எண்ணங்கள்... வண்ணங்கள்!



என் ஜன்னல்

இடம்

ஆன்மிகம் மட்டுமே அல்ல!வெளிநாடாக இருந்தாலும் வேற்று மாநிலமாக இருந்தாலும் வேறு ஊராக இருந்தாலும் பயணம் என்பது எப்போதும் நம் உலகை விரிவாக்கும், பல்வேறு சிந்தனைகள், கருத்துகள் உதயமாகும்.  புதிய மனிதர்கள், புதிய நிலம், புதிய காற்று,  முற்றிலும் புதிய ஒரு பூமியைத்தான் பயணம் எப்போதும் நமக்கு உருவாக்கிக் கொடுக்கும்.காஞ்சியைப் பற்றியும் அந்நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர், மற்றும் சோழர்கள் பற்றி எல்லாம் பாட புத்தகத்தில் படித்ததோடு சரி... கோயில்களையும் சிற்பங்களையும் காண வேண்டும் என்றஆவலில் சென்ற மாதம் சென்றேன்.காஞ்சி கைலாச நாதர் கோயில் மாமல்லபுர கோயில்களுக்கு மட்டுமல்ல, மாமன்னன் ராஜராஜசோழனுக்கும் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. இச்சிற்பக் கோயிலைக் கண்டதாலேயே தஞ்சையில் பெரிய கோயிலை எழுப்பி இருக்கிறான் ராஜராஜன்.

இக்கோயிலைக் கட்டியவன் ராஜசிம்மன். மிக நுணுக்கமான கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட கோயில்.ஏகாம்பரநாதர் கோயிலில் 1008 லிங்கங்கள் உட்புறத்தைச் சுற்றிலும் இருக்கின்றன. கருவறையின் லிங்கம் மணலால் ஆனது என்பதால் இங்கு நீரால் அபிஷேகம் நடப்பதில்லை. மணலால் லிங்கம் செய்து தவமிருந்த பார்வதி தேவியை சோதனை செய்ய விரும்பிய சிவன், வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கை அதிகரித்து மணல் லிங்கத்தை அழிக்க முற்பட்டிருக்கிறார். பார்வதி லிங்கத்தை கட்டிப்பிடித்தபடி காப்பாற்றியதாக தல புராணம் கூறுகிறது. நம் தமிழக கோயில்களில் வெறும் ஆன்மிகம் மட்டும் நிரம்பி இருக்கவில்லை. அதைக் கட்டிய மன்னர்கள், அவர்கள் வாழ்ந்த காலம், செய்த படையெடுப்புகள் என நம் நாட்டின் வரலாறும் அதில் ஒட்டியிருக்கிறது. 

நூல்

பெண்ணைச் சுற்றியே... இந்தியாவின் மாபெரும் இதிகாசம்... இதற்குள் எத்தனைக் கதைகள், எத்தனை மாந்தர்கள், எத்தனை நீதிகள்! தர்மம் வெல்லும், அதர்மம் தோற்கும் என்ற நீதியை உலகுக்குச் சொல்லிய நூல். தமிழில் ராஜாஜி, வில்லிபுத்தூரார், சோ, சிவக்குமார் உள்பட பலர் எழுதியிருந்தாலும், எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய மகாபாரதம் வேறு பார்வை கொண்டது. பெண்ணைச் சுற்றியே சுழல்கிறது. கங்கை, சத்தியவதி, குந்தி, காந்தாரி, பாஞ்சாலி என ஆளுமை மிக்க பெண்களினாலேயே அத்தனை நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன. ஏழு குழந்தைகளை நீரில் போட்டு சாகடிக்கும் கங்கை, தன்னை விரும்பிய சாந்தனுவிடம் தன் வாரிசு அரசாள வேண்டும் என்று கோரிய சத்தியவதி, மாற்றாள் பெற்ற குழந்தைகளையும் தன் குழந்தைகளாக வளர்க்கும் குந்தி, தன் கணவனுக்குப் பார்வை இல்லை என்பதற்காக கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரி, அர்ஜுனனுக்காக அவனது சகோதரர்களையும் மணந்ததிரௌபதி... பெண்களுக்குத்தான் எத்தனை முகங்கள்!

கங்கையை அழுக்குப்படுத்தி விட்டு அதை தூய்மையற்றது என்கிறோம். பிரபஞ்சனோ, என் தாய் அழுக்கு சேலை உடுத்தியிருக்கிறாள். அதனால் அவள் என் தாய் இல்லை என்று ஆகிவிடுவாளா?’  என்கிறார். அர்ஜுனனின் பல மனைவியருள் ஒருத்தி உலுப்பி. அரவானை ஈன்ற தாய். கணவனின் ஆதரவும் கிடையாது. அரவானையும் போரில் பலி கொடு்த்துவிடுகிறாள். பிறகு, அவள் பைத்தியமாக திரிவதாக தாயின் கண்ணோட்டத்தில் விவரிக்கிறார் பிரபஞ்சன். திருதராட்டிரன், காந்தாரியோடு வனம் போகிறாள் குந்தி. ஏன் என்று பாண்டவர்களுக்குப் புரியவில்லை.

அன்னையிடமே கேட்கிறார்கள்.அவளோ பதில் சொல்லவில்லை. மனதுக்குள் மனைவியை வைத்து சூதாடியவர்கள் தாயை வைத்து சூதாட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மனைவி என்பவள் தாயல்லவா?’ என்று குந்தியின் மனம் கேட்பதாக முடித்திருக்கிறார்.

(வெளியீடு: நற்றிைண பதிப்பகம்  300)

இணையம்  பொக்கிஷம்

நம் பண்டை கலாசாரம், பண்பாடு, அவர்களின் வாழ்க்கை முறை குறித்து அடிக்கடி கட்டுரை எழுதி வருகிறேன். இதற்கான மேற்கோள்களுக்கும் தகவல்களுக்கும் பெரிதும் உதவி புரிவது மதுரை புராஜெக்ட்’ (மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்) வலைத்தளமே. திருக்குறளில் தொடங்கி  ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், அகநானூறு, புறநானூறு, நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, உலக நீதி, ஆசாரக் கோவை,  பாரதியார், பாரதிதாசன், மலையாள சிறுகதைகள் வரை மொத்தம் 489 நூல் பட்டியலின்  பாடல்கள் மற்றும் உரைநடைகள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு பொக்கிஷம். (www.projectmadurai.org)

பெரிய பெரிய கண்கள்

தனது உழைப்பும் படைப்பும் அடுத்தவர்களால் சுரண்டப்படும்போது ஏற்படும் மனவேதனையை அழகாக எடுத்துச்சொல்லும் ஆங்கிலப் படம் ‘Big Eyes’ உண்மைக் கதையை தழுவி்யது. விவாகரத்துப் பெற்று, தனது  மகளோடு சான்பிரான்சிஸ்கோவுக்கு இடம் பெயரும் ஓவியப் பெண்மணி மார்கரெட், பெரிய பெரிய கண்களோடு மென்சோகம் ததும்ப குழந்தைகளை ஓவியங்களாக்குவாள். ஒருநாள் சாலையோரக் கண்காட்சியில் `வால்டர் கீன்’ எனும் ஓவியரை சந்திக்கிறாள். கீன், ரியல் எஸ்டேட் வியாபாரமும்செய்தவன் என அறிகிறாள். கீன், மார்கரெட் மீது காதல் வயப்பட்டு, குழந்தையோடு அவளை ஏற்றுக்கொள்வதாகச் சொல்ல,  ஒப்புக்கொள்கிறாள். அவன் மீதுள்ள அதீத நம்பிக்கையால் ஓவியங்களில் கீன் பெயரையே சேர்க்கிறாள்.  ஓவியங்களை விற்கும் பணியை கீன் ஏற்றுக்கொள்கிறான். மார்கரெட் வரையும் ஓவியங்களை கீன்தான் வரைவதாக அனைவரும் நினைக்கின்றனர். `இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம்...

நமக்கு ஓவியங்களின் விற்பனைதானே முக்கியம்’ என்கிறான் கீன். அவள் அமைதி காக்கிறாள். மார்கரெட்டின் ஓவிய புகழ்வெளிச்சம்  கீன் மீது விழுகிறது. மார்கரெட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எண்ணுகிறான் கீன். மார்கரெட் பொறுமையிழந்து, இனி அவன் பெயரில் ஓவியங்கள் வரைய முடியாது என மறுக்கிறாள்... விவாகரத்து கோருகிறாள். உலக கண்காட்சியில் கலந்து கொள்ள ஓர் ஓவியத்தை மட்டும் வரைந்து தந்தால், விவாகரத்து தருவதாககீன் ஒப்புக்கொள்ள... மார்கரெட்  மிகச் சிறந்த ஓர் ஓவியத்தைப் படைக்கிறாள். கண்காட்சி முடிவிலும் விவாகரத்து தர கீன் மறுக்க, நீதிமன்றத்தை நாடுகிறாள். ஓவியங்களை வரைவது யார் என அறிய, நீதிபதி இருவரையும் வரையச் சொல்கிறார்.

மார்கரெட் வெற்றி பெறுகிறாள். டிம் பர்டனின் இப்படத்தை பார்த்தபிறகு, எல்லோரையும் பெரிய பெரிய கண்களோடே பார்க்கத் தோன்றுகிறது. ‘இந்த அழகான உலகத்தைக் காண நமக்கு ஜன்னலாக இருப்பது  நமது கண்கள்தானே’ என்ற வசனமும் மனதி்ல் பதிந்து போனது. நம்மூர் பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்களே ஆளுமை செலுத்துவது போல, உலகம் முழுக்க உள்ள அனைத்துப் பெண்களுக்குேம இது பொருந்தும் என உணர்த்துகிறது ‘பிக் ஐஸ்’.