கருப்பு வெள்ளைச் சிந்தனை



டாக்டர் சுபா சார்லஸ்

தினம் தினம் நூறு முறைகள் கண்ணாடியைப் பார்க்கிறோம். நம்மை ரசிக்கிறோம். நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கிறது. அழுதால் அந்த பிம்பமும்  அழுகிறது. நம்முடைய மனமும் கிட்டத்தட்ட அப்படித்தான். தனக்கு நல்லதெனத் தெரிவதை, தோன்று வதை அப்படியே நம்பும்.
கெட்டதெனத் தோன்றுவதை ஒதுக்கும். வெறுக்கும்.

எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்லவரும் இருப்பார்கள்... பொல்லாதவரும் இருப்பார்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கிற எல்லா மனிதர்களிடமும், எல்லா சூழல்களிலும் நல்லதும் இருக்கும்... அல்லதும் இருக்கும்... அதுதான் இயற்கை. ஆனால், நாம் என்ன செய்வோம்? ஒருவரை நமக்குப் பிடித்துவிட்ட காரணத்தினாலேயே அவரிடம் எப்படிப்பட்ட குறைகள் இருப்பினும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, அவரை எப்போதும் நல்லவராக மட்டுமே பார்ப்போம். அதே போல ஒருவரைப் பிடிக்காது என்பதற்காக அவரிடம் உள்ள நல்ல குணங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமலேயே அவரை வெறுப்போம்.

வாழ்க்கையிலும் ஒருவரின் இரண்டு பக்கங்களையும் பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் தவறும் போதுதான் உறவுகளுக்குள் உணர்வுப் போராட்டம் உண்டாகிறது.
21 வயது மகள் வித்யாவுடன் என்னைச் சந்திக்க வந்தார் அவரது அம்மா. என்னுடைய அறையில் என் எதிரில் இருவரும் வேறு வேறு திசை நோக்கி உட்கார்ந்திருந்ததை வைத்தே அவர்களது பிரச்னையின் தீவிரம் புரிந்தது.

காதல் விவகாரம்!

வித்யாவுக்கு ஒரு இளைஞனுடன் காதல். அவன் வித்யாவை விட சில மாதங்கள் இளையவன். படிப்பு, அந்தஸ்து என எல்லாவற்றிலும் வித்யாவை விட சில படிகள் குறைவு. இத்தனை விஷயங்கள் போதாதா பெண்ணின் பெற்றோருக்கு அவனை நிராகரிக்க...?‘‘ரெண்டு பேருக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை. நாங்க இவளுக்கு ஒரு வரன் பார்த்திருக்கோம். இவளை விட அதிகம் படிச்சவன். 29 வயசு. நல்ல வேலையில இருக்கான். அழகுக்கும் குறைச்சலில்லை. அவனை விட்டுட்டு, ஒரு சின்னப் பையனைப் போய்...’’ - தன் அம்மாவைத் தொடர்ந்து பேச விடாமல் கத்தினார் வித்யா.

‘‘அப்ப அவனை நீயே கல்யாணம் பண்ணிக்கோ... எனக்கு இவனைத்தான் பிடிச்சிருக்கு. ரெண்டு, மூணு மாச வயசு வித்தியாசமெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அதுதான் இப்ப ஸ்டைலே. அவனும் படிச்சிருக்கான். ரெண்டு சப்ஜெக்ட்ல அரியர்ஸ் இருக்கு. அதை அடுத்த டேர்ம்ல எழுதி பாஸ் பண்ணப் போறான். இது ஒரு விஷயமா? உங்களுக்குப் பிடிக்கலைங்கிறதால, நீங்க பார்த்து வச்சிருக்கிற கிழவனை நான் கல்யாணம் பண்ண முடியாது’’ என்றார். அடுத்த அரை மணி நேரத்துக்கு அம்மா - மகளுக்கிடையில் கடுமையான வாக்குவாதம்...

‘‘நேத்து வந்தவனுக்காக பெத்து, வளர்த்து இத்தனை நாளா பார்த்துப் பார்த்து எல்லாம் பண்ற பெத்தவங்களையே தூக்கிப் போடத் தோணுதா? நாங்க சொல்றதைக் கேட்கலைன்னா நீ இனிமே எங்களுக்கு மகளே இல்லை’’ என அம்மாவும்... ‘‘எனக்குப் பிடிச்ச எல்லாத்தையும் செஞ்சீங்கல்ல... கல்யாண விஷயத்துல என் விருப்பத்தைக் கேட்டீங்களா? வாழப்போறது நான்தானே? உங்க கட்டாயத்துக்காக நீங்க பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, நாளைக்கே ரெண்டு பேருக்கும் பிடிக்காம, டைவர்ஸ் பண்ணிட்டு வந்து உங்கக்கூட உட்கார்ந்தா அப்ப உங்களுக்கு
சந்தோஷமா? இப்ப பார்க்கிற கவுரவம் அப்ப போனா ஓ.கே.வா...’’ என மகளும் சாடிக் கொண்டார்கள்.

இருவரையும் நிறுத்தச் சொல்லிவிட்டு, தனித்தனியே பேசினேன். காதல் என்கிற விஷயம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இந்தியா - பாகிஸ்தான்  அளவுக்கு விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. மகள் காதலிக்கிறாள் என்றதுமே, பல பெற்றோருக்கும் அது தவறான தேர்வாகத்தான் இருக்கும் என நினைப்பு. தங்களை மீறி தனக்கானவனைத் தேர்ந்தெடுத்துவிட்ட கடுப்பில், அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ, அவன் நல்லவனா என ஆராயவோ தவறிவிடுவார்கள். ‘நேத்து வந்த வன் முக்கியமாயிட்டானா’ என்கிற பெற்றோரின் கேள்வியில் ஓங்கியிருப்பது ‘மையச் சிந்தனை’. மகளின் காதலனைப் பற்றி முழுமையாகத் தெரியாமலேயே அவன் தகுதியற்றவன் என்கிற முடிவில், அவனைப் பற்றித் தவறாகவே பேசுவார்கள்.

எல்லோரின் பார்வையிலும் அந்தக் காதலன் தவறானவனாக தெரிவான். அதன் பின் அவனை யும் அவனது குடும்பத்தைப் பற்றியும் கிடைக்கிற எந்தத் தகவலையும் திரித்து, ‘ஆஹா... நான் அப்பவே சொன்னேனே.. அவன் சரியில்லைன்னு’ என்கிற  மாதிரியான பேச்சுகளே தொடரும். பெற்றோர் இப்படி என்றால், மகளின் அணுகுமுறையும் இதற்குக் கொஞ்சமும் சளைக்காது. ‘எனக்கு நல்லவனா இருக்கிற என் காதலனை என் பேரன்ட்ஸ் மட்டும் ஏன் புரிஞ்சுக்கறதில்லை? என்னைவிட, என் வாழ்க்கையைவிட, என் சந்தோஷத்தைவிட அவங்களுக்கு அவங்க குடும்ப கவுரவம்தான் பெரிசாப் போச்சா? என்னோட சாய்ஸ் நிச்சயம் தப்பா இருக் காது...’’ என்கிற மகளின் பேச்சில் மறைந்திருப்பது அத்தனையும் ‘மாயச் சிந்தனை’.

இருவரது பார்வைகளுமே தவறு. இருவருக்குமே கவுன்சலிங் தேவை. ‘வைத்தால் குடுமி... எடுத்தால் மொட்டை’ என்றொரு பழமொழி சொல்வார்கள். அதுதான் ‘கருப்பு-வெள்ளை சிந்தனை’யின் தத்துவம். பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்ததுமே பெற்றோர் கொந்தளிக்கத் தேவையில்லை. கண்மூடித்தனமாக அதை எதிர்க்கவும் வேண்டாம். பிள்ளைகளின் காதல் தவறாகத்தான் இருக்கும் என்கிற ஈகோ கலந்த ‘தான்’ மட்டுமே முக்கியமாகத் தெரிகிற மையச் சிந்தனையை (self centered thinking) வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அதைப் பற்றியே பேசிப் பேசி பெற்றோர்- பிள்ளைகளுக்கு இடையில் விரிசலை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டியதில்லை. அந்த இடத்தில் ஒரு அம்மாவாகவோ, அப்பாவாகவோ நடந்து கொள்ளாமல், மூன்றாம் நபராக இருந்து, இரண்டு வரன்களையும் ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.

மகள் சொல்வதில் உள்ள நியாயங்களைப் பரிசீலிப்பதுடன், தாங்கள் பார்த்த வரனிடம் உள்ள நல்லது, கெட்டதுகளையும் ஆராய வேண்டும். அவசர மாக எந்த முடிவையும் எடுக்காமல், அதை ஆறப் போடுவதுதான் முதல் தீர்வு. ஒரு வருடமோ, 2 வருடங்களோ பொறுமையாக இருக்கும்படி வித்யாவின் அம்மாவுக்கு அட்வைஸ் செய்தேன். மகளைத் தோழியாக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை, அவசரத்தை அவருக்கு எடுத்துச் சொன்னேன்.

‘‘பதின்ம வயதில் எல்லோருக்கும் காதல் அரும்பும். அதை ஆங்கிலத்தில் ‘பப்பி லவ்’ என்பார்கள் . அதுதான் காதல் என நினைத்துக் கொண்டு , உருகக் கூடாது. 18 வயதில் அதைவிட சிறந்த ஆண் மகன்களிடமிருந்து காதல் தூது வரும். அந்த வயதில் உருவாகிற காதல் வேறு மாதிரியான உணர்வைத் தரும். ஒரு ஆண் மகனின் அழகோ, ஆளுமையோ அதன் பின்னால் இருக்கலாம். அதுவும் உண்மையான காதலாக இருக்க வாய்ப்பில்லை.

அதற்குப் பிறகும் வாழ்க்கையில் அடிக்கடி காதல்கள் வரும்... போகும். அத்தனையையும் காதல் என தப்பர்த்தம் செய்து கொண்டு, மனக்கோட்டையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். அந்த வயதில்தான் உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். 21 வயது என்பது ரொம்பவும் இக்கட்டான ஒரு பருவம்.

 காதலை எதிர்க்கிற பெற்றோரை எதிரிகளாகப் பார்க்கத் தோன்றும். திருமணத்தில் இணைகிற பெண்ணை விட, ஆண் வயதில் மூத்தவனாக இருக்க வேண்டும் என காலங்காலமாக வலியுறுத்தப்படுவதில் காரணங்களும், அறிவியல் உண்மைகளும் இல்லாமல் இல்லை. அது தவிர ஆணுக்கான திருமண வயது 21 என சட்டம் சொன்னாலும், அந்த வயதில் அவன் எந்தளவுக்குத் திருமண வாழ்க்கைக்குத் தயாராக இருப்பான் என்பது கேள்விக் குறியே. 27 வயது வரை ஆணுக்கு செக்ஸ் இன்பத்துக்குக் காரணமான  டெஸ்ட்டோஸ்டீரான் மட்டுமே  உச்சத்தில் இருக்கும். உடல் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அவனது மனமானது,

 அன்பு, பாசம், பிணைப்பு போன்றவற்றைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்காது. 27 வயதுக்குப் பிறகு அந்த டெஸ்ட்டோஸ்டீரான் குறைய ஆரம்பிக்கும். தன்னை நாடி வந்தவளையும் தன் குடும்பத்தையும் பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறை வரும். எனவே, கண்டதும் காதல் என்று அதிலேயே உருகித் தவிக்க வேண்டாம். அம்மா-அப்பா பார்த்த வரன்தான் பொருத்தம் என்றோ, உங்கள் காதலன்தான் சிறந்தவன் என்றோ வாக்குவாதங்கள் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதே இப்போதைக்கு நல்ல முடிவு.

இன்று பெரிதாகத் தெரிகிற காதல், சில வருடங்கள் கழித்து முட்டாள்தனமாக, தவறான தேர்வாகக் கூடத் தெரியலாம். எனவே, அந்த உறவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியே வரும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தயாராவதுதான் உனக்கான உடனடிப் பயிற்சி’’ என்றேன் மகளிடம். திருமண விஷயத்தில் இரு தரப்பினருமே அவசரப்படாமல் அமைதி காத்தார்கள் எனில், நிச்சயம் இருவருக்கும் சாதகமான, இருவருக்கும் இசைவானதொரு முடிவு கிடைக்கும்.

பயிற்சி

எழுதப் படிக்கக் கற்றுக்கொள்கிற போதே, நமக்கு எதிர்ச்சொற்களைப் பற்றிக் கற்றுத் தருகிறார்கள். இரவு - பகல், சிரிப்பு - அழுகை, இன்பம் - துன்பம் என எல்லாவற்றுக்கும் எதிர்ப்பதங்கள் கற்றாலும், யதார்த்த வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் நாம் அப்படி அணுகுவதில்லை. ஒரு விஷயத்தைக் கையில் எடுக்கும் போதே, அதன் சாதகங்களைப் பற்றி மட்டுமே யோசிக்காமல், பாதகமான இன்னொரு பக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசித்து வையுங்கள்.

காதல், கல்யாணம் என பெரிய பெரிய நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி, நீங்கள் சந்திக்கிற சின்னச் சின்ன விஷயங்களில்கூட இப்படியொரு பார்வையை நீங்கள் பழக்கிக் கொண்டால், நிகழ்வின் முடிவு எப்படியிருப்பினும் உங்களால் எளிதால் அதை ஏற்றுக் கொள்ள முடியும். ஏமாற்றங்கள் தவிர்க்கப்படும். நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளதைப் போல, வாழ்க்கையில் நிகழ்கிற சம்பவங்களுக்கும் பல பக்கங்கள் இருக்கும். எந்த விஷயத்திலும் உணர்வு சார்ந்து யோசிக்காமல், யதார்த்தச் சிந்தனைக்கு இடமளித்து, நல்லது, கெட்டதுகளை ஆராய்ந்து எடுக்கிற முடிவுகளே எப்போதும் சரியாக இருக்கும்.

காதல் என்கிற விஷயம் பெற்றோருக்கும்,
பிள்ளைகளுக்கும் இந்தியா - பாகிஸ்தான்
அளவுக்கு விரிசலை ஏற்படுத்தி விடுகிறது!

(சிந்திப்போம்...)