பிளாக் ஹோல்



இன்று உலகம் முழுவதும் வியப்புடன் உச்சரிக்கும் ஒரு சொல் பிளாக்ஹோல். ‘‘இந்தப் பிரபஞ்சமே ப்ளாக்ஹோல் எனப்படும் கருந்துளையில் இருந்துதான்  உருவானது...’’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.
‘பிங் பேங்’ தியரி  மூலமாக இந்த உலகம் உருவானது  என்றும், பிங் பேங்கிற்கு முன்பிருந்த அண்டம் கருந்துளையிலிருந்துதான் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி எண்ணற்ற கருத்துகள் கருந்துளையைப் பற்றி இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் அழிந்து பிளாக்ஹோல் உருவாகிறது என்பது விஞ்ஞானிகளின் பொதுவான கருத்து. நட்சத்திரம் அழியும்போது அதிலுள்ள ஹைட்ரஜன் வெளியேறிவிடும்.  அதனால் அந்த நட்சத்திரம் சுருங்கி சிறியதாகிவிடும். சுருங்கிய நட்சத்திரத்தின்  அடர்த்தியும் புவி ஈர்ப்பு விசையும் மிக அதிகம். இந்த அடர்த்தியும் புவி ஈர்ப்பு விசையும்தான் ப்ளாக் ஹோலாக உருமாறுகிறது.

இதுபோக ஸ்டீபன் ஹாக்கிங், ஜான் மிசைல், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கார்ல் ஸ்வார்ஸ்சைல்டு போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் அறிஞர்களும் பிளாக்ஹோல் என்கிற கருந்துளையைப் பற்றி நிறைய சொல்லியிருக்கின்றனர்.

ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்சன் படங்களும் ஃபிளாக்ஹோலைப் பற்றி அதிகமாகப் பேசியிருக்கிறது. இருந்தபோதிலும் பெரும்பாலானவர்கள் பிளாக்ஹோலை ஒரு கற் பனையாக மட்டுமே நினைத்து வந்தனர். இந்நிலையில் பிளாக் ஹோலின் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியிருக்கிறது ஒரு ஆய்வுக் குழு. இணையமெங்கும் அந்தப் புகைப்படம்தான் ஹாட் வைரல்.

இங்கே நீங்கள் காணும் புகைப்படம் தான் மனித இனம் முதல் முதலாகப் பார்க்கும் பிளாக்ஹோலின் புகைப்படம். ‘ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்கோப்’ என்ற திட்டத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்தான் பிளாக்ஹோலின் புகைப்படத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். எட்டு தொலைநோக்கிகளின் உதவியுடன் பத்து நாட்கள் கடுமையாக உழைத்து பிளாக்ஹோலின் புகைப்படத்தை எடுத்திருக்கின்றனர்.

தவிர, இந்தப் புகைப்படத்துக்காக இருபது நாடுகளைச் சேர்ந்த 200 விஞ்ஞானிகள்,  60 பல்கலைக்கழகங்கள் 15 ஆண்டு காலமாக  கடுமையாக உழைத்திருக்கின்றனர்.   இந்தப் புகைப்படம் எடுப்பதற்கான  செலவு 60 மில்லியன் டாலர்கள். இதில் 26  மில்லியன் டாலர்களை ‘National Science Foundation (NSF)’ என்ற அமைப்பு  கொடுத்துள்ளது.

புகைப்படத்தின் அளவு பெரியதாக இருந்ததால் அதைச் சுருக்கி வெளியிட்டுள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது இந்த பிளாக் ஹோல். ஒரு ஒளி ஆண்டு என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தூரம் ஆகும்.

‘மாபெரும் அரக்கன்’ என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த பிளாக் ஹோல்  பூமியிலிருந்து 500 மில்லியன் டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் வீற்றிருக்கிறது. அத்துடன்  சூரியன் மாதிரி 6500 கோடி மடங்கு பெரியது.  அப்படியென்றால் சூரிய குடும்பத்தைவிடப் பெரியது இந்த பிளாக் ஹோல்.  இதைவிடப்  பெரிய பிளாக் ஹோலை நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது.

ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு பிளாக்ஹோல் இருக்கும். இந்தப் பிளாக்ஹோல் ‘M87’ என்ற கேலக்ஸியில் உள்ளது. பிளாக் ஹோலின் புவிஈர்ப்பு சக்தி மிக அதிகம். அதன் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தையும் தனக்குள் ஈர்த்துவிடும். வெளியே வரமுடியாது. பக்கத்தில் சென்றால் சூரியனையே இந்த பிளாக்ஹோல் விழுங்கிவிடும். உள்ளே ஈர்க்கப்படும் பொருள் அப்படியே சிறிது சிறிதாகச் சிதைந்துவிடும்.

இதனால் தான் இவ்வளவு ஆண்டு காலமாக விஞ்ஞானிகள் பிளாக்ஹோலை படம் பிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தால் இந்த அரிய சாதனை சாத்தியமாகியுள்ளது. மனிதன் கற்பனை செய்துள்ள அனைத்து விஷயங்களும் பின்னாட் களில் நிஜமாகலாம். இதற்கு உதாரணம் இந்த பிளாக்ஹோல்.