நாக தோஷம் விலக்கி நல்லருள் புரியும் காசி விஸ்வநாதர்!



தொண்டை நாட்டில் உள்ள மிகப்பழமை வாய்ந்த தலங்களில் ஒன்று பழங்காமூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயம். தவத்தில் சிறந்த முனிவர்கள் எழுவருள் ஒருவர் ஜமதக்னி முனிவர். குண்டலிபுரம் என்னும் படவேட்டில் வாழ்ந்த இந்த முனிவர் கடுந்தவச் சீலர். 
ஈசனின் இடப்பாகம் பெற வேண்டிய அம்பிகை காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு, அண்ணாமலை நோக்கி வரும் வழியில் ஓர் வாழைக்காட்டில் வாழைப்பந்தல் அமைத்து, அதில் மணலால் லிங்கம் பிடித்து வழிபட நினைத்தாள். மண்ணை லிங்கமாக பிடிக்க தண்ணீர் வேண்டும் என்பதால், தனது பிள்ளைகளான கணபதியையும், கந்தனையும் அழைத்து தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள்.

கணபதி மேற்கு நோக்கி செல்ல, அங்கு ஜவ்வாது மலை அடிவாரத்தில் ஜமதக்னி முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். காகமாக உருவெடுத்த கணபதி, புனிதம் மிகுந்த அவரது கமண்டலத்தைக் கவிழ்க்க, அதிலிருந்த நீர் நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. 

இந்தக் கமண்டல நதி, சம்புவராயநல்லு என்னுமிடத்தில் நாக நதியுடன்  இணைவதால் இந்த நதியை கமண்டல நாக நதி என்று அழைப்பர். இந்த நதி வாழைப்பந்தலில் கந்தனால் உண்டாக்கப்பட்ட செய்யாற்றோடு கலக்கிறது. நாகநதியின் வடகரையில், காசியைப் போன்றே அமையப்பெற்றுள்ள ஊர்தான் பழங்காமநல்லூர் என்னும் பழங்காமூர்.

வாரணாசியைப் போன்றே இங்கும் ஸ்ரீகாசி விஸ்வநாதர், அன்னை விசாலாட்சியோடு அருட்பாலிக்கின்றார். இத்தலத்தில் ரிஷ்ய சிருங்கர் எனும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் பன்னெடுங்காலமாய் கமண்டல நதியில் ஸ்நானம் செய்து, வடகரையில் உள்ள காசி விஸ்வநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார். 

அப்போது ஒரு சமயம் வசிஷ்டரின் ஆலோசனைப்படி தென்னகம் வந்த தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க கமண்டல நதியின் தென்கரைக்கு சென்று புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தித் தந்தார். மேலும், தசரத சக்ரவர்த்தியின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரின் துணையோடு ஸ்ரீபுத்திரகாமேஷ்டி ஈஸ்வரரையும் நிறுவி, வழிபாடுகள் நடத்தினார்.

ரிஷ்யசிருங்கரின் காலத்திற்கு முன்பே கமண்டல நதியின் வடகரையில் சுயம்புவாக காசி விஸ்வநாதர் வீற்றெழுந்து அருட்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். கிழக்குப் பார்த்த ஆலயத்தின் தோரணவாயில் கடந்து உள்ளே சென்றால், நேரே நந்திதேவர், முன்னே பலிபீடம். இது முகமண்டபம் அதை தாண்டி இடை மண்டபம். தொடர்ந்து கருவறையுள் அழகே உருவாய் லிங்கத் திருமேனி கொண்டு சாய்ந்த நிலையில் அற்புதமாக திருக்காட்சி தந்து, அருள்புரிகின்றார் ஸ்ரீகாசி விஸ்வநாதர்.

தெற்குப்புறம் அரச மரம் மற்றும் வேம்பும் இணைந்து காணப்படுகின்றது. அதன் கீழே நாகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.தென்மேற்கு திசையில் தல கணபதி சந்நதியுள்ளது. மேற்கில் வள்ளி- தேவசேனாவுடன் ஸ்ரீஷண்முகர் காட்சி தருகிறார். அம்பாள் சந்நதி இறைவனுக்கு இடப்புறம் உள்ளது. அம்பிகையாக ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் புன்னகை ததும்ப, புன்முறுவலுடன் அருள்மழை பொழிகின்றாள்.வடக்கில் பைரவரும், ஈசான திசையில் நவகிரகங்களும், அருகே சூரியனும் வீற்றுள்ளனர். அருகே தல விருட்சமான வில்வ மரம் உள்ளது.

காமிக ஆகம முறைப்படி ஒரு கால பூஜை இங்கு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் மாத பிரதோஷங்கள், சித்திரை வருடப்பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், தைப்பொங்கல், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஆகியவை விசேஷம். அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றுவதாக வேண்டிக் கொள்ள, உடன் மாங்கல்ய பாக்கியம் கிட்டும். நாக தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு நாகப் பிரதிஷ்டையை முறைப்படி செய்து, தோஷ நிவர்த்தி அடைகின்றனர்.

சிறந்த வேலை வேண்டுவோர், பிரதோஷத்தன்று வழிபட வேலை கிடைக்கப் பெறுகின்றனர். பிள்ளைச் செல்வம் இல்லாதோர் சுவாமி அம்பாளுக்கு தேன் கலந்து பால் மற்றும் தயிரினால் அபிஷேகம் செய்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து செய்யார் செல்லும் வழியில், ஆரணியிலிருந்து 3.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழங்காமூர்.

மகி