கண்ணகியைக் கொண்டாடுவோம்!



தமிழ்ப் பெண்களின் பணிவுக்கும் அன்புக்கும் ஆவேசத்துக்கும் அடையாளமாகச் சுட்டப்படுபவள் கண்ணகி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து இறுதியில் தெய்வநிலை எய்திய கண்ணகியின் கதை ஒரு காவிய வரலாறு. கண்ணகியை சிங்கள மக்களும், மலையாள மக்களும் தெய்வமாக வணங்குகிறார்கள். சிலப்பதிகாரத்தை வேதமாக ஓதுகிறார்கள். அந்த மாதரசியை ஈன்றதமிழகமோ அவளை மறந்து விட்டது.

“இன்று தமிழகத்தை ஆட்கொண்டிருக்கிற அத்தனை பிரச்னைகளுக்கும் கண்ணகியிடம் தீர்வு இருக்கிறது. ‘அரசியலில் பிழை செய்தோருக்கு அறமே எமன்; புகழ்மிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்; ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்’ என மூன்று வாழ்வியல் தத்துவங்களை கண்ணகி விதைத்திருக்கிறாள். மங்கல தேவியாகவும் நீதி தேவதையாகவும் இருக்கிற கண்ணகி வழிபாட்டை பரவச் செய்வதன் மூலம் இந்த தேசத்தில் மாற்றத்தைக் கொண்டு வரலாம்...” என்கி்றார்கள் யாணனும்கௌரியும்.

சென்னை பரங்கிமலையில் வசிக்கும் இந்தத் தம்பதி, கண்ணகி வழிபாட்டை நாடெங்கும் பொதுமைப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்படுகின்றனர். தமிழர்களின் வழிபாடு பல்வேறு விதங்களில் கண்ணகியை முன்நிறுத்தியே நிகழ்ந்து வருகிறது. கண்ணகி பிறந்த பூம்புகார் பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்கள் மகளுக்கு அநீதி இழைத்த மதுரையில் ஒருநாள் கூட தங்க மாட்டார்கள். கண்ணகி மதுரையை வதம் செய்தது, ஓர் ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையில். அதனால்தான் அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி முக்கியத்துவம் பெறுகிறது.

கண்ணகியின் கோபம் தணித்து குளிர்விப்பதற்காகத்தான் ஆடி வெள்ளிகளில் கூழ்வார்க்கும் வழக்கம் உருவானது. இளநீர் வார்த்தல், பானகம் படைத்தல், மாவிளக்கு ஏற்றுதலுக்கும் எரிந்த கண்ணகியின் வயிறை குளிரச் செய்வதுதான் பிரதான காரணம். ஆடிமாதம் விரதம் இருப்பதன் நோக்கமும் ஆவேசம் கொண்ட கண்ணகியை ஆற்றுப்படுத்தி அருள் செய்யக் கோரித்தான்.  கண்ணகியை ருத்ர  தேவதையாக சித்தரிக்கும் போக்கு தமிழகத்தில் இருக்கிறது. கேரளமோ அவளை பகவதியாக கொண்டாடுகிறது. மதுரையை எரித்துவிட்டு கோபம் ததும்ப குமரியைக் கடந்து மங்கலதேவிக் கோட்டம் வரை அவள் நடந்து சென்ற பகுதிகளில் எல்லாம் கோயில்களை எழுப்பி பகவதியாக அவளை கொண்டாடுகிறார்கள் கேரள மக்கள். வீட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் பகவதிக்குத்தான் முதல் அழைப்பு, முதல் மரியாதை. சோர்ந்து போய் ஓர் ஆற்றங்கரையில் கண்ணகி வீழ்ந்து கிடந்த நேரத்தில் அவளை எழுப்பி தண்ணீர் தந்து ஆற்றுப்படுத்திய ஊருக்கு ‘ஆற்றுக்கால்’ என்றே பெயர் நிலைத்து விட்டது.

அந்த ஊரில் கண்ணகி வீழ்ந்து கிடந்த இடத்தில் எழுப்பப்பட்டிருக்கும் பகவதி கோயிலில்ஒவ்வோராண்டும் பல லட்சம் பெண்கள் கூடி பொங்கலிட்டு கண்ணகியை குளிர்விக்கிறார்கள். இந்தாண்டு 40 லட்சம் பேர் பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளார்கள். இரண்டு முறை இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. கேரளபகவதி கோயில்களில் திருவிழாக் காலங்களில் மலையாள மொழியாலான சிலப்பதிகாரத்தை ஓதுவது வழக்கமாக இருக்கிறது. தமிழகத்தில் ஆதியில் கண்ணகி வழிபாடு தழைத்திருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். பிற்காலத்தில் கண்ணகி வழிபாடே மாரியம்மன் வழிபாடாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. செல்லாத்தம்மன், மதுரகாளி, தொண்டியம்மன், ராஜகாளியம்மன் என பல்வேறு பெயர்களில் இன்றும் கண்ணகி வழிபாடு நடக்கவேசெய்கிறது. அத்தெய்வங்களின் கதை கண்ணகியின் கதையைத்தான் பேசுகிறது.

எனினும், நேரடியாக கண்ணகியின் பெயரில் எங்கும் கோயில் இல்லை. மதுரையை எரித்து ஆவேசத்தோடு இலக்கின்றி நடந்த கண்ணகி, கேரளத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மங்கலக்கோட்டத்தில், மீண்டும் தன் கணவனை அடைந்தாள். அந்த இடத்தில் சேரன் செங்குட்டுவனால் எழுப்பப்பட்ட பத்தினிக்கோட்டம் கோயிலிலும் தமிழர்களின் வழிபாட்டுரிமை பெருமளவு நசுக்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகளைக் கடந்தே அக்கோயிலில் கால் வைக்க முடியும்.இப்படியான சூழலில் மீண்டும் கண்ணகி வழிபாடு தமிழகத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.

“இன்னைக்கு நம் சமூகத்தில் இருக்கிற சிக்கல்கள் அனைத்துக்கும் கண்ணகியம்மன் வழிபாட்டுல தீர்வு இருக்கு. குடும்ப உறவுகள்ல ஏற்பட்டுள்ள சீரழிவுகளுக்கும்
கண்ணகியம்மன் தீர்வு வச்சிருக்கா. கண்ணகி கதையை சித்தரிக்கப்பட்ட கற்பனைன்னு ஒரு தரப்பு தொடர்ச்சியா பிரசாரம் பண்ணிக்கிட்டே இருக்கு. ஆனா, பல்வேறு ஆதாரங்கள் மூலம் கண்ணகி இந்த தமிழ் மண்ணின் மகள்னு வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபிச்சிருக்காங்க. வரலாற்று ஆசிரியர் கி.மு.சுப்பிரமணியன் பிள்ளையோட கணிப்பின் படி கி.பி.144ம் ஆண்டு 17ம் நாள் ஆடிமாத தேய்பிறை வந்த ஒரு வெள்ளிக்கிழமைதான் தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக ஆவேசம் கொண்டிருக்கிறாள் கண்ணகி. அதற்குப் பிறகு 14 நாட்கள் நடந்து குமுளிக்கு மேலே இருக்கிற மங்கலதேவிக் கோட்டத்துக்கு போய் மீண்டும் தன் கணவனை அடைஞ்சிருக்கா. பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்த கண்ணகி ஒரு தெய்வ உரு. பெண்மையின் சக்தியையும் வலுவையும் கருணையையும் இந்த உலகத்துக்கு உணரச் செய்றதுக்காக படைக்கப்பட்ட தெய்வம். அவள் ஒரு வரலாறு. நம் அடையாளம். 

தமிழர் வாழ்க்கையி்ல கண்ணகியோட தாக்கம் நிறைய. கண்ணகி்யோட காற்சிலம்பு தங்கத்தால் ஆனது. அதனால, தமிழ்ப்பெண்கள் இன்றளவும் தங்கத்தாலான சிலம்பு, தண்டை, கொலுசு, மிஞ்சியை காலில் போட்டுக்கிறதில்லை. கண்ணகி மதுரையை எரித்த ஆடி மாசத்துல திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் எதையும் நடத்துறதில்லை. இன்னைக்கு நம்ப வாழ்க்கைமுறை மாறிடுச்சு. நாகரிகங்கிற பேர்ல நம் மரபு சிதைக்கப்படுது. குடும்ப உறவுகளுக்குள்ள சிக்கல்கள் வருது. அவநம்பிக்கை அதிகமாகிட்டே போகுது. எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு விதத்துல நிம்மதியில்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. கண்ணகி வழிபாட்டுல அதுக்கு முழுமையான தீர்வு இருக்கு.

கண்ணகி அன்பானவ. அநீதிக்கு எதிரானவ. கண்ணகி வழிபாட்டை மீட்டுருவாக்கம் செய்றது மூலமா நம் மரபு வாழ்க்கையை மீட்க முடியும்...’’ என்கிறார் கௌரி. யாணன், கண்ணகி வழிபாடு பற்றி நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்ற பெயரில் ஒரு நூலையும் தொகுத்திருக்கிறார்.

“கண்ணகி வழிபாடு வளர்ந்தால் அறநெறிகள் வளரும். மனட்சாட்சிக்கு அஞ்சுவார்கள். பாவ புண்ணியம் பார்ப்பார்கள். தர்ம சிந்தனை அதிகரிக்கும். தமிழர் மத்தியில் கண்ணகி வழிபாடு மிகப்பெரும் செல்வாக்கு பெற்றிருந்த காலம் ஒன்று இருந்தது. அது நீடித்திருந்தால், இன்று அது உலகம் முழுவதும் பரவியிருக்கும். கண்ணகி வழிபாடு ஒரு மதமாகக்கூட வளர்ந்திருக்கும். ஆனால், கண்ணகியை திட்டமிட்டு தாழ்த்தினர். அவளை சமணப்பெண் என்று சித்தரித்தார்கள். சிறுதெய்வ வழிபாடு என்றார்கள்.

பலி கேட்கும் தெய்வம் என்று பழித்தார்கள். இதெல்லாம் எதனால்..? ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்தவள்,‘தவறென்றால் அரசனாக இருந்தாலும் தட்டிக் கேள்’ என்ற நெஞ்சுரத்தை விதைத்தாளே, அதனால். இதைச் சொல்லியே அரசர்களை திசை திருப்பினார்கள். தமிழக பூர்வ குடிகளின் தொன்மக்கதை கண்ணகியோடு தொடர்புடையது. கண்ணகி மதுரையை எரித்தபிறகு குமுளி நோக்கி நடந்த வேளையில் அவளுக்கு முன் திரண்டு சென்றவர்கள் இச்சமூக மக்கள்தான் என்கிறார்கள். எப்படி வாழ்வது, எப்படி கோரைப்புல்லை வைத்து பாய் முடை்வது, எப்படி விவசாயம் செய்வது என்பதையெல்லாம் கண்ணகியே தங்களுக்குக் கற்றுத் தந்ததாகச் சொல்கிறார்கள். வேடுவர்களும் தனித்து விழா எடுக்கிறார்கள். கண்ணகி விண்ணுலகம் சென்றதற்கு இந்த வேடுவர்களே சாட்சி.

கண்ணகி உறைந்திருக்கும் பத்தினிக் கோட்டம் கோயிலில் தமிழர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. கேரளாவில், குமுளியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தக் கோயில். இங்கே சித்திரைப் பௌர்ணமி தினத்தன்று விழா எடுக்கிறார்கள். அன்று மட்டுமே இந்தக் கோயிலுக்குச் செல்ல முடியும். அதுவும் காலை 5 மணிக்கு ஏறினால் மாலை 5 மணிக்கு இறங்கி விட வேண்டும். இவ்வளவு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஏராளமான பக்தர்கள் பத்தினி கோட்டத்துக்குச் செல்கிறார்கள்.

தமிழ் பக்தர்களை அவதூறாகப் பேசுவது, புண்படுத்துவது என்று கேரள அதிகாரிகள் அத்துமீறுகிறார்கள். அக்கோயிலை எடுத்துக் கட்டவோ, முறையாக வழிபாடு செய்யவோ கேரள வனத்துறை மறுக்கிறது. விலங்குகள் உறைவிடம் என்கிறார்கள். ஆனால், யானைகளின் முக்கிய வாழிடமான சபரிமலையை எந்தக் கேள்வியும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடுகிறார்கள்.தமிழ் தெய்வமான கண்ணகிக்கு தமிழகத்தில் வீதிக்கு வீதி கோயில் எழுப்ப வேண்டும். பெண்களின் சக்தியை ஒருமித்து காக்கும் அவளின் பெருமையை நாடெங்கும் பரப்ப வேண்டும். கேரளத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்ணகி கோயிலின் பராமரிப்பை தமிழகம் ஏற்க வேண்டும்...’’ என்கிறார் யாணன்.

வற்றாப்பளை, புங்குடுத்தீவு, தம்பிலு, காரைத்தீவு, பலானை என இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்ணகிக்கு கோயில் இருக்கிறது. தமிழனை வெறுக்கிற சிங்களன் கூட கண்ணகியைக் கொண்டாடுகிறான். தமிழ் மகளான அப்பெருந்தேவியை நாம் கொண்டாடுவதில் என்ன தயக்கம்? மூடநம்பிக்கைகளை தகர்த்து எறிந்து விட்டு மங்கல தேவியான கண்ணகியைக் கொண்டாடுவோம்!

இன்னைக்கு நம் சமூகத்தில் இருக்கிற சிக்கல்கள் அனைத்துக்கும் கண்ணகியம்மன்  வழிபாட்டுல தீர்வு இருக்கு. குடும்ப உறவுகள்ல ஏற்பட்டுள்ள  சீரழிவுகளுக்கும் கண்ணகியம்மன் தீர்வு வச்சிருக்கா...


தமிழகத்தில் பூர்வகுடிகள் அனைத்தும் கண்ணகியை வணங்குவதை காணமுடிகிறது. நீலகிரி பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் கண்ணகியை பல்வேறு பெயரில்  வணங்குகிறார்கள். ஆனைமலை பகுதியில் வசிக்கும் முதுவர் பழங்குடிகள் கண்ணகியை  தங்கள் குலமகளாக கொண்டாடுகிறார்கள். 

- என்.ஹேமாவதி