வெனிஸ்



இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது  வெனிஸ் நகரம். 118 தீவுகள் (கடலினின்று மணல் திட்டுகளால் பிரிக்கப்படுபவை), அவற்றைச் சுற்றி கடல் உப்பு நீர்க் கால்வாய்களாக ஓடுகிறது. இதுதவிர 100-க்கும் அதிகமான பாலங்கள் இந்த தீவுகளை இணைக்கின்றன. வெனிஸின் 80 சதவிகிதம் தண்ணீரால் சூழ்ந்துள்ளது.

ஆனால் லிடோ என்ற தீவு மட்டும் கூடுதல் வசதிகளைக் கொண்டது. 10 மைல் நீளம் கொண்ட இதில் இரு கடற்கரைகள் உள்ளன. அவற்றின் எதிரே ஆடம்பர ஹோட்டல்கள் உள்ளன. வெனிஸில் இங்கு மட்டுமே தெருக்களில் கார் ஓட இயலும்.  மற்றபடி எங்கும் படகு போக்குவரத்துதான். 5-ம் நூற்றாண்டிலிருந்து வாழும் நகரம்.

800 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் இங்கு உள்ளன. இவற்றை ரசிக்கத்தான் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வருடத்திற்கு 100 முறை வெள்ளம் வந்து விலகும். 1966-ம் ஆண்டுக்குப்பின் 2019-ம் நவம்பர் 15-ம் தேதி வாக்கில் இந்த நகரை, மழையும் வெள்ளமும் சேர்த்து பாடாய் படுத்திவிட்டது.

1.87 மீட்டர் உயரத்திற்கு நகருக்குள் மழை வெள்ளமாகி, ஒரு மாதம் நகரே கஷ்டப்பட்டது. இந்த நகரின் பிரபலமான செயின்ட் மார்க் சதுக்கம் வெள்ளத்தில் சிக்கியது. நகரின் அழகு பகுதியான ராயல் தோட்டம், உயரமான இடத்தில் இருந்ததால் பிழைத்தது. இந்த ஊர் கால்வாய்களின் சராசரி உயரம் சுமார் 1.2 மீட்டர். கோடைகாலத்தில் குறையும். அக்டோபர் - ஜனவரி காலங்களில் கால்வாய்களில் தண்ணீர் அதிகம் இருக்கும். கடல் அலைகளின் பாதிப்பு அதிகம்.

வெனிஸின் மொத்த நீளம் 49 கிலோமீட்டர். அகலம் 13 கிலோ மீட்டர்.    அடியில் மரத்தால் பரண் அமைத்து அதன் மீது கட்டிடங்களை எழுப்பியுள்ளனர்.வருடா வருடம், வெனிஸின் வடக்கு பக்கம் 2-3 மில்லி மீட்டரும், தெற்கு பக்கம் 3-4 மில்லி மீட்டரும் மூழ்கி வருவதாக கணக்கெடுத்துள்ளனர்.

இந்த ரீதியில் போனால் 2100-ல் நகரம் மூழ்கிவிடும் என்பது பலர் கருத்து. ஆனால் நகரமே சுற்றுலாவை நம்பித்தான் உள்ளது.கால்வாய்களில் நீந்த அனுமதி கிடையாது. யுனெஸ்கோ வெனிஸை பாரம்பரிய நகரமாக அறிவித்துள்ளது.