மலாலா மேஜிக்-14



உன்னைக் கொல்லப் போகிறேன்!

தனது பிரத்யேகப் பயணத்தை மலாலா தொடங்கியபோது அப்பாவின் கால்தடங்கள் பாதை நெடுகிலும் பதிந்திருந்ததால் அவருக்குச் சுலபமாகிப்போனது. தனக்கு முன் விரிந்திருந்த அந்தப் பாதச் சுவட்டில் இளம் பாதங்களைப் பொருத்தி அவர் நடக்கத் தொடங்கினார். ஜியாவுதின் மட்டுமல்ல... அவரை நன்கு அறிந்து வைத்திருந்தவர்கள்கூட இதனை ஓர் அனிச்சை நிகழ்வாகவே எடுத்துக்கொண்டனர். பெற்றோரைக் குழந்தைகள் பிரதி எடுப்பது ஒன்றும் புதிதல்லவே! ஒரு ரோஜாச் செடியில் ரோஜாதானே பூக்கும்!

செடியை விடவும் மலரே அதிகக் கவனத்தை ஈர்க்கும் என்பதும்கூட இயற்கையின் விதிதான் போலும். ஆம்ஸ்டெர்டாமில் இயங்கும் ‘கிட்ஸ்ரைட்’ என்னும் அமைப்பு சர்வதேசக் குழந்தைகள் அமைதி விருதுக்காக மலாலாவைத் தேர்ந்தெடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்காவின் பிரபலமான தலைவரும் நிறவெறிக்கு எதிராகப் போராடியவருமான டெஸ்மாண்ட் டூடு மலாலாவின் பெயரைச் சிபாரிசு செய்திருந்தார் என்பது ஜியாவுதினின் மகிழ்ச்சியைப் பலமடங்கு பெரிதாக்கியது. இது ஆனதும், கல்வி தொடர்பான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க முடியுமா என்று பணிவுடன் விண்ணப்பித்து லாகூரில் இருந்து மலாலாவுக்கு ஓர் ஈமெயில் வந்தது. ‘நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் லேப்டாப் பரிசளிக்கப்போகிறார், உங்கள் பெயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது; நேரில் வந்து வாங்கிக்கொள்ள முடியுமா’ என்று கேட்டு இன்னொரு கடிதம் வந்து சேர்ந்தது.

சில தினங்கள்தான் கழிந்திருக்கும். பாகிஸ்தான் அரசு மலாலாவை வரவேற்று ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. தேசிய அமைதிப் பரிசுக்கு உங்கள் பெயர்  ‘தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் விருது அளிக்கிறார். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது’. மலாலா வகுப்பறையில் இருந்தபோது இந்த அறிவிப்பு வெளியானதால் பத்திரிகையாளர்கள், டி.வி. நிருபர்கள் என்று ஒரு கூட்டமே பள்ளிக்கூடத்தில் திரண்டுவிட்டது. குறிப்பிட்ட தினத்தன்று கோலாகலமான வரவேற்புடன் பிரதமர் விருதை அளித்தபோது அமைதியாகப் பெற்றுக்கொண்ட மலாலா, கையோடு கொண்டு சென்றிருந்த தனது கோரிக்கைக் கடிதத்தை அதே மேடையில் பிரதமரிடம் அளித்தார். தாலிபானால் இடிக்கப்பட்ட பள்ளிகளைச் சீராக்கித் தருவதற்கு  உதவ வேண்டும் என்று அதில் அவர் கோரியிருந்தார். விழா முடியும்போது மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இனி ஒவ்வொரு ஆண்டும் ‘மலாலா பரிசு’ என்னும் பெயரில் இந்த விருது வழங்கப்படும்! நாணமும் மகிழ்ச்சியும் பொங்க அப்பாவை ஏறிட்டுப் பார்த்த மலாலா குழம்பினார்.

அப்பாவின் முகத்தில் கவலைகள் பரம்பியிருந்தன. பொதுவாக இறந்துபோன ஒருவரின் நினைவாகத்தான் பரிசுகள் வழங்கப்படும். உயிருடன் இருக்கும் ஒருவர் பெயரை, அதுவும் ஒரு குழந்தையின் பெயரை எதற்காக இப்படிப் பயன்படுத்த வேண்டும்? மலாலாவுக்கு வியப்பாக இருந்தது. அப்பாவுக்கு இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பெயரில் என்ன இருக்கிறது அப்பா, கவலைப்படாதீர்கள்; எனக்கு எதுவும் ஆகாது என்று சமாதானப்படுத்தினார். ஆனால், கேட்டால்தானே? நினைத்து நினைத்து வருந்தினார் அப்பா. வேறு பெயரா கிடைக்கவில்லை, இவர்களுக்கு?

2012 தொடக்கத்தில் ஒரு நாள் மீண்டும் அப்பாவின் முகம் வாடியிருந்ததைக் கண்டார் மலாலா. அப்போது அவர்கள் கராச்சியில் இருந்தனர். ஜியோ டி.வி. ஒரு நிகழ்ச்சிக்காக அவர்களை வரவேற்றிருந்தது. மலாலாவைக் காண்பதற்காக அலாஸ்காவில் இருந்து ஒரு பெண் பாகிஸ்தான் நிருபரும் வந்திருந்தார். ‘‘ஒரு நிமிடம் மலாலா” என்று அவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அப்பாவைத் தனியே அழைத்துச் சென்று கம்ப்யூட்டரில் எதையோ காட்டி அவர் பேசிக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள்தான். மலாலா பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த நிருபரின் கண்களில் கண்ணீர் திரண்டுவிட்டது. அப்பாவின் முகம் பேயடித்தாற்போல மாறிவிட்டது. திரும்பி வந்தபோது அப்பா நடுக்கத்தில் இருந்தார். அந்த நேரம் பார்த்து அப்பாவின் கைப்பேசியும் அலற, சில விநாடிகளில் அவர் முகம் முழுக்க இருண்டுவிட்டது. “இங்கே என்னதான் நடக்கிறது, யாராவது சொல்லுங்களேன்!”

அப்பா தயக்கத்துடன் மலாலாவை அழைத்துச் சென்று கம்ப்யூட்டர் முன்னால் அமர வைத்தார். கூகிளில் மலாலாவின் பெயரை ஒற்றியெடுத்தார். அடுத்த நொடி திரையில் பெரிய எழுத்துகளில் தலைப்புச் செய்தி தோன்றியது. ‘மலாலாவுக்கு தாலிபான் கொலை மிரட்டல்’. அப்பாவால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. அந்த நிருபர் ஆசையாக மலாலாவின் தலையை வருடிக்கொடுத்தார். அவர் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தனவே தவிர, ஒரு வார்த்தைகூட புறப்பட்டு வரவில்லை.

மலாலா விழித்தார். நிச்சயம் ஜியாவுதின் காணும் முதல் கொலை மிரட்டல் அல்ல இது. உன் பள்ளியை தகர்க்கப்போகிறேன், பார். உன்னை அழிக்கப்போகிறேன் பார். உன் குடும்பத்தை அழிக்கப்போகிறேன்  பார். உன் வீட்டின் மீது குண்டு வீசப்போகிறேன், பார்... ஒவ்வொருமுறையும் மலாலாவும் அம்மாவும்தான் மிரண்டு போவார்கள். தயவு செய்து வெளியில் போகவே போகாதீர்கள் அப்பா என்று கெஞ்சியபடி அவர் கால்களைச் சுற்றி ஓடிவருவார் மலாலா. இந்தப் பாழாய்போன ஊரிலேயே இருக்க வேண்டாம், வாருங்கள் போய்விடலாம் என்று அம்மா மனம் நொந்துபோவார்.

ஆனால், அப்பாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. கவலையின் நிழல்கூட இருக்காது. இதற்கெல்லாமா பயப்படுவார்கள், போங்கள் போங்கள் என்பார். எதுவுமே நடக்காததுபோல் இருப்பார். மலாலா அழுதுகொண்டு நின்றுகொண்டிருந்தால் அருகில் இழுத்து செல்லமாக இரண்டு திட்டு போடுவார். இதென்ன நேற்றுதான் பிறந்த குழந்தையா நீ? எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீட்டுக்குள் மறைந்து கிடக்கச் சொல்கிறாயா? போ, விளையாடு மலாலா. நல்ல செயல்கள் செய்யும்போது இப்படியெல்லாம் குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். பயந்துவிட முடியுமா?

அதே அப்பா. இப்போது பயத்தில் உரைந்து போயிருக்கிறார். வழக்கமான இன்னொரு மிரட்டல் கடிதம், ஆனால், இந்தமுறை போ, போய் விளையாடு என்று அவரால் என்னைப் பிடித்துத் தள்ள முடியவில்லை. நடுங்கும் கரங்களுடன் நின்றுகொண்டிருக்கிறார். வெளிப்படுத்தமுடியாத தவிப்புடன் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். சரி, இது என் முறை. கம்ப்யூட்டரைத் தள்ளி வைத்துவிட்டு அப்பாவிடம் திரும்பினார் மலாலா. ‘அப்பா இது வெறும் மிரட்டல்தானே. அதனால் என்ன? கொன்றுவிடவா போகிறார்கள்? அப்படியே கொன்றால்தான் என்ன?

மரணத்திடம் இருந்து தப்பிக்க முடியுமா என்ன? ஏதோ ஒரு வடிவில் மரணம் வரத்தான் போகிறது? தாலிபான் கொன்றால் என்ன, புற்றுநோய் கொன்றால் என்ன?’  புத்திசாலித்தனமான வாதமாகத்தான் இது மலாலாவுக்குப் பட்டது. ஆனால், அப்பாவை இது மீட்கவில்லை. மாறாக, மேலும் அழுத்தமாக அவரைச் சோகத்தில் தள்ளிவிட்டது. மரணம், கொலை என்றெல்லாம் அவர்கள் சொன்னால் கேட்டுக்கொண்டு, உம் கொட்டவேண்டும். பதிலுக்கு நாம் சொன்னால் ரசிக்க மாட்டார்கள். விநோதம்தான்.

‘மலாலா, இனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், புரிந்ததா? என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். இந்த மிரட்டலை அலட்சியப்படுத்தக்கூடாது.’  தன்னிடம் அல்ல, அவர் தனக்குத்தானே இதைச் சொல்லிக் கொண்டதைப் போல் இருந்தது மலாலாவுக்கு. முதல்முறையாக மலாலா கலங்கினார். இந்த பஷ்டூன் வீரரை இப்படியொரு தோற்றத்தில் இதுவரை நான் கண்டதில்லையே! அப்பா, ஏன் பயமுறுத்துகிறீர்கள்?

 இந்தப் பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை என்றபோதும் வழக்கமான பணிகள் எதையும் யாரும் நிறுத்திக்கொள்ளவில்லை. வழக்கம்போலவே மலாலா பள்ளிக்குச் சென்று வந்தார். எப்போது எங்கே அழைப்பு வந்தாலும் பங்கேற்றுக்கொண்டார். பேசச் சொன்னால் பேசினார். மேடை பயம் எங்கே சென்று ஒளிந்துகொண்டதோ தெரியவில்லை. கேமரா முன்னால் இயல்பாக வந்து நின்று புன்னகைக்க முடிந்தது. எப்படிப்பட்ட கூட்டத்தில் பேசவேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு தயார்படுத்திக்கொள்ள முடிந்தது. ’ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்... எதற்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கின் பெண்கள் பயப்பட மாட்டார்கள்.

மிரட்டிப் பணிய வைத்துவிடலாம் என்று யாரும் எண்ண வேண்டாம்!’ என்று கையை உயர்த்திப் பேச முடிந்தது. அரங்கம் கைத்தட்டல்களால் நிறைந்தபோது, உள்ளமும் பூரிப்பால் நிறைந்தது. வாசிப்பதிலும் வீட்டுப் பாடம் செய்வதிலும் இப்போது மலாலா வுக்கு ஒரு புதிய தோழி கிடைத்திருந்தார். மலாலா அளவுக்கு அவர் வேகமாக எழுதுவார் என்றோ படிப்பார் என்றோ சொல்ல முடியாது. நிறைய தடுமாறுவார். எழுத்து கோர்வையாக இருக்காது. பக்கத்தில் வைத்துச் சொல்லிக்கொடுக்க வேண்டும். திருத்த வேண்டும். ஆனால், தன்னைப் போலவே அந்தத் தோழிக்குப் படிப்பில் தீராத ஆர்வம் இருந்ததைக் கண்டு மகிழ்ந்து போனார் மலாலா. ஒன்றாக தரையில் அமர்ந்து புத்தகத்தை விரித்து பாடங்களை வாய்விட்டுச் சொல்லி எழுதும்போது மலாலாவுக்குத் தன் அருகில் இருப்பது அம்மா என்னும் உணர்வே ஏற்படாது.

மலாலா படித்த அதே குஷால் பள்ளியில்தான் அம்மாவும் படித்தார். பல நேரங்களில் வகுப்புகள் முடிந்ததும் தனது நோட்டைத் தூக்கிக்கொண்டு ஆசிரியரிடம் சென்று காட்டி சந்தேகங்கள் கேட்கும் அம்மாவைக் காண மலாலாவுக்குப் பெருமையாக இருந்தது. புத்திசாலித்தனம், கூர்மையாக வாதிடும் திறன், விழிப்பான ஆற்றல் அனைத்தும் இருந்தபோதிலும் எழுத்தறிவு மட்டும் இல்லாமல் இருந்தது. இப்போது அந்தக் குறையும் நீங்கிவிட்டது. இனி, என் அம்மாவை மிஞ்ச இந்தப் பள்ளத்தாக்கில் யாராவது இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

ஜியாவுதின் இதை ஒரு வெற்றியாகவே கண்டார். அப்பா, அம்மாவைப் பாருங்கள் எவ்வளவு துடிப்பாகப் பாடம் படிக்கிறார் என்று மலாலா கூச்சலிட்டபோது அவராலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்ததால், இப்போது படிக்கும் ஆர்வம் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறது என்பதை அவர் கண்கூடாக உணர்ந்தார். ஸ்வாட் பள்ளத்தாக்கு இத்தகைய பெண்களால் நிரம்பி வழிகிறது என்பதையும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவர்களாலும் அறிவொளியுடன் மலர முடியும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

அதற்காகத்தான் அவர் கிட்டத்தட்ட வீடு, வீடாகச் சென்று ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டிருந்தார். உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை இப்போதே படிக்க வையுங்கள். அப்போதுதான் என் அப்பாவும் அம்மாவும் என்னைப் படிக்க வைக்காமல் போய்விட்டார்களே என்று அவர்கள் எதிர்காலத்தில் வருந்தாமல் இருப்பார்கள்! பெண் குழந்தைகளுக்குத் தனிப் பள்ளிக்கூடம் நடத்துகிறோம். பயப்படாமல் அவர்களை அனுப்பி வையுங்கள்! மலாலாவும் அப்பாவுடன் பிரசாரங்களில் இணைந்து கொண்டார். என் அம்மாவைப் போல் உங்கள் அம்மாவையும் சகோதரிகளையும் படிக்க வையுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

பள்ளியில் பரீட்சை முடிந்து விடுமுறை தொடங்கியபோது அனைவரையும் ஒயிட் பேலஸ் அழைத்துச் சென்றார்கள். இந்தியாவுக்கு ஒரு தாஜ்மஹால் என்றால் ஸ்வாட்டுக்கு இந்த வெள்ளை மாளிகை. எலிஸபெத் மகாராணி தங்கிச் சென்றிருக்கும் இந்தப் பிரபலமான மாளிகை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் பசுமை புல்தரை, வண்ண மலர் செடிகள் நடுவில் அழகாக நிலா போல் இந்தப் பளிங்கு கட்டிடம் அமைந்திருந்தது. மலாலா உலகையே மறந்து தன் தோழிகளுடன் விளையாடினார். தீரவே தீராத கதைகளைப் பேசி மகிழ்ந்தார். நெருங்கிய தோழிகளிடம் கோபத்துடன் சண்டையிட்டார். பூச்சிகளைத் துரத்திக்கொண்டு ஓடினார். பெரும் கூச்சலிட்டு, சத்தம் போட்டுச் சிரித்தார்.

உடல் முழுக்க சோர்வுடன், மனம் முழுக்க நிறைவுடன் வீடு திரும்பியபோது யாரோ ஒருவர் வீடு வீடாக வந்து நகல் எடுக்கப்பட்ட ஒரு கடிதத்தை விநியோகித்துக்கொண்டிருந்தார். தன் கையில் திணிக்கப்பட்ட கடிதத்தைப் பிரித்து படித்தார் ஜியாவுதின். அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே, குஷால் பள்ளி என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அந்தப் பள்ளியில் சிறு பெண்குழந்தைகளை எல்லாம் சேர்த்து வைத்துப் படிக்க வைக்கிறார்கள். படிக்கவா வைக்கிறார்கள்? அருவெறுப்பூட்டும் வகையில் கூத்தடிக்கிறார்கள். கேட்டாலே உடல் கூசுகிறது. பிக்னிக் அழைத்துச்செல்கிறேன் என்னும் பெயரில் ஊர், ஊராக அழைத்துச்சென்று ஆட்டம், பாட்டம் என்று அலையவிடுகிறார்கள். நேற்று என்ன நடந்தது என்பதை ஒயிட் பேலஸ் சென்று நீங்களே விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

கடிதத்தின் நோக்கம் ஒருவரும் சொல்லாமலேயே தெரிந்தது. குஷால் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் சிறுமிகளின் பெற்றோரைப் பயமுறுத்தி அவர்களைப் பள்ளி செல்லவிடாமல் தடுக்கவேண்டும். கொலை மிரட்டலுக்கும் பணியாதவர்களை கலாசாரத்தின் பெயரால் தாக்கியிருக்கிறார்கள். உங்கள் பெண்குழந்தை நேற்று என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா என்னும் ஒரு கேள்வி போதும் அவளுடைய பெற்றோரின் உள்ளத்தை உடைக்க. ஆனால், நோக்கம், உடைப்பதல்ல. படிப்பவர்களின் உள்ளத்தைக் கிழிப்பது. அதனால்தான் அருவெறுப்பூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள், கூத்தடிக்கிறார்கள் போன்ற குறுவாள்களைக் கடிதத்தில் செருகியிருந்தார்கள்.

மலாலா எவ்வளவு யோசித்தும் ஒரு சிறு குற்றச்செயலும் அவர் நினைவுக்கு வரவில்லை. உயிருக்கு உயிரான தோழி ஒருவருடன் சண்டையிட்டேன், உண்மை. மிஞ்சிப்போனால் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இந்தக் கோபம் உயிர்த்திருக்கும். பிறகு நாங்களே உடைத்துவிட்டு, பேச ஆரம்பித்துவிடுவோம். இதிலென்ன பெரும் குற்றத்தை அவர்கள் கண்டார்கள்? இதில் அருவெறுப்பூட்டும்படியாக என்ன நடந்துவிட்டது? எச்சரிக்கும் அளவுக்கு என்ன தவறு இழைத்துவிட்டோம்? கவனமாக யோசித்துப் பார்த்தபோது இன்னோர் கேள்வியும் பிறந்தது. அப்படியானால் நாங்கள் போகும் இடமெல்லாம் தாலிபான்கள் எங்களைப் பின்தொடர்ந்து வருகிறார்களா? எங்களுடைய ஒவ்வொரு செயலையும் அவர்கள் வேவு பார்க்கிறார்களா? இவர்களிடமிருந்து தப்பவே முடியாதா? அப்படியானால், சொன்னதைப் போலவே என்னைக் கொன்றுவிடுவார்களா?

‘‘மலாலா பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த நிருபரின் கண்களில் கண்ணீர் திரண்டுவிட்டது. அப்பா நடுக்கத்தில் இருந்தார். அந்த நேரம் பார்த்து அப்பாவின் கைப்பேசியும் அலற, சில விநாடிகளில் அவர் முகம் முழுக்க இருண்டுவிட்டது. இங்கே என்னதான் நடக்கிறது, யாராவது சொல்லுங்களேன்!’’

‘‘மரணத்திடம் இருந்து தப்பிக்கமுடியுமா என்ன? ஏதோ ஒரு வடிவில் மரணம் வரத்தான் போகிறது? தாலிபான் கொன்றால் என்ன,புற்றுநோய் கொன்றால் என்ன?’’

அப்பா, அம்மாவைப் பாருங்கள் எவ்வளவு துடிப்பாகப் பாடம் படிக்கிறார் என்று மலாலா கூச்சலிட்டபோது அவராலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை.

(மேஜிக் நிகழும்!)