எப்படிப் பார்த்தாலும் பெண்ணுக்குத்தானே பாதிப்பு?



சந்தனமேரி உழைக்கும் பெண்கள் இயக்கம்

முதல் முறை உரையாடுவதில் உள்ள அந்நியத் தன்மை இல்லை. அறிமுகத்திலேயே அன்யோன்யமாகச் செய்கிறது அந்த அன்பு. முகம் தெரியாதவர்களிடத்தும் அன்பு செய்யப் பழகிய அந்த மனதுதான் சந்தனமேரியை இன்று தேசமே திரும்பிப் பார்க்கும் இடத்துக்கு உயர்த்தியிருக்கிறது!

ராமநாதபுரம் மாவட்டம், ஓரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்தனமேரி, ‘உழைக்கும் பெண்கள் இயக்கம்’ என்கிற அமைப்பின் மூலம் சாதியக் கொடுமைகளுக்கும் பெண்ணடிமைத்தனங்களுக்கும் எதிரான அமைதிப் புரட்சிகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர். மெத்தப் படித்த, மேல் தட்டு மக்களுக்கு இருக்க வேண்டிய, ஆனால், இல்லாமல் போன சமூக அக்கறையையும் விழிப்புணர்வையும் சுமந்தபடி, போராடிக் கொண்டிருக்கிற படிக்காத மேதை. அவருடன் 10 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தாலே, நமக்கும் ஒட்டிக் கொள்கிறது அவரது சமுதாய அக்கறை.

‘‘எங்கம்மா, அப்பாவுக்கு நாங்க 9 பிள்ளைங்க. நான்தான் மூத்தவ. இப்ப நாலு பேர்தான் இருக்கோம். பர்மாவுலேருந்து அகதிகளா விரட்டப்பட்டப்ப எனக்கு 12 வயசு. பர்மா பிரஜையா அங்கேயே இருந்து உசிரை விடறதானா இருக்கலாம்... இல்லைனா ஊரை விட்டு ஓடிருங்கனு விரட்டினாங்க. எங்கய்யாவுக்கு சிவகங்கை மாவட்டம் சூராணம் பூர்வீகம். அங்கே நிலமிருக்கு, பிழைச்சுக்கலாம்னு வந்துட்டோம். பர்மாவுல அந்நிய அடக்குமுறை இருந்தது. நம்ம பெண்களோட தாலிகளை அறுத்து, அவங்க மக்களுக்குக் கொடுக்கிற கொடுமைகளை எல்லாம் கண்ணால பார்த்திருக்கேன். சொந்த மண்ணுல பிழைப்பைப் பார்த்துக்கிட்டு நிம்மதியா இருந்துடலாம்னு நினைச்சு வந்தோம். ஆனா, எங்கூருல சாதிய வெறி உச்சத்துல இருந்துச்சு. தலித் மக்களான எங்களை அவங்க நடத்தின விதம் ரொம்ப மோசமா இருந்தது.

 பர்மாவுல மூணாங்கிளாஸ் வரைக்கும் படிச்சதோட சரி... சொந்த ஊருக்கு வந்ததும், சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலைமையில 12 வயசுலயே நான் வயல் வேலைக்குப் போனேன். களை எடுக்கறது, கருதறுக்கிறதுனு கிடைக்கிற வேலைகளைச் செய்யணும். 50 பைசா கூலி குடுப்பாங்க. மேல் சாதினு சொல்லிக்கிறவங்களுக்கு சமமா நாங்க உட்காரக் கூடாது. அவங்க பெஞ்சுல உக்கார்ந்திருப்பாங்க. நாங்க தரையிலதான் உட்காரணும். அவங்களுக்கெல்லாம் கண்ணாடி கிளாசுல தண்ணி குடுத்தாங்கன்னா எங்களுக்கு பாசம் புடிச்ச வெங்கல கிளாசுல குடுப்பாங்க. பனைமட்டைப் பட்டையிலதான் கஞ்சி ஊத்துவாங்க. மேல்சாதிக்காரங்கக்கிட்ட வட்டிக்குத்தான் கடன் வாங்கியிருப்போம்.

ஆனாலும், கடன் குடுத்ததுக்காக, அவங்க வீட்ல சாணி அள்ளி வச்சிட்டு, ரெண்டு குடம் தண்ணி அள்ளி வச்சிட்டு, இன்னும் அவங்க ஏவுற வேலைகளைப் பார்த்துக் குடுத்துட்டுத்தான் வரணும். தலித் இனத்தைச் சேர்ந்த ஆம்பிளைங்க, மேல் சாதிக்காரங்களுக்கு எதிர்ல சட்டை போடக் கூடாது. பொம்பிளைங்கன்னா மாராப்பால மார்பை மறைக்க முடியாது. வேலை பார்க்கிற இடத்துலயும் தலித் பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பில்லை. ஆதிக்க சாதி ஆம்பிளைங்களோட பாலியல் பலாத்காரத்தை சந்திக்கணும். ஆனா, நடந்ததை வெளியில சொல்ல முடியாது.

12 வயசுலேருந்து நான் பார்த்த இந்தக் காட்சிகள் எல்லாம் எனக்குள்ள வேற மாதிரியான சிந்தனையை ஏற்படுத்தியிருந்துச்சு. இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு? இதையெல்லாம் எப்படி ஒழிக்கிறதுனு எனக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள்... சூராணத்துல சில இளைஞர்கள் சேர்ந்து மூணு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தினப்ப, ஏதோ ஒரு வேகத்துல அதுல கலந்துக்கிட்டேன். அப்ப எனக்கு 17 வயசு.

அடுத்து19 வயசுல திருமணம். அதுக்குப் பிறகு கணவரோட ராமநாதபுரம் ஓரிக்கோட்டைக்கு வந்தேன். அங்கேயும் அடக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் தொடர்ந்தது. இதையெல்லாம் எதிர்த்து எதுவுமே செய்ய முடியலையேங்கிற வேதனை அதிகமாச்சு. 8687ல கிறிஸ்தவ நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் எங்க ஊருக்கு வந்து, பெண்கள் அமைப்பு கட்டணும்னு கேட்டாங்க. அந்தக் காலத்துல, அப்படியொரு சூழல்ல பெண்களை வெளியே வரவழைக்கிறதே பெரிய விஷயம். யாரும், எதுக்கும் வர முடியாது. ஒரு தைரியத்துல 40 பெண்களை ஒன்று சேர்த்தேன். ஒரு அமைப்பு உருவாச்சு.

எழுதப் படிக்கத் தெரிஞ்ச ஒருத்தரை செயலாளரா நியமிக்கணும்னு கேட்டப்ப, அந்த 40 பேர்ல எழுதப் படிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள் நான் மட்டும்தான். பர்மாவுல மூணாங்கிளாஸ் வரைக்கும் படிச்சதுல தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். தவிர, சின்ன வயசுலேருந்து தமிழ்ல பாடல்கள் பாடுவேன். திருவிழாக்கள்ல பாடிட்டிருந்த நான், அப்புறம் சமூகப் பாடல்கள் பாடக் கத்துக்கிட்டேன்.

அந்த அமைப்புல வேலை பார்க்க சம்பளமெல்லாம் கிடையாது. பஸ் டிக்கெட்டுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க. நாலு வருஷம் உழைச்சேன். ஒரு கட்டத்துல என்னோட போராட்டத்துக்கும் அவங்க எதிர்பார்ப்புக்கும் நிறைய முரண்பாடு வந்தது. ஒரு விஷயத்துல போலீஸ் நடவடிக்கை எடுக்கலைனு தெரிஞ்சா, உடனே அந்த இடத்துக்குப் போய் நியாயம் கேட்டு நிப்பேன். அவங்களோ, ‘அப்படி எந்த அவசரமும் தேவையில்லை. பொறுமையா அணுகினா போதும்’னாங்க. அதுல உடன்பாடில்லாம வெளியில வந்தேன்.

அந்த நேரம் இந்திய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவங்களோட அறிமுகம் கிடைச்சது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கமான அதுல சேர்ந்த பிறகு என்னோட புரிதல் இன்னும் அதிகமாச்சு. அகில இந்திய முற்போக்கு பெண்கள் இயக்கம், விவசாய சங்கம்னு பல தரப்புலேருந்தும் பெண்களைத் திரட்டி, டெல்லி வரைக்கும் கூட போய் போராட்டங்களை நடத்தினேன். கோயில் பகுதிகள்ல தலித் மக்களை நுழைய விட மாட்டாங்க. தலித் சனங்க போற பாதையை அடைப்பாங்க. குடும்ப வன்முறையால பாதிக்கப்பட்ட எங்க பெண்கள், காவல் நிலையத்துல புகார் கொடுத்தா நடவடிக்கைகள் எடுக்க மாட்டாங்க. இப்படி எங்கே அநீதி நடந்தாலும் பெண்களைத் திரட்டிக்கிட்டுப் போய் உட்கார்ந்துடுவேன். நீதியும் நியாயமும் கிடைக்கிற வரைக்கும் விட மாட்டேன்.

இப்படி அந்த அமைப்புல 12 வருஷங்கள் இருந்துட்டு, சில காரணங்களுக்காக வெளியே வந்தேன். ‘உழைக்கும் பெண்கள் இயக்கம்’ தொடங்கினேன். எந்த ஆணோட தலையீடும் வேண்டாம்னு நானே தலைமைப் பொறுப்பை ஏத்துக்கிட்டு, என் போராட்டங்களைத் தொடர்ந்திட்டிருக்கேன். நாங்க இருக்கிற ராமநாதபுரத்துல வருஷத்துக்கு ரெண்டு கலவரம் நடக்கும். அந்தக் கலவரத்துல பல உயிர்கள் போகும். தப்பு பண்ணினவங்க தலைமறைவாகிடுவாங்க இல்லைனா ஜெயிலுக்கு போயிடுவாங்க.

பாதிக்கப்படறதென்னவோ பெண்களாத்தான் இருப்பாங்க. போலீசுக்கு போக பயந்துக்கிட்டு, வீட்டுக்குள்ளயே கஷ்டத்தை அனுபவிச்சிட்டிருப்பாங்க. அந்த மாதிரி நேரத்துல நான் தோழர்களைக் கூட்டிக் கிட்டு அங்க போவேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய அரசாங்கத்தை அணுகணுமா, கலெக்டரை பார்க்கணுமா, வேற உதவிகள் தேவையானு பார்த்து எல்லாத்தையும் செய்வேன். குடும்ப வன்முறையால பாதிக்கப்படற பெண்களை அதுலேருந்து மீட்டெடுத்து வாழறதுக்கான தைரியத்தைக் குடுக்கறேன். இன்னொரு பக்கம் மதுக்கடைகளை மூடச் சொல்ற என் பிரசாரம் பல வருடங்களா தொடர்ந்திட்டிருக்கு. ஊருக்கு பத்து பொம்பிளைங்க விதவைகளாகி நிக்கறாங்க. பல பெண்கள் தற்கொலை பண்ணிக்கிறாங்க. ஆம்பிளைங்க குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி நோயாளிகளா ஆயிடறாங்க... இல்லைனா இறந்து போறாங்க. எப்படிப் பார்த்தாலும் பெண்ணுக்குத்தான் பாதிப்பு. பூரண மதுவிலக்கு ஒண்ணுதான் இதுக்கான தீர்வு.

பெண்களோட முன்னேற்றத்துக்கான போராட்டம் ஒரு பக்கம்னா, தலித் பெண்களுக்கான போராட்டம் இன்னொரு பக்கம். ஏன்னா, தலித் பெண்கள் சாதிய ரீதியிலயும் பெண்ணுங்கிற அடிப்படையிலயும் ரெண்டுவிதமான ஒடுக்கு முறைகளை சந்திக்கிறாங்க. அவங்களை அதுலேருந்து மீட்டெடுக்கணும்.

பெண்களுக்கு அடுத்தபடியா என்னோட இலக்கு குழந்தைங்க. நான் அதிகம் படிக்கலை. மக்கள்கிட்டருந்து நிறைய படிச்சு பயிற்சி எடுத்துக்கிட்டேன்.  எல்லாருக்கும் அந்த வாய்ப்பு அமையுமாங்கிறது சந்தேகம்.  அதை வலியுறுத்த ‘குழந்தைகள் சமூகக் கல்வி மையம்’னு ஒண்ணு நடத்தறேன். ஆணும் பெண்ணுமா 55 பிள்ளைங்க இருக்காங்க. ஏழுலேருந்து பதினஞ்சு வயசுப் பிள்ளைங்க. அவங்களுக்கு சமூகக் கல்வியைக் கத்துக் குடுக்கறேன். ‘கல்வின்னா என்ன, சமூகத்துல என்ன மாதிரியான பிரச்னைகள் இருக்கு, அதை எப்படி அணுகணும், தலைமைத்துவம்னா என்ன, நான் எந்த மாதிரியான விஷயங்களுக்காக போராடறேன்’னு என் அனுபவங்களை,

நான் பார்க்கிற விஷயங்களை வச்சு சொல்லித் தரேன். பள்ளிக்கல்விங்கிறது பொருள் ஈட்ட மட்டுந்தான் உதவும். சமூகக் கல்வி கத்துக்கிட்டா, ஒரு அநீதியைப் பார்க்கிறப்ப கோபம் வரச் செய்யும். போராடக் கத்துத் தரும். மாசத்துல ரெண்டு ஞாயித்துக்கிழமைகள்ல மட்டும் சொல்லிக் குடுக்கறேன். 500 ரூபா இருந்தா சமாளிச்சிடலாம். அந்த ஐநூறு ரூபாய்க்கு எப்படியும் யாராவது உதவிடுவாங்க. அப்படியும் கிடைக்கலையா, 100 நாள் திட்டத்தில வேலை பார்த்து வர்ற கூலியில சமாளிச்சிடுவேன். என்னோட இந்த முயற்சி, அந்தப் பிள்ளைங்கக்கிட்ட நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதைப் பார்க்கறேன். அவங்கள்ல சிலர் பெண்ணியச் சிந்தனையை வளர்த்திட்டிருக்காங்க. மேடைப் பேச்சாளரா உருவாகியிருக்காங்க.

நான் பண்ற எந்த வேலைகளுக்கும் யார்கிட்டயும் நிதி உதவி கேட்டு நின்னதில்லை. எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. ஒரு பையன். என்னோட போராட்டமும் புரட்சியும் அவங்களையும் பாதிச்சிருக்கு. அதனாலயே அவங்க அதிகம் படிக்க முடியலை. எல்லாருக்கும் திருமணமாகிடுச்சு. பிள்ளைங்க சின்னவங்களா இருந்தப்ப, எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் நிறைய பிரச்னைகள், சண்டைகள் வந்திருக்கு. வீட்ல சாப்பாட்டுக்கு வழி இருக்காது. உழைச்சாதான் காசு.

நானோ எந்நேரமும் கூட்டம், போராட்டம்னு போயிடுவேன். கோபத்துல அவர் என்னை அடிச்சுப் போட்டதும் உண்டு. ‘சோர்ந்து போயிடுவேனோ’ங்கிற பயம் இருந்துச்சு. ஒரு கட்டத்துல என்னையும் என் லட்சியத்தையும் அவர் புரிஞ்சுக்கிட்டார். இப்ப எனக்கு எல்லா விஷயங்கள்லயும் அவர்தான் துணை. ஒன்றரை ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்த்துக்கிட்டு, நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கோம். எனக்கு 62 வயசாச்சு. உடம்புல பலம் குறைஞ்சாலும் மனசு உறுதியா இருக்கு. மனசு ஒத்துழைக்கிற வரைக்கும் என் போராட்டங்கள் ஓயாது.

ஒவ்வொரு பெண்ணும் இந்தச் சமூகத்தை நினைச்சுப் பார்க்கணும். ஒடுக்கப்பட்ட பெண்கள் ஒன்றா இணையணும். வீடில்லாம, நிலமில்லாம, இன்னமும் ஆண்களோட அடக்கு முறையில சிறைப்பட்டிருக்கிற பெண்கள் எத்தனையோ பேர்... அரசியல்லயும் பெண்களோட நெலமை இப்படித்தான் இருக்கு. முடிவெடுக்கிற அதிகாரம் ஆண்கள் கையிலயும், அவனுக்குப் பின்னாடி கையெழுத்து போட்டுக் கொடுக்கிற ஒரு ஸ்டாம்ப் மாதிரியும்தான் பெண்கள் இருக்காங்க. முடிவெடுக்கிற அதிகாரம் பெண்கள் கைகளுக்கு வரணும். தன்னோட குடும்பம், தன் வீடுங்கிற சுயநலத்துலேருந்து வெளியே வந்து, சமூகத்தைப் பார்க்கிற பரந்த மனப்பான்மையை அவங்க வளர்த்துக்கணும். சமூக அக்கறையும் ஈடுபாடும் உள்ள பெண்கள் தலைமையேற்கிற அந்த நாள்தான் பெண்கள் முன்னேற்றம் அர்த்தம் பெறும்...’’பொறுப்பைக் கூட்டுகிறது சந்தனமேரியின் பாசாங்கற்ற பேச்சு!

பள்ளிக் கல்வி பொருள்
ஈட்ட மட்டுந்தான் உதவும்.
சமூகக் கல்வி கத்துக்கிட்டா,
 ஒரு அநீதியைப் பார்க்கிறப்ப கோபம்
வரச் செய்யும்...
போராடக் கத்துத் தரும்...

 ஆர்.வைதேகி
படங்கள்: பரமேஸ்வரன்