ராணி... தேனீ..!



பூச்சிப் பூக்கள் 59


பொதுவாக தேனீக்கள் மனிதனுக்கு அற்புதமான ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருளான தேனையும் கூடவே தேன் மெழுகையும் மட்டுமே கொடுக்கிறது என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் இவை நமக்குத் தெரியாமலேயே நாம் உட்கொள்ளும் 70 சதவீத உணவுப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்து அமோகமான விளைச்சலைக் கொடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது பலருக்கும் தெரியாது.

இன்னொரு ரகசியம்... இப்படி தாங்கள் உதவி செய்கிறோம் என்பது பாவம் இந்தத் தேனீக்களுக்கே தெரியாது. டாப் சீக்ரெட்!இத்தகைய சேவைக்காக இதன் உடல் மற்றும் கால்களில் மொசுமொசுவென ரோமங்கள் கணக்கில்லாமல் படர்ந்துள்ளன. இப்பூச்சிகளின் குணம்,

ஒரு பகுதியில் பூத்திருக்கும் ஒரே இனப் பூக்களில் பெரும்பாலானவற்றில் ஒரே சமயத்தில் தேனருந்தி விட்டுச் செல்வது. இப்படி தேன் அருந்துகையில் அப்பூக்களில் இருக்கும் மெல்லிய மகரந்தங்கள் இதன் உடலில் இருக்கும் ரோமங்களில் ஒட்டிக் கொள்ளும். அடுத்து இதே இனத்து பூவிற்கு இவை செல்லும்போது இந்த மகரந்தத் துகள்கள் பரிமாறப்பட்டு விடுகின்றன.

ரகசிய போலினேஷன்!

பூமியில் பூப்பூக்கும் தாவரங்கள் தோன்றிய புதிதிலேயே இந்தத் தேனீக்கள் தோன்றி விட்டன. எறும்புகளுக்கும் குளவிகளுக்கும் சகோதர இனமான இவற்றிற்குப் பிடிக்காத ஒரே பிரதேசம் அன்டார்க்டிகாதான்.

மற்ற எல்லா கண்டங்களிலும் இவை குதூகலமாய் ஜீவிக்கின்றன. நம் நாட்டில் கொம்புத் தேனீ, மலைத் தேனீ, நாட்டுத் தேனீ என சிலதை மட்டு மே தெரியும். ஆனால் இந்தத் தேனீக்களில் 4000 வகைப்பாடுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஹைமெனோப்டெரா என்னும் வகைப்பாட்டின் கீழ் வரும் இத்தேனீக்களில் பத்து வகைகள் மட்டுமே தேன் ஸ்பெஷலிஸ்ட்டுகள்!

தேனீக்கள் பொதுவாக 2 மிமீ - 2 செமீ நீளத்தில் நீலம், பழுப்பு, மஞ்சள், சிவப்பு போன்ற பல்வேறு நிறங்களில் இருப்பதுண்டு. இவற்றுள் ஒரு ஹைபிரிட் ரகமான ஐரோப்பாவைச் சேர்ந்த ஏபிஸ் மெல்லிஃபெரா (Apis Mellifera) ரகம்தான் லோகமெங்கிலும் தேனீ வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக காய்கறித் தோட்டங்களிலும், பழத் தோட்டங்களிலும் செயற்கைப் பெட்டிக் கூடுகள் அமைத்துப் பராமரிக்கிறார்கள். இதன் மூலம் விளைச்சல் பெருகுவதோடு, உபரியாய் தேனும் கிடைக்கிறது.

ஒரு தேன் கூட்டில் 10000 முதல் 50000 தேனீக்கள் வரை கூட, கூட்டின் பருமனுக்கு ஏற்றவாறு இருப்ப துண்டு. எத்தனை தேனீக்கள்இருந்தாலும் எல்லாவற்றிற் கும் ஒரே தலைவிதான்! இவள்தான் இக்கூட்டத்திற்கே பிரதமத் தலைவி,  அம்மா மற்றும் கடவுள் எல்லாமே. அதிகாரங்கள் எதுவும் எவருக்கும் இந்த மெகா சாம்ராஜ்யத்தில் இல்லை.

 இத்தனை பெரிய கூட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒற்றை ராணித் தேனீ போக, மற்றவற்றில் பெரும்பாலானவை வேலைக்காரத் தேனீக்கள்தான். சிறிய உடல் அமைப்பைக் கொண்ட இவை எல்லாம் இனவிருத்தி செய்ய முடியாத பெண் தேனீக்கள்.

ராஜாங்க மலடுகள்!

இந்த வேலைக்காரத் தேனீக்களுக்கு பிரத்யேக உத்தியோகம், அலைந்து திரிந்து தேன் கொண்டு வரு வதுதான். என்றாலும் அவற்றுக்கு வேறு பல ட்யூட்டிகளும் உள்ளன. அதாவது தேன் கூட்டைப் பாதுகாத்தல், சிதிலமடைந்த பகுதிகளை செப்பனிடுதல், கரு முட்டையின் வளர்ச்சிக்கு உதவுதல் மற்றும் ராணித்தேனீக்கு சேவகம் செய்தல் போன்றவையாகும்.

 அனேகமான சமயங்களில் ராணித்தேனீ சுகமாக ஓய்வெடுத்த நிலையிலேயே இருக்கும். பசிக்கும்போது லேசாக தலையைத் தூக்கினாலே போதும், வேலைக்கார பெண் தேனீக்கள் ஓடிவந்து, தம் தலைப் பகுதியில் சுரக்கும் சுவையும், புரதமும் மிக்க ஒரு திரவத்தை ராணிக்கு ஊட்டிவிடும்.

நோகாமல் நோன்பு!

இப்படி ராணிக்கு சிசுருசை செய்வதற்கு ஆர்வத்துடன் அனைத்து வேலைக்காரத் தேனீக்களும் ட்யூட்டி மாற்றிக் கொண்டு வருவதற்கு ஒரு ஈர்ப்பை ராணி வைத்திருக்கிறது. அது வேறொன்றுமில்லை; அதன் உடலில் சுரக்கும் ஒரு அதீத சுவை மிகுந்த வியர்வைப் பொருளாகும்.

இதை நக்கிச் சுவைப்பதற்கு எல்லா வேலைக்காரப் பெண் பூச்சிகளும் விருப்பப்படும். வாய்ப்பு கிடைக்காத பிற வேலைக்காரப் பெண் பூச்சிகளுக்கும் இந்த வஸ்து சகாக்களால் பகிர்ந்து அளிக்கப்படுவதுண்டு. இதில் மறைந்திருக் கும் பூடகம் இன்று வரை எந்த வேலைக்காரத் தேனீக்கும் தெரியாது. ஆம், அதில் இவை வாழும் வரை செக்ஸ் ஆர்வம் இல்லாதிருப்பதற்கான சங்கதி அடங்கியுள்ளது. எஜமான்

பக்குவம்!

தேன் கூட்டில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் மூன்றாவது வகைத் தேனீக்கள் எல்லாம், இனவிருத்திக்கு ஏற்ற ஆண்மையோடு உலவும் ஆண் தேனீக்கள். இவற்றின் பிரதான பணி, காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு மீசையை முறுக்கியவாறு ராணித் தேனீயின் ராஜ பார்வையில் படுமாறு திரிவது தான். ஆயினும் ராஜபோக உணவில் உண்டு கொழுத்துக் கிடக்கும் ராணித் தேனீ, இவற்றுள் ஒரு கட்டுடல்  ஆண் தேனீயைப் பார்த்து சிக்னல் கொடுத்தால்தான் ஆயிற்று.

கடைக்கண் பார்வை!

சமிக்ஞைகளாலேயே திடகாத்திரமான பயில்வான் ஆண் தேனீக்கு சிக்னல் கொடுத்து, அதனுடன் வழவழ பசையுடன், உடல் ஸ்பரிசம் சுகித்து சிலாகித்த பின்னர், ‘ச்சீ போ’வென கூட்டை விட்டு அந்த ஆண் தேனீ அகற்றப்பட்டு விடுகிறது. ஆயினும் அதற்கு அது போதும். இப்படி அவ்வப்போது ஆண் தேனீக் களோடு இணைந்துவிட்டு ஒரு இயந்திரம் போல முட்டைகளை, தனித் தனியாக இட்டுக்  கொண்டே இருக்கிறது.

இம்முட்டைகள் பொரிந்து வெளிப்படும் லார்வாப் புழுக்களுக்கு உணவூட்டி, சீல் வைத்து கூட்டுப் புழு வளர்ச்சியை ஊக்குவித்து பறக்க வைக்கிறது. கொடுக்குத் தேனீ!
ராணித் தேனீக்கு வயதாகிப் போனாலோ, அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்து போனாலோ, வேலைக்காரத் தேனீக்கள் ஒரு புதிய பெண் தேனீயை ராணியாக உருவாக்கி விடுவது ஒரு பூச்சியின அதிசயம்!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்