சற்றும் குறையாமல் இன்றைய பத்திரிகைகளும் அதே மதிப்பைத்தான் மாறாமல் வைத்திருக் கின்றன, அதிலும் நடிகைகள் விஷயத்தில். எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் இது மட்டும் எப்போதும் மாறாதது.
 மறக்க முடியாத பாத்திர வார்ப்புகள்
‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படத்தில் தோட்டக்காரரின் மகளாக காந்தமும், தோட்ட வேலை செய்ய வரும் கூலியாளாக ரத்னமும் நடிப்பார்கள். இவர்கள் இருவருக்குள் ஏற்படும் காதல், ஆம்! காதலிக்கிறேன் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், அதை மறைக்க இருவரும் செய்யும் பிரயத்தனங்கள், பின் அதையெல்லாம் மீறி, வெளிப்படும் காதலும் ரசிக்கத்தக்கவை. ‘மனோன்மணி’ படத்திலும் இருவரும் இணைந்து கலகலக்க வைத்தனர். ‘கிருஷ்ணபக்தி’ திரைப் படத்தில் கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரியின் தாயாக நடித்திருப்பார்.
பக்திப் படம் என்றாலும், சம கால சமூக விஷயமான தேவதாசி ஒழிப்பு முறை குறித்த கருத்துகள் வசனங்கள் வாயிலாக அப்படத்தில் வெளிப்பட்டன. தேவதாசி முறையில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து அதில் பேசப்பட்டிருக்கும். அரண்மனை அரசு நர்த்தகியும், கோயில் தேவதாசியுமான ராஜ குமாரியின் கதாபாத்திரம், அவரது தாயார் முன்னாள் தேவதாசியாக ராஜகாந்தம் இருவரும் அக்காட்சியில் நடித்திருப்பார்கள். பொருளாதாரம் சார்ந்த தங்கள் வாழ்வு சீர்குலையும்போது ஒரு தாசிப்பெண் எவ்வாறு நடந்து கொள்வாள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ராஜகாந்தத்தின் கதா பாத்திரம் இப்படத்தில் வார்க்கப்பட்டிருக்கும்.
தேவதாசிகள் ஏன் அந்த முறையினின்றும் விடுபட முடியாமல் தவிர்க்கிறார்கள், அதனை எதிர்க்கிறார்கள், மறுக்கிறார்கள் என்பதற்கு அந்தப் படமும், அதன் சில காட்சிகளும் மிகச் சிறந்த உதாரணம். ராஜகுமாரி, ராஜகாந்தம் இருவருமே மிகச் சிறப்பாகத் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். 1945ம் ஆண்டில் சம காலத்தைப் பிரதிபலிக்கும் சமூகக் கதைகள் படங்களாக எடுக்கப்பட்டன. அதில் நான்கு படங்கள் இரண்டாம் உலகப்போர் பிரசாரப் படங்கள். இவை பிரிட்டிஷ் அரசின் வேண்டுகோளுக்கிணங்க எடுக்கப்பட்டவை. முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம் கதை, வசனம் எழுதி இயக்கிய படம் ‘மான சம்ரட்சணம்’.
போர்ச்சூழலின்போது நிலவிய சமூக வாழ்வு இப் படத்தின் திரைக்கதையில் சித்திரிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக நகைச்சுவை ஜோடியாகவே அறியப் பட்டிருந்த ரத்னம் காந்தம் இருவரும் இதில் பிரதான வில்லன், வில்லியாக வேடமேற்று நடித்திருந்தார்கள். ஜப்பானிய ஒற்றர் தாசி திரவியம் வேடம் ஏற்று நடித்திருந்தார் ராஜகாந்தம். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ‘பேசும் படம்’ இதழ் இப்படத்துக்கு எழுதிய விமர்சனத்தில் தாசி திரவியம் கதாபாத்திரம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘தாசி திரவியமாகத் தோன்றும் சி.டி.ராஜ காந்தத்தின் நடிப்பு தத்ரூபமாய் இருக்கிறது.
காரியவாதியான ஒரு தாசியின் தளுக்கு மினுக்கு அவ்வளவையும் அவர் தம் நடிப்பில் பிரதிபலிக்கும்படி செய்து இப்படத்தில் ஒரு சிறந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.’ ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக நடித்த எஸ்,வி.ரங்காராவின் அன்னையாக இடும்பி பாத் திரத்தை ஏற்று நடித்திருப்பார். வார்த்தைக்கு வார்த்தை ‘அருமை மகனே’ என்று கடோத்கஜனை இவர் அழைக்கும் பாங்கு குறிப் பிடத்தக்கது. மிக உயரமான நடிகை என்றாலும் எஸ்.வி.ரங்காராவின் ஓங்கி உயர்ந்த ஆகிருதியான உருவத்துக்கு முன்பாக இவரும் மற்றவர்களும் சிறிய உருவமாகவே நம் கண்களுக்குத் தென்படுவார்கள்.
ரத்னத்தின் மறைவுக்குப் பின் வில்லி வேடங்களே அதிகம்
காளி.என்.ரத்னம் மறைவுக்குப் பின் பெரும்பாலும் நகைச்சுவை நடிப்பிலிருந்து விலகி வில்லி வேடங்களையே ஏற்று நடிக்க ஆரம்பித்தார். ‘வேதாள உலகம்’ படத்தில் வேதாள உலகத்தின் மகாராணியாக, போட்டிக்கு வரும் இளவரசர்களுக்கு அசட்டுத்தனமான போட்டிகளை நடத் துபவராக சிறப்பாக நடித்திருப்பார். பயத்தை ஏற்படுத்தாத கிச்சுகிச்சு மூட்டும் நகைச்சுவை வேதாளங்கள் திரையில் தோன்றி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த படம் அது.
சமூகப் படங்கள் பலவற்றிலும் ஒரு அத்தையாக, சித்தியாக, அம்மாவாக குடும்பத்தில் பலவிதமான குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வில்லி வேடங்களே பெரும்பாலும் இவருக்கு அளிக்கப்பட்டன. தன் யதார்த்த நடிப்பாலும் கம்பீரக் குரலாலும் அப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியவர். பல படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ‘உதிரிப்பூக்கள்’ நாயகி அஸ்வினிக்கு மாமியாராக, நேரடியாக மருமகளைக் கடிந்து பேசாமல் நைச்சியமாகப் பேசி, ‘நீ ஒரு நோயாளி, என் மகனுக்கு நீ ஏற்றவள் அல்ல’ என்பதைச் சொல்லாமல் சொல்லி நடிக்கும் வேடம்.
ஒப்பனைகள் ஏதுமற்ற அவரைப் படத்தில் பார்க்கும்போது, நம் உறவுக்காரப் பெண்மணியைப் பார்ப்பது போன்ற உணர்வே எழுந்தது. நீண்ட நெடிய காலம், 39ல் ஆரம்பித்து 90கள் வரை ஐம்பதாண்டுக் காலம் தன் நடிப்புத் தொழிலுக்கு மரியாதை அளித்து, நடிப்பை விடாமல் தொடர்ந்து செய்து வந்தவர். 90களின் இறுதியில் ‘விடாது கருப்பு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் குரூரம் நிரம்பிய கிழவியாக, சுருட்டுப் பிடித்தபடியே வந்து பார்ப்பவர்களை நடுங்க வைத்தவர். அந்தத் தொடரில் இடம்பெற்ற, கதையின் போக்கையே மாற்றும் ஒரு திருப்புமுனைக் கதாபாத்திரமும் கூட.
இசை வாரிசுகளால் நிரம்பிய குடும்பம்
இவரது ஒரே மகள் ராஜலட்சுமியை நாடக நடிகரும் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகரும் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரருமான திருச்சி லோகநாதனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அந்த வகையில் ராஜகாந்தத்தின் மருமகனாவார். ஏராளம் இசை வாரிசுகளைக் கொண்ட மிகப் பெரிய இசைக்குடும்பம். மகள், மருமகன் இருவரின் மறைவுக்குப் பின்னும் பேரக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் இவருக்கு இருந்தது. அதையும் குறைவறச் செய்தவர்.
அவரின் பேரன்கள் அனைவருமே மிகச் சிறந்த இசைக்கலைஞர்கள், பாடகர்கள். அவர்களில் டி.எல்.மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி, டி.எல்.தியாகராஜன் பேர் சொல்லும் வாரிசுகள். பெண்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்து வரும் எழுத்தாளர் அம்பை, திரைப்பட ஆய்வாளரும் சூழலியல் எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரனுடன் இணைந்து, சி.டி.ராஜகாந்தத்தின் நாடக, திரையுலக வாழ்க்கையைப் பற்றி ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அதற்கு முன்னதாகவே ராஜகாந்தத்தின் வாழ்க்கை நிறைவு பெற்று விட்டது. நீண்ட நெடிய வாழ்க்கை வாழ்ந்து வயது முதிர்வின் காரணமாக 2003 ஆம் ஆண்டு தனது 86 வது வயதில் விடை பெற்றுக் கொண்டார் ராஜகாந்தம்
சி.டி.ராஜகாந்தம் நடித்த திரைப்படங்கள்
மாணிக்கவாசகர், ஊர்வசி, சூர்யபுத்திரி, பக்த கௌரி, மாயஜோதி, தயாளன், சபாபதி, சிவலிங்க சாட்சி, மனோன்மணி, பர்த்ருஹரி, பக்த ஹனுமான், சதி சுகன்யா, கங்காவதார், அல்லி விஜயம், பஞ்சாமிருதம், பிருதிவிராஜ், காரைக்காலம்மையார், திவான் பகதூர், பர்மா ராணி, மானசம்ரட்சணம், ஆரவல்லி சூரவல்லி, வால்மீகி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, சகடயோகம், ஏகம்பவாணன், அபிமன்யு, வேதாள உலகம், ஏழை படும் பாடு, மச்சரேகை, மாயாபஜார், மாங்கல்யம், முதலாளி, பாகப்பிரிவினை, பாலும் பழமும், நீலாவுக்கு நெறைஞ்ச மனசு, கண் திறந்தது, வன சுந்தரி, வண்ணக்கிளி, அடுத்த வீட்டுப்பெண், நல்லவன் வாழ்வான், அவன் பித்தனா?, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், உதிரிப் பூக்கள், நிலாப் பெண்ணே.
(ரசிப்போம்!) ஸ்டில்ஸ் ஞானம்
|