மார்ஸ் - 2020



2020-ம் வருடத்தில் கீழ்க்கண்டவையெல்லாம் நம்மை சுண்டி இழுக்கும். அதற்கு கண் கொடுக்க, காது கொடுக்க தயாராகுங்கள்.

ஜனவரி - 24 முதல் மார்ச் - 4 வரை

இந்தியக் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறது. ஐந்து 20/20; 3 ஒரு நாள் ஆட்டம்; 2  டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்தை  சந்திக்கிறது.
 
ஜனவரி - 31

இங்கிலாந்தின்  பிரதமர் போரீஸ் ஜான்சன், பிரிட்டனை, யூரோப்பிய யூனியனிலிருந்து கழட்டிக்கொள்ள கடைசி நாள். சாதிப்பாரா? கோட்டை விடுவாரா? காத்திருப்போம்.

ஏப்ரல் - 8

லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படமான `No Time to die’ ரிலீஸ் ஆகும் நாள். உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் இது.

ஜூன் - 12 முதல் ஜூலை - 12 வரை

யூரோ -2020 கால்பந்து சேம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் நாட்கள் இது. ஐரோப்பாவின் 12 நகரங்களில்  நடக்க உள்ளது கூடுதல் சிறப்பு. உலக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து!

ஜூலை -17 முதல் ஆகஸ்ட் - 5 வரை

மார்ஸ் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா? அங்கு மைக்ரோ பாக்டீரியல் வாழ்க்கை ஏற்கனவே நடக்கிறதா?
ஆகியவை பற்றி ஆராய நாசா தன்னுடைய மார்ஸ்-2020 வாகனத்தை அனுப்பி ஆய்வு செய்ய உள்ளது.
 
ஜூலை -17

உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் `Tenet’- ரிலீஸ் ஆகும் நாள் இது. சயின்ஸ்-ஃபிக்ஷன் திரில்லரில் புதிய அத்தியாயத்தை இப்படம் தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜூலை - 24 முதல் ஆகஸ்ட் - 9 வரை

ஜப்பானின் டோக்கியோவில் கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் முதல் தடவையாக கராத்தே மற்றும் ஸ்கேட் போர்டிங் விளையாட்டுகள்  சேர்க்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் - 7

வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷனின் சிபாரிசை அமல்படுத்தி, மற்ற பின்தங்கிய வகுப்பினருக்கு 27 சதவிகித ஒதுக்கீட்டை அமல்படுத்திய 30-வது ஆண்டு நினைவு தினம் இது.
 
செப்டம்பர் - 2

இரண்டாம் உலகப்போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்த நாள்!
 
அக்டோபர் - 18 முதல்  நவம்பர் - 15 வரை

உலகக் கோப்பை T20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.

அக்டோபர் - 24

 ஐ.நா. துவங்கிய 75-வது ஆண்டு.

நவம்பர் - 3

மூன்று தேர்தல்கள் நடக்கவுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (தேதிகள் அறிவிக்கப்படவில்லை), மியன்மாரில் (பர்மா) பொதுத்தேர்தல், லங்காவில் பார்லிமெண்டரி தேர்தல் (தேதி இன்னமும் அறிவிக்கப்படவல்லை).

நவம்பர் - 29

பீகாரில், வரும் நவம்பர் - 29-ம் தேதியுடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி முடிகிறது. அதற்குள் தேர்தல் தேதி அறிவித்து, நடத்தி, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.
 
டிசம்பர் - 17

டுனிசியாவில் தெருக்கடை வியாபாரி முகம்மது பவாயுசிசி நெருப்பை பற்றவைத்துக் கொண்டு இறந்த நாள். இதனால் டுனிசியாவில் பெரிய அளவில் ‘அரபு ஸ்பிரிங் எழுச்சி’ உருவானது.

டிசம்பர் - 25

இந்தி நடிகர் அமீர்கான் ‘லால்சிங் சத்தா’வாக நடித்து வரும் புதிய படம் ரிலீசாக திட்டமிட்டுள்ள நாள். `Forrest Gump’ (1994) என்ற ஆங்கிலப் படத்தின் ரீமேக் இது.

ராஜிராதா