இனிது இனிது வாழ்தல் இனிது!



இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை நோய் என்னவாம் தெரியுமா? ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் என்கிறது ஒரு ஆய்வு. சின்னக் குழந்தைகள் முதல் சீனியர் சிட்டிசன் வரை எல்லோருக்கும் மன அழுத்தம். வீட்டில் பிரச்னை என்றால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கிறது. வேலையிடத்துப் பிரச்னைகளை வீட்டுக்குள்ளும் சுமந்து கொண்டு திரிகிறோம். எல்லாவற்றுக்கும் காரணம் மன அழுத்தம்!

கற்பனையைத் தாண்டிய எதிர்பார்ப்புகளே மன அழுத்தத்துக்கான அடிப்படை. நம்மில் பலருக்கும் எல்லாம் வேண்டும். அதிலும் உடனே வேண்டும். அது சாத்தியமா, இல்லையா என்பதைக் கடந்த அந்த எதிர்பார்ப்புதான் மன அழுத்தத்துக்கான முதல் விதை. கணவன்-மனைவி உறவுக்குள் உருவாகிற பல பிரச்னைகளுக்கும் இந்த மன
அழுத்தமே காரணம்!

அது சரி... மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? நமது மூளையில் கவலைகள் 60 ஆயிரம் சின்னச் சின்ன குறும்படங்களைப் போல எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்குமாம். நம் வாழ்க்கையில் நடந்த பல பழைய அனுபவங்களும் சின்னச் சின்ன குறுந்தகடுகளைப் போல மூளையில் சேகரிக்கப்பட்டிருக்கும். அவற்றில் நல்லதும் இருக்கும்... கெட்டதும் இருக்கும். ஆனால், மனித இயல்பு எப்படியானது தெரியுமா? வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களையும் சண்டைகளையுமே அடிக்கடி ரீவைண்ட் செய்து ஓடவிட்டுப் பார்க்கும். உதாரணத்துக்கு... எங்கேயோ ஒரு விபத்து நடக்கிறது என வைத்துக் கொள்வோம். உடனே நமது மூளையானது நம் நினைவில் பதிந்த, எப்போதோ நடந்த விபத்துகளைப் பற்றிய நினைவுகளை அசைபோடும். அது நம் நிம்மதியைக் கெடுத்து, பயத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

திருமண உறவிலும் இதுதான் நிகழ்கிறது. கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் போதும், வாக்குவாதங்கள் முற்றும் போதும், கடந்த காலச் சண்டைகளைக் கிளறுவார்கள். எப்போதோ நடந்த சண்டையின் போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் வாரித் தூற்றிய வார்த்தைகளை நினைவுபடுத்தி, நிகழ்காலச் சண்டையின் தீவிரத்தை இன்னும் மோசமாக்கிக் கொள்வார்கள். காதலித்த காலத்திலோ, திருமணமான புதிதிலோ அவனோ, அவளோ இல்லாமல் வாழவே முடியாது எனத் தவித்தது மாறி, இன்று அவனுடன் அல்லது அவளுடன் வாழவே முடியாது என்கிற நிலை வரை அது தள்ளும். எல்லாவற்றுக்கும் காரணம் திரும்பத் திரும்ப ரீவைண்ட் செய்து ஓட்டிப் பார்க்கப் படுகிற நெகட்டிவ் சிந்தனைகள்!

மூளை என்கிற பிளேயரில் எந்த மாதிரியான சி.டிக்களை ஓடவிட வேண்டும் என்கிற சாய்ஸ் நம்மிடம்தான் இருக்கிறது. எத்தனையோ மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருக்கும்போது, அவற்றைத் தவிர்த்து சோகங்களையே ஏன் சுழலச் செய்ய வேண்டும்? பாசிட்டிவான சி.டிக்களை ரீவைண்ட் செய்து ஓட்டிப் பார்க்கிற முயற்சி அத்தனை எளிதானதல்லதான். ஆனாலும், பழகிவிட்டால், அதன் பிரதிபலிப்பை உறவின் அன்யோன்யத்தில் உணரலாம்.

கணவன்-மனைவி உறவுக்குள் பிரச்னைகள் எழுவதற்கான இன்னொரு முக்கிய காரணம் இருவரின் எண்ணங்களிலும் ஏற்படுகிற பிறழ்வு. அடுத்தவரைப் பற்றிய... உலகத்தைப் பற்றிய... இருவரின் தவறான, எதிர்மறையான எண்ணங்கள். தன்னைச் சுற்றி நடக்கிற எல்லாம் தனக்குச் சாதகமாகவோ, தனக்குப் பிடித்த மாதிரியோ இருந்தால் எல்லாம் சரியாக நடப்பதாக நினைப்பார்கள். அப்படி நடக்காத போது விமர்சனம் செய்வார்கள். மற்றவரைக் குறை சொல்வார்கள்.

ஒரு உதாரணம் பார்ப்போமா... அந்தத் தம்பதியின் மகள் பிளஸ் டூ தேர்வில் 96 சதவிகிதம் மதிப்பெண்கள் வாங்கி, பள்ளியிலேயே முதல் மாணவியாகவும் வந்திருந்தாள். 96 சதவிகிதம் என்பது சாதாரண விஷயமல்ல. ஆனாலும், திறமையின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்க நினைத்த அவளது பெற்றோருக்கோ, 96 சதவிகிதம் என்பது குறைவாகத் தெரிந்திருக்கிறது. ‘நீ சரியா படிச்சாதானே? இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கலாம்ல? நீ எங்கே உருப்படப் போறே...’ என்கிற மாதிரியே திட்டித் தீர்த்தார்கள்.

70, 80 சதவிகிதம் வாங்கியவர்களின் பெற்றோரெல்லாம் அவரவர் பிள்ளைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாதபோது, 96 சதவிகிதம் வாங்கிய தன்னை இத்தனை கடுமையாக விமர்சிக்கும் பெற்றோரை நினைத்து அந்த மகளுக்கு அப்படியோர் திகைப்பு. இதே மனநிலைதான் கணவன்-மனைவி உறவைப் பிளப்பதிலும் முன்னிலை வகிக்கிறது. தனக்குள் ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வது, தன் துணை அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டுமென விரும்புவது, அப்படி நடக்காத போது, துணையைச் சாடுவது என்கிற மனோபாவம் பல தம்பதியருக்கு இருக்கிறது.

-அடுத்ததாக... சின்ன விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவது. ஒரு பிரச்னை வந்தால், உடனே ‘நான் அதிர்ஷ்டம் கெட்டவள்... எனக்கு எல்லாமே தவறாகத்தான் நடக்கும்’ எனப் புலம்பித் தீர்ப்பது. அல்லது ‘நீ என்னிக்குத்தான் ஒழுங்கா சமைச்சிருக்கே...’ ‘ஒரு வேலையையும் உன்னால ஒழுங்கா செய்ய முடியாது...’, ‘நீ எப்போதுமே இப்படித்தான்...’ என்று கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் துணையை மட்டம் தட்டியே பேசுவது...

- துணை செய்கிற பாசிட்டிவான விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவையெல்லாம் யார் வேண்டுமானாலும் செய்யக்கூடியவை எனப் பேசுவது. ரயில்வே லைனுக்கு அருகிலும், விமான தளத்துக்குப் பக்கத்திலும் குடியிருப்பவர்களுக்கு, 24 மணி நேரமும் ரயிலின் அலறலும், விமானத்தின் இரைச்சலும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். புதிதாக அங்கே செல்கிற ஒருவருக்கு 5 நிமிடங்கள் அந்தச் சத்தங்கள் இருக்க விடாது. துணையிடம் காணப்படுகிற நல்ல குணங்களும் ஈர்ப்புகளும்கூட, ரயில், விமான இரைச்சல் சத்தங்களுக்கு  மரத்துப் போன காதுகளைப் போலவே ஒரு கட்டத்தில் மரத்துப் போய்விடும்.

- துணையைப் பற்றி, அவரது நடத்தையைப் பற்றி எந்த ஆதாரங்களும் இல்லாமலே ஒரு முடிவுக்கு வருவது. - கணவன் - மனைவிக்குள் நடக்கும் பாசிட்டிவான விஷயங்களை சிறியதாகவும், நெகட்டிவான விஷயங்களை பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாகவும் பார்த்துப் பழகுவது. கணவருக்குப் பிடிக்கும் எனப் பார்த்துப் பார்த்து, மனைவி தனி ஆளாக அறுசுவை விருந்து சமைத்திருப்பார். கணவனின் வாயிலிருந்து ஒரு சின்ன பாராட்டு கூட வந்திருக்காது. அதுவே என்றோ ஒருநாள் சாப்பாட்டில் ஒரு கல் உப்பு அதிகமாகியிருந்தால், ஊருக்கே கேட்கும் அளவுக்கு அதை அநாகரிகமாக விமர்சிப்பார்.

- இருவருக்குள்ளும் பிரச்னைகள் வரும் போது, அதை சேர்ந்து சமாளிக்கவோ, அதிலிருந்து மீளவோ முயற்சிக்காமல், ‘நீ இப்படிப் பண்ணியிருக்கணும்... நான் அன்னிக்கே சொன்னேன். நீதான் கேட்கலை’ எனத் தன் தரப்பைப் பாதுகாப்பது.  புயல், மழை, பூகம்பம் மாதிரி வாழ்க்கையிலும் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல், எல்லா கெட்டதுகளுக்கும் துணையின் மேல் பழியைப் போடுவது.

இந்த அத்தனை எண்ணத் தவறுகளுமே தம்பதிக்கு இடையிலான சின்னச் சின்ன பிரச்னைகளை அதிகப்படுத்தக் கூடியவை. தவிர, நெகட்டிவ் சிந்தனைகளையும் வளர்த்து விடும். வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கும். திருமணம், குடும்ப உறவு, சமுதாயம் என எல்லாவற்றையும் பற்றி நெகட்டிவான பார்வையே மேலோங்கும். ஏற்கனவே சொன்னபடி, எந்தப் பிரச்னையின் போதும், எப்போதோ நடந்த பழைய சம்பவங்களின் தொகுப்பே மூளையில் முண்டும்.

இதையெல்லாம் தவிர்க்க என்னதான் செய்வது? - உங்கள் மூளை சேகரித்துள்ள பாசிட்டிவ் டி.வி.டிக்களை அடிக்கடி ரீவைண்ட் செய்து பாருங்கள்.
- உங்கள் துணைக்கு ஒரு விஷயம் தெரியவில்லையா? குறிப்பிட்ட செயல்களில் திறமை குறைவாக இருக்கிறாரா? அதைப் பற்றியே பேசிக் குத்திக் காட்டாமல், துணையிடம் உள்ள நல்ல திறமைகளை, உங்களைப் பிரமிக்கச் செய்கிற விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள்... பாராட்டுங்கள்.

- உங்கள் துணையிடம் காணப்படுகிற குறைகளையும் தவறுகளையும் திருத்தி, சரி செய்கிற மாபெரும் பொறுப்பு உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது போல நினைத்து, அதற்கான முயற்சியில் இறங்காதீர்கள். அந்த முயற்சியில் உங்களுக்குப் போராட்டங்களும் ஏமாற்றங்களுமே மிஞ்சும்.
(வாழ்வோம்!)

எத்தனையோ மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்து சோகங்களையே ஏன் சுழலச் செய்ய வேண்டும்?

எழுத்து வடிவம்: மனஸ்வினி
மாடல்: கௌதம் ஜெயராம் - ஸ்ரீதேவி
படங்கள்: ஆர்.கோபால்