கும்பகோணம் சக்கரபாணி கோவில்



ராஜகோபுர தரிசனம்!

கும்பகோணம் நகரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஆலயங்களில், 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சக்கரபாணி கோவிலும் ஒன்று. மூலவர் ஸ்ரீசக்கரபாணி பெருமாள். தாயார்

விஜயவல்லி. பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தியும் காட்சி தருகிறார்.
மூன்று கண்களுடன் சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ, துளசி, குங்குமத்துடன் வில்வ இலைகள் கொண்டும் அர்ச்சனை செய்யப்படுகிறது. சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான்.

1620ல் கும்பகோணத்தில் ராமசுவாமி கோயிலை நாயக்கர் திவான் அவர்கள், நிர்வாகியாக இருந்த கோவிந்த தீட்சிதர் இந்தக் கோயிலைக் கட்டியபோது, ​​அதை பழைய சக்கரபாணி கோயிலுடன் இணைக்கும் வணிக நடைபாதையையும் சேர்த்தார். 
கோயிலின் நேர்த்தியான தூண்கள் நன்கு அறியப்பட்டவை. இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன. 

படி ஏறி மேலே சென்றதும் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

கருவறையில் சக்கரபாணி சுவாமி, எட்டுக்கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏந்திக்கொண்டிருக்கிறார். ஸ்ரீசக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை. 

கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ராகு திசை, கேது புத்தி, சர்ப்ப தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சக்கரபாணி சுவாமியை வழிபட இன்னல்கள் மறையும்.

இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சுற்றி கருங்கல் சுவர்கள் உள்ளன. ராஜகோபுரம், ஐந்து நிலைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ேகாபுரம் வழியாகத்தான் ேகாயிலின் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கோயில் அதன் நேர்த்தியான தூண்களுக்கு பெயர் பெற்றது. கோயிலின் வெளிப்புற பிரகாரம் பால்கனி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில், கோயிலின் வெளிப்புற வளாகத்தில் பஞ்சமுக அனுமன் காட்சி அளிக்கிறார். அகம்பர விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் விஜயவள்ளி ஆகியோர் இந்தக் கோயிலில் அமைந்துள்ள முக்கியமான சிலைகள்.

தஞ்சையை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பல சோழ மன்னர்களால் இக்கோவில் அவ்வப்போது புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இக்கோயில் 10ம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் ஆதித்யனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 

ஆனால், பல்லவர் காலத்தைச் சேர்ந்த கோயில் பழமையானதாக இருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. போதிய கல்வெட்டுச் சான்றுகள் இல்லாததால் சக்கரபாணி கோயிலின் தோற்றம் தெளிவில்லாமல் உள்ளது.

இருப்பினும், கோயிலின் கட்டிடக்கலை மற்றும் வடிவங்களின் அடிப்படையில், இது 15ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியின் கீழ் கட்டப்பட்டதாக அறிஞர்கள் நம்புகின்றனர். புராண, இதிகாசங்களின் படி ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய திருமால் ஏவிய “சக்ராயுதம்” ஜலந்தராசுரனையும் சேர்த்து பாதாள லோகத்தில் இருந்த அத்தனை அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்மதேவரின் கைகளில் வந்து விழுந்தது. அரக்கனை தன் சக்ராயுதத்தால் வீழ்த்தியதால், பெருமாள் சக்கரபாணி என்று அழைக்கப்படுகிறார்.

இந்த தலத்தில் உலகிற்கே ஒளியாக இருக்கும் சூரிய பகவானே வழிபட்டு நன்மையடைந்ததால் ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக அமைந்துள்ளது. 

உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும். வலது கண்ணில் பிரச்னை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் சக்கரபாணியை வழிபடு
வதால் மேற்கூறிய பிரச்னைகள் நீங்கும். அருள்மிகு சக்கரபாணி திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது.

திலகவதி