பொழுதுபோக்காக ஆரம்பித்தது சிறு தொழிலாக மாறியது!
ஆண், பெண் யாராக இருந்தாலும், அவர்களின் மிகப்பெரிய மனக்கஷ்டம் என்பது தங்களின் பர்சனல் பராமரிப்பு குறித்துதான். தலைமுடி கொட்டுவது, சருமத்தில் கரும்புள்ளி, சருமத்தில் சுருக்கம்... இப்படி தலைமுடி, சருமம் போன்ற பர்சனல் கேரில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள்.  எந்த எண்ணெயை பயன்படுத்தினால் முடி வளரும் என்று அதற்காகவே இப்போது பெரிய ஆய்வில் இறங்கி வருகிறார்கள். அப்படி ஒரு ஆய்வில் ஈடுபட்டவர்தான் மோனிஷா. தன் குழந்தைக்காக ஆய்வில் ஈடுபட்டவர், தற்போது அதையே தொழிலாக மாற்றி ‘அக்ஷரா நேச்சர்’ என்ற பெயரில் துவங்கி காங்கேயத்தில் சக்சஸ் தொழில்முனைவோராக வலம் வருகிறார்.  ‘‘எங்களுடையது விவசாயக் குடும்பம். அம்மா, அப்பா இருவருமே விவசாயம் தான் செய்து வந்தாங்க. எங்க வீட்டில் முதல் பட்டதாரி நான்தான். சின்ன வயசில் அம்மா, அப்பாவுடன், நானும் எங்களின் நிலத்தில் வேலையில் ஈடுபடுவேன். ஆனால் நான் அக்ரிகல்சர் படிக்காமல், பொறியியல் பட்டப்படிப்புதான் படிச்சேன். எனக்குப் பிடிச்ச துறை சார்ந்த படிப்பு படிக்கவில்லை என்றாலும் எனக்கு அதன் மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. படிப்பு முடிச்சதும் என்னால் வேலைக்கும் போக முடியவில்லை.

அதற்கான நேரம் எனக்கு சரியா அமையலன்னு தான் சொல்லணும். இதற்கிடையில் எனக்கு திருமணமாச்சு. மகளும் பிறந்தாள். அவளுக்கு ஒவ்வொரு விஷயமும் நானும் என் கணவரும் பார்த்து பார்த்து செய்து வந்தோம்.
பொதுவாக குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் அவளுக்கு நானும் அதற்கு ஏற்ப பொருட்களை வாங்கி பயன்படுத்தினேன். ஆனால் அவளின் சருமம் மிகவும் சென்சிடிவ் என்பதால், கடைகளில் வாங்கி பயன்படுத்திய எந்தப் பொருளும் அவளுக்கு செட்டாகல. நானும் பல டாப் பிராண்ட்களை பயன்படுத்திப் பார்த்தேன். ஆனால் அதுவும் அவளின் சருமத்தை பாதிக்க செய்தது. அதனால் என் குழந்தைக்காக இயற்கை முறையில் நான் என் சமையல் அறையில் தான் முதலில் அரப்பு பவுடரை தயாரித்தேன். அது சிறிய அளவு என்பதால், அவளுக்காக மட்டுமே அதை பயன்படுத்தி வந்தேன். ஆரம்பத்தில் இதனை பொழுதுபோக்காகத்தான் தயாரித்தேன்’’ என்றவர் தன் மகளுக்காக ஆரம்பித்த இதனை பிறகு தொழிலாகவே மாற்றி அமைத்துள்ளார்.
‘‘என் வீட்டில் மட்டுமில்லை என் கணவர் வீட்டிலும் விவசாயம்தான் அடித்தளம். மேலும் எங்களின் நிலத்தில் நாங்க பயிர்கள் விளைவிப்பதால், அதைக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போதுதான் குழந்தைக்காக செய்ததை மற்றவர்களுக்கும் செய்யலாம்னு திட்டமிட்டேன். ஆனால் இதனை மிகவும் கவனமாக தயாரிக்க வேண்டும். அதனால் அதற்கான பயிற்சி எடுத்தேன்.
எந்தப் பொருளை எப்படி தயாரிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அடுத்து எங்க நிலத்தின் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு நடத்தினேன். அதில் எந்தப் பயிர் விளையும் என்று சோதனை செய்தேன். அடுத்து நம்மூர் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப விளையக்கூடிய பயிர்கள் பற்றியும் தெரிந்துகொண்டேன்.
ஏற்கனவே நான் சருமம், தலைமுடி பொருட்கள் குறித்து பயிற்சி எடுத்து இருந்ததால், நிலத்தில் விளையும் பொருட்களை வைத்து ஒரு ஃபார்முலேஷன் தயாரித்தேன். ஒரு ஃபார்முலா சரியா இருந்தாதான் ரிசல்டும் நல்லா வரும். அதனால் ஒவ்வொன்றையும் பல முறை சோதனை செய்தேன்.
என்னுடைய முதல் பிராடக்டான அரப்பு ஷாம்புவை அறிமுகம் செய்யவே எனக்கு இரண்டு வருடமானது. பிறகு அதனை என் நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் முழுமையாக இதில் செயல்பட துவங்கினேன்’’ என்றவர், தான் தயாரிக்கும் பொருளின் சிறப்பம்சம் குறித்து விவரித்தார். ‘‘என்னுடைய பொருட்கள் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதனால்தான் நாங்க பயன்படுத்தும் பொருட்களை இயற்ைக விவசாயம் மூலமாகத் தான் விளைவிக்கிறோம். அதேபோல் எங்க நிலத்தில் விளையாத மற்ற மூலப் பொருட்களையும் இயற்கை விவசாயம் முறையில் பயிர் செய்கிறவர்களிடம் இருந்துதான் பெறுகிறோம். அதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.
அரப்பு ஷாம்புவில் மருதாணி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்துதான் இதனை தயாரிக்கிறோம். கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது என்பதால் அதனை நாங்க ஷாம்புவிலும் பயன்படுத்துகிறோம்.
கடைகளில் விற்கப்படும் சில ஷாம்புகளில் சல்பேட் மற்றும் பாராபின் கலக்கப்பட்டு இருக்கும். அது எங்களின் ஷாம்புவில் இருக்காது. இந்தத் தொழிலுக்கு வரும் முன் நான் இது குறித்து பலரிடம் பேசினேன். நிறைய படித்தும் தெரிந்து கொண்டேன். அதன் பிறகுதான் பயிற்சி எடுத்து முழுமூச்சாக இதில் இறங்கினேன்.
நான் தயாரிக்கும் பொருட்களில் உள்ள மூலப் பொருட்களை சாறாக எடுத்து தான் செய்கிறேன். ஒரு சிலர் அதனை வெயிலில் காயவைத்து பொடி செய்து பிறகு பயன்படுத்துவார்கள். நான் அப்படி செய்வதில்லை. காரணம், ஒரு பொருளை பவுடராக்கி சாப்பிடுவதற்கும், அதன் சாற்றினை அப்படியே உட்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
அதனால்தான் என்னுடைய பேஸ் வாஷில் நான் பயன்படுத்தும் பப்பாளி, பாடி வாஷில் உள்ள மருதாணி, ரோஜா, குழந்தைகளுக்கான கேரட், பீட்ரூட் கிரீம், பெரியவர்களுக்கான நன்னாரி, பன்னீர் ரோஸ் கிரீம் என அனைத்தும் அதன் சாற்றினை கொண்டுதான் தயாரிக்கிறோம்.
உதட்டிற்கான லிப் பாம்மில் பீஸ் வேக்ஸ் பயன்படுத்துகிறோம். அதாவது, ஒரிஜினல் தேனடையில் இருந்து இதனை தயாரிக்கிறோம். இது போல் தலைமுடி, சருமம் மற்றும் உடலுக்கு என 36 வகையான பொருட்கள் எங்களிடம் உள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்கள் பெரும்பாலும் எங்களின் நிலத்தில்தான் விளைகிறது. பன்னீர் ரோஜா, ரோஸ்மேரி இங்கு விளையாது என்பதால், அது அதிகம் விளையக்கூடிய இடங்களில் இருந்து நேரடியாக பெறுகிறோம். மேலும் அதனை தயாரிக்க தனிப்பட்ட தொழிற்சாலையும் அமைத்திருக்கிறோம். மூலப் பொருட்கள் முதல் அதில் இருந்து தயாரிக்கப்படும் அழகு பொருட்கள் அனைத்தும் இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது.
நாங்க இந்த தொழிலை துவங்கி ஐந்து வருஷமாகிறது. ஆன்லைன் முறையில் தான் விற்பனை செய்து வருகிறோம். பலரும் இதனை சூப்பர் மார்க்கெட்டிலும் விற்பனை செய்யச் சொல்லி கேட்கிறார்கள்.
வரும் காலத்தில் எங்களின் பொருட்கள் அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். அதற்கான செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்து பப்பாளி, ஆலோவேரா, ஹென்னா போன்றவற்றை பவுடர் வடிவில் கொடுக்க இருக்கிறோம். இதனை பேஸ்பேக்காகவும், ஹென்னாவினை தலைமுடிக்கான பேக்காகவும் பயன்படுத்தலாம்’’ என்றார் மோனிஷா.
ஷம்ரிதி
|