பறக்கக் கற்றுக் கொடுப்போம்!



பறப்பதும் பறவையாவதும் யாருக்குத்தான் பிடிக்காது? காற்றில் அலைந்து மேலெழும் சிறகுகளை வாங்கிக் கொள்ள வானம் தயாராக இருக்கிறது. பறப்பதற்கு உங்கள் செல்லம் ரெடி. நீங்கள் தயாரா? வானத்தோடு சேர்ந்து பறக்கும் மனதும் அவ்வளவு அழகு!     

கனவில் நிலவு. அதில் கால் வைத்து இது நாள் வரை கதை சொல்லி சோறு ஊட்டிய பாட்டியை தேடி அலைந்து... மின்னலைப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு... கேட்டதை எல்லாம் தரும் தேவதைகள் உலகத்தில் மிதந்து... நடந்ததெல்லாம் நிஜமா?  செல்லத்தின் கனவில் சுற்றுலா! அது நிஜமாகட்டுமே! ‘‘சுற்றுலா அனுபவம் என்பது செல்லங்களின் மனக்குளத்தில் கண்ணுக்குத் தெரியாத கற்களை எறிந்து சிந்தனை வட்டங்களை உருவாக்கும்’’ என்கிற சேலம் கிராண்ட் ராயல் டூர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுகந்தி சரவணன், செல்லப் பயணத் துக்கு வழிகாட்டுகிறார்.

‘‘இடம் புதிது, முகங்கள் புதிது, வெப்பம் புதிது, பறவை புதிது, பார்த்தலும் புதிது... எங்கிருந்தோ வந்து மனதோடு ஒட்டிக் கொள்ளும் இனம் புரியாத சந்தோஷம் கூட புதிதுதான். இந்த அற்புத அனுபவம் குழந்தைகளின் அடிப்படைத் தேவையே. சில பெற்றோர் தவிர்க்க முடியாத காரணங்களால்  பச்சிளம் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சுற்றுலா வருகின்றனர். அவர்கள் செல்லும் இடங்களில் குழந்தையை சமாளிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும். போகும் இடத்தில் உண்டாகும் சிரமங்களைத் தவிர்க்க அதற்கான முன் ஏற்பாடுகளுடன் செல்வது

சுற்றுலாவை ரசிக்க வைக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு சுற்றுலாவை புரிய வைக்க முடியாது. இருப்பினும், அவர்கள் வித்தியாசமான அனுபவத்தை உணர வாய்ப்பு கிடைக்கும்.
6 வயதுக்கு மேல்தான் புதிய இடங்கள் மீதான ரசனை உருவாகிறது. அதனால் மகிழ்ச்சி அடைவது போன்ற அனுபவங்கள் கிடைக்கிறது. சுற்றுலாவுக்குத் திட்டமிட்டுப் போகும் இடங்களை முடிவு செய்யும் நாளில் இருந்தே குழந்தைகளிடம் அது பற்றிப் பேச வேண்டும். அந்த இடங்களின் சிறப்புகள் பற்றி இணையம் மூலம் அறிந்து குழந்தைகளுக்குக் காட்டி விவாதிக்கலாம். சுற்றுலா வரைபடத்தை குழந்தைகளின் மனதில் வரைந்து பார்க்க இது ஒரு வாய்ப்பாக அமையும். 

குழந்தைகளின் வயது, விருப்பம், பண்பு அடிப்படையில் சுற்றுலாவுக்கான இடத்தை முடிவு செய்ய வேண்டும். உலகின் பல்வேறு இடங்களிலும் மிகச்சிறந்த தீம் பார்க்குகள், அறிவியல் அரங்குகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பிரமாண்டமான விஷயங்களும் உள்ளன. குழந்தைகள் தண்ணீர் விளையாட்டுகளை அதிகம் விரும்புகின்றனர். கோடை வெயிலுக்கு சில்லிடும் பனியும், கொட்டும் அருவியும், மிதக்கும் ஆறும், தலை துவட்டும் பனிக்காற்றும் மேலும் உற்சாகப்படுத்தும். புதிய ஊர்களில் கலைநயம் மிக்க சிறுசிறு பரிசுப் பொருட்களை வழங்கி, நமக்கான ஸ்பெஷல் முத்தங்களை பறித்துக் கொள்ளலாம். பிரமாண்ட கட்டிடங்களின் பின்னால் இருக்கும் லட்சக்கணக்கானவர்களின் உழைப்பும், புதைந்து கிடக்கும் கனவுகள் பற்றிய குட்டிக் கதைகளும் சுற்றுலா இடங்களை குழந்தைகள் மனதில் பசுமையாகப் பதிவு செய்யும்.

சுற்றுலாவின் போது உடன் வரும் நபர்களின் குழந்தைகளுடன் நட்பு வட்டம் உருவாகிறது. அவர்களுக்குள் நிகழும் விட்டுக்கொடுத்தல்களும் ப்ரியமும் மகிழ்ச்சியை தரும். செல்லும் இடங்களில் கடைப்பிடிக் கும் நேர மேலாண்மை மிக முக்கியம், சாப்பிடும் அழகில் தொடங்கி குப்பை போடுவது வரை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். புதிய இடங்களும், புதிய விஷயங்களும் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். சுற்றுலா முடிந்து திரும்பிய பின்னரும் அது இனிய அனுபவமாக மனதில் தங்கி விடுகிறது. பரந்த சிந்தனையை உருவாக்குகிறது. ஈகோ, பிடிவாதம் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களில் இருந்தும் வெளிவருவதற்கான வாய்ப்பினை அளிக்கிறது.

உலகளவில் அறிவியல் சார்ந்த அருங்காட்சியகங்கள் அதிகம் உள்ளன. அவற்றை குழந்தைகளுடன் சேர்ந்து பார்வையிட, தேவையான தகவல்களை இணையம் மூலம் சேகரிக்கலாம்.பார்வையிட வேண்டிய அரங்குகளை பட்டியலிட்டுக் கொள்ளலாம். அவை குழந்தைகளின் தூங்கிக் கொண்டிருக்கும் மூளையின் பகுதிகளை தட்டி எழுப்பி செயல்படச் செய்கிறது. அறிவியல் சார்ந்த அவர்களது கண்ணோட்டம் மாறும். எதிர்காலம் குறித்த திட்டமிடலில் இந்த அனுபவங்களின் பாதிப்பு கட்டாயம் இருக்கும். சுற்றுலா முடிந்து திரும்பிய பின்னர் படிப்பிலும் பகிர்விலும் குழந்தைகளிடம் மிகப்பெரிய மாற்றத்தை உணர முடியும்.

சுற்றுலா செல்லும் ஊர் மற்றும் பார்க்கும் இடங்களை திட்டமிட்ட பின்னர், அதற்குத் தயாராவது அடுத்த கட்டம். அங்கிருக்கும் சூழல், எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் குறித்தும் சுற்றுலா நிறுவனங்களை முன்பே அணுகி தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் அதிக அளவில் தேவையற்ற பொருள் மற்றும் சுற்றுலா தலத்திலேயே மலிவாகக் கிடைக்கும் பொருட்களைக் கூட தூக்கிச் செல்வார்கள். இதனால் சங்கடமே மிஞ்சும். தேவையற்ற பொருட்களை அகற்றி, ஜாலியாக செல்ல வேண்டியது அவசியம். குழந்தைகளையும் ஆலோசித்து எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் மற்றும் ஷாப்பிங் செய்ய வேண்டியதையும் டென்ஷன் இன்றி முடிக்கலாம்.

சுற்றுலா செல்லும் இடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்தும் செல்லங்களுக்கு சொல்லித் தர வேண்டும். சுட்டிகள் அதிக பிடிவாதம் மற்றும் குறும்பு செய்தாலும் சுற்றுலாவை ரசிக்க முடியாது. அதனால், குழந்தைகளின் தன்மைக்குத் தகுந்தாற்போல அவர்களை மனதளவிலும் சுற்றுலா வுக்குத் தயார்படுத்த வேண்டும். மகிழ்ச்சியை கொண்டாடுவதற்குத்தான் சுற்றுலாவே போகிறோம். போகும் இடத்தில் குழந்தைகள் மீதான அதிகபட்ச கண்டிப்பும் தண்டிப்பும் மகிழ்ச்சியை துடைத்து எறிந்து விடும். இது போன்ற சங்கடமான சூழல் உருவாகாமல் இருப்பதற்கு கோபம் வரும் சூழலில் முத்தம் வைத்து கரைத்துக் கொள்ளலாம். சிறிய கிஃப்ட் கொடுத்து மூட் மாற்றலாம்... கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைக்கலாம்... தோப்புக்கரணம் அல்லது மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கலாம்.

பெற்றோரும் குழந்தையோடு குழந்தையானால்தான் சுற்றுலா உண்மையாகவே ஜாலியாக இருக்கும். சுற்றுலா செல்லும் இடங்களில் குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்கள் சார்ந்து புகைப்படங்கள்  எடுத்துக்கொள்ள வேண்டும். சுற்றுலா முடித்து திரும்பி வந்த உடன் சுற்றுலா முழுவதும் உங்கள் செல்லம் சொன்ன வாக்கை காப்பாற்றியிருந்தால் பரிசளிக்கத் தவற வேண்டாம். குழந்தை எழுதும் வயதில் இருந்தால் சுற்றுலா அனுபவத்தை எழுதச் சொல்ல லாம். அந்த அனுபவங்களுடன் புகைப்படங்களை இணைத்து ஆல்பம் தயாரித்தால், அது ஆயுளுக்கும் மறக்க முடியாத பொக்கிஷமாக மாறி விடும். எழுதத் தெரியாத குழந்தையாக இருப்பின் அதன் அனுபவங்களைக் கேட்டு எழுதி வைக்கலாம். இதுவும் சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்த்தால் அவ்வளவு இனிக்கும். ஏன் உங்கள் செல்லத்துடன் முதல் சுற்றுலா சென்ற அனுபவத்தை நீங்களே ஆல்பமாக உருவாக்கலாம்!

ஊர் சுற்றுவது பயனுள்ள பொழுதுபோக்கு. அந்த மண் சார்ந்த மக்களின் கலாசாரம் மற்றும் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்வது சமூகம் சார்ந்த அக்கறையை உருவாக்கும். ஊர் சுற்றுவதில் ஆர்வம் உள்ள பலர் சிறந்த புகைப்படக் கலைஞர், சிறந்த எழுத்தாளர் என படைப்புலகில் வெற்றித் தடம் பதித்துள்ளனர். சுற்றுலா உங்கள் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் கவிஞனையோ, ஓவியனையோ அடையாளம் காட்டும். குழந்தைகளின் கற்றல் முறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதை நிச்சயமாக பெற்றோரால் உணர முடியும்.

(வளர்ப்போம்)

சுற்றுலா உங்கள்
குழந்தைக்குள் ஒளிந்திருக்கும்
கவிஞனையோ, ஓவியனையோ அடையாளம் காட்டும்.
குழந்தைகளின் கற்றல் முறையில் மிகப்பெரிய
மாற்றம் நிகழ்ந்திருப்பதை
 நிச்சயமாக பெற்றோரால்
உணர முடியும்!

- ஸ்ரீதேவி