திருப்பதி லட்டு பிறந்த கதை



திருப்பதி என்றாலே லட்டுதான் நினைவிற்கு வரும் இந்த லட்டு தரும் பழக்கம் 1715ம் ஆண்டு, ஆகஸ்டு 2ம் தேதி துவங்கியது. அப்போது இலவசமாக  வழங்கப்பட்டது. 2009ல் இதற்கு பாரம்பரிய அந்தஸ்து கிடைத்தது. இதனால் திருப்பதி லட்டு என்ற பெயரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம்  மட்டுமே தயாரித்து விற்க முடியும். லட்டு தயாரிப்பில் இதுவரை மொத்தம் 6 தடவை மட்டுமே  மாற்றங்கள் நடந்துள்ளது. திருப்பதி லட்டின்  பொதுப்பெயர் ‘ஸ்ரீவாரி லட்டு’. இதன் சமையலறைக்கு ‘போட்டு’ எனப் பெயர். லட்டுவில் 3 வகைகள் உள்ளன.

ஆஸ்தான லட்டு

இது விசேஷ நாட்களில் மட்டும் ஸ்பெஷலாக செய்யப்படுவது. இதன் எடை 750 கிராம். இதில் சாதாரண லட்டை விட கூடுதல் முந்திரி, பாதாம்,  குங்குமப்பூ போட்டிருப்பர்.

கல்யாண உற்சவ லட்டு

கல்யாண உற்சவம், ஆர்ஜித சேவைக்கு என தனியாக தயாரிக்கப்படுவது. இதற்கு டிமாண்ட் அதிகம்.

ப்ரோக்தம் லட்டு

175 கிராம் எடை கொண்ட லட்டு  இது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதை வாங்கிச் செல்வார்கள். தினமும் 3 லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றன.  ஒரு லட்டு தயாரிக்க தேவஸ்தானம் 15-20 ரூபாய் செலவழிக்கிறது. லட்டு தயாரித்து உருட்ட 200 பேர் உள்ளனர். தினமும் சராசரியாக 1.5 லட்சம்  லட்டுகள் உருட்டப்பட்டு நைவேத்யம் செய்து விற்பனைக்கு வருகிறது. இதற்கான தினசரி தேவை 10 டன் கடலைமாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ  முந்திரிப்பருப்பு, 150 கிலோ ஏலக்காய், 3,400 டன் நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ திராட்சை.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.