கலைஞர்களுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு கிடையாது!
கர்நாடகாவின் பழமையான நாடகக் கலை யக்ஷகானா. இந்த நடனக் கலையில் ஆண்கள் மட்டுமே அதிகமாக கோலோச்சிக் கொண்டிருந்தனர். அதை மாற்றி தற்போது பல பெண்களும் நாடகங்களில் நடிக்க தொடங்கி இருக்கின்றனர். இதில் அதிகமாக பெண்கள் நடித்தாலும் அதை கற்றுக் கொடுக்கும் பெண் பயிற்றுனர்களின் எண்ணிக்கை என்பது குறைவு தான். அப்படியான பெண் பயிற்றுனரில் ஒருவர்தான் பிரியங்கா மோகன்.
 யக்ஷகானா நாடகக் கலைஞரும், பயிற்றுனருமான பிரியங்கா தற்போது 2000 பேருக்கும் மேல் இந்தக் கலையை சொல்லிக் கொடுத்துள்ளார். ஆண்கள் அதிகம் கோலோச்சிக் கொண்டிருந்த இந்தக் கலை வடிவத்தில் இவர் நடித்ததோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு இந்த நாடகக் கலையினை சொல்லிக் கொடுத்து அவர்களை நாடகக் கலைஞராகவும், பயிற்றுனராகவும் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘கர்நாடகாவில் உள்ள உடுப்பி என்ற கிராமத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம். கர்நாடகாவில் யக்ஷகானா நாடகக் கலை மிகவும் பிரபலம். என் அப்பாவும் யக்ஷகானா நாடகக் கலைஞர் தான். அவரும் அந்த நாடகங்களில் நடித்துக் கொண்டு பயிற்சியும் அளித்து வந்தார். அதற்காகவே அவர் ‘யக்ஷதேகுல’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார்.
அப்பாவிற்கு யக்ஷகானாவை முறையாக கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எனக்கும் என் சகோதரிக்கும் முறைப்படி இந்தக் கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். முதலில் நானும், என் சகோதரியும்தான் இந்தக் கலையினை கற்க ஆரம்பித்தோம்.
பயிற்சி குறித்து அக்கம்பக்கத்தில் தெரிய வர, அவர்களும் தங்களின் குழந்தைகளை என் அப்பாவிடம் பயிற்சிக்காக சேர்த்தனர். இந்தக் கலையை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்பதாலும், இந்தக் கலையினை ஊக்குவிப்பதற்காகவும் 25 ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்காமல் கற்றுக் கொடுத்தார்.
நானும் யக்ஷகானா கலையை கற்றுக் கொண்டு நடிக்கத் தொடங்கினேன். பள்ளி செல்வது மீதி நேரங்களில் நாடகங்களில் நடிப்பது இவைதான் என் வாழ்க்கை என்றானது’’ என்றவர் அவரின் தந்தையை தொடர்ந்து இந்தக் கலையினை பயிற்றுவிக்கத் தொடங்கினார். ‘‘என்னை ஒரு நாடகக் கலைஞனாக நான் நிலை நிறுத்தினாலும், இந்தக் கலை பற்றி மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த துறையில் பெண் ஆசிரியர்களும் குறைவு. அதனால் இந்தக் கலையை பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் இந்த சமூகம் ஒரு பெண்ணை குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை. மிகவும் காலதாமதமாக என்னையும் குருவாக ஏற்றுக் கொண்டார்கள்’’ என்றவர் யக்ஷகானா கலை குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘யக்ஷகானா கர்நாடகாவின் மிகவும் தொன்மையான கலை வடிவம். 700 வருட பாரம்பரியம் கொண்ட கலை. கடற்கரை பகுதிகளில்தான் இந்தக் கலை மிகவும் பிரபலம். மங்களூர், தீன்பள்ளி, சாக்ரா, உடுப்பி, சிமூகா போன்ற பகுதிகளில் பல கலைஞர்கள் இன்று வரை இந்தக் கலையினை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.
‘தின்கு திட்டு’, ‘படகு திட்டு’ என்று இரண்டு வகைகளில் இந்தக் கலை நிகழ்த்தப்படுகிறது. இசை, பாட்டு, நடனம், நடிப்பு என மூன்றையும் உள்ளடக்கி ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்ற இதிகாச புராணங்களில் உள்ள கதைகளை மையமாக வைத்துதான் யக்ஷகானா நிகழ்த்தப்படுகிறது. பொதுவாக நாடகங்கள் இரவு ஆரம்பித்து விடியற்காலை வரை நடக்கும். நாடகத்தின் இயக்குநரை பாகவதர் என்று குறிப்பிடுவார்கள். இசை அமைப்பது, கதை சொல்வது, கதாபாத்திரங்கள் அறிமுகம் என அனைத்து வேலையும் பார்த்துக் கொள்வார். கலைஞர்களின் உடைகள், மேக்கப் அனைத்தும் பார்வையாளர்கள் பிரமிக்கும் வகையில் இருக்கும். இந்தக் காலத்து தலைமுறையினரும் இந்த நாடகங்களை பார்த்து விட்டு தங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டி வருகிறார்கள்.
யக்ஷகானா கலையில் இசையும் அதன் கதை சொல்லும் விதமும்தான் தனித்துவமாக தெரியும். இதற்காக பயன்படுத்தப்பட்ட பல வகை இசை வடிவங்கள் மற்றும் கதை சொல்லும் விதம் காலப்போக்கில் அழிந்துவிட்டது. அந்த வடிவங்கள் கிடைத்தால் இந்தக் கலையினை இன்னமும் வீரியத்தோடு கொண்டு வர முடியும்.
இந்தக் கலையினை பெண்கள் விரும்பினாலும், ஆண்கள் மட்டுமே அதனை செயல்படுத்தி வந்தார்கள். காரணம், தினமும் நாடகங்கள் அரங்கேற்ற வேண்டும். பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். அதிக தூரம் என்பதால், பெண்களால் பயணம் செய்ய முடியாது. யக்ஷகானா நாடகம் பொதுவாக கோயில்களில் நிகழ்த்தப்படுவதால், மாதவிடாய் நாட்களில் பெண்களால் கோயிலுக்குள் நுழைய முடியாது. நாடக வடிவம் என்றாலும், மேடையில் சுற்றி சுற்றி ஆடுவது, குதித்து உட்காருவது, உடைகளின் எடை என பல விஷயங்களை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்தது. இந்த விஷயங்கள் கடந்த இருபது வருடங்களாக மாறி வருகிறது. பெண்களும் நடன அசைவுகளில் உடல் வலிமையோடு நாடகங்களில் நடித்து வருகிறார்கள்.
யக்ஷகானாவும் காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. இந்தக் காலத்து மக்களுக்கு ஏற்பவும் கதைகளை சொல்ல முடியும். அந்த அளவிற்கு நெகிழ்வு தன்மையோடு இந்தக் கலை மாறியுள்ளது. இந்து இதிகாச கதைகளை மட்டுமே கூறி வந்த இந்தக் கலை தற்போது மக்களின் அன்றாட பிரச்னைகளையும் பேசி வருகிறது. சமூகம் மாறும் போது காலத்திற்கு ஏற்ப கலையில் சின்னச் சின்ன மாற்றம் ெகாடுத்தால், எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
நான் இந்த யக்ஷகானாவில் சுபத்ரா, துரோணர், அபிமன்யு என ஆண் மற்றும் பெண் என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். இரண்டு மணி நேரம் இடைவேளை இல்லாமல் ெதாடர்ந்து நடிப்பேன். சில சமயம் கோயில் கட்டுப்பாடுகள், சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்பதால், அந்த சமயத்தில் நடிக்காமல் ஒருங்கிணைப்பாளராக, கதையாசிரியர் என அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவேன். இதில் கதாபாத்திரங்கள் முக்கியம் உயிர்ப்போடு இருக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப வசனங்களும் மக்களுக்கு புரியும் படி அமைப்போம். ஆரம்பத்தில் நாடகங்களில் நான் நடிக்க தொடங்கிய போது, பலர் கல்யாணம், குழந்தை என்றான பிறகு நடிக்க மாட்டேன் என்று நினைத்தார்கள். காரணம், இந்த சமூகம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெண்கள் பின் தங்கி விடுவார்கள் என்று நினைக்கிறது. கலைஞர்களுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு கிடையாது என்று நினைப்பவள் நான்.
அதனால் தான் இந்தக் கலையினை மதிப்புமிக்கதாக மாற்ற விரும்புகிறேன். வருங்கால தலைமுறையினருக்கு இதை கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கும் இந்தக் கலையினை சொல்லிக் கொடுக்க தயாராக இருக்கிறேன். அதற்கான ஒரு மையம் உருவாக்க வேண்டும். இது என்னுடையது மட்டுமல்ல என் தந்தையின் நீண்ட கால விருப்பம் கூட. கண்டிப்பாக அதை நிறைவேற்றுவேன்’’ என்றார் பிரியங்கா.
மா.வினோத்குமார்
|