குக்கரை பராமரிப்பது எப்படி?



பிரஷர் குக்கர் அல்லது பானில் அரிசி, பருப்பு, காய்கனிகள்  வைக்கும்போது மூடியின் மேல் பாகத்தைத் தொடும்படி வைக்கக்கூடாது. வைத்தால்  மூடியின் நடுவில் உள்ள துளையில் அடைத்துக் கொண்டு வெயிட் வால்வு சரியான முறையில் நீராவியை வெளியேற்ற இயலாது போய் விடும்.

* குக்கரை அடுப்பில் வைத்து விட்டு வெளியில் எங்கும் போகக் கூடாது. வீட்டிலேயே வேறு வேலை செய்து கொண்டிருக்கலாம்.
* இரண்டு, மூன்று குக்கர்கள் இருந்தால் அவை ஒரே கம்பெனியாக இருந்தால் கூட ஒன்றின் மூடியை இன்னொன்றுக்குப் பயன்படுத்தக்கூடாது.
* குக்கரின் மரப்பிடிகள் பழுதடையாமல் இருக்க அடிக்கடி பிடிகளில் உள்ள ஸ்க்ரூ ஆணிகளைத் தளர்த்தி சில துளிகள் தேங்காய் எண்ணெய் விட்டு  முறுக்கலாம். அவ்வப்போது நன்கு துடைக்க வேண்டும்.
* குக்கரில் பொருத்தும் ரப்பர் வளையத்தை (காஸ்கட்) தனியே எடுத்து கழுவி ஆணியில் மாட்ட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையேனும் இதை  மாற்ற வேண்டும்.
* குக்கரை பயன்படுத்தும்போது குழாயின் மீது வெயிட் வைத்த பின்பு கைப்பிடியைத் திருப்பக் கூடாது. வெயிட் வால்வைக் கீழே போடக்கூடாது.
* குக்கரின் அடிப்பகுதியில் ஏற்படும் கரியைப் போக்க அதைக் கவிழ்த்துப் போட்டுத் தேய்க்கக் கூடாது, அப்படிச் செய்தால் மேல் பகுதி தரையில்  உராயும். குக்கர் பழுதாகி விடும்.
* குக்கர் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்க மென்மையான தரமான பவுடரை பயன்படுத்த வேண்டும். கரியைப் போக்க உப்புத்தாளைப்  பயன்படுத்தலாம்.
* குக்கரின் உள் பாகம் நிறம் மாறி விட்டால் பயன்படுத்தும்போது எலுமிச்சம்பழத் தோலையோ, சிறிது புளியையோ போட்டு வைத்தால் பளிச்சென்று  இருக்கும்.
* உள்ளே அலுமினிய அல்லது எவர்சில்வர் பாத்திரங்கள் வைக்கும் முன்பு உள்ளிருக்கும் நீர் கொதித்து ஆவி வரும்போது கிடுக்கியால் ஒவ்வொன்றாக  எடுத்து வைக்க வேண்டும்.
* துளைகளுடன் தட்டை கவிழ்த்துப் போடாமல் தட்டின் விளிம்பு மேலே இருக்குமாறு குக்கரில் வைக்க வேண்டும்.
* குக்கரை தரையில் வைத்து இழுப்பதோ, சொரசொரப்பான பொருட்களால் தேய்ப்பதோ தவறு.
* குக்கரை எண்ணெய் விட்டு வதக்குவதற்கோ, கிளறுவதற்கோ வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.
* பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து மூடுவதற்கு முன் காஸ்கட்டில் உணவுத்துகள்கள் போல ஏதாவது ஒட்டிக் கொண்டுள்ளதா எனப் பார்க்க  வேண்டும். இருந்தால் பிரஷர் வெளியேறி விடும்.
* காய்ந்த ரொட்டித் துண்டுகளை தூர எறிந்து விட வேண்டாம். பிரஷர் குக்கரிலிருந்து வெளிவரும் நீராவியில் காட்டுங்கள். மீண்டும் மிருதுவாகும்.
* பயத்தம்பருப்பை எப்போது வேகவைத்தாலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழைந்து விடும். வேகவைக்கும் எந்தப் பருப்பானாலும்  நன்கு கழுவி பின்னர் குக்கர் பாத்திரத்தில் பருப்புடன் சிறிது உப்பைப் போட்டு வேகவைத்து விட்டால் போதும். பருப்பு கழுவிய நீரிலேயே குழைந்து  போகாமல் நன்கு வெந்து விடும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.