வானவில் சந்தை



நாய்கள் ஜாக்கிரதை

சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். வாகன  நிறுத்துமிடம் ஏதுமில்லாததால் எதிர்த்த வீட்டு வாசலிலேயே எல்லாரையும் போல வண்டியை நிறுத்தவேண்டியிருந்தது.  நிறுத்திய உடனேயே அந்த வீட்டிலிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் தெருவையே அதிரச் செய்தது. எப்படியும்  நாலைந்து நாய்களிருக்கும். ஒருவேளை மருத்துவமனை நிர்வாகத்தை இப்படி எதிர்க்கிறாரா தெரியவில்லை. ஒருவர்  ஏன் இத்தனை நாய்களை வளர்க்க வேண்டும்? ஒன்று அவர் நாய்கள், பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் மீது நேசம்  கொண்டவராக இருக்கவேண்டும். அல்லது வீட்டைக் காக்கும் பாதுகாப்பு நோக்கம் கருதி வளர்க்க வேண்டும்.

எப்படி இருந்தாலும் அவர் ஓரிரு நாய்களை வளர்க்கும் பட்சத்தில், மாதந்தோறும் சில ஆயிரம் ரூபாய்களையாவது  குறைந்தபட்சம் செலவழிக்க வேண்டியிருக்கும். இன்றைய நகரச் சூழலில் வசிக்கும் ஒருவர் பாதுகாப்பு கருதி நாய்களை  வளர்ப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றுக்கு உணவிடுவது, பராமரிப்பது, வெளியூர் செல்ல நேர்ந்தால்  காப்பகத்தில் விடுவது என்று பல வேலைகளைக் கோருவது அது. வெளியாள் உள்ளே நுழைந்தால் சண்டையிடும்  என்பதைத் தவிர்த்தால், சத்தம் போடுவது மட்டுமே ஒரு நாயால் செய்யமுடியும். அதற்கு இக்காலத்தில் நவீனக்  கருவிகள் வந்து விட்டன. உண்மையில் ஒரு வீட்டைப் பாதுகாப்பதில் நவீனத் தொழில்நுட்பம் இன்று வெகுவாக  முன்னேறியிருக்கிறது.

பொதுவாக நாய்கள் செய்யும் பணியை மூன்றாக வகுத்துக் கொள்ளலாம். கண்காணிப்பது, எச்சரிப்பது (குரைப்பதன்  மூலம்), வெளியாள் உள்ளே புகுவதைத் தடுப்பது. இதைச் செய்யும் தொழில்நுட்பக் கருவிகளை இப்போது பார்க்கலாம்.

கண்காணிப்பு


கண்காணிப்புக் கேமராக்கள் (Surveilance Camera) இப்போது எங்கும் நிறைந்திருக்கின்றன. பணியிடங்களில்,  ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில், தெருக்களில் என எங்கும். இவற்றின் சில முக்கிய வகைமைகளை  இங்கே பார்க்கலாம்.


    டோம் கேமராக்கள் (Dome CCTV Camera)


உருண்டை வடிவக் கேமராக்களான இவைதான் மிகப் பரவலாக உபயோகத்தில் இருப்பவை. உருண்டை வடிவத்திற்குள்  இருக்கும் கேமராவை எந்த திசையில் வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம் என்பது இதிலிருக்கும் முக்கிய வசதி.  ஒரு இடத்தில் பொருத்தி விட்டால் சுற்றி என்ன நடக்கிறது என்று இதன் மூலம் கண்காணிக்க முடியும். இது அகலமான  பார்வைக் கோணம் கொண்டதால் பெரிய பரப்பைக் கண்காணிப்பது வெகு சுலபம். அத்தோடு காட்சியை பெரிதாக்கும்  (Zoom) வசதியும் இதில் உண்டு. பெரும்பாலும் கட்டிடத்தின் உள்பகுதியில் வைக்குமாறு வடிவமைக்கப்பட்டவை  இவை.

*    புல்லெட் கேமராக்கள் (Bullet CCTV Cameras)

இவை பெரும்பாலும் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் வைக்கப்படத் தோதானவை. அதனால், வெயில், மழை காற்று, தூசு  இவற்றிலிருந்து தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்படுபவை. டோம் கேமரா போலல்லாமல் இவை ஒரே  இடத்தில் நிலையாக இருக்குமாறு பொருத்தப்படும். கேமரா கோணங்களை மாற்ற முடியாது. இவை  குறுகிய நீண்ட  பாதைகளை கண்காணிக்கத் தோதானவை. நீண்ட தூரத்தை துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டவை.

*    இரவு/பகல் கேமராக்கள் (Day/Night Cameras)


மிகக் குறைந்த வெளிச்சமானாலும், சுட்டெரிக்கும் வெயிலானாலும் இவை துல்லியமாகப் படம்பிடிப்பவை. பெரும்பாலும்  வெளிப்புறச் சூழலுக்கு ஏற்றவை இந்த கேமராக்கள்.

*    அகச்சிவப்புக் கதிர்/இரவுக்காட்சிக் கேமராக்கள் (Infrared Cameras)

இவ்வகைக் கேமராக்கள், கடுங் கும்மிருட்டுச் சூழலில் காட்சிகளைப் படம்பிடிக்கத் தோதானவை. குறைந்த வெளிச்சமோ  அல்லது முழு இருளோ இருந்தாலும் அகச்சிவப்புக் கதிர்கள் மூலம் இவை காட்சிகளைப் படம் பிடிக்கின்றன.

சோனி (Sony), சாம்சங் (Samsung), எல்ஜி (LG) போன்ற நன்கறியப்பட்ட மின்சாதன பிராண்டுகளுடன் வேறு  பல இந்திய பிராண்டுகளும் சிசிடிவி கேமரா சந்தையில் பிரபலமாக உள்ளன. ஹைக்விஷன் (HikVision), சைகாம்  (Zicom), சி பி பிளஸ் (CP Plus), காட்ரெஜ் (Godrej) ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

எச்சரிக்கை


வீட்டைச் சுற்றி நடமாட்டம் இருந்தாலோ,  வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தாலோ அலாரம் எச்சரிக்கை  ஒலியை எழுப்பும். இந்தத் தொழில்நுட்பம் இப்போது வெகுவாக முன்னேறி விட்டது. பல்வேறு நுட்பங்களும் கூடி, தேர்வு  செய்ய சவாலான வகையில் பலவிதமான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன.வயர்லெஸ் தொழில் நுட்பத்துடன்  (Wireless) வரும் தற்போதைய கருவிகள் வீட்டிலிருப்போரின் மொபைல் போன்களுடன் தொடர்பு கொள்ளும்திறன்  கொண்டவை. ஒருவர் வீட்டில் இல்லையென்றாலும், வீட்டில் நடக்கும் ஜன்னலுடைப்பு, கதவுடைப்பு, உள் நடமாட்டம்  போன்றவை குறித்த எச்சரிக்கை அவரது மொபைல் போன் வழியாகத் தெரிவிக்கப்படும். அதே மொபைல் போன்  வழியாகவே அதைச் செயலிழக்க வைக்கவும் முடியும். சைகாம் (Zicom), காட்ரெஜ் (Godrej) போன்ற பல  பிராண்டுகள் சந்தையில் பிரபலமாக விளங்குகின்றன.

தடுப்பு

நாய்கள் செய்யும் ஒரு முக்கியமான வேலையை மட்டும் தொழில்நுட்பத்தால் செய்ய முடியாது. தோற்றத்தால்  அச்சுறுத்த முடியாது. ஆனால்,விரும்பத்தகாத அத்துமீறல்களைத் தொழில்நுட்பத்தால் தடுக்கமுடியும். உயிரி  தொழில்நுட்பம் (Biometric) வழியாக  தேவைப்படுவோர் மட்டுமே வீட்டில் நுழைய அனுமதிக்கும் கருவிகள்  இப்போது சாதாரணம். அதோடு, கேமரா மூலம் வருபவர் யாரென்று கண்ட பிறகு அனுமதிக்கும் வசதியும் உள்ளது.  கதவில் பொருத்தப்படும் இவ்வகைக் கருவிகளை தூரத்திலிருந்து, மொபைல் போன் வழியாகவும் இயக்க முடியும்.  தேவையற்ற நடமாட்டம் குறித்த தகவல்களும் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை வந்தடையும்.

கதவை உடைத்துப் புகுவதைத் தெரிவிக்கும் உணரி (Door Breaking Sensor), எந்தவிதமான அதிர்வுகளையும்  கண்டுகொள்ளும் உணரி (Vibration Sensor), கண்ணாடி உடைவதைத் தெரிவிக்கும் உணரி (Glass  Breaking Sensor), எந்த ஒரு பொருளின் நுழைவையும் தெரிவிக்கும் செயலற்ற அகச்சிவப்புக்கதிர் உணரி  (Passive Infrared Sensor), கடைகளிலும், வீட்டில் கார் நிறுத்துமிடத்திலும் பயன்படுத்தப்படும் ஷட்டர்  திறக்கப்பட்டால் கண்டுணரும் உணரி (Shutter Sensor) என்று பலவகையான உணரிகளைக் கொண்டு பாதுகாப்புக்  கருவிகள் தயாரிக்கப் படுகின்றன. சைகாம், காட்ரெஜ் போன்றவை பிரபலமான பிராண்டுகள்.இன்று ஒரு வீட்டைப்  பாதுகாக்கும் கருவிகளின் சாதுரியத்தை எதிர்கொள்ள ஒரு திருடனுக்கு தொழில்நுட்ப அறிவும் தேவைப்படுகிறது. அது  அவனது துரதிர்ஷ்டம். ஆனால், அத்தனை கருவிகளும் ஒரு நாயின் கம்பீரத்தை ஈடு செய்ய முடியாது.

 
(வண்ணங்கள் தொடரும்!)