தூவானம்




பாடல் தந்த தண்டனை

‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்...’ என்ற பாடலை இயற்றியவர் மகாகவி பாரதியார். இந்தப் பாடலை, சென்னையின் அப்போதைய மூர் மார்க்கெட்டில் அரங்கேற்றினார் கவிஞர். இதற்காக பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்து ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்தது.

ஒரு நகரத்தின் பெருமை

இந்தியன் ஸ்டாண்டர்டு டைம் (ஐ.எஸ்.டி) என்ற இந்திய நேர நிர்ணய அமைப்பு அமைந்துள்ள நகரம்; இந்தியாவின் முதல் விமானம் இங்குதான் 1910ம் ஆண்டு பறக்கவிடப்பட்டது; கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரத்தை பிரிட்டன் அரசு எடுத்துக்கொள்ளும் விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தை இந்நகரில்தான் கானிங் பிரபு வாசித்தார்; இந்தியாவுக்கு இரண்டு பிரதமர்களைத் தந்த நகரம்;

‘கீழ்த்திசை கேம்பிரிட்ஜ்’ என்று புகழப்பட்ட 1887ம் ஆண்டு நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தைக் கொண்ட நகரம்; கங்கை-யமுனை-சரஸ்வதி நதிகளின் புனித சங்கமம் ஏற்படும் நகரம்; மொகலாய மன்னர் அக்பரால் ‘கடவுளின் நகரம்’ என்று புகழப்பட்டது... உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்.

அந்த மூன்று வார்த்தைகள்

ஜப்பானிய இன்றைய வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்று அவர்கள் சிறு குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் முறை என்றே சொல்லலாம். அங்கே குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்போது மூன்று வார்த்தைகளை முதலில் சொல்லக் கற்பிக்கிறார்கள். அவை: அன்பு, மரியாதை, ஜப்பான்.

முதல் இரட்டை

இரட்டை வேட கதாபாத்திரத்தைக் கொண்ட முதல் தமிழ்ப்படம், ‘உத்தம புத்திரன்’. இந்தப் படத்தில் ஒரு சிவாஜி கணேசனுக்குப் பின்னால் ‘இன்னொரு’ சிவாஜி கணேசன் வருவதும், ஒருவரை ஒருவர் சுற்றி வருவதுமான புகைப்பட நுணுக்கம் இன்றும் பிரமிப்புடன் பேசப்பட்டு வருகிறது. இப்போதைய கம்ப்யூட்டர் வசதி கொஞ்சமும் இல்லாத ஐம்பதுகளில் (1958) வெளியான படம் அது என்பது குறிப்பிடத்தக்கது.

நீடித்து எரிய காரணம்

ஒரு மெழுகுவர்த்தி நீடித்து முழுமையாக எரிந்து போகிறது என்றால், அதனுள் அப்படி எரிய உதவும் ஹைட்ரோ கார்பன் துகள்கள் இருப்பதுதான் காரணம்.

தாவர உணவில் என்ன இருக்கு?

தாவர உணவில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீஷியம், கந்தகம், இரும்பு ஆகிய வேதிப் பொருட்கள் உள்ளன. அதனால்தான் தாவர உணவையே பெரியவர்கள் பெரும்
பாலும் சிபாரிசு செய்கிறார்கள். இந்த வேதிப் பொருட்கள் மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானவை.

எப்படி வந்தது ஏப்ரல்?

பொதுவாகவே ஏப்ரல் மாதம் என்றாலே முட்டாள்கள் தினம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த சொல், ‘ஏப்பிரிரே’ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. ‘எல்லாம் இனிதே நடக்கும்’ என்பதுதான் அந்த லத்தீன் சொல்லுக்கு அர்த்தம்!

- வித்யுத்