பூமியின் சொர்க்கம்



1931ல் பிராங்க்ஸ் மித் என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தின்  காமத் மலை உச்சிக்கு பயணித்தார். நடுவில் வழி தவறி திகைத்து நின்றபோது மேலும்  அவரை திகைக்க வைத்தது ஒரு காட்சி. அது பூக்கள் பள்ளத்தாக்கின் மலர்ந்த காட்சி.. கங்காரியாவிலிருந்து இடதுபக்கம் திரும்பி தொடர்ந்து  பயணித்தால், பூமியின் சொர்க்கமான பூக்கள் பள்ளத்தாக்கை அடையலாம். 3,858 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பூக்கள் பள்ளத்தாக்கு இன்று  உலக பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா 1982ல் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. காலை 8 மணி  முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

இது தேசியப் பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் மேற்கு இமாலய பகுதியில் அமைந்துள்ளது. 300 வகையான தாவரங்கள்,  பல அழிந்து வரும் மருத்துவ குணம் கொண்ட மலர்கள் கொண்ட பூமி இதன் சொத்து! குளிர்காலத்தில் கடும்பனி... போர்வை போல் மூடி இருக்கும்.  வெயில் காலத்திலோ உருகி, பூ பள்ளத்தாக்கின் அழகு கொழிக்கும் நிலையை காணலாம். மலர்கள் பள்ளத்தாக்குக்குச் செல்ல சிறந்த நேரம் ஜூலை 15  - ஆகஸ்டு 15. மழை பெய்தாலும் இனிமையாக இருக்கும். மே-ஜூன் மாதங்களில் மொட்டு விடும். ஜூலை -ஆகஸ்டு பூத்துக் குலுங்கும். செப்டம்பரில்  வாடி விடும். இதன் அருகில் ஒரு நீரோடை உள்ளது. இதன் பெயர் புஷ்பவதி. இது லட்சுமண் கங்காவில் இணைந்து விடுகிறது.

இங்குள்ள சில பிரபலமான பூக்கள்

பொடண்டில்லாஸ்
ப்ரிமுலாஸ்
ராணன்குலஸ்
பிரம்மகமல்
ஆஸ்டாங்
ஆண்டிரோங்கா
நோமோச்செரிஸ்
ஃபிரிட்டலரில்

இதன் நீளம் 5 கி.மீ, அகலம் 2 கி.மீ. தாமரை மலர்கள் சுற்றியுள்ள ஏரியை பார்க்க ஹேம்குண்ட் ஏரிக்கு போக வேண்டும். இது பூ பள்ளத்தாக்கிலிருந்து  4 கிலோ மீட்டரில் உள்ளது. ஹேம்குண்ட் என்றால் பனி ஏரி எனப்பொருள். ஆகஸ்டு - செப்டம்பர் தரிசிக்க சிறந்த நேரம். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட  மற்றொரு பள்ளத்தாக்கை கேதார்நாத் அருகே மந்தாகினி பள்ளத்தாக்கில் தரிசிக்கலாம்.

- வைஷ்ணவி