உண்மை வெளியே வந்தால் பாதிப்புகளை தடுக்கலாம்!



பெண்கள் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படி அவர்களை அந்த துயர சம்பவத்தில் இருந்து மீட்டு வெளியில் கொண்டு வருவது என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறது சென்னையில் இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘இமாரா சர்வைவர் சப்போர்ட் ஃபவுண்டேஷன்.’ இந்த சமூகத்தில் பெண்கள் மீது நிகழும் பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் ரசிகா சுந்தரம். ‘‘என்னுடைய பூர்வீகம் சென்னைதான் என்றாலும், பிறந்தது கனடாவில்.

ஆனால் அங்கு சில காலம்தான் வசித்து வந்தோம். என்னுடைய சின்ன வயசிலேயே நாங்க குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பிட்டோம். என் பெற்றோர் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப என்னை வளர்க்க விரும்பினாங்க. வெளிநாட்டுக் கலாச்சாரம் தேவையில்லை என்று அவர்கள் விரும்பியதால், நான் சின்னப் பெண்ணாக இருக்கும் போதே என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்துட்டாங்க. எனக்கு படிப்பு மேல ஆர்வம் அதிகம். நிறைய படிக்கணும்னு விரும்பினேன்.

முதுகலை பட்டப் படிப்பு முடிச்சதும், டொராண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் ஹானர்ஸ் பட்டம் படிச்சேன். மேலும், அகதிகள், புலம்பெயர்ந்தோர் உரிமைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை மையமாகக் கொண்டு மனித உரிமை துறையில் நான் பயிற்சியில் ஈடுபட்டேன். 

அதனைத் தொடர்ந்து பாலின பாதுகாப்பு திட்டத்திலும் பணியாற்றினேன். இந்த வகுப்புகளுக்கு சென்ற போதுதான், பாலியல் தொந்தரவுகள், குட் டச் பேட் டச் போன்றவற்றை குறித்து ஆழமாக தெரிந்து கொண்டேன்.

பாலியல் வன்புணர்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு அடுத்தடுத்து என்ன செய்வதென்று தெரிவதில்லை. தன் மீது பாலியல் வன்புணர்வு செய்தவரை எப்படி தண்டிக்க வேண்டும், அதற்கு யாரை அணுக வேண்டும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்றெல்லாம் பல கேள்விகள் எழும். இந்தக் கேள்விகளுக்கு பயந்து கொண்டு பலரும் தனக்கு நடக்கும், நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்து விடுகின்றனர்.

அவர்கள் தங்களின் நிலையை உணர்ந்து சொல்ல மறுக்கிறார்கள். ஆனால், அதே சமயம் இந்தக் கொடுமைகளை வெளியில் சொன்னால்தானே மற்றவர்களுக்கும் இது நடக்காமல் தடுக்க முடியும். குற்றவாளிகளை தண்டிக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும். இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று போராட்டம் நடத்துவதற்கும், மனதளவில் அவரை சரிப்படுத்துவதற்கும் துணையாக இருந்தாலே அவர்கள் மனதில் இருக்கும் தயக்கம் நீங்கும். தனக்காக குரல் எழுப்ப சமூகம் உள்ளது என்று தைரியமாக இருப்பார்கள். 

அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க விரும்பினேன். அதனால் தான் நான் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கினேன்’’ என்றவர், தன்னுடைய தன்னார்வ நிறுவனம் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கிடைக்க வேண்டியது மனதளவில் அவரை தைரியப்படுத்துவது. அதற்கு அவரை சரியான மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று அந்த பாதிப்பிலிருந்து அவரை வெளியில் கொண்டு வர வேண்டும். அடுத்து சட்ட ரீதியான போராட்டம். 

இவை இரண்டுக்குமே பணம் அதிகமாக செலவாகும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களால் அதனை தனித்து சமாளிக்க முடியாது. இந்தக் காரணங்கள் எல்லாம் பெண்களுக்கு பிரச்னையாக இருந்தது. நிதிப் பிரச்னையை சரி செய்தாலே பல பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை வெளியில் சொல்வார்கள் என தோன்றியது. நான் இந்த இடத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன்.

 பிரச்னைகளை பேசிக் கொண்டிருக்காமல் அதற்கான தீர்வுகளை நோக்கி நடந்தாலே எளிதாக அதனை சமாளிக்க முடியும் என்று தெரிந்தது. அப்படி தொடங்கியது தான் ‘இமாரா சர்வைவர் சப்போர்ட் ஃபவுண்டேஷன்.’ இந்த அமைப்பு பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்கும் விதமாகவும் அவர்களுக்கு மன ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் உதவி செய்வதற்காகவும் இயங்கி வருகிறது.

பாலியல் கொடுமைகள் மட்டுமில்லாமல், பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் ஆதரவளித்து வருகிறோம். நாங்க அவர்களுக்கு மனம் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்க மாட்டோம். காரணம், நாங்க அந்த துறையில் பயிற்சி பெற்றவர்கள் கிடையாது. எங்களை நாடி வருபவர்களுக்கு மன ரீதியாக  யாரை சந்தித்தால் சரியாக இருக்கும் என யோசனைகள் மட்டுமே நாங்கள் சொல்வோம்.

சட்ட ரீதியாக நல்ல வழக்கறிஞர்களிடம் பேச வைத்து அவர்களுக்கான நீதியை பெற்றுத் தருகிறோம். எங்களிடம் உள்ள தொடர்புகளை கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னை மற்றும் அவர்கள் தேடும் ஆதரவின் அடிப்படையில், உதவக்கூடிய நபரின் தொடர்பு விவரங்களைப் பகிர்வோம்.

அத்துடன் வன்முறைகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல பகுதிகளுக்குச் சென்று, பாலின அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன, அது எவ்வாறு நிலவுகிறது, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை எப்படி ஆதரிக்கலாம் என்பதை மக்களுக்குக் கற்பித்து வருகிறோம்.

தவறான சூழ்நிலைக்குள் செல்லும் ஒருவருக்கு எவ்வாறு உதவுவது என்பதையும் மக்களுக்கு கற்பிக்கிறோம். பாலியல் அடிப்படையிலான வன்முறைக்கு ஆளாகி, வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களையும் ஆதரிக்கிறோம். 

எங்களின் தன்னார்வ நிறுவனம் சட்டம், மருத்துவம் மற்றும் காவல் உதவிகளுக்கான ஆதரவுகளை ஒரே இடத்தில் வழங்கும் மையமாகும். இதே போன்ற திட்டங்களில் பணிபுரியும் பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம். பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கும் முக்கியமான கருவியாக கல்வியைதான் பார்க்கிறோம்.

அதனால் பெண்களுக்கு இது குறித்து போதிய கல்வியினை வழங்கி வருகிறோம்.இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியவர்கள் எங்களை அணுகியுள்ளனர். 

அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியினை செய்து வருகிறோம். பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்பட வேண்டும். 

வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கென ஒரு செயலியை உருவாக்கி, அதன் மூலம் ஒரே கிளிக்கில் அவர்களுக்கான தரவுகளை கண்டறிந்து கொள்ளக்கூடிய வசதியை உருவாக்குவதை எதிர்கால நோக்கமாகக்  கொண்டு  செயல்பட்டு வருகிறோம்’’ என்கிறார் ரசிகா சுந்தரம்.

மா.வினோத்குமார்