நியூஸ் பைட்ஸ்



ஆஸ்கர் விருது

சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியல் வெளியாகி, சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘எமிலியா பெரேஸ்’ என்ற படம் 13 விருதுகளுக்கான இறுதிப்பட்டியலிலும், ‘த ப்ரூட்டலிஸ்ட்’, ‘விக்ட்’ ஆகிய படங்கள் முறையே 10 விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 

வருகிற மார்ச் 2-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கிறது. காட்டுத்தீயினால் பெரிதும் பாதிப்புக்குள்ளான லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விழா நடக்குமா? நடக்காதா? என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் வெளியாகியிருக்கிறது இந்த இறுதிப்பட்டியல்.

நீளமான ரோப்வே

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் வரப்போகிறது, இந்தியாவிலேயே மிக நீளமான ரோப்வே. கேபிள் கார் மூலமாக இந்த ரோப்வேயில் மக்கள் பயணிக்கலாம். சிம்லாவுக்கும், பர்வனூ எனும் இடத்துக்கும் இடையில் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரோப்வே நீண்டு செல்லும். இந்தப் பாதையில் பயணம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் சிம்லாவிலிருந்து பர்வனூவுக்குச் சென்றுவிட முடியும்.

தாரா தேவி (கோயல் மோட்டார்ஸ்), தாரா தேவி கோயில், சோஹி, வக்னஹாட், வக்னஹாட் ஐடி சிட்டி, கரோல் கா டிப்பா, சோலன், பரோக், டாக்சாய் கண்டோன்மென்ட், ஜபாலி, பர்வனூ ஆகிய ஸ்டேஷன்கள் வழியாக ரோப்வே செல்கிறது. 

இந்த ஸ்டேஷன்களில் எங்கு வேண்டுமானாலும் பயணிகள் இறங்கிக்கொள்ளலாம். எல்லா ஸ்டேஷன்களிலும் டிக்கெட் கிடைக்கும். ரோப்வே திட்டம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் போதுதான் டிக்கெட்டின் விலையை நிர்ணயிக்கப் போகின்றனர். இந்த ரோப்வே 2030ல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல துறவி

பாலிவுட் நடிகை ஒருவர், புத்த துறவியாக மாறிவிட்டதுதான் சமூக வலைத்தளங்களில் செம வைரல். அவரது பெயர், பர்க்கா மதன். மாடல், ப்யூட்டி குயின், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகங்ளைக் கொண்ட பர்க்கா, இப்போது புத்த துறவி என்ற அடையாளத்துடன் மட்டுமே வலம் வருகிறார். ஐம்பது வருடங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் பர்க்கா மதன்.

முதலில் மாடலிங் துறையில்தான் கால் பதித்தார். 1994ம் வருடம் நடந்த ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் பர்க்காவுக்கு போட்டியாளராக இருந்தது ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டியில் கலந்து கொண்டதன் மூலமாக சினிமா வாய்ப்புகளும் பர்க்காவைத் தேடி வந்தன. எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல், தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 2012ம் வருடம் புத்த துறவியாக வேண்டும் என்று முடிவு செய்து, இன்று சந்நியாச வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சாதனை திருமணம்

சமீபத்தில் பெர்னியும், மர்ஜோரியும் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு பேரின் வயதுகளையும் கூட்டினால் 202 வருகிறது. ஆம்; பெர்னி லிட்மேனின் வயது 100. மர்ஜோரி ஃபிடர்மேனின் வயது 102. உலகிலேயே அதிக வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி என்ற கின்னஸ் சாதனையை பெர்னியும், மர்ஜோரியும் தன்வசமாக்கியுள்ளனர். பிலடெல்பியாவில் உள்ள வெவ்வேறு முதியோர் இல்லங்களில் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

ஒன்பது வருடங்களுக்கு முன்பு ஒரு காஸ்ட்யூம் விருந்து நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பிறகு அடிக்கடி சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டனர். கடந்த வருடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

அதிசய வீடு

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் 40 கோடி டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் குப்பைகளை மனிதன் உருவாக்குகிறான். காற்று மாசுபாடு போல, பிளாஸ்டிக் மாசுபாடும் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தீங்கானவை என்று நிபுணர்கள் சொல்கின்றனர். அதனால் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்காக பலரும் பல வழிகளில் முயன்று வருகின்றனர்.

இதில் முக்கியமான ஒரு வழிதான் பிளாஸ்டிக் வீடு. மகாராஷ்டிராவின் சந்திரபூரில் உள்ள தாவரவியல் பூங்காவில் அமைந்திருக்கும் இரண்டு மாடி கொண்ட இந்த பிளாஸ்டிக் வீட்டைக் கட்டியிருக்கிறார் மருத்துவர் பால்முகுந்த் பலிவால்.

 இந்த வீட்டைக் கட்டுவதற்காக சுமார் 13 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்திருக்கிறார். கதவுகள், சுவர்கள், கூரைகள், ஃப்ளோர் டைல்ஸ், சீலிங் என அனைத்துக்குமே பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த வீட்டை ஓர் அதிசயம் போல சுற்றுலா பயணிகள் பார்க்கின்றனர்.

த.சக்திவேல்