கேட்டராக்ட் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்!



நம் கண்ணை நினைத்து வியந்து ரசிக்கப் பல விஷயங்கள் இருப்பது போல், அதில் கவலைப்படவும் ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் பார்வை இழப்பு. இந்தியாவில் மட்டும் சுமார் இரண்டு கோடிப் பேர் பார்வை இல்லாமல் இருக்கிறார்கள். பார்வை இல்லாமல் பிறப்பதற்கும், பார்வை பறிபோவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, கேட்டராக்ட் (Cataract) என்று அறியப்படும் கண்புரை நோய்.

இந்தியாவில் இந்த நோயினால் மட்டுமே ஒரு கோடிப் பேர் பார்வை இல்லாமல் தவிக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 38 லட்சம் புதிய ‘கேட்டராக்ட்’ நோயாளிகள் உருவாகிறார்கள். நிலைமை இப்படியே போனால் இந்தியாவில் 2020ல் 4 கோடிப் பேருக்குக் கண்பார்வை பறிபோய்விடும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

அது என்ன கேட்டராக்ட்?

நம் கண்ணில் இருக் கின்ற விழிலென்ஸ் பளிங்குபோல் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒளி சுலபமாக ஊடுருவிச் செல்ல முடியும். அந்தப் பளிங்கு போன்ற லென்ஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு குறைந்து வெள்ளை அல்லது பழுப்பு நிறத்துக்கு மாறிவிடுவதை ‘கேட்டராக்ட்’ என்று சொல்கிறோம். இப்படித் தன்மை மாறிய லென்ஸ் வழியாக உள்ளே சென்று விழித்திரையில் பதியும் பிம்பம் தெளிவில்லாமல் இருக்கும். இதனால் பார்வை குறையும்.

இது சாதாரணமாக ஐம்பது வயதிற்கு மேல்தான் வரும். முதுமையில் தலைமுடி நரைப்பதைப் போல் லென்ஸிலும் மாற்றம் ஏற்படுவதால் ஏற்படுகிற பிரச்னை இது. அடுத்து, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கண்ணில் காயம், அதிக சூரிய ஒளியின் வாயிலாக புற ஊதாக் கதிர்கள் கண்ணை பாதிப்பது, ஸ்டீராய்டு மருந்துகள், மரபுரீதியான குறைபாடுகள் போன்றவற்றாலும் இது வரலாம். தாய் கர்ப்பமாக இருக்கும்போது ருபெல்லா அம்மை தாக்கினால், பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே கேட்டராக்ட் வரலாம்.

இந்த நோயின் ஆரம்பத்தில் சாதாரண விளக்கு வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்ணில் கூச்சம் ஏற்படும். விளக்கைச் சுற்றி கருவளையம் தோன்றும். இரவில் எதிரில் வரும் வாகனங்களின் முன் விளக்குகளைப் பார்ப்பது சிரமத்தைத் தரும். வாசிப்பதில் பிரச்னை ஏற்படும். நாளாக ஆக பொருட்கள் இரண்டிரண்டாகத் தெரியும். டிவியைப் பார்த்தால் பிம்பங்கள் பல மடங்காகத் தெரியும். கண் கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலைமை இருக்கிறதென்றால் கண்ணில் புரை உள்ளது என்று அர்த்தம்.

கேட்டராக்ட்டை குணப் படுத்த அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. புரை உள்ள லென்ஸை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘ஐஓஎல்’ (Intra Ocular Lens  IOL)  எனப்படும் செயற்கை லென்ஸைப் பொருத்தி பார்வையை மீட்பது இதன் செயல்முறை. ஆனால், சிலருக்கு இந்தமுறையில் சிகிச்சை செய்ய முடியாது. லென்ஸைச் சுற்றி இருக்கிற ‘கேப்சூல்’ எனும் பாதுகாப்பு உறை பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே இந்தச் சிகிச்சையைச் செய்யமுடியும். காரணம், கண்ணுக்குள் பொருத்தப்படும் செயற்கை லென்ஸைத் தாங்கிப் பிடிப்பது இந்த கேப்சூல்தான்.

முகத்தில் அடிபடுதல் அல்லது பட்டாசு விபத்து காரணமாக கண்ணில் படுகாயம் ஏற்படுபவர்களுக்கும், மார்ஃபான் சிண்ட்ரோம் எனும் பிறவிக் குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்தக் கேப்சூல் சிதைந்துவிடுகிறது. இந்த நிலைமையில் இவர்களுக்குக் கண்ணுக்குள் செயற்கை லென்ஸை வைக்கமுடியாது. அப்படியே வைத்தாலும் லென்ஸ் கண்ணுக்குள்ளேயே விழுந்துவிடும். ஆகவே, கண்ணுக்கு வெளியில்தான் இவர்களுக்கு லென்ஸைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் இதுவரை சோடாபுட்டி போன்ற தடிமனான கண்ணாடியை இவர்கள் அணிவது வழக்கத்தில் இருந்தது.

இவர்களுக்கு ஏற்படும் இந்தச் சிரமத்தைத் தவிர்க்க இப்போது புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி உள்ளார்கள், சென்னை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள். இந்தப் புதிய உத்தியை உலக அளவில் உள்ள கண் மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். குளூட் ஐஓஎல் சிகிச்சைமுறை (Glued IOL technique) - இதுதான் டாக்டர் அகர்வால் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சையின் பெயர்.

இதுபற்றி அவர் என்ன செல்கிறார்?

‘‘கேப்சூலில் பிரச்னை உள்ளவர்களுக்குக் கண்ணில் வெள்ளையாக உள்ள ‘ஸ்கிலீரா’ பகுதியில் இரண்டு இடங்களில் 2 மி.மீ. அளவுக்கு ‘ப’ வடிவத்தில் கத்தரித்துக் கொள்கிறோம். இரு பக்கமும் கொக்கி போன்ற அமைப்பு கொண்ட பிரத்யேகமான லென்ஸை இவர்களுக்குப் பொருத்துகிறோம். இந்த கொக்கி போன்ற அமைப்புக்கு ‘ஹேப்டிக்’ (Haptic) என்று பெயர். கண்ணில் துளை போட்டு லென்ஸை உள்ளே நுழைக்கும்போதே ஒரு பக்கக் கொக்கியை எடுத்து ஏற்கனவே கத்தரித்து வைத்துள்ள ஒரு துளையில் செருகிவிடுவோம்.

பிறகு லென்ஸை உள்ளே வைத்ததும் அடுத்த துளையில் மற்றொரு கொக்கியை செருகிவிடுகிறோம். பின்னர் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ‘குளூட்’ எனும் பசை கொண்டு கண்ணில் வெட்டி எடுக்கப்  பட்ட இடங்களை முன்பு இருந்ததுபோலவே ஒட்டி விடுகிறோம்.

 இந்தப் பசை ஓர் உயிரியல் பசை. ‘ஃபைப்ரின்’ எனும் மனித ரத்த திசுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் இது உடல் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் செய்வதில்லை; இதற்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நிராகரிக்கவும் வாய்ப்பில்லை. வெட்டப்பட்ட பகுதியை விரைவில்  ஒட்டி   ஆற வைக்கிறது. மிகவும் பாதுகாப்பானதும்கூட!

முன்பெல்லாம் இவர்களுக்குக் கண்ணில் லென்ஸைத் தாங்கி நிற்க வைக்கத் தையல் போடுவோம். அப்போது லென்ஸ் சரியாகப் பொருந்தாமல் அது நகர்ந்துவிடும் ஆபத்து இருந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு முழுப் பார்வை கிடைப்பதிலும் குறைபாடு இருந்தது. மேலும், தையல் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. கண்ணில் இதன் அருகில் இருக்கிற மற்ற பகுதிகளையும் சிதைக்க ஆரம்பித்தது.

இந்தப் பிரச்னைகள் எதுவும் இந்தப் புதிய சிகிச்சையில் இல்லவே இல்லை. அதிகபட்சமாக கால் மணி நேரத்தில் சிகிச்சை முடிந்துவிடும். இந்த சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. சிகிச்சை பெற்ற அன்றைக்கே வீட்டுக்குத் திரும்பிவிடலாம். அடுத்த நாளில் வேலைக்கும் சென்றுவிடலாம்’’ என்கிறார் அகர்வால். பாராட்டுவோம்.

(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்