டிரண்டிங் ஜுவல்லரி



தங்க நகைகளை போலவே விற்பனையில் களைகட்டுகிறது ஃபேஷன் ஜுவல்லரி. எளிமையான முறையில், வீட்டில்  இருந்தபடியே சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல லாபத்தை கொடுக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்காத  அணிகலன்களுக்கு இப்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் டெரகோட்டா நகைகளுக்கு முக்கிய  இடம் உண்டு. ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு ஃபேஷன் ஜுவல்லரி வகுப்பு நடத்தி வரும் சென்னையை சேர்ந்த  காயத்ரியிடம் ஃபேஷன் ஜுவல்லரி குறித்து பேசினேன்.

“புல்லிங் பேப்பர்ஸ், டெரகோட்டா, சில்க் த்ரெட், கோல்டன் கலர் மெட்டீரியல் கொண்டு டிரண்டிங்கான பிரைடல்  ஜுவல்லரிகள் செய்து விற்பனை செய்வது, எப்படி செய்ய வேண்டும் என்று வகுப்பும் எடுத்து வருகிறேன். இன்றைய  இளைய தலைமுறை தங்க நகைகளை விட டிரண்டிங்கான ஃபேஷன் ஜுவல்லரிகளையே அதிகம் விரும்புகிறார்கள்.  தங்க நகைகள் அணிந்து செல்வ‌தற்கு ஒரு வித பயமும்  இருக்கிறது. இது போன்ற ஃபேஷன் ஜுவல்லரிக்கு அப்படி  பயப்பட தேவையில்லை. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அணிந்து செல்லும் விதமாக கிராண்ட் லுக் கொண்ட ஃபேஷன்  அணிகலன்கள் சந்தைகளில் கிடைக்கின்றன‌. அதில் டெரகோட்டா பிரைடல் ஜுவல்லரி நல்ல வரவேற்பை  பெற்றிருக்கிறது. இதில் கம்பல், செயின், வளையல், மோதிரம் என எல்லா வகையான நகைகளும் செய்து கொள்ளலாம்.  என்ன வண்ணத்தில் உடை அணிகிறோமோ அதே வண்ணத்தில் நகை அணிவதையே பெரும்பாலான பெண்கள்  விரும்புகிறார்கள். அவர்களுக்கு, பேப்பர் ஜுவல்லரி, டெரகோட்டா ஆபரணங்கள்தான் பெஸ்ட் சாய்ஸ். நாம் விரும்பும்  நிறத்தில் செய்துகொள்ளலாம்.

டெரகோட்டா மெட்டீரியல்ஸ் சந்தைகளில் விற்கப்படுகின்றன‌. இதில் கியர் ஒயர், கியர் லாக் மற்றும் டெரகோட்டா  இருக்கும். ஒரு வகை களிமண்ணை பயன்படுத்தியும் செய்யலாம். தேவைபட்டால் ஸ்டோன் ஒர்க்ஸ்செய்து  கொள்ளலாம். நாம் விரும்பும் வண்ணங்களை அடித்து காய வைத்து பயன்படுத்தலாம். இதற்காக நாம் பெருமளவில்  நேரத்தை செலவு செய்யத் தேவையில்லை. மிக எளிமையாக செய்து இதில் வருமானமும் ஈட்டமுடியும். கண்களை  கவரும் வண்ணங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அவற்றை டெரகோட்டா ஜுவல்லரியில் பொருத்துவது என்பது  அழகுக்கு மெருகேற்றும். கோல்டன் நிற ஜுவல்லரிகளை பொறுத்தவரை மிகவும் எளிமையாக செய்துகொள்ளலாம்.  அதற்கான மெட்டீரியல்கள் சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கிறது.

நமக்கு தேவையான மாடல்களில் கோர்த்து கம்ம‌ல்,நெத்திச்சுட்டி, ஆரம், ஒட்டியாணம் போன்றவற்றை செய்யலாம்.  வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களை இதில் செய்து கொடுக்க முடியும். தற்போது எங்களுடைய வகுப்பிற்கு  பள்ளி மாணவிகள் ஆர்வமாக வருகிறார்கள். வீட்டில் இருந்தே சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல லாபத்தை  கொடுக்கும் ” என்கிறார் காயத்ரி.

- ஜெ.சதீஷ்