இந்திய தேசியக் கொடி! சில நினைவுகள்



சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா முதன்முதலாக இந்தியாவிற்கான தேசியக்கொடியை உருவாக்க முயற்சித்தார். சகோதரி நிவேதிதா உருவாக்கிய கொடியில் சிவப்பும், மஞ்சள் நிறமும் இருந்தன. சிவப்பு நிறப் பின்னணியில் 108 ஜோதிகள் இருந்தன. மஞ்சள் நிறத்தில் வஜ்ராயுதம் ஒன்றும், கொடியின் இரு புறங்களில் ஒரு பகுதியில் ‘வந்தே’ என்ற சொல்லும் இன்னொரு புறத்தில் ‘மாதரம்’ என்ற சொல்லும் வங்க மொழியில் எழுதப்பட்டிருந்தன. இதுதான் இந்திய தேசியக் கொடி உருவானதற்கான ஆரம்ப கட்டம்.

வங்கப் பிரிவினையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்த காலகட்டத்தில் 1906ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மூவர்ணக்கொடி ஒன்று ஏற்றப்பட்டது. இதில், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் பட்டைகள் இருந்தன. பச்சைப்பட்டையில் இதழ் விரிந்த தாமரைப் பூக்கள் எட்டும், மஞ்சள் பட்டையில் ஊதா வண்ணத்தில் எழுதப்பட்ட ‘வந்தே மாதரம்’ என்ற எழுத்துக்களும் இருந்தன.

கீழே இருந்த சிவப்புப் பட்டையில் வெள்ளை நிறத்தில் சூரியனும், சந்திரனும் சித்தரிக்கப்பட்டிருந்தன. சச்சிந்திர பிரசாத் போஸ், சுகுமார் மித்ரா ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்தக் கொடியை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்டதுடன் அந்தக் கொடியின் பயன்பாடும் முடிந்துவிட்டது.

1907ம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாலகங்காதர திலகரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்திய மக்களுக்கான ஒரு கொடி தேவை என்பதை பல தேசியவாதிகள் உணர ஆரம்பித்தனர். அவ்வகையில் பிகாஜி ருஸ்தம் காமா  (Bikaji Rustum Cama)   என்ற பெண்மணி, இந்தியர்களுக்கான பொதுவான கொடி ஒன்றை உருவாக்க விரும்பினார். பம்பாயில் வாழ்ந்த இவர், சுதந்திரப் போரில் பங்குகொள்ள தேசாபிமானிகளைச் சந்தித்தார்.

தன் உடல்நிலை காரணமாக லண்டன் சென்ற பிகாஜி காமா அங்கேயே தங்கிவிட்டார். ஆனால், இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெளிநாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு தேசியக்கொடி ஒன்றைத் தயாரித்தார், பிகாஜி காமா அம்மையார். வெளிநாட்டில் இருந்து கொண்டு, மற்ற அந்நிய நாடுகளில் தான் தயாரித்த இந்தியக் கொடியை ஏற்றிய பெருமை அவரையே சாரும். பிகாஜி காமா உருவாக்கிய கொடி, வண்ணங்களில் பட்டைகளாக இருந்தது. பச்சை, பொன்னிறக்காவி மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் அவை இருந்தன.

இஸ்லாமியர்களின் புனித வண்ணமான பச்சை மற்றும் இந்துக்களுக்கு புனித நிறமான காவி மற்றும் சிவப்பு ஆகியவற்றை தனது கொடியில் காமா அம்மையார் வடிவமைத் திருந்தார். பச்சை வண்ணப்பட்டையில் இந்தியாவின் எட்டு மாகாணங்களைக் குறிப்பிடும் வகையில் எட்டு தாமரைகள் வரையப்பட்டு இருந்தன. நடுவில் இருந்த பொன்னிறக் காவிப்பட்டையில் ‘வந்தே மாதரம்’ என்ற சொல் இருந்தது. கீழே இருந்த சிவப்புப் பட்டையில்   சூரியன் கொடி பறக்கும் பகுதியிலும், பிறைச் சந்திரன் கம்பப் பகுதியும் இருக்குமாறு  வடிவமைக்கப்பட்டு இருந்தது.

காமா அம்மையார் ஆலோசனைப்படி ஹேமசந்திரதாஸ் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் இந்தக் கொடியை வடிவமைத்தார். காமா  அம்மையார், தயாரித்த கொடியை உலக நாடுகள் அறியச் செய்யவும், இந்திய மக்களின் சுதந்திர வேட்கையை உணர்த்தவும் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். 1907ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் நாள் ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் என்னும் இடத்தில் இரண்டாவது சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிகாஜி காமா அம்மையார் தான் தயாரித்த மூவர்ணக் கொடியை ஏற்றி, ‘‘இதுதான் இந்தியாவின் தேசியக் கொடி’’ என்று வீர முழக்கமிட்டார்.

1935ம் ஆண்டு உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த பிகாஜி காமா, தான் தயாரித்த இந்திய தேசியக் கொடி எப்பொழுதும் பறந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆகவே, பாரீஸில் இருந்து அந்தக் கொடி இந்திய தேசாபிமானி ஒருவரால் கடத்திக் கொண்டுவரப்பட்டது. (ஏனெனில், ஆங்கிலேய அரசு இந்தக் கொடியை இந்தியாவிற்குள் அனுமதிக்கவில்லை.) ஆங்கிலேய அரசுக்குத் தெரியாமல் கொண்டு வரப்பட்ட  அந்தக் கொடியை 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் புனாவில்  வீர் சவார்க்கர் ஏற்றினார்.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் மிக முக்கியமான நாளாக இருந்தது. ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துள்ளதை அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு அறிவித்த நாள். இதைத் தொடர்ந்து எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்புடையதான கொடி ஒன்று அவசியம் என்பதைத் தலைவர்கள் உணர்ந்தனர். அனைவருக்கும் ஏற்புடையதான தேசியக் கொடி ஒன்றை உருவாக்க, ஜூன் 23ம் நாள் கொடிக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

இக்கமிட்டிக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைவர். ராஜாஜி, டாக்டர் அம்பேத்கர், சரோஜினி நாயுடு போன்ற பல தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் 14ம் நாள் அந்தக் கமிட்டி தனது பரிந்துரைகளை அளித்தது. அதன்படி காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில் பட்டைகள் நெடுக்குவாட்டில் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்றும்,    நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் அசோகச் சக்கரம் இருக்க வேண்டும் என்றும் அக்கமிட்டி கூறியது. கொடியின் மாதிரி வடிவம் ஒன்று தயாரிக்கப்பட்டு 1947ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் நாள் அரசியல் சட்ட நிர்ணய சபையின் முன் அதன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

1947 ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் நள்ளிரவு இந்தியாவின் புதிய அரசு பதவியேற்றது. இது, வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் தங்கியிருந்த மாளிகையில் நடைபெற்றது. அங்கிருந்த மைய மண்டபத்தில் இந்தியாவின் புதிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மறுநாள் ஆகஸ்ட் 15. டெல்லியில் உள்ள செங்கோட்டைக் கொத்தளத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

- சூர்யா சரவணன்