உயிரணுவை ஆராய்ந்தவர்



இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானிகளில் முக்கிய மானவர் ஜி.என்.ராமச்சந்திரன். இவர் உயிரியலிலும் இயற்பிய லிலும் பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர். தசைநார் புரதத்தில் சவ்வு என்ற முக்கோண அமைப்பைப் பற்றி ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டு உலகப் புகழ் பெற்றார். பெப்டைட்களின் கட்டமைப்பை அறிய உதவும் ராமச்சந்திரனின் வரைபடம் என்ற கண்டுபிடிப்பு மகத்தானது.

திருநெல்வேலியைச் சேர்ந்த இவரது குடும்பம், வேலைக்காக கேரளா சென்றது. அங்கு 1922ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி எர்ணாகுளத்தில் இவர் பிறந்தார். ஜி.ஆர்.நாராயணன்- லட்சுமி அம்மாள் இவரது பெற்றோர். இவரது தந்தை ஒரு கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றினார். உள்ளூர் பள்ளியில் உயர்நிலைப் பள்ளி வரை படித்த ராமச்சந்திரன், 1942ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார்.

1942ம் ஆண்டு பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழக நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படித்தவர், பிறகு இயற்பியல் துறையில் ஆர்வமானார். 1942ல் முதுகலை பட்டம் பெற்று பின்னர் சர்.சி.வி.ராமன் வழிகாட்டுதலின் கீழ் ஐ.ஐ.எஸ்.சியில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். 1947ம் ஆண்டு முனைவர் படிப்புக்காக இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜில் கேவண்டிஷ் ஆய்வகத்தில் இரண்டு வருடம் ஆய்வை மேற்கொண்டார். 1949ம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் கழக நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார்.

 எக்ஸ்ரே பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கூடவே, இயற்பியல் மூலம் உயிர் உள்ள பொருட்களின் அமைப்பை ஆராயும் படிப்பில் ஆர்வம் செலுத்தினார். இவரின் கண்டுபிடிப்பே ‘ராமச்சந்திரன் கோட்’ என அழைக்கப்படுகிறது. மனித உடலில் உற்பத்தியாகும் சாதாரண புரோட்டீன் பொருள் ‘காலஜின்’. இது எலும்பு, தோல், தோலின் திசுக்களில் காணப்படுகிறது. இதில் உயிரணு அமைப்பு எப்படி அமைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புக்காக உலக அளவில் பாராட்டு கிடைத்தது இருவருக்கு.

காலஜினில் ‘மாலிக்யூல்கள்’ உருவாகும் முறையையும் கண்டுபிடித்தார். இவை முக்கோணக் கூட்டமைப்பில் அமைந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துக் கூறினார். ‘மாலிக்யூலர் பயோ
ஃபிசிக்ஸ்’ அணு விஞ்ஞானத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்தார். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் கிறிஸ்டலோகிராஃபருமான பர்னர் என்பவரின் வழிகாட்டுதல்படி காலஜின் அமைப்பு பற்றி ஆராய்ந்தார். 1977ம் ஆண்டு ராயல் சொஸைட்டியில் ஃபெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரின் ஆராய்ச்சியைப் பாராட்டி மேகநாத் மெடல், எஸ்.எஸ்.பட்நாகர் விருது போன்றவை தேடி வந்தன. 1999ல் படிகவியல் துறையில் இவரது சிறந்த பங்களிப்பிற்காக படிகவியல் சர்வதேச ஒன்றியம் இவருக்கு இவால்ட் பரிசை வழங்கியது. ஓய்வில்லாமல் தன்னை  ஆய்வுக்காகவே கரைத்துக்கொண்ட ஜி.என்.ராமச்சந்திரன் 2001ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி மறைந்தார். இவர் மறைவு அறிவியல் துறைக்கு பேரிழப்பே!

-சி.பரத்